Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து!

பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள்.., தேர்தல் மூலம் மோடியைத் தோற்கடிக்குமாறு கோருகின்றனர். இந்த வழியைத் தவிர வேறு வழியில் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது என்பதே, இத்தகைய முதலாளித்துவ புத்திஐPவிகளின் பொதுக் கண்ணோட்டமாகும். இவாகள் கூறுவது போல் இந்த தேர்தல் மூலம் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது போனால், இவர்கள் என்ன சொல்வார்கள்? என்ன செய்வார்கள்? அடுத்த தேர்தல் வரை காத்து இருக்கக் கோருவார்களா!? இவர்கள் கூறுவது போல் வேறு மாற்று கிடையாதல்லவா!

இல்லை, நாங்கள் பாசிசத்தை எதிர்த்து மக்களின் அதிகாரத்துக்காக போராடுவோம் என்று கூறுவார்களெனின், அதைத்தான் இந்த தேர்தலில் மக்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். அது மட்டுமே பகுத்தறிவாகும். காவிமயமாகியுள்ள பார்ப்பனியத்துக்கு எதிரான உலகக் கண்ணோட்டம். பாசிசத்துக்கு எதிரான மக்களின் ஜனநாயகத்துக்கான குரலாகும். இதற்கு மாறாக முதலாளித்துவ புத்திஜீவிகளின் செயற்பாடுகள் தான், காவி காப்பரேட் பாசிச சிந்தனைமுறையாக, சமூகத்தில் ஊற்றெடுக்கின்றது.

மறுபக்கத்தில் சமூக மாற்றம் மூலம் மக்கள் அதிகாரம் என்பது மக்களின் சிந்தனையாக, நடைமுறையாக உருவாகும் வரை, தேர்தல் முறை இருந்து கொண்டே இருக்கும். மக்கள் வாக்களித்துக் கொண்டு இருப்பார்கள். தேர்தல் மூலம் எந்த சமூக மாற்றமும் நடக்கப்போவதில்லை, வெறும் முகமாற்றம் மட்டுமே சாத்தியம். இப்படி இருக்க தேர்தலை விட்டால் வேறு என்ன தீர்வு என்று கேட்பது பகுத்தறிவல்ல. அறிவுத்துறைக்குரிய நேர்மையுமல்ல. இதுதான் முதலாளித்துவ அறிவுத்துறைக்கேயுரிய வர்க்க நிலைப்பாடாகுமே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடல்ல. சினிமாவில் மக்களின் விருப்புக்கும், ரசனைக்கும் படம் எடுக்கின்றோம் என்று கூறி, பெண்ணை பாலியல் உடலாகக் காட்டுகின்ற அதே தர்க்கவாதம் தான்.

மக்களை அரசியல்ரீதியாக விழிப்பூட்டுவதுதான், தேர்தல் குறித்த பகுத்தறிவுவாதமாகும். ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி தன் வர்க்கப் போராட்டத்தின் கூறாக தேர்தலைப் பயன்படுத்தாத போது, தான் அல்;லாத ஒடுக்கும் வர்க்கத்திற்கு வாக்களிக்க கோருவதல்ல. பார்ப்பனியமாக இருக்கக்கூடிய ஆணாதிக்கம், மதவாதம், சாதியவாதம்.. போன்ற ஒடுக்குமுறைகளை தங்கள் கட்சிக் கொள்கையாகக் கொண்டுள்ள, ஒப்பீட்டளவில் ஒடுக்குமுறை குறைந்த ஒன்றை தெரிவு செய்யுமாறு கோருவதே, முதலாளித்துவம் கூறும் மாற்றாக இருக்கின்றது. இங்கு மாற்று என்பது போலியானது, மக்களை தவறாக வழிகாட்டி ஏமாற்றுவதுதான் முதலாளித்துவ மாற்று.

தேர்தல்முறை ஆட்சி வடிவமாக இருப்பதும், வாக்களிப்பது என்பது எதார்த்தமாக இருக்கின்றது. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கின்றனர். இல்லையென்றால் இனம், மதம், சாதி, பால், பணம்.. சார்ந்த தூண்டுதல்கள், மூலம் வாக்கைப் போடுகின்றனர். மறுபக்கத்தில் கட்சிகள் அறிவிக்கும் சலுகைகள், சீர்திருத்தங்கள் … மூலம், தங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பி வாக்களிக்கின்றனர். இங்கு முதலாளித்துவ அறிவுத்துறை முன்வைக்கும் பாசிச எதிர்ப்புக் கொள்கை அடிப்படையில், மக்கள் வாக்கு போடுவதில்லை.

மோடி பாசிசத்துக்கு எதிரான அணி, வாக்குக்குப் பணம் கொடுத்து வாக்கு கேட்கின்றது. சாதி மத வேட்பாளரை நிறுத்தி, வாக்குக் கேட்கின்றது. இப்படி மோடி பாசிசத்துக்கு எதிரான அணி, முதலாளித்துவ அறிவுஐPவிகள் கருதுவது போல் பாசிசத்துக்கு எதிரான வாக்கை கொண்ட ஜனநாயகக் கட்சிகளல்ல. இதை மக்களுக்கு சொல்லாமல் வாக்கு போடக் கோருவது என்பது, பாசிசத்திற்கு எதிராக மக்;கள் சுயமாக அணிதிரள்வதை தடுக்கின்றது என்பதே உண்மை. எப்படித் தேர்தலில் புதுமுகங்களை களத்தில் இறக்கி தனக்கு எதிரான வாக்கை பாசிசம் சிதறடிக்க வைக்கின்றதோ, அதேதான் பாசிசத்துக்கு எதிரான மக்கள் திரள் பாதையில் மக்கள் அணிதிரள்வதை தடுக்க போலியான பாசிச எதிர்ப்பு போலி தேர்தல் அணியை கட்டமைத்து, அதற்கு வாக்குப்; போடக் கோருவதைத்தான் முதலாளித்துவ புத்திஐPவிகள் செய்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கைப் போட்டு முகமாற்றங்களை செய்கின்றனரே ஒழிய, ஒடுக்குமுறையில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான மாற்றை முன்வைத்ததில்லை. மக்கள் வாக்குகள் மூலம் மாற்றத்தை நம்புவதை விட, வீதிகளில் இறங்கிப் போராடுவதன் மூலமே, தீpர்வுகளை பெறுகின்றனர். தங்கள் போராட்டங்களுக்கு தேர்தல் கட்சிகளை விட, தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சிகளையும் - இயக்கங்களையும் நம்புகின்றனர்.

இப்படி உண்மை இருக்க முதலாளித்துவ பகுத்தறிவுவாதிகள், அறிவுஐPவிகள் தடுமாறுவது, அவர்களின் வர்க்க நிலைப்பாடுதான் காரணம். மோடிக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் அடுத்த தேர்தலே நடக்குமா என்பதே தெரியாது, ஆகவே வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். நீதிமன்றம், பொலிஸ், தேர்தலை நடத்தும் உறுப்புகள்… எதுவும் நடுநிலையாக இல்லையென்பதால், வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். மதச்சார்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி முதலாளித்துவ அறிவுஐPவிகளின் இந்தத் தர்க்கங்கள், தேர்தல் மூலமான முகமாற்றத்தைக் கோருகின்றது. முகமாற்றம் வந்தால், இதுவெல்லாம் மாறிவிடும் என்கின்றனர்.

இதன் மூலம் மக்களை ஒடுக்கும் மோடியின் பாசிச ஆட்சி, யாருக்கு சேவை செய்கின்றது என்ற கேள்வியை தவிர்த்து விடுகின்றனர். மோடி எதையும் தனக்காக செய்யவில்லை. மாறாக வர்க்கத்திற்காகவும், அதை அண்டிப் பிழைக்கும் பார்ப்பனிய சாதிய கட்டமைப்புக்குமாகவே, மோடியின் ஆட்சி பாசிச அதிகாரமாக இருக்கின்றது.

பாசிசம் என்பது தனிநபர்களின் சர்வாதிகாரமல்ல. மாறாக வர்க்கத்தின் சர்வாதிகாரமாகும்;. இது தான் உண்மை. ஐp.எஸ்.டி வரி முதல் பணத்தை செல்லாதது என அறிவித்ததன் பின்னணியில் கூட, ஒரு வர்க்கம் இருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் மூலம், அந்த வர்க்கத்திடம் செல்வம் குவிந்தது. ஆம் பல ஆயிரம் தொழில் அழிந்திருக்கின்றது. பல கோடி மக்கள் தங்கள் வேலைகளை இழந்திருக்கின்றனர். இதன் மூலம் செல்வம் சிலரிடம் குவிந்தது என்பதே உண்மை. அழிந்த உற்பத்திக்குப் பதில், அழிந்த சிறுவுடமை உற்பத்தி செய்த பொருட்கள் எதுவும், சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவில்லை. சந்தையில் புதிய பொருள்கள் குவிந்து வருகின்றது. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அழித்திருக்கின்றது. அதற்கு மோடி தலைமை தாங்கியுள்ளார். இதைச் செய்யவே இந்துத்துவம் என்ற, மதவாதம் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் காவிமயமாகி நிற்கின்றது.

இங்கு மோடியின் பாசிச ஆட்சி மூலம் சிறுவுடமைகளை அழித்து, பெருவுடமைச் சந்தையை உருவாக்கி இருக்கின்றது. இதைத்தான் மோடியின் பாசிசம் செய்தது. இதற்கு பார்ப்பனியம், காவிப் பாசிசமாக்க தன்னை நிறுவனமாக்கிக் கொண்டு, சிறுவுடமையை அழித்து பெருவுடமையை கொழுக்க வைத்துக் கொண்டிருகின்றது.

தேர்தலில் வாக்கு போடுவதால் ஏற்படும் முகமாற்றம், மோடியால் கொழுத்த வர்க்கத்திற்கு எதிராக ஒரு மாற்றத்தையும் செய்யப்போவதில்லை. அதேநேரம் அதிகாரத்தில் குவிந்துள்ள காவிப் பாசிசத்தை மாற்றப் போவதில்லை. இதுதான் தேர்தல் அரசியலின் எதார்த்தம். முதலாளித்துவ அறிவுஐPவிகள் இதற்குள் கேள்விகள் கேட்பதில்லை. இதை மக்களுக்கு சொல்வதுமில்லை!

இதைக் கேட்டு, இதற்கான பதிலுடன் வாக்களிக்கக் கோரினால் அதுவே குறைந்தபட்ச நேர்மை. மோடி ஆட்சிக்கும், காங்கிரஸ்சுக்கும் வித்தியாசமில்லையா என்ற கேட்கலாம். ஆம் வித்தியாசம் உண்டு. மோடி ஆட்சியும், காங்கிரஸ் ஆட்சியும் ஒரே வர்க்கத்திற்கும், பார்ப்பனிய சாதிய சமூக அமைப்புக்கும் தான் சேவை செய்கின்றது. இங்கு வித்தியாசம் அதை எப்படி செய்வது என்பதில் தானே ஒழிய, கொள்கையில் அல்ல. இதைக் கூட முதலாளித்துவ அறிவுஜீவிகள் விளக்குவதில்லை.

மோடிக்கு எதிராக முதலாளித்துவ அறிவுத்துறையின் பொதுவானதும், கூட்டான கண்ணோட்டமும் தேர்தலில் மோடியை தோற்கடிக்க வேண்டும். மோடியின் ஆட்சியால் இலாபம் அடையும் வர்க்கம் குறித்தும், சாதி குறித்தும், அதன் சிந்தனைமுறை குறித்தும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

மாறாக சம்பவங்களையும், ஊழல்களைப் பேசுவதன் மூலமும் கட்டமைக்கப்பட்டதே மோடி எதிர்ப்பு முதலாளித்துவ அரசியல். நீதிமன்றம், பொலிஸ், தேர்தலை நடத்தும் உறுப்பு… எதுவும், முதலாளித்துவ சட்ட அமைப்பு முறைமைக்கு கூட நடுநிலையாக இல்லையென்பதால், அதை வழி நடத்தும் ஆட்சியை தோற்கடிக்க கோருவதன் மூலம், மறுபடியும் நடுநிலையாக கொண்டு வர முடியும் என்பது தான் முதலாளித்துவ அறிவுஐPவிகளின் கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தை நம்பக் கோருவது மோசடி. அறிவுரீதியாக போலியானது, புரட்டுத்தனமானதுமாகும்.

மோடி பாசிசமென்பது காப்பரேட் மயமாகும் பொருளாதாரத்துக்கு தடையான சிறுவுடமையை அழிப்பதுதான். இதற்காக தனது சட்ட வரம்புகளையும் சட்டவிரோதமாக நடைமுறையில் இல்லாதாக்குகின்றது. இதற்காகவே பார்ப்பனியத்தினை தடுக்கக் கூடிய எல்லாச் சட்ட வரம்புகளையும், சட்டத்துக்கு புறம்பாக காவிமயமாக்கி சமூகத்தை ஒடுக்குகின்றது. காப்பரேட் (பெரு மூலதனத்தை) கொழுக்கவைப்பதுதான் பாசிசத்தின் அடிப்படை. இதை தேர்தல்முறை மூலம் மாற்றவே முடியாது.