Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்

290 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, இலங்கையில் இஸ்லாமிய மதவெறியாட்டத்தை நடத்தியிருக்கின்றது இப் பயங்கரவாதம். இது தனிப்பட்ட மனிதனின் மதச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட, மனித வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட மதப் பயங்கரவாதமாகும். பெரும்பான்மை இஸ்லாம் மக்களின் மதவழிபாட்டுக்கு முரணானதும் கூட. இருந்த போதும் பயங்கரவாத வழிமுறை, இஸ்லாம் மார்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பின்னணியில் வைத்து அணுகவேண்டியது அவசியமாக இருக்கின்றது.

இந்த தற்கொலை தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில், இலங்கை மற்றும் அன்னிய நாட்டைச் சேர்ந்த மதவெறிக் கும்பலொன்றினால் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த தாக்குதலானது இலங்கையில் பொதுவான பல்வேறு மதம் சார்ந்த மதவாதங்களில் இருந்தும், தனித்துவமானவை. சர்வதேசரீதியான இஸ்லாமிய பயங்கரவாத பின்னணியைக் கொண்ட, ஓருங்கிணைந்த ஒரு தாக்குதலாகும். உலகெங்கும் நடந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியும் கூட.

இந்த இஸ்லாமிய பயங்கரவாத மதவெறி சக்திகள் இலங்கையில் காலூன்றியதென்பது, இலங்கையில் புரையோடி வரும் இஸ்லாமிய பழமைவாத கண்ணோட்டத்துடன் தொடர்புபட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதமென்பது இலங்கையில், முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியில் உருவான பல்வேறு கட்சிகளின் வருகைகளுடன் தொடர்புபட்டது. இன்று இலங்கையிலுள்ள முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்துமே, இஸ்லாமிய மதவெறியை அடிப்படையாகக் கொண்டவையே. இலங்கையில் தேர்தல் கட்சிகள் இனவாத அடிப்படையைக் கொண்ட கட்சிகளாக இருக்கும் சூழலில், முஸ்லிம் சமூகம் விதிவிலக்காக இருக்கின்றது. அதாவது இனம் சார்ந்த கட்சியாக அல்லாமல் இஸ்லாம் சார்ந்த, மதவாதக் கட்சிகளாகவே இருக்கின்றது.

இலங்கை வாழ் மக்களை இஸ்லாமிய மத மக்களாக பிரிக்கும் மதவெறி கட்சி அரசியல், காலத்துக்கு காலம் ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டு, சலுகை பெற்ற இஸ்லாமிய மதவெறியை ஊட்டி வளர்த்தன. தமிழ் மொழி பேசிய முஸ்லிம் மக்களை, குறுகிய இஸ்லாமிய மதவெறிச் சிந்தனைக்குள் முடக்கியதன் மூலமே, மதவெறி பிடித்த பயங்கரவாத குழுக்கள் உருவாவதற்கான, பொதுச் சமூக அடித்தளத்தை வித்திட்டது.

1960 களில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினது பகுத்தறிவுவாதத்தினை, 1990 க்குப் பிந்தைய முஸ்லிம் - இஸ்லாமிய மதவாத அரசியல் குழிதோண்டி புதைத்தது. உதாரணமாக பெண்களுக்கு பர்தாவை கொண்டு வந்து திணித்தது முதல் இஸ்லாம் மக்கள் வாழும் பிரதேசத்தில் பேரீச்சம்பழ மரத்தை நட்டது வரை, மதவெறி ஊட்டும் பல்வேறு கூறுகள் வெளியில் இருந்து உள் வந்ததற்கான சான்றாகும். இவைதான் இஸ்லாம் மார்க்கம் என்று கூறி, கூடி வாழ்ந்த மக்களின் கூட்டு வாழ்வியல் பண்புகளை அழித்த அரசியல் பின்னணி என்பது, அடிப்படையில் மதவெறி அரசியல் தான். ஆளும் கட்சிகளுடன் காலத்துக்கு காலம் சேர்ந்து, மதவெறியை ஊட்டி வளர்த்த மதவெறிப் பின்னணியிலேயே, இஸ்லாமிய பயங்கரவாதமானது தன் காலை இலங்கையில் ஊன்றிக் கொண்டுள்ளது.

அரபு உலகில் இருந்து பேரீச்சம்பழ மரங்கள் மட்டும் வரவில்லை, இஸ்லாமிய மதவெறியை பரப்புவதற்கான பாரிய நிதிகளும், மதவெறியாட்டப் பிரச்சாரம் செய்யும் மார்க்கவாதிகளும் பெருமெடுப்பில் இலங்கை வந்தனர். இந்தப் பின்னணி தான் தற்கொலைத் தாக்குதலாக இன்று பரிணமித்து நிற்கின்றது.

இலங்கையில் வாழும் பல்வேறு சமூகப் பிரிவுகளை விட இஸ்லாமிய சமூகமே, மிகப் பின்தங்கிய சமூகம். 7ம், 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதக் கூறுகளையும், அரபு மதப் பண்பாட்டையும், வாழ்க்கை முறைமைகளையும் ஏற்றுக்கொண்டு வாழுமளவுக்கு, பகுத்தறிவற்ற பின்தங்கிய சமூகம்.

இதை முஸ்லிம் - இஸ்லாமிய மதவாதக் கட்சிகள் மட்டும் பாதுகாக்கவில்லை. கலை, இலக்கியம் என்று, தங்களை முற்போக்காகவும், இடதுசாரியாகவும் காட்டிக் கொள்ளும் பலரும், மத அடிப்படைவாத சமூக கட்டமைப்பையும், மதவாதச் சிந்தனையையும் கடந்த, மனித சமூகத்தை முன்வைத்து பேசுவதில்லை.

இஸ்லாமிய மதம் சார்ந்து பேசுகின்ற, இஸ்லாமிய சிந்தனைமுறைதான் "முற்போக்கு பெயரில்" உள்ள முஸ்லிம் கலை இலக்கியமாக இருக்கின்றது. இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு வெறுமையும், வழிகாட்டலுமற்ற சமூகமாக மாறி இருக்கின்றது.

தமிழ்மொழி பேசும் சமூகமாக தன்னை முன்னிறுத்த வக்கற்று, அனைத்தையும் இஸ்லாம் மதம் ஊடாக அணுகும் குறுகிய பார்வை, தமிழ் மொழியையும் கூட விட்டுவிடுவதில்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறுவது தவறு என்று கூற முற்படுவதன் மூலம், அது தனது சிந்தனைமுறைக்குள்; கொண்டுள்ள மதவாத சிந்தனைமுறையை பூசிமெழுகி பாதுகாக்கவே இன்று விரும்புகின்றது.

மேற்கு ஏகாதிபத்தியங்கள் 1980 களில் அரபு எண்ணையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை இஸ்லாம் மதத்தில் இருந்து உருவாக்கியது. அரபு மக்கள் 1960 களில் பகுத்தறிவு பெற்ற தேசியவாதிகளாகவும், ஜனநாயகத்தை நேசிக்கும் சமூகமாக தங்களை உயர்த்தியதுடன், தங்கள் விடுதலைக்கு வர்க்க விடுதலையை தீர்வாகக் கருதிய போராட்டங்கள் அரபு உலகெங்கும் வளர்ச்சி பெற்ற, ஜனநாயக சமூகமாக உருவாகி வந்தது. இதைத் தடுக்கவே மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்த்து விட்டதுடன், பயங்கரவாத குழுக்களையும் தோற்றுவித்தது.

இன்று மேற்கில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து அதன் பிரச்சாரம் என்பது, சொந்த மக்களை மதவெறி மூலம் அணிதிரட்டுவதற்கானதாக இருந்த போதும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை இஸ்லாம் மதத்தின் மார்க்கமாக முன்வைக்கின்ற போது, எதிர்வினையற்ற இஸ்லாம் அதற்கு பொறுப்பேற்கவேண்டும். இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றவர்கள் அதற்கு எதிராக எதிர்வினையாற்றாத வரை, அவர்கள் அதற்கு பொறுப்பாளிகள். இஸ்லாம் என்பது இஸ்லாமிய பயங்கரவாதமாக மாறி விடுகின்றது. இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றவர்களும், அந்த மதத்தில் பிறந்து அதை பின்பற்றாதவர்களும், இதைக் கவனத்தில் எடுத்து, எதிர்வினையாற்றியாக வேண்டும்.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகளும், சிந்தனைகளும், பிற மத அடிப்படைவாதத்திற்கான நெம்புகோல் அல்ல. இதை பிற மதம் சார்ந்தவர்கள் கருத்தில் எடுத்தாக வேண்டும்;.