Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு!!!

தமிழர்களின் வாழ்வு அழிக்கப்படுகிறது. நீர், நிலம் என தமிழ் மண்ணின் வாழ்வாதாரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. உண்ணும் உணவில் வேதியல் நஞ்சு கலக்கப்படுகிறது. எம் மக்களின் தாய்மொழி, தமிழ்மொழி மதவெறியர்களாலும், இனவெறியர்களாலும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகிறது. ஆனால் நாம் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. "தமிழன்டா" என்று தட்டி வைக்கவில்லை.

தமிழ்நாட்டில் கடன்சுமை தாளாமல் உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கொக்கோகோலா, பெப்சி போன்ற சர்வதேசக் கொள்ளையர்கள் உறிஞ்சி எடுத்து வற்றாத நதிகள் எல்லாம் வரண்டு போனதால் வயலிற்கு பாய்ச்ச நீரின்றி பயிர்கள் கருகுகின்றன. தமிழினத் தலைவர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி போன்ற மொள்ளமாரிகளின் ஆட்சிகளில் காடுகள், மலைகள், கடல்கள் என்று இயற்கை முழுவதையும் அழித்ததினால் மழையின்றி பயிர்கள் கருகுகின்றன. தன் உயிர் கருகுவதைப் பார்க்க முடியாமல் உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உழவர்களை ஆளும், அதிகாரவர்க்கம் தற்கொலைக்கு தள்ளும் போது நாம் நல்லூரில் திரளவில்லை.

இலங்கை முழுவதும் விலை பேசி விற்கப்படுகிறது. அரசியல்வாதிகளின் வரவுக் கணக்குகளை விட மிக வேகமாக விலைவாசி ஏறி ஏழைமக்களின் குரல்வளைகளை நெரிக்கிறது. "அம்மா பசிக்குது" என்று அழும் குழந்தைகளின் அவலம் தாளாமல் தாய்மார்கள் தம்முயிர் போக்குகிறார்கள். தம் குஞ்சுகளும், தாமும் சேர்ந்து தண்ணீரில் உயிர் போக்குகிறார்கள். இதற்கெல்லாமா போராடுவது என்று நாம் நல்லூரில் கூடவில்லை.

தமிழ் மக்களிற்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினருக்கு தேவை என்று நம் மக்களின் வீடுகளை, நிலங்களை பறித்துக் கொண்டார்கள். களவெடுத்த நிலத்தில் பெரும்பகுதி இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இப்போது இயக்கச்சியில் மறுபடியும் காடுகளை அழிக்கிறார்கள். தமிழ் மண்ணிற்காக எல்லாம் நல்லூரில் குரல் கொடுக்க நாம் கூடத் தான் வேண்டுமா?

தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். ஆண்டுக்கணக்காக வழக்குகள் ஏதுமின்றி தமிழ் மக்கள் என்னும் ஒரே காரணத்திற்காக சிறை இருக்கிறார்கள். நாமும் ஏனென்று கேட்க மாட்டோம். "காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்து"; "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்று யாராவது குரல் கொடுத்தாலோ, கூட்டம் போட்டாலோ அதில் கூடிக் கொள்ளவும் மாட்டோம்.

தமிழ் மக்களைக் கொன்றவர்களுடன் தமிழர்களின் கட்சி என்றும், தமிழர்களின் தலைவர்கள் என்னும் கூறிக் கொள்பவர்கள் கூடிக் குலாவுகிறார்கள். கொன்றவர்களிற்கே வாக்குப் போடுங்கள் என்று நா கூசாமல் நமக்குச் சொல்கிறார்கள். கொலைகாரர்களை மீட்பர்கள் என்று சொல்வதைக் கேட்டும் நம் மீசைகள் துடிக்கவில்லை.

ஆட்சியாளர்களை எதிர்க்க முடியாது. அவர்கள் கொலை செய்வார்கள்; கொடுஞ்சிறையில் போடுவார்கள். ஏற்கனவே நிறைய இழந்து விட்டோம்; அதனால் மெளனமாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள். எல்லோருக்கும் நிலைமைகள் தெரியும். ஆனால் தமிழ்ச் சமுகத்தில் உள்ளிருந்து கொல்லும் சாதி, மதம்,  சீதனம், ஊழல் இவை பற்றி பேசக் கூட முடியாதா?

நம் தமிழ்க் குழந்தைகளின் கல்விக்கு தடை போடுகிறார்களே யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளில் அதைக் கூட தட்டிக் கேட்க நம்மால் முடியாதா? ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்தரம் வரை விலை வைத்து ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை இருளச் செய்கிறார்களே. ஏன் நாம் எதுவும் கேட்பதில்லை. பாடசாலை அதிபர்களுடனும் அவர் தம் அடிப்பொடிகளுடனும் எதிர்த்துப் பேசத் துணிவில்லாத நாம் "தமிழன்டா" என்று நல்லூரில் மீசை முறுக்குகிறோம்.

தமிழ்ப் பண்பாட்டை அழித்த, தமிழ் வழிபாட்டிற்கு தகுதியான மொழி அல்ல என்று சொன்ன இந்து மதத்தை எதிர்த்து மூச்சுக் கூட விடாமல் நாம் தமிழ்ப் பண்பாடு காக்க ஒன்று திரளுவோம். தமிழரை சூத்திரர் என்றும், பஞ்சமர் என்றும் இழிவுபடுத்தும் இந்து மதத்து பிராமணரையோ அல்லது தமிழ் மக்களைக் கொன்று தமிழ் மண்ணை அழித்து விட்டு  நாடு பிடித்தவர்களின் பொய்களை பிரசங்கிக்கும் கிறிஸ்தவ பாதிரியாரையோ வைத்து  தமிழ்ப் பண்பாட்டை அழிய விட மாட்டோம் என்னும் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்போம். ஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு!!

நன்றி: படம் - மயூரபிரியன்