Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அக்டோபர் புரட்சியின் நினைவாக ……….


 தேசிய இனப்பிரச்சினையில்--சுயநிர்ணய உரிமைப் பிரயோகம்
 
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை.  இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.

 

கைத்தொழில் புரட்சிக்கு பின்பான முதலாளித்துவ சமுதாயத்தில் தேச-உருவாக்கங்கள், தேசிய அரசுகள், குடியேற்ற அரசுகள், காலனித்துவ-ஏகாதிபத்திய அரசுகள் என வகைப்பட்டன. தொழில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள், வளர்ச்சி குன்றிய பின்தங்கிய வாழ்வாதாரங்களைக் கொண்ட மக்களின் நாடுகளை ஆக்கிரமித்து, காலனித்துவ அரசுகளை உருவாக்கின. இதில் பிரித்தானியாவிற்கு சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தைக் கொண்டதென்ற கொடிய காலனித்துவ வரலாறும் அதற்கு உண்டு.
 
பிரித்தானிய -- ஆதிக்கத்தின் ஒடுக்குமுறையில் இருந்து விடுபட்டு, தேசிய அரசொன்றை அமைத்துக்கொண்டு, சுதந்திரமாக வாழும் உரிமைக்கான போராட்டத்தை முதன் முதலாக ஐரிஸ் மக்களே முன்னெடுத்தனர். இப்போராட்டம் தான் உலகிற்கு சுயநிர்ணயக் கோட்பாட்டை அறிமுகம் செய்து வைத்தது எனலாம். ஐரிஸ் போராட்டத்திற்கு அன்று கார்ல் மார்க்ஸ் அவர்கள் வழங்கிய ஆதரவு இதற்கு ஓர் மைல் கல்லாகும். இதற்கு மேலும் வலுச் சோக்கும் வகையில் 1896-ல் ஆண்டு லண்டனில் கூடிய சர்வதேச காங்கிரஸ் "தேசியங்களின் சுயநிர்ணய உரிமை"யை அங்கீகரித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. இம்மாநாட்டில் இத்தீர்மானத்தை நிறைவேற்றிய முக்கியமானவர்களில் ஒக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கிய லெனினும் ஒருவராவார்.
 
லெனின் அக்டோபர் புரட்சியை முன்னெடுக்கும் போது, அன்றிருந்த ரஸ்யாவின் தேசிய நிலையானது, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவே இருந்தது. சர்வதேச நிலை முதலாளித்துவ - ஏகாதிபத்திய - காலனித்துவத்தால் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் நாடுகளாகவும், தேசங்களாகவும் இருந்தன. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த லெனின்  தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு, ஒடுக்கப்பட்ட காலனித்துவ நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டங்களையும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களையும், "சுயநிர்ணய உரிமை" கோட்பாட்டை மையப்படுத்தி ஆதரித்துக் குரல் கொடுத்தார். இதில் லெனின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டு உருவாக்கத்திற்கும், அதன் செயற்பாட்டிற்கும் பாட்டாளி வர்க்க கண்ணோட்த்திலான நடைமுறைத் தீர்வு கொண்ட பொறிமுறையையே முன்வைத்தார்.
 
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
 
ஒரு தேசிய இனத்திற்கு தன்னை ஓர் "தனியொரு அரசியல் சமுதாயமாக அமைத்துக்கொள்ளும் அடிப்படை உரிமை என்றென்றும் உண்டு." இதுவே சாராம்சத்தில் சுயநிர்ணய உரிமை என்பதின் மெய்ப்பொருளாகும். இவ்வுரிமை எத்தேசிய இனத்திற்கும் உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு வரலாற்றுச் சூழலிலும், ஒரு தேசிய இனம், தனது தலைவிதியை, தான் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் வடிவத்தை, அது எதுவாக (சமஸ்டி, பிரதேசசுயாட்சி போன்ற இன்னோரன்ன) இருந்தாலும், அதைத் தானே சுயமாக முடிவெடுப்பது என்பது மட்டுமல்ல, அம்முடிவுகளில் தலையிடும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது என்பதையே, அக்கோட்பாடு மிக வலிமையுடன் அடித்துச் சொல்கிறது.  சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ள பிறப்புரிமையே தவிர, அது மற்றவர்களால் இடப்படும் பிச்சையல்ல.
 
இதில் "பிரிந்துபோகும்" உரிமையை ஏற்றுக்கொள்வதென்பது, அது சமன் பிரிவினைக்குத்தானென இட்டுச்செல்லவும், அதை எட்ட வைக்கும் செயல் ஊக்கம் கொண்ட கருமமாற்றுவதற்கும் ஆனதல்ல. விவாகரத்து உரிமை இருக்கின்றதென்பதால், ஒவ்வொரு திருமணமும் விவாகரத்தில்தான் முடிய வேண்டும்.... எனும் நிலை இல்லையே? குடும்ப வாழ்வில் பிரிந்து செல்வதற்கான உரிமையை புரிந்து வாழும் (உலக நடைமுறையிலுள்ள)  தம்பதிகளுக்கிடையில் உள்ள புரிந்துணர்விலான உறுதிப்பாடும, சமத்துவ வாழ்வுடன் கூடிய கெட்டியான உறவை பேணும் வாழ்வு நிலைமையானது, அவ்வுறவுப் புரிதல் இல்லாத தம்பதிகளுக்கு இடையில் இருக்க முடியாது. இதுபோன்றதொரு சமூக விஞ்ஞான உறவு முறையையை தான், தேசிய இனங்களுக்கு இடையிலும் உள்ள உறவாக பேணவும், பேணி செயற்பட்டு வாழவும் இக்கோட்பாடு வழிவகுக்கின்றது.  எனவே இதில் "பிரிந்து செல்லும் உரிமை"யை ஏற்றுக்கொள்வதென்பது, தேசிய இனங்களை பாதுகாப்பு உடையவர்களாக உணரவைப்பதுடன், சமமான பங்காளிகளாக, ஐக்கியத்துடன் இணைந்து வாழவும் வழிவகுக்கின்றது.
 
லெனின் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திலான இச்செயற்பாட்டை, தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்காக பின்வரும் கோட்பாடு கொண்டு வலியுறுத்தினார். "பேரினவாத இனவெறி கொண்டு அடக்கியொடுக்கும் இனங்களின் மத்தியிலுள்ள வர்க்கபோதம் கொண்ட உணர்வுடனான பாட்டாளி வர்க்கம்,  சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்து பிரசாரம் செய்ய வேண்டும் எனவும், ஒடுக்கப்படும்        தேசிய இனங்களின் மத்தியிலுள்ள பாட்டாளி வர்க்கம், இதை நிராகரித்து ஐக்கியத்தை வலியுறுத்தும் நிலைபாடு கொண்ட பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும்" வகுத்தெடுத்தார். இவ்வடிப்படை கொண்ட பாட்டாளி வர்க்க செயற்பாடுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுத் தளம் தான், தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்த ரஸ்யாவில், தேசிய இனப்பிரச்சியைத் தீர்ப்பதற்கும், தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைப் பேணவும் வழிவகுத்து.
 
தேசிய இனப் பிரச்சினைத் தீர்விற்கு நடைமுறைச் சாத்தியமான இக்கோட்பாட்டை, உலகின் மாக்சிஸ-லெனினிசக் கட்சிகள், தத்தம் நாட்டின் உண்மை நிலைக்கேற்ப தீர்வாகவே வகுத்தன. வகுத்துக்கொண்டும் செயற்படுகின்றன. இதை எமது நாட்டில் சாத்தியமாக்குவதற்கு இடதுசாரி சக்திகளால் முடியாததாகி விட்டது.  இடதுசாரி இயக்கத்தின், குறிப்பாக பாராளுமன்ற சகதிக்குள் மூழ்கிய இடதுசாரிகளின் திரிபுவாத-சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளால் தான் இந்நிலை ஏற்பட்டது.  இவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாட்டின் உச்சகட்டமானது பேரினவாத அரசுகளுடன் சமசரசமாகி, அதன் இனவாதச் சகதிக்குள் மூழ்கும் அபாய நிலைக்கும் சென்றது. இதனால் சரியான இடதுசாரிச் சக்திகளால் கூட இப்பணியை வலுவாக முன்னெடுக்க முடியாத துர்ப்பாக்கிய  நிலைக்கும் செல்ல நேரிட்டது. அத்தோடு கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக,  பேரினவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் செயற்பட்ட குறுகிய தமிழ் இனவாத தேசியத்தின் செயற்பாடுகளும், இதை எட்டவைக்க விடவில்லை.  
 
எம்நாட்டில் கடந்த மூன்று தசாப்த்தத்திற்கு மேலாக சுயநிர்ண உரிமை என்றால் அது பிரிவினைதான் என்ற கோட்பாட்டில் இருந்து தான் நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் பலன் முள்ளிவாய்காலின் முன்னூறு மீற்றருக்குள் வந்து முற்றாக முடிவடைந்தது. இதன் படிப்பினைகள் எதைத்தான் எங்களுக்கு பாடங்கள் ஆகியுள்ளன. அடக்கி - ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடுக்கலினால் (தொழிலாளி வர்க்க போதமற்ற)  புடம்போடப்படாத சிந்தனை - செயற்பாடற்ற தலைமைகளின் தேசிய செயற்பாடுகள் எதுவும் அம்மக்களின் இறுதி இலக்குகளை அடையாது. இன அடக்குமுறைகளுக்கு மட்டுமல்ல சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்ட வைக்காது
 
எனவே சுயநிர்ணய உரிமைப் பிரயோகத்தை இன்றைய எம்நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப கையாள வேண்டும். இன்று நாம் ஓர் பொது வேலைத்திட்டத்தில் உள்ளோம்.  இதை நாம் எங்கள் மாநாட்டிற்கு ஊடான பிரதான வேலையாக கொண்டுள்ளோம்.


இதில் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வதையே பிரதான வேலையாக கொண்டுள்ளோம். பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஓப்பந்தம் (அது சமஸ்டியுமல்ல) என்றாலே பிரிவினைதான் என சிங்கள மக்கள மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டு அதை இல்லாதாக்கிய வரலாறும் எம்முன் உள்ளது..
 
இந்நிலையில் சுயநிர்ணய உரிமை பிரச்சாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இலங்கை அரசியல் இனவாதச் சேற்றுக்குள்ளேயே புதைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதே தெரியாத ஏகப்பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய வேலைத்திட்டத்தின் ஊடாக செல்ல வேணடும் என்பதில் நிதானம் வேண்டும். அதுவும் வரலாற்றில் முதற் தடவையாக கால்பதிக்கும் வேளையில், அதனூடான வேலைத்திட்டத்தில் நடைமுறை கொண்டே கண்டறியப்பட வேண்டும். கடினமான பயணம். ஆனால் கண்டிப்பாக பயணித்தாக வேண்டும்.


-24/10/2012