Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

டெல்லியில் காவி - காப்பரேட் பாசிசம் நடத்திய வன்முறை சொல்லுவது என்ன?

காவி காப்பரேட் பாசிசம் தான், இனி நாட்டின் பொதுச் சட்டம். இதை யாரும் மீற முடியாது. தங்கள் பாசிச வன்முறையிலான அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, சட்டத்தின் முன் கொண்டு வரவோ முடியாது.

இதையே டெல்லியில் காவிப் பாசிசம் செய்ததுடன், நாட்டின் சட்டத்தையும், நீதித்துறையையும் வெளிப்படையாகவே ஒளிவு மறைவு இன்றி குதறியிருக்கின்றது. இதன் மூலம் நாட்டின் சிவில் சட்டம் மற்றும் நீதி மீதான பொது மக்களின் பொது நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்திருக்கின்றது. இதன் மூலம் காவிப் பாசிட்டுகள் இந்திய மக்களுக்கு அரசியல் பாடத்தைப் புகட்டியிருக்கின்றனர். சட்டமோ, நீதியோ, பொலிஸ் பாதுகாப்போ இனி பொது மக்களுக்குக் கிடையாது, அது காவிகளுக்கும் - காப்பரேட்டுக்களுக்கும் மட்டும்தான். இனி இந்திய முதலாளித்துவம் இந்தத் திசையில் தான் பயணிக்கும். பாசிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்கி, பாசிட்டுகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும். இது தான் சட்டமும் - நீதியுமாகிவிட்டது.

இந்த உண்மையை அரசு நடத்திய டெல்லி வன்முறை மூலம் – தொடர்ந்து வன்முறைக்கு பிந்தைய அரசின் நடத்தைகள் மூலமும், வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. சட்டம், நீதி என்றும், அரசு நடுநிலையானது என்றும் யாரும் இனி உளற முடியாது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமும், நீதியும் தனியுடமையைப் பாதுகாக்கும் சட்டவாக்கத்தாலானது. இது அனைவருக்கும் பொதுவானது என்பதுதான், முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.

அரசும், அரசு வடிவமும் தன்னைத்தான் மூடிமறைத்துக் கொள்ளவே சட்டமியற்றும் பாராளுமன்றத்தையும் – பாராளுமன்றத்துக்கு தோந்;தெடுக்கும் ஜனநாயக முறைமையையும் வைத்திருக்கின்றது. தான் இயற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்று காட்டிக் கொள்ளும் ஜனநாயக வேசத்தை மூடிமறைத்துக் கொள்ளவே, இனம் - மதம் - நிறம் - சாதி.. என்று மக்களை பிரித்து மோதவிடுகின்றது.

இப்படி மக்களை பிரித்து மோதவிடும் அரசு – தானே ஒடுக்கும் பாசிச வடிவத்தை கையில் எடுக்கும் போது, அனைத்துத் தரப்புக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை விலக்கி விடுகின்றது. இந்திய அரசு மிகத்; தெளிவாக பிறரை ஒடுக்கும் காவிப் பாசிசமாகி, காவியல்லாத அனைத்தையும் ஒடுக்குகின்றது. அதே நேரம் மிகத் தெளிவாக காப்பரேட் மூலதனத்துக்கு சேவை செய்வதன் மூலம், காப்பரேட் அல்லாத பிற வர்க்கங்கள் அனைத்தையும் ஒடுக்குகின்றது.

அரசு என்பது மனிதனை மனிதன் சுரண்டுவதை உறுதி செய்வதே. சுதந்திரமான விரிந்த மூலதனச் சந்தையை விரிவாக்குவதற்கு ஏற்றவாறான அமைதியை இனம், மதம், சாதி, நிறங்களுக்கு இடையில் உருவாக்குவதே, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பும், கண்ணோட்டமுமாகும். இது தகர்கின்ற போது, அரசு பாசிச வடிவத்தைப் பெற்று விடுகின்றது.

 

அதாவது இந்திய மூலதனம் மிக வேகமாக காப்பரேட் மயமாகிவரும் சூழலில், இந்திய சிறுவுடமை மூலதனம் பலியிடப்படுகின்றது. இந்திய சிறு உடமை உற்பத்தியையும், சாதியை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ கிராமிய விவசாயத்தையும் காப்பரேட் மயமாக்கும் அரசின் கொள்கையானது, பாசிச மயமாக்கல் மூலமே சாத்தியமாகின்றது. சிறுவுடமை சார்ந்த உதிரித் தொழிலாளர்களை அடிப்படையாக கொண்ட இந்தியப் பொருளாதாரம் மீதான காப்பரேட் மூலதனத்தின் வன்முறை வடிவம் தான் பாசிசம். அதை மூடிமறைக்கவே, அது தன்னை காவிமயமாக்கி நிற்கின்றது.

இன்று நடந்து வரும் காவி கார்ப்பரேட் பாசிசம் மூலம், 120 (1200 மில்லியன்) கோடி இந்திய மக்களின் செவ்வத்தை விட 63 பேரின் சொத்து அதிகமாகி இருக்கின்றது. இந்திய பொருளாதாரம் பொதுவில் நலிவுற்று வரும் பொதுச் சூழலில், செல்வம் சிலரிடம் குவிவதுடன் - குவிக்கப்படுகின்ற பின்னணியில் இருப்பது இந்தக் காவி - காப்பரேட் பாசிசம் தான். இங்கு காவி என்பது வெறும் மத உணர்வல்ல, காப்பரேட் உணர்வே. அதாவது ஆளும் வர்க்கத்தின் உணர்வு காப்பரேட்டாகவும், இந்த காப்பரேட் பாசித்தின் பின் அணிதிரளும் லும்பன்கள் மத உணர்வு மூலம் காவி மயமாக்குவதன் மூலம் - காவி – காப்பரேட் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.

இன்று ஒடுக்கப்பட்ட மக்களும், சுரண்டப்படும் மக்களும் காவி மயமாகி நிற்கும் காப்பரேட் பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டி இருக்கின்றது. காவி என்பது வெளித்தோற்றம். காவியை இயக்குவது காப்பரேட்டும், காப்பரேட்டை பாதுகாக்கும் அரசுதான்.