Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியமும்--தமிழ்த்தேசியமும் பகுதி-12

கே. ஏ. சுப்பிரமணியம் நினைவாக—(5-3-1931---27-11-1989)

இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் சரி, சாதிய-தீண்டாமைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றிலும் சரி கே.ஏ.சுப்பிரமணியம் அவர்கள் எப்பொழுதும் ஓர் முன்னேடியான செயற்பாட்டாளராகவும், போராளியாகவும் வாழ்ந்து பல தடங்களைப் பதித்துச் சென்றவர். தமிழர் சமுதாயத்தில் கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேல் நடைபெற்ற ஆயதப்போராட்டம் மக்களிற்கும், அவர்களின் விடுதலைக்கும் ஆனதல்ல.  ஆனால் 1966-ம் ஆண்டு பகுதிகளில் நடைபெற்ற சாதிய-தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறுகியகாலப் போராட்டங்கள்தான். ஆனால்  மக்களின் விடுதலைக்கு ஆனவைதான் என்பதை எதிர்வரும் பதிவுகளுக்கு ஊடாக காணமுடியும். இதில் கே.ஏ. அவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை சொல்வதின் ஊடாகவும, அடக்கி-ஒடுகப்பட்டதோர் சமூகம் எத்தகையதோர் போராட்ட மார்க்கத்திற்கு (புரட்சிகர-வெகுஜனப் போராட்ட)  ஊடாக தன் விடுதலைப்பாதையை முன்னெடுத்து முன்னேற முடியும் என்பதையும் தொட்டுச் செல்ல விரும்புகின்றேன்.

கே.ஏ. அவர்கள் 1931- மார்ச் 5-ல் யாழ். கொல்லங்கலட்டியில் (தந்தையார் கதிரிப்பிள்ளை - அம்பலப்பிளளை தாயார் தெய்வானைப்பிள்ளை) பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொல்லங்கலட்டி சேர் கனகசபை வித்தியாசாலையிலும், உயர் கல்வியை இளவாலை சென் கென்ரீஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசெப் கல்லூரியிலும் கற்றார். 1951-ல் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பொறியியல் தொழில்நுட்பப் பயிலுனராக இணைந்தார். வேலை செய்யும் காலத்தில் அவருடன் வேலை செய்த பாசையூர் சந்தியாப்பிள்ளை என்பவருடன் (இடதுசாரி-முற்போக்காளர்) ஏற்பட்ட தொடர்பின் ஊடாக, இந்திய மார்க்சிய நூல்களையும் ஜனசக்தி போன்ற பத்திரிகை-சஞ்சிகைகளையும், ப.ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் கற்கின்றார். இதன் வளர்ச்சியால், மார்க்சிச சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு 1952-ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆகின்றார். 1963-ல் கட்சியின் வடபிரதேச வாலிபர் சங்க செயலாளர் ஆகின்றார். கட்சி உறுப்பினராக இருந்த வேளையில் சீமெந்துத் தொழிற்சாலையில் தொழிற்சங்க அமைப்பை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றினார். இதன்பொருட்டு ஓர்தடவை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்தே நீக்கப்படுகின்றார். இதன்பின் கட்சியின் முழுநேர ஊழியன் ஆகின்றார்.

1964-ல் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் உறுப்பினராகி, கட்சியின் மத்திய கமிட்டியிலும், பிரதேசக் கமிட்டியிலும் அங்கம் வகிக்கினறார். 1966-அக்டோபர் 21-ல் நடைபெற்ற சாதியத்திற்கு எதிரான சட்டவிரோத ஊர்வலத்திற்கு தலைமை ஏற்று முன்னேறியபோது, தாக்குண்ட போராளிகளில் இவரும் கடும் தாக்குதலுக்கு ஆளாகின்றார். 1969-ல் மேதினம்! அன்று வெசாக்தினம் என்பதால் அன்றைய ஐ.தே.கட்சி அரசு தொழிலாளர் தினத்தை வேறொரு தினத்தில் நடாத்த உத்தரவிட்டது. உத்தரவை நிராகரித்த கட்சி அதே நாளில் சட்டவிரோதமாக ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடாத்த முடிவு செய்ததது.

திட்டமிட்படி ஊர்வலம் யாழ்-வின்சர் தியேட்டர் சந்தியில் இருந்து ஆர்ப்பாட்டதுடன் கூடிய கோசங்களுடன் ஆரம்பமாகி, யாழ்-நகரின் முக்கிய வீதிகளிற்கு ஊடாகச் சென்றது. இச்சட்டவிரோத ஊர்வலம் நடைபெறப்போகின்றது என்பது போலீசாருக்குத் தெரியும், ஆனால் எங்கிருந்து என்பது தெரியாது. ஊர்வலம் ஆரம்பமாகி யாழ்-முற்றவெளியை அண்மித்த பொழுது, போலீசார் ஆயுததாரிகளாக வீதிக்கு குறுக்கே நின்று மறித்து கலைந்து செல்லும்படி மிரட்டினர்.  இன்றைய சர்வதேச தொழிலாளர் தினத்தில் எம் உரிமையை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. எனவே இதிலிருந்து கலைந்து செல்லமுடியாதென கே.ஏ.அவர்கள் மறுத்துரைத்தார். இந்நிலையில் வாக்குவாதத்தின் உச்சகட்டம் மோதலாக மாறியது. ஊர்வலத்தில் சென்றோர் மேதினக் கோசங்களுக்கிடையில் தம்கைகளில் கிடைத்ததைக் கொண்டு (கற்கள், கொடித்தடிகள், செருப்புகள்) போலீசாரைத் தாக்கினர். இதில் முன்னணியல் நின்ற கே.ஏ. அவர்களும் ஏனைய முன்னணித் தோழர்களும் போலீஸ் தாக்கதல்களுக்கு ஆளாகி, பலத்த காயங்களுடன் யாழ்-மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்படியாக போராட்டம் நிறைந்த வாழ்வுடன் அவர் தன் அரசியல் வாழ்வை நகர்த்துகையில், 71-ல் ஏற்பட்ட ஏப்ரல் கிளர்ச்சியால் ஓராண்டிற்கு மேற்பட்ட காலம் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்கின்றார்.

ஏப்ரல் கிளர்ச்சியின் போது இயங்கா நிலையில் இருந்த கட்சி அமைப்பு மீண்டும் மீள் உருவாக்கம் பெறும் வேளை தலைமறைவு வாழ்வில் இருந்து மீண்டு வந்து தன் அரசியல் வாழ்வைத் தொடங்குகின்றார். இக்காலகட்டத்தில் சண்முகதாசனோடு தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக (சுயநிர்ணயத்தை ஏற்காமை) உட்கட்சி விவாதம் ஆரம்பமாகின்றது. இதையடுத்து மூன்றுலகக் கோட்பாடு பற்றிய விவாதமும் ஆரம்பமாகின்றது. இவ்விவாதங்களை பகிரங்கப்படுத்துவதில்லை என்ற மத்தியகுழுவின் முடிவை மீறி பல தடவைகள் சண் பகிரங்மாகச் செயற்படுகின்றார். இதன் நிமித்தமும், ஏனைய நடைமுறைச் சிக்கல்கள் கொண்ட அரசியல் வேலைமுறைகளாலும் அக்கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) இவர் தலைமையில் உருவாகியது.  பின்னர் புதிய ஜனநாயகக் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது (புதிய ஜனநாயக மாக்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி என்ற பெயரில் இன்று இயங்குகிறது). இதனூடாக இலங்கையில் பொதுவுடைமை இயக்கப் பரப்பில் திரிபுவாதம் அதிதீவிரவாதம் வலதுசாரி சந்தர்ப்பவாதம் போன்றவற்றுக்கும் அப்பால் நிதானமான நேர்மைமிக்க ஒரு மாக்சிச லெனினிசக் கட்சியின் அவசியத்தை மாஓ சேதுங் சிந்தனை வழிகாட்டலில் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருந்தார்.

கே.ஏ. அவர்கள  சுமார் நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர். அவர் நிலவுடைமைக் கருத்தியலும் சிந்தனையும் நடைமுறைகளும் கொண்ட பழைமைவாத கிராமச் சூழல் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் அவர் மாக்சிச உலக நோக்கை தெளிவாகவும் உறுதியாகப் பற்றி உள்வாங்கிக் கொண்டமையால் பழைமை வாதத்தை முற்றாகக் களைந்து நின்றார். அதனாலேயே தற்பெருமை, தன்முனைப்பு, புகழ் நாட்டம் பதவி மோகம், அனைத்தையும் துறந்ததொரு வாழ்வை மேற்கொண்டார்!. இவ்வாறான ஒரு வாழ்க்கை முறை அவருக்கு பல்வேறு வாழ்க்கைக் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது என்பது உண்மையே. இல்லாமையும் பற்றாக் குறையும் காரணமாக அடிப்படைத் தேவைகளின் ஆகக் குறைந்தவற்றைக் கூட அவரது குடும்பம் பெற முடியாமல் வாழ்ந்தது உண்மையே.

 தானே விரும்பி மணம் முடித்த மனைவி குடும்பத்தின் வாழ்வுப் பாரத்தைச் சுமந்து  பொதுவுடைமை இலட்சியப் பயணத்தில் அவருடன் கூடவே வழி நடந்தார் என்பதை இந்நேரத்தில் நினைவு கூர கடமைப்பட்டவன் ஆகின்றேன். கலப்புத் திருமணமும், அவர் கழுத்தில் இருந்த அரிவாள்-சம்மட்டி பொறித்த ஆபரணமும், அவரை அன்றைய சமூகத்தில் இருந்து அந்நியப்படவைத்தது. வறுமை, பசி, பட்டினியுடன் "சத்தியமனை" எனும் பெயர் கொண்ட சிறு வீட்டில் அக்குடும்பம் வாழ்ந்த வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றேன். இருந்தும் சத்தியமனை தொடர் இடதுசாரிப் பாசறையாகவே இருந்தது. எத்தனை அரசியல் வகுப்புகள் (தமிழ்த்தேசிய இளைஞர்களுக்குக் கூட) கூட்டங்கள!, அரசியல் முடிவுகளை எடுக்கும் கட்சிக்காரியாலயமாகவும் செயற்பட்டது.

இறுதிக் காலத்தில் புலிகளின் பாஸிஸம் கொண்ட அரசியலால், கண்டியில் தன் தலைமறைவு வாழ்வை மேற்கொள்கையில், 1989-நவம்பர் 27-ல் அங்கு இயற்கை எய்தினார். மரணத்தின் முன்பாக தன் இறுதி நிகழ்வு எப்படி அமைய வேண்டுமென்ற வேண்டுகோளின் அடிப்படையிலேயே, கட்சியால் நடாத்தப்பட்ட "விடை பெறுகிறேன்" எனும் நிகழ்வுடன் சத்தியமனையில்  இருந்து இறுதிவிடை பெறுகின்றார்.

(தொடரும்)

 27/11/2012

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-2)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-3)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-4)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-5)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-6)