Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்குவோரை "தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்" என்று கூறுவதன் பின்னால் ..

ஆளுகின்ற ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளை "தோழர்" என்கின்றனர். "கம்யூனிஸ்ட்" என்கின்றனர். முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளை "கம்யூனிச நாடு" என்கின்றனர். இப்படி அழைப்பதன் மூலம் கட்டமைக்கும் அரசியலானது, ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதை தடுக்கின்ற, ஒடுக்கப்பட்ட உணர்வுடன் மக்கள் தமக்குள் தோழமை கொள்வதை வெறுக்கின்ற, ஆளும் வர்க்க அரசியல் சிந்தனைமுறையாகும். 

சமூக உணர்வற்ற தனிநபர்வாத பிழைப்புவாதமானது, மனிதனுக்குரிய சமூக அறங்களையே மறுத்து விடுகின்றது. இதன் மூலம், தங்கள் நடத்தையை "தோழமையானதாக" கூறிக் கொண்டு, சமூகத் தன்மையிலான மனித உணர்வை சிறுமைப்படுத்த முனைகின்றனர்.

மனித உணர்வு கொண்ட சமுதாயத்தினை மீட்டெடுக்கும் உள்ளார்ந்த உணர்வும், அதற்காக இணைந்து கொண்டு செயற்படும் தோழமையுடன் கூடிய நடைமுறையுமே, தோழராக அழைக்கத் தகுதி பெற்றது.

சமுதாய உணர்வு தான் தோழமை. மனிதனை ஒடுக்கிவாழும் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான சமுதாய உணர்வு தான், தோழமைக்கான சமூக அடித்தளம்.

இப்படி இருக்க மக்களை ஒடுக்குகின்றவர்களுடன் இணைந்துவிட்ட முன்னாள் போராட்டக்காரர்களையும், “கம்யூனிஸ்ட்டு” களையும் "தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்" என்று அறிமுகப்படுத்துவது அபத்தமாகும். இப்படி அழைப்பதன் மூலம் மக்களை ஒடுக்கும் தங்கள் தனிநபர்வாத சுயநலவாத அரசியலை மூடிமறைக்க முனைகின்றனர்.

இன்று ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியாளும் அரசுகளிலும் - தேர்தல் கட்சிகளிலும் இணைந்து கொண்டு பயணிப்பவர்களை "தோழர்கள் கம்யூனிஸ்டுகள்" என்று அழைக்கிற பொதுப் பின்னணி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பொதுச் சிந்தனைமுறையின் வெளிப்பாடே. மக்களை ஒடுக்குகின்றவர்களை "தோழர்கள், கம்யூனிஸ்டுகள், கம்யூனிச நாடு" என்று கூறுபவர்களும், அப்படி அழைப்பவர்களும்;, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையோ, சிந்தனையையோ, நடைமுறையையோ கொண்டிருப்பவர்களல்ல.

மாறாக ஒடுக்கும் தரப்பாகவோ, ஒடுக்கும் தரப்புடன் இணைந்து பயணிக்கின்றவர்களாகவோ இருக்கின்றனர். ஒடுக்கும் தரப்பில் இணைந்து கொண்டு நக்கிப் பிழைப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற தரப்பில் இருந்தபடி, தங்களைத் "தோழர்கள்" என்று கூறிக்கொள்வதன் மூலம், மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துப் போராடும் உண்மையான தோழர்களையும், கம்யூனிஸ்டுகளையும் மக்கள் வெறுக்க வேண்டும் என்பதுதான், இதன் பின்னுள்ள சூக்குமமான அரசியலாகும்.

தோழர்கள், தோழமை என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் எழுகின்ற உணர்வு. அந்த உணர்வு ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கும் நடைமுறையுடன் தோன்றுகின்றது. இன்று யாரெல்லாம் ஒடுக்குகின்ற தரப்புடன் இருக்கின்றனரோ, அந்த அரசியலை கொண்டுள்ளனரோ, அதை தங்கள் சிந்தனைமுறையாகக் கொண்டு உள்ளனரோ, அவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள். அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்ட துரோகிகள். இந்தப் பச்சோந்திகள் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தப்பட்ட வேண்டியவர்கள்.