Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்

இந்தியப் பார்ப்பனியமானது திருவள்ளுவருக்கே காவியை அணிவிக்கின்றது. பகத்சிங்கை தூக்கிட்ட போது, கீதையையே கையில் வைத்திருந்ததாக கூறுகின்றது. தீண்டாமையே இந்து மதம் என்று கூறி இந்து மதத்தில் இருந்து விலகிய அம்பேத்கருக்கு, பார்ப்பனியம் காவி முலாம் பூசுகின்றது. இதன் மூலம் தான் அல்லாத அடையாளங்களை காவிமயப்படுத்தி பார்ப்பனியமாக்குகின்றது. இலங்கையில் வெள்ளாளியச் சிந்தனையோ ஒடுக்கியோரையும், ஒடுக்குவோரையும் "தோழர்கள்" என்றும், மரணிக்கும் போது "புரட்சிகர செவ்வணக்கம்" செய்வதன் மூலம், புரட்சிகர அரசியல் கூறுகளை அழிக்கும் வெள்ளாளியச் சிந்தனையாக மாற்றுகின்றது.

தங்களை முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொண்டு, ஒடுக்கும் அரசியல் பின்னணியில் தவழுகின்ற பொறுக்கிகள் தான், இந்த வெள்ளாளியச் சிந்தனைமுறை மூலம் ஒடுக்குமுறையாளருக்கு உதவ முனைகின்றனர்.

மக்கள் மத்தியில் புரட்சிகர சிந்தனையோ, அதற்காக உண்மையான நேர்மையான நடைமுறையோ இருக்கக் கூடாது, மாறாக தங்களைப் போல் ஒடுக்குமுறையாளனுடன் பொறுக்கித் தின்னக் கோருகின்றனர்.

ஒடுக்குவோருக்கு ஒத்தடம் கொடுக்கும் இந்த "ஜனநாயக" கூத்தாடிகள், தங்களைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இழிந்து போன வாழ்க்கையை வாழ்ந்து மரணித்த பிண்டங்களுக்கு, "புரட்சிகர" அஞ்சலிகளை தெரிவிக்கின்றனர். இதுதான் ஒடுக்கும் யாழ் வெள்ளாளிய சிந்தனைமுறையிலான போலியான இடதுசாரிய அஞ்சலிகள். ஓடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்காத தங்களையும், தங்கள் சுய இருப்பையும் தக்கவைக்கும் ஒப்பாரிகளாகும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல், வன்மாகவே பரிணமிக்கின்றது.

இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கும் சிந்தனைமுறையில் உருவான இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து உருவானதல்ல. மாறாக ஒடுக்கும் வெள்ளாளியச் சிந்தனைமுறையில் உருவான தமிழ் தேசிய இயக்கங்களோ, இந்தியா மற்றும் அமெரிக்காவின் கைக்கூலிகளாக மாறினர். அரசியல்ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் அவர்களின் கால்களை நக்கியே வாழ்ந்தனர். இதில் ஒரு பகுதியினர் இலங்கை அரசுடன் கூடி, ஒடுக்குமுறையாளராக மாறி ஒடுக்கியதன் மூலம் நக்கித் திரிந்தனர். இன்று அதன் எச்சசொச்சங்கள் எல்லாம் அதையே தொடர்வதுடன், அதில் பயணித்த நபர்கள் தங்கள் கடந்த காலத்தையோ நிகழ்காலத்தையோ விமர்சனமோ, சுயவிமர்சனமோ செய்வது கிடையாது.

அன்று இந்த இயக்கத்தின் மக்கள்விரோத போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இப்படி கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, தங்களைத் தாங்கள் யார் சுயவிமர்சனம் செய்யவில்லையோ, யார் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்னிறுத்தி இன்று தங்களை முன்னிறுத்தவில்லையோ, அவர்கள் தான் இன்றைய சமூகத்திற்கு நஞ்சிடுபவர்களாக இருக்கின்றனர். அதாவது அன்று கொல்லப்பட்டவர்களின அரசியல் சார்ந்து அக்காலத்தை யார் விமர்சனம் செய்யவில்லையோ, அவர்கள் தான் அக்காலத்தில் கொலையாளிகள். இன்று தங்கள் பன்னாடைத் தனத்தைக் கொண்டு, சமூகத்தை கொத்தித் தின்ன முனைகின்ற கழுகுகளாக வலம் வருகின்றனர்.

இவர்கள் தங்களை ஜனநாயகவாதிகள், முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், இடதுசாரிகள், தலித்தியவாதிகள், மார்க்சியவாதிகள் என்று கூறிக் கொண்டு திரிக்கின்ற இந்தக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நடைமுறையுடன் தங்களை முன்னிறுத்த முனையாத, வெற்றுச் சதைப் பிண்டங்களாக வலம் வருகின்றனர்.

இவர்கள் அஞ்சலி செய்யும் இயக்கத் தலைவர்களோ அன்னிய நாட்டுக் கைக்கூலிகளாகவும், தமிழ்மக்களை ஒடுக்கிய இனவாத அரசுடன் இணைந்து ஒடுக்கிய பல்வேறு வரலாற்றுக்கு சொந்தகாரர்கள்.

இப்படிப்பட்ட ஒடுக்குமுறையாளர்களை "தோழர்கள்" என்று அழைக்கின்ற வக்கிரப் புத்தியோ, ஒடுக்கும் சிந்தனை வகைப்பட்டது. அவர்கள் மரணிக்கும் போது "செவ்வணக்கம்" செலுத்தும் சிந்தனை ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூக அமைப்பை தக்கவைக்கும் வக்கிரத்தாலானது.

இலக்கியம், அரசியல் பேசும் இத்தகைய நவீன ஒடுக்குமுறையாளர்களோ தங்களுக்கு தங்கள் இடதுசாரிய - முற்போக்கு ஒளிவட்டத்தை போட்டுக் கொண்டுதான், ஒடுக்குவோரின் சிந்தனைக்கு கம்பளமிட்டு ஒடுக்குவோருக்கு உதவுகின்றனர்.

இன்று யார் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலை முன்வைக்கின்றனர்!? அதற்கான நடைமுறையில் ஈடுபடுகின்றனர்!? போலித்தனமான "தோழர்களும்;" அதை முன்னிறுத்திப் பிழைக்கும் பச்சோந்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரில் சவாரி செய்வதே நடந்தேறுகின்றது. இதை கண்டுகொள்ளாது புலம்பும் போலி இடதுசாரிய வெள்ளாளியமும் சமூகத்தை குட்டிச் சுவராக்குகின்றது. இதுதான் எம்முன்னுள்ள எதார்த்தம்.