Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பொலித்தீன் பூக்கள்

"பூப் பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, கல்லுண்டாயில் பூத்திருக்கும் பூ அது என்ன பூ? அப்பாவும் அம்மாவும் உப்பு என்று சொல்லுவினை. அது இப்போ தப்பு. வண்ணத்துப் பூச்சி போல வானமெங்கும் பறக்குதிங்க பொலித்தீன் பூ". அந்த நாளில இருந்த டிங்கிரி சிவகுரு இன்று இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார்.

உப்பளம் என்று சொன்னால் உடனேயே நினைவுக்கு வருவது வடக்கைப் பொறுத்தவரை கல்லுண்டாயும் ஆனையிறவும் தான். கல்லுண்டாய் வெளி காக்கைதீவுக்கும் அராலிக்கும் இடையில் உள்ள தாழ்வான கடல்நீர் உட்புகும் குடிமனைகள் இல்லாத பெரும்வெளி. ஒருபுறம் குடாக்கடலும் மறுபுறம் வயல்வெளியையும் கொண்டது. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்பார்கள். இந்த உவர் மண்ணோ, உப்பில்லை என்றால் குப்பையிலே வீசுகின்ற உணவை சுவையூட்டி உன் கோப்பையிலே இட்டு உன் பசி தீர்த்தது.

ஆனால் உப்பில்லா உணவைக் குப்பைக்கு சேராமல் தடுத்த கல்லுண்டாய் வெளி இப்போது அதன் உப்பைத்தின்று வளர்ந்த நன்றியில்லாத எங்களால் குப்பையால் குளிப்பாட்டப்படுகின்றது. உப்புவிளைந்த பூமியில் இன்று விளைவது குப்பை.

"உப்புவிளைந்த பூமியிலே இன்று விளைவது குப்பையடா உண்ண தந்த அதன் வாயினிலே நீ தின்னத் திணிப்பது நாசக் குப்பையடா!"

இங்கு கொண்டுவந்து குவிக்கப்படும் குப்பைகளுக்குள் உரப்பை தொடக்கம் உளுத்துப் போகாமல் என்றும் சிலிர்த்தும் காற்றில் படபடத்தும் பறந்தும் அவ்வெளியெங்கும் வண்ண வண்ண நிறத்தில் வண்ணத்துப் பூச்சி போல சுதந்திரமாக பறந்து பரவும் பொலித்தீன் பூக்கள் அழியாச் சீவியம் நடாத்துகின்றன. ஆனால் 'அன்றே கொல்வான் அரசன் நின்றே கொல்லும் தெய்வம்" என அழியப்போவது அயலில் உள்ள கால்நடைகளும், மீன்வகைகளும் வயற்பரப்பில் விளைகின்ற நெல்மணிகளும், தாவரங்களும், நீர்நிலைகளும் தான்.

அழியாவரம் பெற்ற அசுரனாகவோ அல்லது "தண்டிக்கும் தெய்வமாகவே" நின்று அழிக்கப்போவது பொலித்தீன் பூ. நுகரும் பொருட்களை கடைகளிலிருந்து நிரப்பிக்காவுவதற்கு அன்றிருந்தது கடதாசிப்பை உக்கி மீண்டும் மண்ணுக்கு வளம் தர உரமாகிவிடும். இன்றிருப்பது பொலித்தீன் பை.

அரிசி, மா, பருப்பு, உழுந்து தானியங்களை மூட்டையாக வாங்கினால் சணல் சாக்குப்பை அது ஒரு சாகும் குப்பை. இன்று உரப்பை (உரப்பை என்று பெயர் வரக் காரணம் முன்னர் தோட்டங்களுக்கான செயற்கை உரம் இந்த பைகளிலேயே வந்தது) ( பொலித்தீன் பை) - அது சாகாக்குப்பை.

குடிப்பதற்கு வாங்கும் குளிர்பானங்கள் நிரப்பப்பட்டு வருவது கண்ணாடிப் போத்தல்- இன்று பிளாஸ்டிக் போத்தல். சாப்பாட்டுப் பார்சல் வாழையிலையில் அல்லது வாழைத்தடலில் வரும். இப்போது வகைவகையான பொலித்தீன் பைகள்.

வீட்டு விசேஷங்களில் விருந்தினருக்கு மனம் மகிழ உணவு படைப்பது வாழையிலை, தாமரையிலை, பனையோலைத் தட்டுவம் மற்றும் கஞ்சியாய், கூழாய் அல்லது கள்ளாய் இருந்தால் பிளா, தேங்காய்ச் சிரட்டை என இயற்கை தந்த பாத்திரங்கள். பாவித்தபின் எறிந்து விடலாம்.

தோட்டங்களுக்கு பசளையாகி மீண்டும் உணவுச்சங்கிலியில் சேர்ந்து விடும். இன்றோ பிளாஸ்டிக் சாப்பாட்டுத் தட்டுகள். தட்டுக்களில் உணவு பரிமாறிய பின் அத்தட்டுக்களை நீரில் அலம்பி சுத்தம் செய்யும் வேலைச்சிரமத்தினை தவிர்ப்பதற்காக தட்டுக்களின் மேல் இடப்படும் பொலித்தீன் ரிசுக்கள்.

கச்சான், கடலை போன்ற நொறுக்குத் தீனிப்பொட்டலங்கள் பாவித்த பழைய பேப்பரில் சிறிய பையிலோ அல்லது சரை சுத்தியோ தரப்படும். இன்று அதற்கும் பொலித்தீன் பைகள்.

பனையோலைப் பாய், புற்பாய் என படுக்கைக்கு உபயோகமான இயற்கை தந்த பாய்கள் இன்று செயற்கையான பிளாஸ்டிக் பாய்களாக மாறிப் போய்விட்டன.

மணல் வீடு கட்டியும், மணற்சோறு கறி சமைத்தும் மற்றும் இன்னோரன்ன விளையாட்டுக்களில் கழிந்தது நமது குழந்தைப்பருவம். இன்று குழந்தையின் படுக்கை அறையிலோ அல்லது பாடசாலையிலோ விளையாட்டுப் பொருட்களாக நிரம்பிக் கிடப்பதில் பெரும்பாலானவை பிளாஸ்டிக்கினால் ஆனவைகளே.

எதைத் தொடுகிலும் பிளாஸ்டிக்கினால் தயாரான உபயோகப் பொருட்களைத் தொடாமல் ஒருநாளைக் கூட கடந்து போய் விட முடியாத அளவுக்கு பிளாஸ்டிக் உபயோகம் பல்கிப் பெருகி விட்டது.

வீட்டில் கூட்டியொதுக்கப்பட்டு சேமிக்கப்படும் குப்பைத்தொட்டிகளில் தோட்டப்பயிர்ச் செய்கைக்கான, நெற்பயிருக்கான இயற்கையான பசளை எவ்வித கலப்பும் இன்றி அன்றிருந்தது. இன்றோ இவ்வாறு பசளைக்கென கூட்டிச் சேர்க்கப்படும் குப்பைமேடுகளில் சிறு துண்டுகளாக, துகள்களாகக் கிழிந்துபோன அல்லது முழுதாகவே எறியப்பட்ட பொலித்தீன் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

முழுதான பெரிய பொலித்தீன்களை பொறுக்கி எடுக்க முடிந்தாலும் கூட சிறு துண்டுகளாக துகள்களாகிப் போன பொலித்தீன் பைகள் தோட்ட மற்றும் வயல் மண்ணுக்குள் குப்பையோடு குப்பையாக புதையுண்டு போகின்றன.

உழவு இயந்திரத்தாலோ கலப்பையாலோ மண்ணைப் பிரட்டி உழுகின்றபோது அவை மேலும் சிதிலமடைந்து கண்ணுக்குப் புலப்படாதபடி ஆழ்மண்ணுக்குள் புதைந்து மறைந்து விடுகின்றன. இவற்றை துப்புரவு செய்வது இயலாததாகிவிடும்.

விவசாய நிலங்களையும், விவசாயத்துக்கு உதவும் நுண்ணுயிர்களையும், விவசாய ஈரலிப்பையும் (நீருறிஞ்சுதிறனையும்) பாதிப்படையச் செய்து சாகாவரம் பெற்ற பிளாஸ்டிக் இறுதியில் நிலக்கீழ் நீறூற்றுக்களையும் கிணற்று நீர்த்தேக்கத்தினையும் பாதிப்படையச் செய்து நீரில் உவர்ப்பேற்றி குடிநீர்ப் பிரச்சனையை சுற்றுச் சூழலில் நிரந்தரமாக்கி விடும்.

கழிவுநீர் வாய்க்கால்களைச் சென்றடையும் பொலித்தீன்கள், கழிவுநீர் செல்லும் வழிகளை அடைத்து தேங்கி நிற்பதால் டெங்கு நோய் நுளம்புகள் உற்பத்தியாவதற்கு வழிவகுக்கின்றது. அதனால் டெங்கு நோய் அபாயம் அதிகரிக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை தனது அறிக்கையொன்றில் தெரிவிக்கின்றது.

கடலடியைச் சென்று சேரும் பொலித்தீன்களால் கடற்சூழல் மாசுபடுத்தப்படுகிறது. கடலடியில் உற்பத்தியாகும் மீன்களும், நண்டு, இறால் போன்றவையும் மீன்களுக்கு உணவாகும் கடலடித் தாவரங்களும் பாதிப்படைகின்றன. மீண்டும் மனிதனை அது கடலுணவு வழியில் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.

கல்லுண்டாய் வெளி மட்டுமல்ல அங்குமிங்குமாகக் கொட்டப்படும் குப்பைகளிலிருந்து காற்றில் மிதந்து பறந்து வயல்களையும் சுற்றுச்சூழல்களையும் ஆக்கிரமித்திருக்கும் பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் கழிவுகள் முழுவதும் பரவிக்கிடக்க அதனையிட்டு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்தும் பொலித்தீன் பைகளின் பாவனை அதிகரித்த வண்ணமேயுள்ளது. பொலித்தீன்கள் சரசரத்துப் பறக்கும் குப்பை மேடுகள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

பொலித்தீன்களை தனியாக சேமித்து கையாளும் பழக்கம் மக்களிடத்தில் இல்லை. எல்லாக் குப்பைகளும் போலவே பொலித்தீனும் பாவிக்கப்பட்ட பின் அதுவும் ஒரு குப்பை என்ற எண்ணத்தில் அவை எங்கென்றில்லாமல் வீசியெறியப்படுகின்றன.

இந்தப் பொலித்தீனின் புழக்கம் ஏன் அதிகரித்தது என்றால் அது நவதாராளமய உலகமயமாதல் சந்தையின் விளைவு. இது ஒரு உலகளாவிய சூழலியல் பிரச்சனை. கண்ணாடிப் போத்தலில் அடைத்து வந்த கொக்கோ கோலா குடிபானத்தை தூர இடங்களுக்கு குறைந்த செலவில் எடுத்துச்செல்வதற்காக பலமடங்கு நிறை குறைந்த பிளாஸ்டிக் போத்தலுக்குள் அடைத்து கொக்கோ கோலா பிரியர்களுக்கு வழங்கும் கொக்கோகோலா கம்பனியின் நடைமுறையே பொலித்தீன் பாவனையை வேகத்துடன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது.

மற்றைய உற்பத்தியாளர்களும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கு தாவினார்கள். நுகர்வோர் கைகளில் வந்து சேர்ந்து சூழலியல் பிரச்சனையாக மாறியிருக்கும் பிளாஸ்டிக் பற்றி கவலைப்பட உற்பத்தியாளர்களுக்கு நேரமில்லை. நவதாராள உலகமயமாதல் சந்தைக்கு சூழலியல் பற்றி அக்கறையுமில்லை.

மாடுகளின் வயிற்றைக் கீறினால் கிடைக்கின்றதாம் பொலித்தீன் பைகள். மனிதர்களைக் கீறினால் பொலித்தீன் கிடைத்தால் கூட ஆச்சரியப்படத் தேவையில்லை.