Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வோக்ஸ்வாகனின் (Volkswagen) உலகப் பயங்கரவாதத்தைக் கண்டுகொள்ளாத முதலாளித்துவ "ஜனநாயகம்"

பன்நாட்டு உற்பத்தியாகும் பொருட்கள் பற்றிய பொது உளவியலானது, நம்பிக்கைகள் மற்றும் பிரமிப்புகளால் கட்டமைக்கப்பட்டது. மனித அறிவை மலடாக்கும், அதன் சொந்த விளம்பரங்களாலானது. இதற்கு வெளியில் பயன்படுத்தும் பொருள் பற்றிய, அறிவு மனிதனுக்கு இருப்பதில்லை. இந்தப் பின்னணியில் பன்நாட்டு உற்பத்திகளின் சந்தைத் தரத்தை நேர்மையானதாக நம்பும் கண்மூடித்தனமாக வாழ்க்கையையும் - தர்க்கவியலையும் கொண்ட உலகமாக உலகம் குறுகி இருக்கின்றது. இந்தப் போலியான வாழ்க்கை பிரமிப்புகளையே, வோக்ஸ்வாகன் வாகனம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கி தகர்த்து இருக்கின்றது. சுற்றுச்சூழல் சார்ந்த தன்னுடைய தரக்கட்டுப்பாட்டையும் - அனுமதிக்கப்பட்ட பொதுத் தரக்கட்டுப்பாட்டையும் 40 மடங்கு குறைத்துக் காட்டும் வண்ணம் மாபெரும் மோசடிகளை செய்ததன் மூலம், 11 மில்லியன் (1,1 கோடி) வாகனங்களை உலகளவில் விற்று கோடிகோடியாக வோக்ஸ்வாகன் சுருட்டி இருக்கின்றது.

இந்த மோசடி என்பது பயங்கரமானது. முதல் பரிசோதனையில் வாகனம் தரக்கட்டுப்பாட்டில் வெற்றிபெற்ற அடுத்த கணமே, அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு கழிவை வெளியேற்றி இருக்கின்றது. இதன் மறுபக்கத்தில் வருடாந்தம் வாகனம் மீது நடத்தும் தரக்கட்டுபாடுகள் எல்லாம் - வர்த்தக மோசடியாக அரங்கேறியதையே இதன் பின்னான "உண்மையை" முடி மறைத்த தொடர் நிகழ்வுகள் அம்பலமாகின்றது.

உலகளவில் சுற்றச்சூழல் அழிவைத் தடுக்க முதலாளித்துவமும் அதன் தன்னார்வ அமைப்புகளும் நடத்தும் சுற்றுச்சூழல் மாநாடுகள் - பொருள் பயன்பாட்டுக்கான சுற்றுச்சூழல் வரிகள் - சூழலைப் பாதுகாக்க சர்வதேச கட்டுப்பாடுகள் என்று, முதலாளித்துவம் தனக்கு தானே மருந்திட்டுக் கொள்கின்ற கேலிக்கூத்து ஒருபுறம் நடக்கின்றது. மறுபக்கத்தில் இதற்கு மேல் வோக்ஸ்வாகன் நடத்திய பயங்கரவாதமானது உலகம் தளுவியதும், 40 மடங்கு அதிகளவில் சூழலை நஞ்சாக்கியதன் மூலம் ஏற்படுத்தும் மனித மரணங்களையும் - இயற்கை அழிவிலான உலக பயங்கரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இதை மூடிமறைக்கவே தண்டப்பணம் பற்றி, பிரமிப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

அமெரிக்காவில் 2009 முதல் வோக்ஸ்வாகன் விற்ற 482000 வாகனத்துக்கு 33000 ஈரோ வீதம், 18 மில்லியன் (1800 கோடி ஈரோ) பணத்தை தண்டம் விதிப்பதன் மூலம், அதன் உலக பயங்கரவாதத்தை அங்கீகரித்து விடுகின்றனர். இந்தத் தண்டத் தொகையானது அதன் உலகளவிய கொள்ளையில் சில்லறைக் காசாகும். அதாவது 2014 ஆண்டு 202 மில்லியன் ஈரோ (202000 கோடி ஈரோ) வாகன விற்பனை நடத்திய வோக்ஸ்வாகன், 10.9 மில்லியன் ஈரோ (1090 கோடி ஈரோ) நிகர இலாபத்தைப் பெற்றது. இந்த நிறுவனத்தின் தலைமைகள் கோடி கோடியாக சம்பளத்தை பெற்றுக்கொண்ட பின் கிடைத்த நிகர இலாபமாகும்.

ஆக 2009 முதல் இந்த மோசடியான விற்பனை மூலம் கிடைத்த தொகையை - மோசடி இல்லாமல் பெற்று இருக்க முடியாது என்பதும் - இந்தத் தண்டப் பணம் என்பது மோசடியின் மூலம் கிடைத்த தொகையில் சிறிய பகுதி என்பதும் - உலகை ஏமாற்றிப் பிழைக்கும் முதலாளித்துவத்தின் கண்கட்டு வித்தையாகும்.

இங்கு முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசுகள், மேசாடி மூலம் வோக்ஸ்வாக பெற்ற தொகையில் ஒரு சிறிய பகுதியை பெற்றுக்கொண்டு, முதலாளித்துவ பயங்கரவாதத்தை அங்கீகரிக்கின்ற வக்கிரத்தையே அரங்கேற்றுகின்றது. இந்த மோசடி மூலம் அது சம்பாதித்த தொகையை பறிமுதல் செய்வதும் - அதற்கான தண்டத்தையும் - குற்றத்துக்கான தண்டனையையும் முதலாளித்துவம் செய்யவில்லை. ஆக அரசுகள் மோசடியுடன் கைகோர்த்துக் கொண்டு கூடிப் பயணிக்கின்றது. இது தான் முதவாளித்துவத்தின் அறம் - நேர்மை பற்றிய அதன் பொது உலகக் கண்ணோட்டம்.

கடந்த ஆறு வருடங்களாக மனிதனுக்கும் - சுற்றுச்சூழலுக்கும் எதிரான இந்தப் பயங்கரவாத மோசடியை, நவீன விஞ்ஞானமும் - தொழில்நுட்பமும் கண்டு கொள்ளாது இருந்தது என்பதும் - "சுயாதீன" ஊடகவியல் என்பதும் மக்களை இட்டு அக்கறையற்றதும் - முதலாளித்துவத்தின் முதுகில் சவாரி செய்வதன் மூலம் மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரானதாகவே இயங்குகின்றதை பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றது.

தனிநபர் பயங்கரவாதத்தை ஊதிப்பெருக்கி அதுதான் சமூகத்துக்கு எதிரானதாக காட்டும் ஊடகவியவலும் - அரசியலும், அரச அதிகாரம் மற்றும் முதலாளித்துவ உற்பத்தி மூலமான பயங்கரவாதத்தை மூடிமறைப்பதும் - அதையிட்டு அலட்டிக் கொள்வதில்லை என்பதுமே உண்மையாகும்.

இலாபத்துக்காகவே உற்பத்தி - சந்தை - விளம்பரம் - மோசடி.. என அனைத்தும், முதலாளித்துவ அமைப்பு முறையாகவும் - அரச பயங்கரவாதமாகவும் இயங்குகின்றது.

சமூகம் தான் பயன்படுத்தும் பொருள் - அது எப்படி எந்தச் சூழலில் உற்பத்தியாகின்றது என்பதை கண்காணிக்கவும் - தனக்கு தேவையானதை மட்டும் உற்பத்தி செய்யும் முறையும் கொண்ட, சமூக அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம் தான் - உண்மையான ஜனநாயகத்தை - மானிடத்தை நேசிக்கும் சமூகத்தையும் படைக்க முடியும்.