Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..?

இது தான் நியதி, இது தான் நியம்… இதற்காக எங்களை தயார்ப்படுத்த வேண்டும். இதன் வழியில் தான் நாமும் செல்ல வேண்டும். இப்படி எம் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கையினையே நாங்கள் ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்டோம். காலம் காலமாக இப்படிப்பட்ட வாழ்க்கை முறையினையே இந்த முதலாளித்துவ அமைப்பு மிகவும் புத்திசாதுரியமாக தங்கள் தேவைகளை மக்கள் மீது திணித்து, அதனையே மக்களின் சாதாரண வாழ்க்கை முறைமையாக பழக்கப்படுத்தி, அதனையே மக்கள் ஏற்றுக் கொள்ள வைப்பதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை பிரதான கொள்கை முறையாகும்.

முதலாளித்துவம் தனது தனிப்பட்ட இலாபத்திகாக செயற்படுத்தும் ஒவ்வொரு விடையத்தினையும் மக்களின் நாளாந்த வாழ்க்கையாக மாற்றியமைத்து விடுகின்றது. அரசு தனியார் மயப்படுத்தலை ஊக்கிவிப்பதன் மூலம் சாதாரண அப்பாவி மக்களின் வாழ்க்கையினை சீரளிவுக்கு உட்படுத்துகின்றது. அதாவது, அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை தனியார்மயப்படுத்தி தான் இலாபமடைவதும், பெரும் முதலாளிகள் இதைக் கொண்டு இலாபமடைவதும் முதலாளித்துவத்தின் நோக்கமாகும்.

ஆரம்பத்தில் அரச வைத்தியசாலைகளில் கிடைக்கப் பெற்ற தரமான வைத்தியம், கொஞ்சம் கொஞ்சமாக காலப் போக்கில் தனியார் கைகளுக்கு மாறியது. உங்களுக்கு நோய் தீர வேண்டுமாயின், இங்கு அதற்கான வசதிகள் போதாது எங்கள் மருத்துவமனைக்கு வாருங்கள் என்று மக்களை நிர்பந்திக்குமளவிற்கு மருத்துவத் துறை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்றது. இதனால் வைத்தியர்கள் தனிப்பட்ட முறையில் இலாபமடைந்தார்கள், ஆனால் மக்கள் அதுவும் கஷ்ரப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். எதிர்த்துப் போராடும் வலிமை அந்த மக்களிடம் இல்லாததால் இதுதான் சாதாரண வாழ்க்கை என்று தங்களை பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.

இதே போன்று கல்வித் துறையிலும் அரச பாடசாலைகளின் கல்வித் தரம் குறைக்கப்படுவதன் மூலம் பாடசாலையில் கற்பிக்கும் அதே ஆசிரியரிடம் தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தி வெளியிலே கல்வி கற்பதன் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மாணவர்கள் மேல் மறைமுகமாக திணிக்கப்பட்டது. இதுவும் எமது சமூகத்தில் இயல்பான வாழ்க்கை முறைமையாகியது. இதனாலும் பாதிக்கப்பட்டது கீழ்மட்ட மக்களே. இந்த அமைப்பு முறைமையில் இப்படி ஒவ்வொரு விடயத்திலும் மக்கள் பாதிக்கப்படுவது அவர்களை அறியாமலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது. முதலாளித்துவம் இதனை மிக அழகாக திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு வளர்ச்சிக் கட்டமே இன்று இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஒடுக்கு முறை. மகிந்த அரசு, பல்கலைக்கழக கணக்கியல் மாணவர்களின் கல்விக்கால எல்லையினை குறைக்கும் திட்டத்தினை கொண்டு வந்தது. இதன் மறைமுகமான உள் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பல்கலைக் கழகத்தினை தனியார் கைகளுக்கு மாற்றுவதும், மேற்கொண்டு மாணவர்கள் கற்றுக் கொள்வதாயின் தனியார் பல்கலைக் கழகத்திற்கு போக வேண்டிய தேவைக்கு மாணவர்களை நிர்ப்பந்திபதும், இதனால் தாங்கள் இலாபமடைவதுமேயாகும்.

பணம் உள்ளவன் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. கஷ்ரப்பட்ட குடும்பங்களில் இருந்து கல்விகற்க வரும் மாணவர்களே இதனால் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள். மகிந்த அரசின் இந்த திட்டத்தினை எதிர்த்து மாணவர்களால் நடாத்தப்படும் போராட்டம் தான் இன்றைய மாணவர் போராட்டம். ஜனநாயகவாதிகளாக  தங்களை காட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் மாணவர்களின் இந்த உரிமைப் போராட்டத்தினை மிகக் கேவலமான முறையில், கூலிப்படைகளை தூண்டிவிட்டு மாணவர்களை அடித்து காயப்படுத்தி அவர்களை கைது செய்து அடக்க முயற்சிக்கின்றது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பதில் எல்லோரும் மௌனம் காட்டுகின்றார்கள். நாங்கள் தமிழ்த் தேசியத்துக்கு மட்டும் தான் குரல் கொடுப்போம் அதுவும் அடுத்த தேர்தலுக்காக என்று எதிர்க்கட்சி தனக்கு எதுவும் தெரியாது போல் வாயை மூடிக் கொண்டுள்ளது. அன்று தொட்டே மக்களை ஏமாற்றியே அரசியல் நடாத்தும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இது ஒரு பெரிய விசயமே இல்லைத் தான். இது சிங்களவரின் பிரச்சனை, இதற்கேன் நாங்கள் அலட்டிக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ்த் தேசியத்தின் சிந்தனையாகும்.

அன்று பல்லாயிரக் கணக்கான அப்பாவிச் சிங்கள மக்கள் இந்திய அரசின் உதவியோடு அழிக்கப்படும் போதும் வாயை மூடிக் கொண்டிருந்தோம், இறுதியில் அதே இந்திய அரசின் உதவியோடு எங்கள் மக்கள் அழிக்கப்பட்டார்கள். இது சிங்கள மாணவர்களின் போராட்டமல்ல. சகல மக்களுடைய பிரச்சனை. இதனால் பாதிக்கப்படப் போவது அரசியல்வாதிகள் இல்லை, சாதாரண மக்களே. அரசுக்கெதிரான மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் மாணவர்கள் தங்கள் கல்விக்கான உரிமையினை வென்றெடுக்க உதவ வேண்டியது எமது கடமை. அப்பாவி மாணவ மாணவிகள் அரச கூலிப்படைகளால் இரத்தம் சிந்தாது அவர்களை பாதுகாக்க எங்கள் ஆதரவை அவர்களுக்கு  வழங்குவோம்.