Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டங்களை, அரசுக்கு ஆதரவானதாக இட்டுக்கட்டும் அரசியல்

சமூக நடத்தையில் இருந்தான அன்னியமாதல், தான் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டிவிட முற்படுகின்றது. அரசுக்கு எதிரான போராட்டங்களை, அரசுக்கு ஆதரவானதாக இட்டுக் காட்டுகின்ற பலவிதமான முரண்பட்ட போக்குகளை, அரசியலில் காண முடிகின்றது. இவை மக்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடாக மாறி இருக்கின்றது.

குறிப்பாக

1. இலங்கையை ஆட்சி செய்வோர் ஜனநாயக விரோத குடும்ப இராணுவ சர்வாதிகாரமாக இருப்பதனால் இலங்கையில் போராடவே முடியாது என்ற அன்னியமாதல் தனக்கேற்ற கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் உருவாகின்றது. அது போராட்டங்களை அரசு சார்பானதாக காட்டிவிட முனைகின்றது.

2. புலம்பெயர் சமூகத்தில் காணப்படும் செயலற்ற வெற்று கோட்பாட்டுப் புலம்பல்கள், தன் இருப்பை செயலுக்கு எதிராக முன்வைக்கின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தை அரசுக்கு சார்பானதாக காட்டி, போராட்டவே முடியாது என்ற உளவியலை தன்னளவிலும் மற்றவர்கள் மீதும் எற்படுத்த முனைகின்றது.

3. புலம்பெயர் நாடுகளில் தங்கள் மட்டும் தான் இருக்கவும் போராடவும் முடியும் என்ற கடந்தகால புலி அரசியல் தொடர்ச்சிகள், இன்று தாங்கள் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாக இட்டுக்கட்டி காட்ட முனைகின்றது.

4. தமிழ் நாட்டில் ஈழத்தை சொல்லி பிழைக்கும் பிழைப்புவாதிகள், தங்கள் சொந்த இருப்பு சார்ந்து இனவாதமல்லாத அனைத்ததையும், அரசு சார்பானதாக காட்டிவிடுகின்றனர். அதாவது இனவாதத்தை அரசியல் அளவிடாகக் கொண்டு, இனவாதமல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாக காட்டிவிடுகின்ற போக்காகும்

5. தமிழ் இனத்தை மையவாதமாகக் கொள்ளாத அனைத்தையும், அரசு சார்பானதாக பார்க்கின்ற, காட்டுகின்ற போக்கு காணப்படுகின்றது.

6. சொந்த இனவாதத்ததை அளவிடாகக் கொண்டு, இனவாதமல்லாத அனைத்ததையும் அரசு சார்பானதாக முத்திரை குத்துவதும் நடந்தேறுகின்றது.

இப்படி இவை அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட அரசியல் போர்வையில் இயங்கினலும், மறைமுகமாக ஒரே உள்ளடகத்தையும் தொடர்பையும் கொண்டதாகவே ஒன்றுக்குள் ஒன்றாக இயங்குகின்றது.

2009இல் புலிகளின் அழிவும், அதற்கு பிந்தைய காலத்தையும் இலங்கையில் "ஜனநாயகமற்ற" சூழலாக இவர்கள் வரையறுக்கின்றனர். இதற்கு பின்னான இலங்கையில் சுதந்திரமான செயற்பாடுகள் சாத்திமற்றது என்ற சுய முடிவுக்கு வருகின்றனர். இந்த குறுகிய "புலி" அரசியல், "தமிழ்" அரசியல் அளவீடுகள் மூலம் போராட்டஙகள் பற்றி முன் முடிவுக்கு வருகின்றார்கள்.

இலங்கையில் அரசுக்கு எதிரான செற்பாடுகளை, அரசு சார்பு முத்திரை குத்திவிடுகின்றனர். இதன் மூலம் புலம்பெயர் சமூகத்தின் அரசியல் செயற்பாடுகளுக்குள், முரண்பாடுகளைத் தோற்றுவித்து விட முனைகின்றனர்.

புலி ஆதாரவு வலதுசாரிய அணிகள் முதல் இடதுசாரியம் பேசுகின்றவர்கள் வரை, விதிவிலக்கின்றி "அரசு சார்பு" என்ற குறுகிய அரசியலை அளவீட்டை முன்வைத்து கோட்பாடுகளையும் பிளவுகளையும் உருவாக்கிவிட முனைகின்றனர்.

இலங்கையில் மக்கள் வாழ்வதும், வாழ்தற்காக அவர்கள் போராடுவதையும் நிராகரித்த இந்த அரசியல் அன்னியமாதல், வாழ்வுடன் கூடிய மக்கள் போராட்டத்தை நிராகரித்து விடுகின்றனர்.

இதன் மூலம் போராட்டங்களை அரசு ஆதாரவானதாகவும், அரசுக்கு எதிரான எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் போராட்டமாகவும் கோட்பாட்டு விளக்கங்கள் கொடுத்து விட முனைகின்றனர். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வருவதன் மூலம் மட்டும் தான், ஜனநாயகம் வரும் என்று பிரமையை ஊட்ட முனைகின்றனர். அது மட்டும் தான் உண்மையானது என்ற நிறுவ முனைகின்றனர்.

இந்த அரசியல் பின்புலத்தில் இருந்தே இன்றைய ஜனாதிபதி தேர்தலை அணுகி, எதிர்கட்சியை (பொது வேட்பாளரை) நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதாரிக்க முனைகின்றனர். மகிந்த – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பதை எதிராக முன்னிறுத்திய எல்லைக்குள், ஜனநாகத்துக்கான போராட்டத்தை குறுக்கிக் காட்டி விட முனைகின்றனர். இதற்கு வெளியிலான மக்கள் போராட்டங்கள், எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் அரசுக்கு சார்பான ஒன்றாக குறுக்கி முத்திரை குத்தி விடமுனைகின்றனர்.

இந்த வகையில்

1.நேரடியாக பொது வேட்பாளரை முன்னிறுத்தி, அதை முன்னெடுப்தும் ஆதாரிப்பதும் ஜனநாயகத்துக்கான போராட்டமாக காட்ட முனைகின்றனர்.

2. பொது வேட்பாளரை ஆதாரிக்காது மற்றொரு வேட்பாளரை நிறுத்துவது, மகிந்தாவின் சதி என்று கூறுவதன் மூலம் மறைமுகமாக பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றனர்.

3. தமிழ் மக்களுக்கு "இடைகாலத் தீர்வை" முன்வைக்காத, மக்களால் பிரிவினையாகப் புரிந்து கொள்ளப்பட்ட "சுயநிர்ணயத்தின் பிரிந்து செல்லும் உரிமையை" முன்னிறுத்தாத வேட்பாளரை தமிழ்மக்களின் எதிரியாகக் காட்டி, பொது வேட்பாளர் பற்றி மாயையினை உருவாக்கி தமிழ் மக்களுக்குரிய தீர்வாக இட்டுக் காட்டி காட்ட முனைகின்றனர்.

இப்படி அரசுக்கு எதிரான போராட்டங்களை அரச சார்பானதாகவும், பொது வேட்பாளரை ஆதாரிக்காத அரசியலை ஜனநயாக விரோதமானதாக காட்டிவிட முனைகின்றனர். உழைக்கும் மக்களின் வர்க்க ரீதியான போராட்ட அரசியலை அழிக்க, "பொது வேட்பாளரை" முன்னிறுத்தி அதை ஜனநாயகத்துக்கான போராட்டமாக காட்டுவதும் முன்னெடுப்பதும் அரசியல் ரீதியாக முனைப்பு பெற்று வருகின்றது. எதிர்கட்சியை சாராத போராட்டத்தை, அரசு சார்பு போராட்டமாக இட்டுக் காட்டுவதை அரசியல் ரீதியாக காண முடிகின்றது. அரசு - எதிர்க்கட்சி இரண்டிற்கும் வெளியில், உண்மையான ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டங்கள் நடப்பதை அரசியல் ரீதியாக உயர்த்தி, பாதுகாக்கும் போராட்டமே தேர்தல் கால அரசியலாக இருக்க முடியும்.