Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்

உடையை உற்பத்தி செய்வது இலாபநோக்குக் கொண்ட சந்தையே. இந்தச் சந்தையானது ஆணாதிக்க நுகர்வுச் சிந்தனையால் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சந்தையில் இருந்து எதை பெண் அணியவேண்டும் என்ற ஆணாதிக்க கட்டளைக்கு எதிரான, பெண்ணின் சுதந்திரமான உடைத் தெரிவு ஆணாதிக்கச் சந்தையைக் கடந்ததல்ல.

இந்த ஆணாதிக்க சந்தைச் சமூக அமைப்பில் உடை குறித்து சட்டங்கள், மத - இன - சாதி சார்பற்றதாக இருக்க வேண்டும். இதற்கு முதலில் அரசு இனம், மதம், சாதி கடந்த முரணற்ற ஜனநாயக அரசாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக அரசு மதம் சார்பானதாக இருக்கும் போது, சட்டங்கள் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இது ஒரு மதத்துக்கு எதிரான இன்னொரு மதத்தின் ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மறுபக்கத்தில் எல்லா மத தனி அடையாளத்தையும் பொது இடங்களில் அனுமதித்து, சமூகத்தைப் பிரித்து கூறுபோடுவதை செய்கின்றது. இதன் மூலம் பரஸ்பரம் ஒடுக்குமுறையை கொண்ட சமூகமாக, சமூகத்தை குறுக்கிவிடுவதே இலங்கையில் நடந்தேறுகின்றது.

ஒருபுறம் தாராளவாதம் மூலம் ஒடுக்குமுறையையும் மறுபக்கம் தாராளவாதத்துக்கு எதிரான ஒடுக்குமுறையையும் கையாளுகின்றது. இதுவே கண்மூடித்தனமாக ஆதரவுக்கும், எதிர்ப்புக்குமான தர்க்கவியலாக மாறி விடுகின்றது.

உடை குறித்து மதவாத அரசியலுக்கு அப்பால், முதலாளித்துவப் பெண்ணியல்வாதம் கருத்து புரட்சி மூலமான மாற்றத்தை முன்வைக்கின்றது. கருத்து மூலமான மாற்றம் மட்டும் தான், இறுதி முடிவாக இருக்க முடியும் என்கின்றது. அதாவது பெண்ணின் சுதந்திரமும் தெரிவும் என்ற, முதலாளித்துவ சிந்தனையை முன்வைக்கின்றனர்.

அதாவது பெண்ணின் விருப்பு, பெண்ணின் உளவியல்.. என்று முதலாளித்துவ பெண்ணியத்தை முன்னிறுத்தி கும்மியடிக்கின்றனர். இதன் மூலம் பெண்ணின் விருப்பும், உளவியலும் ஆணாதிக்கத்திலானது என்பதை மறுக்கின்றனர். உண்மையில் ஒற்றை விரலால் வாக்கு போட்டு தேர்தல் மூலம் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று நம்பும் அறிவுஜீவிகள் வரிசையில், கருத்துப் புரட்சி மூலம் உடை மாற்றத்தைக் கொண்ட வர முடியும் என்பதே, முதலாளித்துவ தாராளவாத சிந்தனைமுறையாக இருக்கின்றது.

சமூகத்தைக் குட்டிச் சுவராக்கும் மதவாத சிந்தனைமுறை குறித்தும், முதலாளித்துவ பெண்ணியல்வாதக் கண்ணோட்டம் குறித்தும் பார்ப்போம்.

மதவாத சிந்தனைமுறை

பொதுவாக எந்த உடையை அணிய வேண்டும் என்று கட்டளையிடும் எல்லா அடிப்படைவாத குறுகிய சிந்தனைகளையும் தடை செய்வதன் மூலமே, சரியான உடைத் தெரிவு செய்ய முடியும். உதாரணமாக காற்சட்டையையும், மேற்சட்டையும் அணிவதை எதிர்க்கின்ற இந்துத்துவவாதம், பௌத்த அடிப்படைவாதம்… இதற்கு உதாரணமாகும்;. இஸ்லாமிய அடிப்படைவாத உடை மட்டுமல்ல, பிற மத அடிப்படைவாத உடைகளும், தடைகளும் உண்டு. உடையை இஸ்லாமிய சமூகத்துடன் மட்டும் குறுக்கிப் பார்க்க முடியாது.

பெண்ணை அடிமைப்படுத்தும் எல்லாவிதமான மத உடைகளுக்கும் எதிரான பொதுவான சட்டத்தை கொண்டு வருவதன் மூலமே, குறைந்தபட்சம் இதில் நேர்மையாக இருக்க முடியும். இதை இந்த அரசு செய்யவில்லை. மாறாக ஒரு தலைப்பட்சமாக இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து ஒடுக்குகின்றது. இதை எதிர்த்து பொதுமைப்படுத்துவதைக் கோரவேண்டும்.

அடுத்து பெண்ணை அடிமைப்படுத்தும் உடைகளை தடைசெய்யக் கோரும் போராட்டத்தைக் கூட, அரசு தன் குறுகிய நோக்கில் பயன்படுத்தும். இதனால் அந்தப் போராட்டம் தவறானதாகி விடுவதில்லை.

பெண்ணின் உடை என்பது, அவளை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க கட்டளைகளாலானதும், அடிப்படைவாதங்களின் அடையாளமாகவும் இருக்கின்றது. பெண்ணின் உடை குறித்து கட்டளைகள் என்பது, ஆணினதும் ஆணாதிக்க அதிகாரத்தினதும் குரலாக எழுகின்றது. இந்த பின்னணியில் இருந்து, இதுவே இன்று அரசியலாக்கப்படுகின்றது.

பெண் என்ன உடை அணியவேண்டும் என்ற ஆணினதும், ஆணாதிக்கத்தினதும் கட்டளைக்கு எதிராக, பெண் தான் விரும்பிய உடையை அணியும் உரிமை ஜனநாயக உரிமையாகவும், அதற்கான போராட்டமாகவும் இருக்கின்றது. ஜனநாயக உரிமைக்கான பெண்ணின் இந்தப் போராட்டம் பெண்ணின் உடைத் தெரிவுக்கு வித்திட்டாலும், பெண்ணின் சுதந்திரமான உடையாக அது மாறி விடுவிதில்லை.

இங்கு என்ன நடக்கின்றது? இந்த சமூக அமைப்பில் ஒரு பொருளை ஆண் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு நிகராக, பெண்ணும் ஆணாதிக்கச் சந்தையில் தேர்ந்;தெடுக்கும் சுதந்திரத்தையே வழங்குகின்றது. தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கோருகின்றது.

அதாவது உடையில் எதை அணிவது என்பது குறித்தும், அதை தேர்வு செய்யும் உரிமையை பெண் கொண்டிருந்த போதும், உடையை சந்தையே தீர்மானிக்கின்றது. சந்தை என்பது, ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்துக்கு உட்பட்டது. பெண்ணை எப்படி ஆணாதிக்க கலாச்சாரம் பார்க்க விரும்புகின்றதோ, அதைத்தான் பெண்ணுக்கான உடையாக சந்தை தீர்மானிக்கின்றது. இங்கு பெண்ணின் உடைத் தேர்வு என்பது உண்மையில் சுதந்திரமானதல்ல, மாறாக ஆணாதிக்கச் சந்தையில் உள்ளதில் எது என்பதையும், எந்த ஆணாதிக்க ஆணை திருப்தி செய்யும் உடை என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை, அவ்வளவு தான். ஆணாதிக்கத்துக்கு எதிரான உடையை சந்தை உற்பத்தி செய்வதில்லை. சந்தை என்பது நுகர்வாக்கத்தை தூண்டுகின்ற ஒன்று என்பதாலும், பெண்ணை ஆணின் நுகர்வுப்பண்டமாகவே சந்தை முன்னிறுத்துகின்றது. நுகர்வைத் தூண்டுவதில் பெண்ணின் உடை முக்கியமானது.

இங்கு பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ மதப் பண்பாடு சார்ந்து ஒரு பெண்ணை தனிச்சொத்தாக கொண்ட ஒரு ஆணிற்குரிய உடையா அல்லது நவதாராளவாத நுகர்வுப் பண்பாடு சார்ந்து பெண்ணை உடலாக முன்னிறுத்தி நுகருகின்ற உடையா என்கின்ற பொது உள்ளடக்கத்தில் இருந்தே, உடை குறித்த சந்தைக் கண்ணோட்டமும், இது சார்ந்து உடைத் தேர்வு குறித்த பொதுப் புத்தியும் இயங்குகின்றது.

1960 களில் ஜனநாயக மனப்பாங்கு கொண்ட சர்வதேசிய மற்றும் தேசியமனப்பாங்கு, உடையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆண், பெண் வேறுபாடற்ற ஓரேவிதமான பொதுவான உடையை அணிகின்றதுமான பொது மனப்பாங்கு, உலகெங்கும் தோன்றியது. இஸ்லாமிய சமூகமும் விதிவிலக்கல்ல. எங்கும் காற்சட்டை, மேலாடை என்ற மிக இலகுவானதும், சூழலுக்கு ஏற்றதுமான பாதுகாப்பான உடைக்கு சமூகம் முன்னேறிச் சென்றது. இதை நவதாராளவாதம் தகர்த்தது. பெண்ணுக்கு அடிப்படைவாத உடையை திணித்தது முதல், பெண்ணைக் கவர்ச்சியாக்கும் வண்ணம் பெண் உடலை பாலியல் பண்டமாக்கி அதை வெளிப்படுத்தும் வண்ணம் பெண் உடையை சுருக்கி வடிவமைத்தது.

உடைச் சுதந்திரத்தை முன்வைக்கும் முதலாளித்துவப் பெண்ணியல்வாதிகள், ஆணாதிக்கச் சந்தையே பெண் உடையை உற்பத்தி செய்கின்றது என்பதை சொல்வதில்லை, அதை எதிர்ப்பதுமில்லை. தங்கள் தேர்வு செய்யும் சுதந்திரம் குறித்து மட்டும் பேசுகின்றனர்.

இதன் முதலாளித்துவ அரசியல் கூறுதான், பெண்ணை அடிமைப்படுத்தும் உடையை ஒரு பெண் கைவிட மறுப்பதை, பெண்ணின் உரிமையாக முன்னிறுத்துகின்றது. அதேநேரம் அதை பெண்ணின் உளவியல் நெருக்கடியாக காட்டி அதைப் பாதுகாப்பது. உதாரணத்துக்கு இந்தியாவில் உடன் கட்டை ஏறுதல் தடைசெய்யப்பட்ட போது, இதே அளவுகோல் கொண்டு அணுகினால் அதை தடைசெய்வதே தவறு என்றாகிவிடும்;. இன்று இந்திய சமூக அமைப்பில் பெண் பருவமடைதல், மாதவிடாய் காலம் பெண்ணை தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கத்திற்கு எதிரான தடைச்சட்டத்தை கோரும் போது, இதே அளவுகோல் பொருந்தும். இதுபோல் இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்துக்கு எதிராக பொது சிவில் சட்டத்தைக் கோரும் போதும் இது பொருந்தும்.

உதாரணமாக இந்தியாவில் ஜயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கான உரிமையைக் கோரிய பெண்களின் போராட்டமும், அதை எதிர்த்து ஆணாதிக்க பெண்களின் எதிர் போராட்டத்தில், எதை ஆதரிப்பது என்பதை தேர்ந்தெடுப்;பது முக்கியமானது.

பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்துக்கு எதிரான சட்டங்களை அரசிடம் கோருவதும், அரசு அதை பக்கச்சார்பாக கொண்டு வரும் போது பொதுமைப்படுத்திக் கோருவதும் அவசியம்;. ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தக் கோரும் பெண்ணின் தேர்வு, விருப்பு, உளவியலை ஆதரிக்கவும், குரல் கொடுக்கவும் முடியாது. ஆணாதிக்க பிற்போக்குத்தனத்தை முன்னிறுத்தும் பெண்களை ஆதரிக்கின்ற முதலாளித்துவ தாராளவாத சிந்தனைமுறையே, உடை குறித்து இடதுசாரியமாக இலங்கையில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஆணாதிக்க சமூகத்தினைப் பாதுகாக்கும் சிந்தனைமுறையாக இருக்கின்றது.