Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சமாதானத்தின் ருசி

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த “எழுக தமிழ்“ என்ற அரசியல் நிகழ்ச்சி மற்றது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டிலான கலாசார விழா. இரண்டு நிகழ்ச்சிகளும் இந்த நாட்டிலுள்ள மக்களுக்கான உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றவை. மக்களுடைய சுதந்திரத்தையும் நல்வாழ்க்கையையும் வலியுறுத்துகின்றவை. குறித்துச் சொல்வதாக இருந்தால், இரண்டுமே ஒடுக்குமுறைக்கு எதிரானவை. இருந்தாலும், இரண்டும் வெவ்வேறான பார்வைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டவை.

“எழுக தமிழ்“ தமிழ் மக்களுடைய உரிமைகளைப்பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப்பற்றியுமே கவனம் கொண்டது. சம உரிமை இயக்கத்தின் “கலாசார விழா“ நாடு தழுவிய ரீதியில் அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாகவே சமாதானத்தை எட்டமுடியும், அனைவருக்குமான உரிமைகளைப் பெற முடியும் என்ற அடிப்படையைக் கொண்டது. இதற்கு ஏற்றவாறு கலாச்சாரத்தளத்திலான வேலைகளை முன்னெடுப்பதற்கும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒருங்கிணைந்து பங்களிப்பதற்கும் ஒரு முன்னாயத்தத்தையும் அறிமுகத்தையும் உருவாக்க முனைவது.

“எழுக தமிழ்“ பேரணிக்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமானவர்கள் கூடினார்கள். கலாசார விழாவுக்கு எதிர்பார்க்கப்பட்டதை விடக்குறைவானவர்களே கலந்து கொண்டனர். எழுக தமிழுக்குக் கூடியவர்கள் அனைவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களே. அதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கலாசார விழாவுக்கு நாடு தழுவிய ரீதியிலானவர்கள் கூடினார்கள். இருந்தும் இந்த எண்ணிக்கை குறைவானது. குறிப்பாக தெற்கிலிருந்து வந்திருந்தோரை விடவும் வடக்கில், யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது.

ஆனால், சம உரிமை இயக்கத்தின் உட்பொருளும் காட்சிப்படுத்தல்களும் உரையாடல்களும் மிகக் கனதியானவையாக இருந்தன. இனவாதத்துக்கு மாறானவை. நாட்டின் ஒட்டுமொத்தப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் வகையிலானவை. குறிப்பாக மலையக மக்களுடைய அடிப்படை உரிமைகள், தொழில். வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்றவை தொடக்கம் இலங்கையிலுள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினைகளும் பொது நெருக்கடிகளுமாகும். இதைப்போல, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியற் கைதிகள் விவகாரம் தனியே தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதல்ல. அரசியல் ரீதியாகச் செயற்படும் அனைவரும் அரசியற் கைதிகளாக்கப்படும் சூழல் இலங்கையில் உண்டு என்பதால், இந்தப்பிரச்சினை அனைத்துச் சமூகங்களின் அரசியல் உணர்வோடும் உரிமைகளோடும் சம்மந்தப்பட்டது. ஆகவே இதை அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் இருந்தது.

அவ்வாறே காணாமல் போனவர்களுடைய பிரச்சினை, அரசியற் தீர்வைக் காணுதல், நிரந்தர சமாதானத்தை எட்டுதல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதை மேம்படுத்தல் எனப் பல விசயங்களில் கவனத்தைக் கோரியிருந்தது. இதைக்குறித்த வெளிப்பாடுகளும் இந்தக் கலாசார விழாவின் மையமாக இருந்தன. எனினும் கலாசார விழாவுக்கு உரிய கவனத்தை யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகளும் தமிழ்ப்பரப்பின் இணையங்களும் கவனம் செலுத்தியது இல்லை. குறிப்பாக வந்தாரை வரவேற்கும் பண்பாட்டைக் காணமுடியவில்லை. அரசியலாளர்களை வரவேற்கும் அளவுக்குக் கூட மெய்யான சமாதானப் பற்றாளர்களை வரவேற்கத்துணியாதிருந்தது கவலையளித்தது.

சமாதானத்துக்கான அழைப்போடும் விருப்போடும் இவ்வளவு தொலைவு பயணத்து, தமிழர்களுடைய முற்றத்துக்கு வந்திருக்கும் அத்தனை கவிஞர்களோடும் படைப்பாளிகளோடும் கலைஞர்களோடும் சமாதான விரும்பிகளோடும் கலந்திருப்பதற்குத் தயங்கும் மனநிலை என்னவாக இருக்கும்?

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சில விடயங்களைத் தெளிவு படுத்துகின்றன. பல கேள்விகளையும் எழுப்புகின்றன.

சமாதானத்திலும் ஐக்கியத்திலும் தமிழ் மக்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தவருக்கு நம்பிக்கையில்லை என்பதே அதுவாகும். சம உரிமை இயக்கத்தின் நிகழ்ச்சியில் மட்டுமல்ல, வடக்கிலே குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சமாதான விரும்பிகளுடைய செயற்பாடுகளையும் மாற்று அரசியலையும் தமிழ்ச்சூழல் பெரிதாகக் கவனத்திற் கொள்ளவில்லை. பதிலாக தமிழ்த்தேசியவாத அலையிலேயே அது தன்னைப் பிணைத்துள்ளது. அதிலும் தீவிரத் தமிழ்தேசியவாதத்தில். இதனால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மென்போக்கையும் அது முன்னெடுத்துவருவதாகச் சொல்லப்படும் அரசியற் தீர்வுக்கான முயற்சிகளையும் பலரும் சந்தேகிக்கும் நிலை காணப்படுகிறது. இதன்விளைவே “எழுக தமிழ்“ நிகழ்வின் வெளிப்பாடாகும்.

அப்படியானால், தமிழர்கள் தனித்துத்தான் எதையும் செய்ய விரும்புகிறார்களா? என்பது முதலாவது கேள்வியாகும். அதிலும் யாழ்ப்பாணத்தவர்கள் தனியே தங்கள் நிகழ்ச்சிகளையும் குரல்களையும் முன்வைப்பதைத்தான் சரி என்கிறார்களா? ஏனென்றால், “எழுக தமிழ்“ அப்படித்தான் நடத்தப்பட்டுள்ளது. வன்னி மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற பிற பிரதேசத்தவர்களைச் சேர்த்துக்கொள்ளாமல். அத்துடன் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் இல்லாமல்.

எழுக தமிழ் மட்டுமல்ல, பெரும்பாலான நிகழ்ச்சிகள் தனியே தமிழ் மக்களை மட்டும் கவனத்திற் கொண்டு நடத்தப்படுகின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்கின் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட பிற சமூகத்தினர் அழைக்கப்படுவதுமில்லை. அவர்களுக்குரிய பாத்திரங்கள் வழங்கப்படுவதுமில்லை. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலே, யாழ்ப்பாணத்தில் இன்னொரு அரசியல் நூலின் வெளியீடு நடந்து கொண்டிருக்கிறது. மு. திருநாவுக்கரசு எழுதியுள்ள “இலங்கையின் அரசியல் யாப்பு“ என்ற அரசியலமைப்புத் தொடர்பான நூலின் வெளியீட்டிலும் பிற அரசியற் சமூகத்தினர் அழைக்கப்படவில்லை. “ஒரே மேடையில் அனைத்துத் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளும்“ கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்ற ஏனைய கட்சிகள், இடதுசாரிகள் கலந்து கொள்வதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கின்ற பார்வையோடுதான் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் “வடக்குக் கிழக்கு இணைப்பு“, “இலங்கை அரசியல் யாப்பு“ “அரசியற் தீர்வு“ போன்ற விடயங்கள் தனியே தமிழ்மக்கள் மட்டும் தீர்மானிக்கும் விடயங்களல்ல. அதையும் விட யாழ்ப்பாணத்திலுள்ள சிலர் மட்டும் தீர்மானிக்கும் விசயங்களுமல்ல. இவை ஏனைய சமூகங்களின் இணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் பங்களிப்புகளோடும் சம்மந்தப்பட்டவை. ஏனைய சமூகங்களின் சம்மதம் இல்லையென்றால், இவை எதையும் வெற்றிகரமாக முன்னெடுக்கவோ தீர்வைக்காணவோ முடியாது. ஆனாலும் இதை யாழ்ப்பாணம் விளங்கிக் கொள்வதாக இல்லை. இப்படிச் சொல்வதன் மூலமாக இங்கே ஒரு பிரதேசத்துக்கான அடையாளத்தைத் துலக்கிவிடுதாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு பிரதேசம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிந்திப்பதும் இயங்குவதும் பொருத்தமானதல்ல என்பதே இங்கே குறிப்பிடப்படுவதாகும்.

ஆகவே, உண்மையாகவே இலங்கையில் சமாதானத்தை எட்ட முடியுமா? முடியாதா? நாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் விட விலகிச் செல்லும் பாதையைத்தான் பலரும் விரும்புகிறார்களா? அல்லது தமிழர்களுக்கு இன ஐக்கியத்திலும் அந்த ஐக்கியத்தில் உருவாக்கப்படும் சமாதானத்திலும் அவ்வளவு நம்பிக்கையும் நாட்டமுமில்லையா? அல்லது தமிழர்கள் நடத்துகின்ற சில போராட்டங்களின் பேரால், இனவாதத்தைத் தூண்டுவதைத்தான் விரும்புகிறார்களா? அதாவதுஇ ஏட்டிக்குப் போட்டியாக இனரீதியாகச் சிந்திப்பதைத்தான் சரியென்கிறார்களா?

எனவே, சமாதானத்தின் ருசியை அறியாத மக்களாகத்தான் இந்த நாட்டிலுள்ளவர்கள் இருக்கிறார்களா? அதிலும் தமிழ்மக்களுக்கு உண்மையிலேயே சமாதானத்திலும் பிற சமூகத்தினருடன் கூடி வாழ்வதிலும் அவர்களுடைய கலாசாரப் பரிவர்த்தனைகளில் பங்கேற்பதிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லையா? அப்படியாயின் இந்த நாட்டிலே என்னதான் நடக்கப்போகிறது? மீண்டும் இனரீதியான முரண்பாடுகளும் இரத்தக்களரியும்தானா?

இந்த நிலைமைக்குக் காரணம், போர் முடிந்த பின்னான இந்த ஏழு ஆண்டுகளிலும் தமிழ் மக்களின் மடியிலே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் எதற்கும் தென்னிலங்கை சாதகமான சமிக்ஞைகளைக் கொடுக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியம். நீண்ட போரினாலும் ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் உளநிலையைப் புரிந்து கொண்டு, அதைச் சமனிலைப்படுத்துவதற்கான நல்லெண்ண அடையாளப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நல்லெண்ணத்திற்கும் நம்பிக்கைக்கும் பதிலாக நம்பிக்கையீனமே வளரும். இதுதான் ஒரு வகையில் உருவாகியுள்ளது. எழுக தமிழுக்கு மக்கள் அதிகளவில் கூடியதையும் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களையும் இந்த மாதிரி புரிந்துணர்வுக் கலாசார விழாக்களில் நாட்டமற்றிருப்பதையும் இந்த வகையிலே புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் இந்த நம்பிக்கையீனத்தைக் கடந்து நல்லெண்ணத்தில் பற்றுறுதியாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த மந்த நிலையைக் கடந்து நீளும் நம்பிக்கைக் கரங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பிடிப்பதே அவசியமானதாகும்.

தெற்கிலிருந்து கலாசார விழாவுக்காக லால் ஹாகொட, ரோஹன பொதுலியத்த உள்பட சுமார் பத்துக் கவிஞர்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர். கவிஞர்கள் மட்டுமில்லை அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே, கிங்ரத்னம் போன்ற புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்படக்கலைஞர்கள் எனப் பல சமாதான விரும்பிகளும் வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏறக்குறைய 300 பேருக்கும் மேல். உடல் நலமற்ற நிலையிலும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், யாழ்ப்பாண மக்களுடன் உரையாட வேண்டும் என மூத்த கவிஞர் லால் ஹாகொட பயணித்து வந்தது முக்கியமானது.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நேசத்தையும் பரஸ்பரத்தொடர்பாடலையும் ஊக்குவிக்கும் முகமாக இந்த விழாவில் கலந்து கொள்வதே இவர்களுடைய நோக்கம். நிகழ்ச்சியை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் அவன்த ஆடிகலவின் கார்டூன்கள், நயனஹாரி அபேநாயக்க, லால் ஹாகொட ஆகியோரின் ஒளிப்படங்கள், சூரி, கோ.கைலாசநாதன் போன்றவர்களுடைய ஓவிங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை விட சமாதானத்தின் மகத்துவத்தையும் அதனுடைய தேவையையும் மக்களுடைய உரிமைகளையும் உணர்த்தும் இன்னும் ஏராளமாக ஒளிப்படங்களும் காட்சியில் இணைக்கப்பட்டிருந்தன. தர்மசேன பத்திரிராஜாவின் “பொன்மணி“இ அசோக ஹந்தகமகவின் “இனி அவன்“, ந. கேசவராஜனின் “அம்மா நலமா“, கிங்ரத்தினத்தின் “கந்துகரயே தோங்காராய“ பிரசன்ன விதானகேயின் “உசாவ நிஹண்டய்“ ஆகிய படங்களும் குறும்படங்கள் சிலவும் திரையிடப்பட்டன. அத்தனையும் போரின் வலியையும் சமாதானத்தின் அவசியத்தையும் அதனுடைய ருசியையும் உணர்த்துகின்றவை.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்ச்சியில் சந்திப்புகளும் உரையாடல்களுமே முக்கியமானவை. அவையே சமாதானத்துக்கான பாதையை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் என்பதால் உரையாடல்களைச் செய்வதற்கான முறையில் வடக்கில் பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட யாழ்ப்பாணத்திலிருந்து கலைஞர்களும் படைப்பாளிகளும் கலந்து கொண்டது குறைவாகவே இருந்தது. இருந்தும் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் உரையாடல்களை நடத்தியது சிறப்பு.

இதைப்போல அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து “மக்கள் களரி“ என்ற நாடகக்குழு புகழ் மிக்க நாடக நெறியாளரான நிரியெல்லவின் தலைமையில் வந்திருந்தது. 10 நாட்கள் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் நிகழ்வுகளை நடத்தியது. இந்த நிகழ்வில் ஒப்பீட்டளவில் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர். இருந்தாலும் இந்த நிகழ்வைப் பொது வெளி எதிர்கொண்ட விதம் திருப்திகரமானதாக இருக்கவில்லை. வழமையைப்போல உரிய கவனத்தை அளிப்பதில் தயக்கம் காட்டின. ஆனால், இதே தமிழ்ச் சூழல் இந்தியக் கலைஞர்களும் இந்திய நிகழ்ச்சிகளும் வருகை தந்தால், அதற்கு முதன்மையளித்துப் பிரமாதப்படுத்தும் போக்கு நிலவுகிறது.

இதெல்லாம் திரும்பத்தரும்ப சொல்லும் சேதி, இன ஐக்கியத்திலும் அதன்வழியாக உருவாகும் சமாதானத்திலும் அதன் வழியாக உருவாகும் அரசியற்தீர்விலும் நம்பிக்கையும் நாட்டமும் இல்லை என்பதேயாகும். .இதை இன்னொரு விதமாக நேரடியாகச் சொன்னால், அயலாரை நம்புவதை விடவும் பிறத்தியாரை நம்புமளவுக்கே நிலைமை உள்ளது. குறிப்பாக சிங்களச் சமூகத்தையும் விட, முஸ்லிம்களையும் விட இந்தியா மற்றும் மேற்குலகத்தையும் அதிகமாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். அவர்களையே அவர்கள் அதிகமதிகம் விரும்புகிறார்கள். இந்த நிலை இலங்கைக்கு எப்போதும் நன்மை தருமா? இதைக் குறித்து கொழும்பும் சிந்திக்க வேண்டும். யாழ்ப்பாணமும் சிந்திக்க வேண்டும். அதைப்போல இலங்கைச் சமூகங்கள் அத்தனையும் சிந்திக்க வேணும். இது காலத்தின் கட்டளை. ஏனென்றால்இ இத்தான் சமாதானத்துக்கும் தீர்வுக்குமான காலமாகும். நிச்சயமாக இது போருக்கும் முரண்பாடுகளுக்கும் விலகல்களுக்குமான காலமல்ல.

சமாதானத்தின் ருசியை அறிய வேண்டுமானால். அதற்கு நியாயமாகச் சிந்திக்க வேண்டும். நியாயமாகச் சிந்திப்பதற்கு நிதானம் தேவை. அந்த நிதானத்திலிருந்தே சமாதானத்தின் ஊற்றுக்கண் திறக்கும்.

-கருணாகரன்

யாழில் கடந்த செப்டம்பர் 30ம் திகதி மற்றும் அக்டோபர் 1ம், 2ம் திகதிகளில் இடம் பெற்ற "எனினும் நாம் பறப்போம்..." கலாசார விழா குறித்து தமிழ்மிறர் பத்திரிக்கையில் வெளிவந்த ஆக்கம் இங்கு மீள் பிரசுரமாகின்றது.

நன்றி:  தமிழ்மிறர் &  கருணாகரன்