Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நோர்வே குண்டு வெடிப்பும், கொலைக் களமும்.

“பற்றுறுதியுள்ள ஒரு மனிதன் வெறும் ஆர்வத்தை மட்டுமே கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுக்கு சமமானவன்.”

 இனவெறி நிறவெறி மதவெறி யாவற்றையும் ஒருங்கே கொண்ட ஒரு மனிதன் ஆவேசமாய் தன்னுடைய இனத்தின் முகத்தில் அறைந்து உலகுக்கு பறைசாற்றிய செய்தி என்ன?. தான் காப்பாற்றத் துடிக்கிற தன் சொந்த இன மக்களை கதறக்கதற துப்பாக்கியால் துளைத்து உயிர்ப்பலி எடுத்த கொடூரச் செயலுக்குப் பின்னாலும் தன்னிடத்தில் நியாயம் உண்டு என்கின்றான். இக் கொலைகள் குரூரமானமானவையாயினும் அத்தியாவசியமானவை என அவன் தன்மீதான குற்றவிசாரணைகளில் அறைந்து அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றான். மேலுள்ளது அவன் தனது முகப்புத்தகத்தில் பதிந்த வரிகள்.

 

குண்டுத்தாக்குதலையும் அதன் பின்னான இரத்தவெறி கொண்ட படுகொலைகளையும் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் அவன் 1500 பக்கங்கள் நூல் வடிவிலான ஆங்கில மொழியில் ஒரு பிரகடனத்தை தனது இணையத்தில் பிரசுரித்த பின்னர் பின்லாந்து தேசத்திலுள்ள வலது தீவிரவாத கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கின்றான். அவனது பிரகடனத்தின் தலையங்கம் “2083. A European Declaration of Independence”  2083 ஜரோப்பிய சுதந்திரப் பிரகடனம். அந்தப் பிரகடனத்தில் அவன் <<Marxist Hunter>> ( மார்க்சியவாதிகளை வேட்டையாடுபவன்) என்ற இலச்சினையுடன் போஸ் கொடுத்திருக்கின்றான்.

இவன் தனது இந்தப் பிரகடனத்தை அறைந்து சொல்வதற்கு தெரிவுசெய்த வழிமுறையே குண்டுதாக்குதலும் இரத்தவெறி கொண்ட படுகொலையுமாகும். இங்கு அவன் தனது இந்தப் பிரகடனத்தை உலகெங்கும் பறைசாற்ற தான் காப்பாற்ற நினைக்கும் தான் நேசிப்பதாய் சொல்லும் தனது சொந்த இன மக்களை அதுவும் பருவ வயது பாலகர்களை பலிகொடுப்பது அவசியமானது என்கின்றான். அவனிடம் குடிகொண்டிருந்தது தனது சொந்த இனமக்களை பலிகொடுத்தாவது தனது தேசத்தையும் ஜரோப்பாவையும் வேற்றினத்தவர்களிடமிருந்து குடியேறி வந்தவர்களிடமிருந்து இஸ்லாமிய மதப் பாதிப்பிலிருந்து துப்பரவு செய்து விடுவிக்க வேண்டும் என்ற இன நிற மத வெறியாகும். நாசிப்படையொன்றின் தன்னின மக்களை தியாகம் செய்தாவது நடாத்தப்பட வேண்டிய வீரமிகு அறைகூவல் என்று பொருள் கொள்ளப்பட வேண்டிய தாக்குதல் இது.

இத் தாக்குதலினை நோர்வேஜிய தொழிற்கட்சியை நோக்கி தொடுக்கப்பட்ட தாக்குதலாக குறுக்கிப் பார்ப்பது தான் இங்கு நடந்தேகிறது. பலியெடுக்கப்பட்டவர்கள் குறிவைக்கப்பட்டவர்கள் அதிகாரத்திலிருக்கின்ற தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் அதையும் மீறி உலகுக்கு இரத்த சாட்சியமாய் அறிவிக்கப்பட்ட செய்தி நோர்வே நாடு நோர்வேஜிய இனமக்களுக்கே ஜரோப்பா என்பது ஜரோப்பிய இனமக்களுக்கே என்பதாகும். இந்தச் செய்தியையும் இதன் பின்னுள்ள நாசி அமைப்புகளின் பின்னணியையும,; அந்த நாசிகளுக்கு எள்ளளவும் சளையாது இக்கருத்துக்களை விதைத்து அதன் ஆழ அடிவேருக்கு நீரூற்றி செழித்து வளர வைத்த வலதுசாரி நிறவெறி மதவெறி கட்சிகளினும் வெறிபிடித்த பிரச்சாரங்களும், அப்பிரச்சாரங்களுக்கு மேடையமைத்து கொடுத்த ஊடகங்களினதும் பங்கு பற்றி இன்று அதே ஊடகங்கள் பத்தினி வேசம் போடுகின்றன. அதே நிறவெறி இனவெறி மதவெறுப்பின் அடிப்படையில் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்ட கட்சிகள் ஏதமறியாத அப்பாவிகளாக வேசம் போடுகின்றனர். அறிக்கைளிலும் ஊடகங்களிலும் மவுனமாக தமது பங்கு பற்றி எதுவும் பேசாது இத்தாக்குதல் சம்பவம் ஏதோவொரு தனிமனிதனால் மேற்கொள்ளப்பட்டதொன்று என திசைதிருப்ப முனைகின்றனர்.

தனிமனித நடத்தைப் பிறழ்ச்சி, மன உளவியல் பிறழ்ச்சி கொண்ட மனிதனின் நடவடிக்கை என கூறிவிட எத்தனிக்கின்றனர். தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக கக்கிய இன, நிற, மதவெறி என்பது நாசிகளின் வேருக்கு ஊற்றிய பசளையும் நீரும் என்பதை நாசூக்காக விவாதங்களிலும், வியாக்கியானங்களிலும் மூடி மறைக்கின்றனர். அவற்றைப் பற்றி பேசாது அப்பாவிகளாக கேள்விகளையும் விவாதங்களையும் வேறு எங்கோ எடுத்துச் செல்லுகின்றனர். இழந்த உயிரிழப்புக்கள் என்பது நோர்வேஜிய பொதுமக்களின் வேதனை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அதுவே தான் தங்களது தற்போதைய கவலை வேறு விடயங்கள் பற்றி பேசுவதற்கு இப்போது பொருத்தமில்லை என அரசியல்வாதிகள் இந்தப் குண்டுதாக்குதலுக்கு பின்னுள்ள தங்களது பங்கை விவாதத்துக்கு வராதிருக்குமாறு கச்சிதமாக பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால் இதே குண்டுத்தாக்குதல் ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் செய்யப்பட்டிருந்திருக்குமாயின் இந்த இழப்புவீட்டில் அரசியல் பேசாதே என்ற நிலை இருந்திருக்காது. இப்படியான தாக்குதல் அவர்களது மணிக்கணக்கில் நாட்கணக்கில் நாடு பூராவும் பிரமாண்டமான வீச்சில் நடத்திமுடிக்கவும் அதனை வைத்து அரசியல் சம்பாதிக்கவும் தமது அனைத்து வளத்தையும் சக்தியையும் பாவித்திருப்பார்கள். வெளிநாட்டவர்கள் மேலும் இஸ்லாதிய மதப்பரிவினர் மீதும் தமது துவேசப் பிரச்சாரங்களை அள்ளி வீசி நாட்டையே ஒரு கொதிநிலைக்கு கொண்டு வந்திருப்பார்கள். முன்னேற்றக் கட்சியும் அதனது ஆதரவாளர்களும் அதன் முன்னணி அரசியல்வாதிகளும் நாட்டு மக்களுக்கு இன்று தங்களை முன்னோடி அரசியல்வாதிகளாக அறிவித்து இருப்பார்கள். ஊடகங்கள் பலியானவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலியோடு தமது கடமையை முடித்துக் கொண்டு இந்தக் கட்சியின் நபர்களின் வாயை கிளறி துவேசமான அரசியல் அரங்கொன்றை உருவாக்கியிருப்பார்கள்.

 இந்த தொழிற்கட்சியின் பிரதான வேலையே வெளிநாட்டவர்களுக்கு கட்டுக்கடங்காத சலுகைகளையும் வேலைவாய்ப்புக்களையும் வழங்கி அவர்களது குடிவரவை ஊக்குவிக்கின்றன என்ற பிரச்சாரமும் அகதிகளை அழைத்து வருகிறார்கள் அவர்களாலேயே நோர்வேஜிய மக்களது அமைதி குலைகிறது என்று மீண்டும் அடித்துச் சொல்லியிருப்பார்கள். மூன்றாந்தரமான குற்றங்கள் குண்டுவெடிப்புகள் என்பது அவர்களது நாசகாரக் குணம் என்று மீண்டும் குற்றப்பத்திரிகை வாசித்திருப்பார்கள்.

 ஆனால் இன்று நடந்ததோ வேறாயிருக்கையில் அவர்கள் தங்களது சுயமானம் கவுரவம் அழுக்காகித் தெரிந்த போதிலும் அதனை வெளியில் மறைக்கும் வகையில் இது நடந்தது எவ்வாறு என்று ஏதுமறியாது தூங்கி தற்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்த பாவனையில் அத்தனையும் ஒரு தனிமனிதனின் எதேச்சதிகார நாசகாரச் செயல் என்கின்றனர். இதற்கு பின்னணி தாங்களோ அல்லது இதை நிறைவேற்றியதில் வேறு கரங்களோ இல்லை என அப்பக்கமே பேச்செடுப்பதை இறந்தவர்களை முன்னிறுத்தி மறுக்கின்றனர். இதில் அவர்கள் கட்சிபேதமின்றி ஒத்துப் போகின்றனர் என்னே ஆச்சரியம்.

ஆனால் வெளிநாட்டு, நிறங்கொண்ட மக்களுக்கு, வேற்றுக் கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்களுக்கு, தன் சொந்த மக்களின் இரத்தம் தடவிய வாள் உருவிக்காட்டிச் சொல்லப்பட்ட செய்தி நோர்வே நோர்வேஜிய மக்களுக்கானது, ஜரோப்பா ஜரோப்பிய வெள்ளையின மக்களுக்கானது என்பது தான். நாசிகளின் பலம் இது தான் பார்த்துக் கொள் என்ற பயங்கரச் செய்தி எங்கும் பேசுபொருளாகவில்லை. மிரட்டப்பட்டிருப்பது குடியேறிவந்த நிறங்கொண்ட மக்கள் தான் என்பது அந்த மக்களுக்குப் புரிந்தாலாவது சரி. அதற்கெதிராக குரல்கொடுக்கும் அனைத்து இன மக்களுடன் சேர்ந்து போராடுவதன் மூலமே இவர்களது துவேசத்தீயில் வெந்து சாம்பலாகும் அழிவிலிருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்

-சிறி

24/7/2011