Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

சிந்தனை முறைகள் குறித்து...

நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை முறை குறித்து பேசும் போது அதிர்ந்து போகின்றனர் என்றால், அந்த சிந்தனைமுறை அவர்களுக்குள் இருக்கின்றது என்பதே அர்த்தம். மறுபக்கத்தில் இதை சாதியம் சார்ந்த ஒன்றாக குறுக்கி புரிந்து கொள்வது, சிந்தனைமுறை தொடர்பான சமூக விஞ்ஞான அறியாமையை மட்டுமின்றி, ஆதிக்கம் வகிக்கும் சிந்தனைமுறைமைக்கு எதிரான போராட்டமின்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. சமூகத்தை அரசியல் மயப்படுத்துவதில், சிந்தனைமுறைக்கு எதிரான போராட்டமே முதன்மைமானது.

இதை இலகுவாக புரிந்து கொள்ளவதாயின், முதலாளித்துவம் எமக்கு வெளியில் மட்டும் இருப்பதில்லை, அது எமக்குள்ளும் எம் வாழ்வுடனும் இருக்கின்றது. இதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே, முதலாளித்துவதை எதிர்த்துப் போராட முடியும். இதேபோல் தான் சிந்தனைமுறையும். மார்க்சியம், இடதுசாரியம், முற்போக்கு... பேசும் பலர், தமக்கு வெளியில் மற்றவருக்கு அதை முன்வைக்கின்றனர். முதலில் புரட்சி என்பது எமக்குள் தொடங்கி, அதை நடைமுறையிலான வாழ்வியலாக்க வேண்டும். ஊருக்கு உபதேசம் செய்வதல்ல புரட்சி. இடதுசாரி அடையாளத்தை வெளிப்படுத்துவது, மார்க்சியத்தை பேசுவது, எழுத்தாற்றலைக் கொண்டு தம்மை வெளிப்படுத்துவது, பேச்சாற்றல் மூலம் மேடையில் புரட்சியை தம்பட்டம் அடிப்பது... போன்ற சுய அடையாளங்கள் மூலம், தங்களை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்திக் கொள்வதன் மூலம், சமூகத்துடன் இணைந்து அவர்கள் வாழ்வதில்லை. இவர்களின் நடைமுறையில் மாற்றத்தை முன்வைக்காது, இருக்கும் வாழ்க்கை முறையில் வாழ்வதானது, இருக்கும் சிந்தனைமுறையை மாற்றப் போராடுவதில்லை, மாறாக அதை நடைமுறையில் பாதுகாக்கின்ற வாழ்க்கையை வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர்.

இவர்களின் சிந்தனைமுறை படுபிற்போக்கானது. இதை இனம் காண்பதன் மூலமே, உண்மையான சமூக மாற்றம் நோக்கி நகர முடியும். எம்மைச் சுற்றிய சிந்தனைமுறையை வெளியில் தேடுவதற்கு பதில், அது எமக்குள் எம் வாழ்வைச் சுற்றிய இருக்கின்றது என்பது தெரிந்து கொண்டால் தான், நாம் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும்.

நாம் கதைக்கும் அரசியல் தொடங்கி, முற்போக்கு - இடதுசாரியம் - தேசியம் - இலக்கியம்... வரையான அனைத்திலும், எம்மைச் சுற்றிய சிந்தனைமுறையே ஆதிக்கம் செலுத்துகின்றது. குறித்த ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாட்டை முன்னிறுத்திய, முரணான சிந்தனைமுறை கூட எம்மைச் சுற்றிய சிந்தனைமுறையைத் தாண்டி சுயாதீனமானதல்ல. அது அதற்குள்ளான சீர்திருத்தமாகவோ வேறு ஒன்றாகவோ இருக்க முடியுமே ஒழிய, சமூக விஞ்ஞானத்தை அடைப்படையாகக் கொண்ட சிந்தனையல்ல. இந்த வகையில் இன்று அரசியலையும் - இலக்கியத்தையும் உரசிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

தேர்தல் திருவிழாக்கள் தொடங்கியவுடன், அரசியல் கட்சிகள் மக்களைப் பற்றிப் பேசுகின்றனர். தங்கத்தை போலான வாழ்வையும், (100 நாள்) ஜனநாயகத்தையும் தரப்போவதாக கூறி, வாக்குக் கேட்கின்றனர். கடந்தகாலத்தில் நாட்டை ஆண்ட போது மக்களை ஒடுக்கியவர்கள், இன்று அங்குமிங்குமாக அணிகட்டிக் கொண்டு மக்களின் மண்டையை மீள கழுவத் தொடங்குகின்றனர்.

இப்படி அங்குமிங்குமாக ஆளும் - ஆளவிரும்புகின்ற தரப்புகளும், அதை அண்டிப்பிழைக்கும் கூட்டமும் முன்வைக்கின்ற பிரச்சாரங்களையும், அமைக்கவுள்ள ஆட்சியையும் பற்றி, தமிழ்மொழி பேசும் மக்கள் "சிங்கள பேரினவாத பௌத்தமாக" அடையாளம் காண்கின்றனர். இப்படி இலங்கையை ஆள விரும்புகின்றவர்களின் சிந்தனைமுறையை இனம் காணுகின்ற போது, தமிழ்மொழி பேசுகின்ற மக்களின் சிந்தனைமுறை என்ன? இதை கேள்விக்குள்ளளாக்காத சிந்தனைமுறை தான், சமூக பொருளாதார அரசியலில் இன்று ஆளுமை செலுத்துகின்றது.

சிந்தனைமுறையை ஒரு தரப்புக்கானதாகக் குறுக்கி, எமது சிந்தனைமுறையை இனம் காணாமல் பண்ணுகின்ற அரசியலே படுபிற்போக்கான வகையில் ஆதிக்கம் வகிக்கின்றது. இந்த சிந்தனைமுறை ஆளும் - ஆளவிரும்பும் தரப்பில் ஒன்றை ஆதரிக்கவும் அல்;லது அதன் இடத்தில் வெறுமையையும் வெற்றிடத்தையும் திணித்து விடுகின்றது. இதற்கு வெளியில் சிந்திப்பதையும், செயற்படுவதையும் இந்த சிந்தனைமுறை அனுமதிப்பதில்லை.

இந்த சிந்தனைமுறை என்ன என்பதை தெரிந்து கொள்வதாயின் ஆளும் - ஆளவிரும்புகின்றவர்களின் சிந்தனைமுறையை விளங்கிக் கொள்வது அவசியமானது. இவர்கள் இன்று இலங்கை மக்களை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில்லை. அதாவது

1.மக்களின் அன்றாட சமூக - பொருளாதார வாழ்வியலையும், அதற்கான தீர்வையும் முன்வைத்து யாரும் வாக்குக் கேட்பதில்லை.

2.இலங்கையில் முழு மக்களையும் சார்ந்து பிரச்சாரத்தை முன்னெடுப்பதில்லை. இதற்கு பதில் இலங்கையில் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை மக்களையும், பௌத்த மதத்தை பெரும்பான்மையாக கொண்ட மக்களையும் முன்னிறுத்தி, மக்களை பிளக்கின்ற பிரச்சாரத்தையே முன்தள்ளுகின்றனர்.

இந்தப் பின்புலத்தில், இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமுறை காணப்படுகின்றது. மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் பொருளாதாரத்தைப் பற்றி பேசாத, இன-மத சிந்தனைமுறையாக காணப்படுகின்றது. தமிழ்மொழி பேசும் மக்கள் கூறுவது போல் இது "சிங்கள பேரினவாத பௌத்த" சிந்தனை முறையல்ல, மாறாக இது நவதாராள சிங்கள பேரினவாத பௌத்த கொவிகம சாதிய சிந்தனைமுறையாகும். இந்த வகையில் இலங்கையை ஆளவிரும்பும் தரப்புகள், நவதாராள பொருளாதாரத்தை - இனவாதத்தை - மதவாதத்தை - சாதியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை அமைக்கின்றனர்.

இந்த சிந்தனைமுறையை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கு எதிரான நவதாராள பொருளாதார அமைப்பு முறையை பாதுகாக்கின்றது. அதேநேரம் இந்த சிந்தனைமுறையானது எல்லா சமூக பண்பாடுகள் மேல் ஆதிக்கம் செலுத்துவதுடன், இதில் இருந்துதான் முடிவுகளையும் எடுக்கின்றது.

இலங்கையில் மேலாதிக்கம் பெற்று இந்த சிந்தனை மற்றும் நடைமுறையே மக்களை அடக்கியாளுகின்றதால், எழுகின்ற முரண்பாடுகள் இதற்கு எதிரான சிந்தனைமுறைகளாக வளர்ச்சி பெற வைக்கின்றது.

இந்தவகையில் இன்று தமிழ்மொழி பேசும் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனைமுறைகளை இனம் காணமுடியும்.

பேரினவாதத்துக்கு எதிரான தமிழ் சமூக மேலாதிக்க இனவாதமானது, சாதியமாக - பிரதேசவாதமாக - மதவாதமாக - நவதாராள பொருளாதாரவாதமாக இருக்கின்றது. இதைக் கடந்த தமிழ் தேசியமல்ல. இது நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனைமுறையாக இயங்குகின்றது. அதேநேரம் தமிழ் மொழி பேசும் மக்களை இந்த நவதாராள தமிழினவாத சைவவேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனைமுறை மக்களை பிளப்பதுடன், இதன் மூலமே அனைத்தையும் அணுகுவதன் மூலமே, தமிழ் சமூகம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது..

இனமுரண்பாடு சார்ந்து ஓன்றுடன் ஒன்று முரண்பட்டபடியான படுபிற்போக்கான சிங்கள - தமிழ் சிந்தனைமுறையானது, இலங்கையில் வாழும் பிற சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தி விடுகின்றது. தமிழ்மொழி பேசும் மக்களை பிளக்கும், நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனைமுறை, முஸ்லிம் மலையக மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்குவதால், அதற்கு எதிரான சிந்தனைமுறைகள் தோற்றம் பெறுகின்றது.

இது முஸ்லிம் மக்கள் மத்தியில் நவதாராள முஸ்லிமினவாத இஸ்லாமிய அடிப்படைவாத மதச் சிந்தனைமுறையாக வளர்ச்சியுற வைக்கின்றது. மலையகத்தில் இதையொத்த நவதாராள மலையகயினவாத சைவ வேளாள சாதிய மையவாத சிந்தனைமுறையைத் தோற்றுவிக்கின்றது.

இந்தவகையில் இலங்கையில் இரண்டு படுபிற்போக்கான சிந்தனைமுறைகள் காணப்படுவதால், தமிழ்மொழிக்குள் வேறு இரு பிற்போக்கான சிந்தனைமுறை வளர்ச்சிபெற்று வருவதுடன், சமூகங்கள் மேல் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றது. இந்த வகையில்

1.சிங்கள மக்கள் மத்தியில் நவதாராள சிங்கள பேரினவாத பௌத்த கொவிகம சாதிய சிந்தனைமுறை காணப்படுகின்றது.

2.தமிழ் மக்கள் மத்தியில் நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனைமுறை காணப்படுகின்றது.

இதன் விளைவால் தமிழ்மொழி பேசும் மக்கள் மத்தியில் வேறு இரு சிந்தனைமுறைகள் தோற்றுகின்றது.

1.முஸ்லிம் மக்கள் மத்தியில் நவதாராள முஸ்லிமினவாத இஸ்லாமிய அடிப்படைவாதச் மதச் சிந்தனை முறை காணப்படுகின்றது.

2.மலையக மக்கள் மத்தியில் நவதாராள மலையகயினவாத சைவ வேளாள மையவாத சாதிய சிந்தனை முறை காணப்படுகின்றது.

இப்படி நான்கு அரசியல் தளத்தில் மக்களை பிரித்து இயங்குகின்ற அதேநேரம், ஒன்றையொன்று சார்ந்தும் இயங்குகின்றது. இது இலக்கியம் - கலை - பண்பாடு - பொருளாதாரம் - அரசியல் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது.

இந்தச் சிந்தனை முறையானது மக்களின் வாழ்வியல் நடைமுறையாக இருக்கும் அதேநேரம், கடந்த காலம் முதல் இடதுசாரிய சிந்தனை முறைக்குள் கூட இவைதான் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றது. கடந்த இலங்கை இடதுசாரிய வரலாறுகள் மூலமான இடதுசாரியக் கல்விக்குள், அதன் அரசியல் வெளிபாட்டுக்குள், அதன் நடைமுறைக்குள் இந்த சிந்தனை முறையே அரசியல்ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் ஆதிக்கம் வகிக்கின்றது.

தமிழ்மொழி பேசுகின்ற இடதுசாரிகள் நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனைமுறையைப் பற்றி பேசுகின்ற போது, அதை தலித்திய சாதிய சிந்தனைமுறையாக குறுக்கிவிடவும், காட்டிவிடவும் முனைகின்றனர். அதாவது இதை சாதிய சிந்தனையாக முத்திரை குத்திவிட முனைகின்றனர். இது தவறானது. சாதியை அடிப்படையாகக் கொண்ட தலித்திய சிந்தனை முறையானது அடிப்படையில் இதுவல்ல, மாறாக சாதியை அடிப்படையாகக் கொண்ட தலித்திய கண்ணோட்டம் கூட, நவதாராள தமிழினவாத சைவ வேளாள யாழ் மையவாத சாதிய சிந்தனை முறையின் உள்ளார்ந்த ஒன்றாக இருக்கும் அதேநேரம், அதற்குள் எதிர்நிலையில் இயங்கும் கூறாக செயற்படுகின்றது.

இன்று நிலவும் இந்த சிந்தனைமுறைகள், ஜனநாயகமாகவோ, இடதுசாரியமாகவோ, தலித்தியமாகவோ... மூடிமறைத்துக் கொள்ள தயங்கவில்லை. முற்போக்கு - இடதுசாரியமாக காட்டிக் கொண்டு, புத்திஜீவிகளைக் கொண்ட சமூகமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை குட்டிச் சுவராக்கி வருகின்றது.

இவர்கள் தான் இன்று ஆளும் - ஆளவிரும்பும் தரப்புக்குள், மானிட விடுதலை பற்றிய ஆரூடம் கூறுகின்றவர்களாக இருப்பதுடன், இடதுசாரி - முற்போக்கு முகமூடிக்குள் இயங்குகின்றவர்களாகவும் இருக்கின்றனர். இன்று இலங்கையில் நிலவும் இரண்டு பிரதான சிந்தனைமுறைக்குள்ளாகவும், அதன் கூறாக தோன்றும் மற்றைய இரு சிந்தனைமுறைக்குள், ஏதோ ஒன்றைச் சார்ந்து தம்மையும் தம் கருத்தையும் நடைமுறையையும் முன்னிறுத்துகின்றனர்.

இன்று பிரதான இரண்டு தரப்புக்குள்ளும், அது தோற்றுவிக்கும் இரு கூறுகளுக்கு ஊடாகவே இடசாரிய - முற்போக்கு முகமூடியை அணிந்து கொள்ளும் அதேநேரம், தங்கள் தரப்பு சிந்தனைமுறையை எதிர்த்து நிற்பதில்லை. மாறாக மற்றைய தரப்பையும் அல்லது அதில் ஒரு பகுதியையும், தமக்குள்ளான ஒரு சிந்தனை கூறுக்கு எதிராக முன்னிறுத்திக் கொண்டு, தங்கள் முடிவுகளையும் செயற்பாடுகளையும் முன்தள்ளுகின்றனர்.

உதாரணமாக தங்கள் தரப்புக்குள் உள்ள ஒன்றை எதிர்க்க, மற்றொரு தரப்பு சிந்தனை முறை கொண்டவர்களுடன் கூடி இயங்குவது வரை, இந்த சிந்தனை முறை ஆதிக்கம் செலுத்துகின்றது. .

அனைத்து மக்களை முன்னிறுத்திக் கொண்ட ஒரு சிந்தனைமுறையாக இருப்பதில்லை. அதில் இருந்து அனைத்தையும் பகுத்தாய்வதில்லை. சக மனிதனை அணுகும் போது சமூக சிந்தனை முறையில் இருந்து அணுகாது, நட்பு, அவரின் இயல்புகள் .. என்று குறுகிய சிந்தனை முறைக்குள் முடக்கி விடுகின்றது. பொதுச் சிந்தனை இயல்புக்குள், அதன் தன்மைக்குள் தகவமைத்துக் கொண்டு அரசியலை துறந்து விடுகின்றது. அதாவது சமூக விஞ்ஞானத்தை முன்னிறுத்திய மனித சிந்தனைமுறை மூலம் மனிதனை அணுகுவதற்க்கு பதில் நேர் எதிராக ஆதிக்கம் வகிக்கும் சிந்தனை முறை மூலம் அணுகுகின்றது.

முதலாளித்துவத்தை வெளியில் காண்பதற்கு காட்டுவதற்கு பதில் அது எமக்குள் இருக்கின்றது என்பது தெரிந்தால் தான், முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட முடியும். அதேபோல் எம்மைச் சுற்றிய சிந்தனைமுறையை வெளியில் தேடுவதற்கு பதில், அது எமக்குள் எம் வாழ்வைச் சுற்றி, எம் அணுகுமுறையில் இருக்கின்றது என்பது தெரிந்து கொண்டால் தான் நாம் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

சரியான சிந்தனைமுறை எதுவாக இருக்க முடியும்

இது இனம், மதம், சாதி, பால், நிறம்.. கடந்ததாக, மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு எதிரானதாகும். மனிதனை மனிதனாக அங்கீகரித்து, அனைவரையும் சமமாக முரணற்ற வகையில் நடத்துகின்ற சிந்தனைமுறை மட்டும் தான் உண்மையானது. இந்தச் சிந்தனை என்பது வாழ்வியல் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. இதை அடிப்படையாகக் கொள்ளாத சிந்தனை முறையானது, இன்று சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனைமுறையாகும். அதேநேரம் நடைமுறையற்ற சமூக விஞ்ஞான சிந்தனையானது, வெறும் கருத்தாக குறுக்கும் ஆதிக்கத்தில் உள்ள நடைமுறை சார்ந்த ஒன்றாகவே தன்னை வெளிப்படுத்தி இயங்குகின்றது. இன்று சிந்தனை முறைகள் பற்றியும், அவை எப்படி சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்ற தெளிவும் இன்றி, சமூகத்தை மாற்ற முடியாது. புரட்சியாளர்கள் முன்னுள்ள சவால் மிக்க பணி இதுவாகும்.