Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை

சாதி சமூகம் என்பது, ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக எதிர்மறையில் பிரித்து விடுகின்றது. சாதிக்கொரு வாழ்வியலாக, மனிதர்களைப் பிறப்பில் இருந்தே பிரித்து விடுகின்றது. இதைக் கண்காணிப்பதும், அதன்படி ஒழுகுவதும் வாழ்க்கை முறையாகவும், சாதிப் பெருமையாகவும் பீற்றப்படுகின்றது.

இந்த சாதிய அடிப்படையில் ஓடுக்குவது – ஓடுக்கப்படுவது என்பது, சாதிக்குச் சாதி இடம்மாறிக் கொண்டு இயங்குகின்றது. அதாவது சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்பவன், இன்னுமொரு நிலையில் சாதி ஓடுக்குமுறையாளனாக இருக்கின்றான். தான் ஒடுக்குவதற்கு ஓரு சாதி கீழ் இல்லாத நிலையில் உள்ள சாதியும், தனக்கு மேல் இருந்து ஓடுக்க ஒரு சாதி இல்லாத சாதிகள் தவிர, அனைத்தும் ஓடுக்கப்படவும், ( சாதிப் படிநிலையில் ஆக அடியில் வைக்கப்பட்டவனும், ஆக மேல்நிலையில் உள்ளதாக தன்னை கருதுபவனும்) அதேநேரம் ஓடுக்கும் சாதிய வடிவங்களாகவே,  இந்திய சாதிய சமூக அமைப்புமுறை இருக்கின்றது. சாதிய ஓடுக்குமுறை வடிவமானது, சாதிய படிநிலைக்கு ஏற்ப, பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் மாறுபடுகின்றது.

நவதாராளவாதத்தில் ஒடுக்கும் சாதி வடிவில் மேல்நிலையில் உள்ள சாதிகள், இடை நிலையில் உள்ள சாதிகள் போல், நேரடியான வன்முறையில் ஈடுபடுவதில்;லை. ஓடுக்குவதில் மேல்நிலையில் இருக்கும் சாதி ஓடுக்குமுறை என்பது நவதாராளவாத வடிவத்தைக் கொண்டதாக, தன்னைத்தான் தகவமைத்து கொண்டு வருகின்றது. "நாங்கள் சாதி பார்ப்பதில்லை, எங்கே சாதி இருக்கின்றது" என்று கூறும் - கேட்கும் குரல்கள், நவதாராளவாத சாதிய வடிவத்துக்குள் சாதியை நிலைநிறுத்தும், மேல்நிலைச் சாதிய நவீன வடிவங்களாகியுள்ளது. சாதியை வன்முறை வடிவில் குறுக்கிவிடுகின்ற பொதுப் புத்தி, நவதாராளவாத சாதியத்தை காண முடியாததாக மாற்றுகின்றது.

இந்த வகையில் ஓடுக்கும் சாதியப் படிநிலையில் மேலுள்ள நவதாராளவாத சாதி ஓடுக்குமுறையை 'பரியேறும் பெருமாள்' சினிமா காட்சிப்படுத்தவில்லை. மாறாக சாதிய வன்முறையில் ஈடுபடும் இடைநிலைச் சாதிகளையே, சாதியாக, சாதிய ஒடுக்குமுறையாக காட்டியிருக்கின்றது. அதாவது சாதியை வன்முறை வடிவமாக மட்டும், காட்டி இருக்கின்றது. சாதியத்தின் ஒரு சிறிய கூறு தான் சாதிய வன்முறை. வன்முறை மூலம் சாதியை விளங்கிக் கொள்ளுதல் - விளக்குதல் என்பது, நவதாராளவாத சாதியை பாதுகாத்தல் தான். சாதியென்பது பார்ப்பனியச் சிந்தனையாகவும் - வாழ்வியலாகவும் இருக்க, இதில் ஓரு கூறுதான் சாதிய வன்முறை. 'பரியேறும் பெருமாள்' சாதிய வன்முறையை,  சாதியாக காட்டி இருக்கின்றது.

அம்பேத்கரின் சாதியப் போராட்டத்தை தொடரவே 'பரியேறும் பெருமாளை' போன்ற சினிமாவை தயாரித்ததாக கூறக் கூடியவர்கள், அம்பேத்கரின் பார்வையைக் கூட பிரதிபலிக்கவில்லை. அம்பேத்கர் சாதியின் முரண்பாட்டை முழுமையில் முன்வைத்தே, ஓவ்வொரு கூறையும் அணுகியவர். அதாவது சாதியின் ஒரு சிறிய கூறை சாதியாக காட்டியது கிடையாது. இப்படி இருக்க, அம்பேத்கருக்கு பின்பான 70 வருட சாதி சமூகங்களில் நடந்த  மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு, 'பரியேறும் பெருமாள்' தன்னை முன்னிறுத்தவில்லை.

இந்த நிலையில் இந்திய சினிமாக்கள், ஓடுக்கப்பட்ட மக்கள் குறித்து பொதுவாக அக்கறைப்படுவதில்லை. மாறாக இந்திய சமூத்தை ஒடுக்கும் சித்தாந்தங்களையே கலையாக்கி வருகின்றனர். இதற்கு முரணாக 'பரியேறும் பெருமாள்' வெளிவந்திருக்கின்றது. இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களைத் தாண்டி, சாதி ரீதியாக ஓடுக்கப்பட்ட மக்களின் மேலான ஓடுக்குமுறைகளை, 'பரியேறும் பெருமாள்' காட்சிப்படுத்தி, சாதியை பேசுபொருளாக்கி இருக்கின்றது. சாதிய உணர்வு என்பது எப்படிப்பட்ட வன்மமும், வக்கிரமும் கொண்டதாக, மனித உணர்வுகளை புண்படுத்துவதை காட்சிகள் மூலம் சினிமாவாக்கி இருக்கின்றது.

சாதி கடந்த மனித உணர்வை தட்டியெழுப்பும் முயற்சி. காட்சிகள் ஒடுக்கப்பட்டவர்களை பார்த்து அனுதாபப்படு என்று கூறவில்லை. "மனிதாபிமானத்தையோ", கண்ணீரையோ கோரவில்;லை, மாறாக சாதி சமூகத்தில் வாழும் மனித நடத்தையையும், நிலைப்பாடுகளையும் சுயபரிசீலனை செய்யக் கோருகின்றது. சாதிச் சமூகத்தில் உனது பங்கு என்ன? சமூகத்தில் உள்ள ஓவ்வொருவரின் நிலைப்பாடு, அது சார்ந்த சிந்தனை முறையுமே சாதியாக நீடிக்கின்றது. இதைத்தான் இந்த 'பரியேறும் பெருமாள்' கேள்விக்குள்ளாக்குகின்றது.

இந்த வகையில் கலையை ஓடுக்கப்பட்ட மக்கள் சாhந்து முன்னிறுத்தும் உத்தி, சமகாலத்தில் தமிழுக்கு புதிது. தமிழ் என்று பொத்தம் பொதுவாக கலையாகும் சினிமா கலைக்கு, 'பரியேறும் பெருமாள்' முரணானது. அந்த வகையில் 'பரியேறும் பெருமாள்' முக்கியமான படம்.

'பரியேறும் பெருமாள்' உள்ளடக்கமும், சாதிய - வர்க்க கட்டமைப்பும்

இன்றைய உலகப் போக்கு என்பது – பல்வேறுவிதமான ஓடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் மக்கள் கூட்டம், விழிப்புற்றுப் போராடும் காலம். ஒடுக்கப்பட்ட மக்கள், முதன்முதலாக கல்வி அறிவு பெற்று முன்னேறும் காலகட்டமும் கூட.

இந்தப் பின்புலத்தில் ஓடுக்கப்பட்ட சாதிகள் மேலே வரத் துடிக்கின்ற போது, சந்திக்கின்ற பிரச்சனைகளை 'பரியேறும் பெருமாள்' பேசுகின்றது. திறந்த சந்தை உருவாக்குகின்ற    நவதாராளவாத சமூக அமைப்பில், முரண்பாடான பொருளாதார, கலாச்சார, பண்பாடு கொண்ட சாதி அமைப்பிற்கு இடையில், வெளிப்படையான ஒடுக்குமுறை கதையின் பேசுபொருள். அதாவது ஒடுக்கப்பட்ட சமூகம் விழிப்புற்று போராடும் தருணங்களில், வர்க்க ரீதியாக மேல் நிலை அடைய விரும்புகின்ற மனிதர்களின் நெருக்கடிகள், பிரச்சனைகள், ஓடுக்குமுறைகள் .. பற்றியது. இடைநிலைச் சாதிகளின், சாதிய ஓடுக்குமுறை பற்றியது. ஓட்டுமொத்த சாதிய உள்ளடக்கத்தை கதை பிரதிபலிக்கவில்லை. அதாவது நவதாராளவாதத்தில் சாதியம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ள புதிய வடிவத்தை 'பரியேறும் பெருமாள்' மூலம் கதையாக்கவில்லை. சாதிய சமூகத்தில் பிறந்த பெண், அதிலும் தன்னைச் சுற்றிச் சாதிய வன்முறையில் பிறந்த பெண், சாதியே தெரியாத கற்பனை உலகில் வைத்து காட்சியாக்கும் சோகம் நிகழ்கின்றது. சாதிய எதார்த்தத்தை காட்சியாக்க, கதையாக்க முடியவில்லை. கலைக்குரிய நேர்த்தி இழந்து, தோற்றுப் போகின்றது.

சாதிய சமூக அமைப்பில் நிலப்பிரபுத்துவமும், அதைத் தொடர்ந்து அரை நிலப்பிரபுத்துவ நிலவுடமையுடன் பின்னிப்பிணைந்த சாதிய உற்பத்தியும், உற்பத்தி உறவுகளும், நவதாராளவாத  முதலாளித்துவத்தில் அருகி, அழிந்து வருகின்றது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவு முறை சார்ந்து இருந்த வெளிப்படையான சாதிய வன்முறையிலான ஒடுக்குமுறை வடிவங்கள் அழிந்து வருகின்றது. சாதி வன்முறை என்பது, சட்டரீதியான முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு முரணானதாகவும் - குற்றமாகவும் கருதக் கூடிய அளவுக்கு, பொதுக் கண்ணோட்டம் மாறிவருகின்றது. சாதியை, சாதிய வன்முறை ஊடாக காணுகின்ற, அதன் மூலம் விளங்கிக் கொள்ளுகின்ற பொதுப் புத்தி தான், நவீன சாதிய கண்ணோhட்டத்திற்கான வேர். நவதாராளவாதத்தில் சாதியம் எப்படி தன்னை தகவமைத்துள்ளது என்பதை, இன்றைய சாதியத்துக்கு எதிரான கருத்தியலில் காண முடியாதுள்ளது. இதனால் சாதியப் போராட்டம், குறுகிய வடிமாகி வருகின்றது.

இந்த வகையில் 'பரியேறும் பெருமாள்' வெளிப்படையான சாதிய ஒடுக்குமுறையை முன்னிறுத்தியுள்ளதே ஒழிய, சாதியம் எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டு ஒடுக்குகின்றது என்பதைக் காணவுமில்லை, காட்டவுமில்லை. இந்தப் படத்தின் மீதான மைய விமர்சனம் இதுதான்.

அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறையற்ற சூழலிலுள்ள சாதியத்தை எதிர்த்து போராடுகின்ற அளவுக்கு, சாதியம் குறித்த பொதுக் கண்ணோட்டம் அருகி வருகின்றது. உதாரணமாக இலங்கையில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கும் சாதிய அமைப்பில், சாதிய ஓடுக்குமுறை பற்றிப் பேசும் 'பரியேறும் பெருமாள்' படம் மூலம், சாதியை விளக்க முடியாது. இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணச் சாதி அமைப்பு முறையில், வெளிப்படையான சாதியப்பாகுபாடு மற்றும் ஓடுக்குமுறையை விதிவிலக்கான அல்லது குற்றத்துக்குரிய நடத்தையாக கருதுமளவுக்கு மாறிவிட்ட சூழலில், மோசமான நவதாராளவாத சாதியமாக மாறி சமூகத்தை பிளந்து நிற்கின்றது. யாழ் மையவாத சாதிய ஒடுக்குமுறையை செயல் வடிவில் காட்ட முடியாது.

சாதியம் பற்றி தெரியாத சமூகம், சாதிய ஓடுக்குமுறையை 'பரியேறும் பெருமாள்' வடிவில் பார்க்காத சமூகம், சாதி குறித்து பேசும் படமாக முன்கூட்டியே தெரியாதவர்கள், இந்தப்  படத்தை பார்க்கும் போது, சாதி ஒடுக்குமுறையை பேசும் படமாக காட்சிகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியாது. வன்முறையாக மட்டும்தான் விளங்கிக் கொள்ள முடியும். ஒரு கலையை கலைக்குரிய வடிவின் மூலம், சமூக ஒடுக்குமுறையை விளங்கிக் கொள்ளும் வண்ணம் 'பரியேறும் பெருமாள்' வெற்றி பெறவில்லை. அந்த வகையில் கலைரீதியான சுயவிமர்சனத்தை 'பரியேறும் பெருமாள்' தனக்குள் கொண்டிருக்கின்றது.

நவதாராளவாத சாதி வடிவம் எப்படி தகவமைக்கின்றது!?

நவதாராளவாத சாதியமானது, சாதியம் தோன்றிய மூல வடிவத்திற்குள் தன்னை தகவமைத்து இருக்கின்றது. அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறைக்குப் பதில், சாதியை தனி மனித உரிமையாக, தனி மனித சுதந்திரமாக, தனிச்சொத்துடமைக்குட்பட்ட ஓன்றாக, சாதியம் தகவமைத்து கொண்டு இயங்கத் தொடங்கி இருக்கின்றது. தனிமனிதன் தன்னளவில், தன்னை சாதியாக ஓருங்கிணைக்கவும், தன்னையொத்தவர் கூடி சாதிய சமூகக் குழுவாக பின்பற்றக் கூடிய சாதிய பாகுபாட்டை, மற்றவர் கேள்விக்குள்ளாக்க முடியாத, தனிமனித உரிமையாக முன்வைக்கின்றது.

தனிச் சொத்துடமைக்கு உள்ள சுதந்திரம், ஜனநாயகம் போல், சாதியை பேணும் உரிமையை தனிமனிதனின் உரிமையாக, தனிமனித சுதந்திரமாக மாற்றி இருக்கின்றது. சாதிய பாகுபாடுகளை கையாளக் கூடிய தனியார், தனிமனித உரிமையின் அடிப்படையில் சாதிய நிறுவனங்களை தோற்றுவிக்கின்றனர். சமூகம் என்பதற்கு பதில், தனி மனிதன் என்ற சொத்துடமை ஜனநாயகக் கோட்பாடு, சாதியை தனிமனிதன் பின்பற்றுவதை கேள்விக்கு உள்ளாக்குவதை மறுக்கின்றது.

இன்று தனியார் நிறுவனங்கள் மத பாடசாலைகளையும், வர்க்க பாடசாலைகளையும், இனப்பாடசாலைகளையும், பால் ரீதியான பாடசாலைகளையும் உருவாக்கி இருப்பது போல், சாதிய வரம்புக்கு உட்பட்ட தனியார் சாதிய பாடசாலைகளை உருவாக்க முடியும். இன்று சாதிக்கு சாதி, போட்டியாக சாதியக் கோயில்கள் தோன்றி வருவது - இந்த தனியுடமை சாதியப் பின்னணியில் தான்.

அரசு சாராததாக தனியுடமை சார்ந்த உலகமாக உலகம் மாறிவருகின்ற பின்னணியில், எல்லா ஒடுக்குமுறையும் தனியுடமையிலான "சுதந்திரம் - ஜனநாயகம்" மூலம், தன்னை தகவமைத்து வருகின்றது. உதாரணமாக என் வீட்டுக்குள் யார் வரலாம், யார் வரக் கூடாது என்ற சாதியப் பாகுபாடு போல், தனியார் கோயிலுக்குள் யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதை, தனியுடமை மூலம் தீர்மானிக்கும் சாதிய உரிமையை தனிச்சொத்துடமை அங்கீகரிக்கின்றது.

சாதிய அடிப்படையிலான தனிச்சொத்துடமையை கேள்விக்குள்ளாக்காத சாதி ஓழிப்பு என்பது கற்பனையானது. மாறாக ஓடுக்குமுறைக்கு எதிரான தனியுடமைக்குள் சீர்திருத்தத்தையே முன்வைக்க முடியும். அதைத்தான் 'பரியேறும் பெருமாள்' முன்வைக்க முனைகின்றது, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சாதிய ஒழிப்பையல்ல.