Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா!? - மீ.ரூ பகுதி 2

மீ.ரூ இயக்கமானது ஆபிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த தரனா பார்கெ என்பவரால் 2006 இல் தொடங்கப்பட்டது. 2017இல் ஹாலிவுட் நடிகையான அலிஸா மிலானோ சமூக வலைத்தளம் மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை மீ.ரூவாக்கிய பின்பு, உலகம் தழுவியளவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சில பெண்கள் தமக்கு நடந்ததை மீ.ரூவாக்கி வருகின்றனர். அலையலையாக வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலகட்டத்தில் மி.ரூ மேலோங்கி வருகின்றது. தமிழகத்தில் மீ.ரூ சின்மயி மூலம்  மேலெழுந்திருக்கின்றது.

இந்த நிலையில் மீ.ரூவானது வர்க்க ரீதியான மேற்தட்டுப் பெண்களிடத்தில் இருந்து வெளி வருகின்றது. அதேநேரம் சமூக வலைத்தளங்கள் மூலம், பொது சமூக நீதியைக் கோருகின்ற வரம்புக்குள் நடக்கின்றது. இதனால் இந்தக் காரணங்களைச்; சொல்லி ஆணாதிக்கத்தை ஆதரிக்கும் போலி இடதுசாரியம், பெண்களுக்கு எதிராக புளுத்து வருகின்றது.

மேற்தட்டு பெண்களின் மீ.ரூ போராட்டத்தினால் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும், பிற சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்படும் பெண்களுக்கும் என்ன லாபம் என்று கேட்பதன் மூலம், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தை பாதுகாக்க முனைகின்றனர். அதேநேரம் மேற்தட்டுப் பெண்களின் மீ.ரூ போராட்டமானது, பெண்விடுதலைக்கு சம்மந்தமில்லாத ஓன்று என்று கூறி மீ.ரூவை எதிர்ப்பதன் மூலம், ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்றனர்.

 

இப்படி மார்க்சியத்தை திரித்து புரட்டுகின்ற போலி இடதுசாரியமானது, மீ.ரூவானது வர்க்கப் போராட்டத்துக்கு சம்மந்தமில்லா ஒன்று என்றும், வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புகின்றது என்று கூறுமளவுக்கு, போலிப் பெரியாரியம், தமிழினவாதம் போன்று, மீ.ரூவை முன்வைத்த பெண்களுக்கு எதிராக கூச்சல் போடுகின்றனர்.

மீ.ரூவுக்கு எதிரான இந்தப் போலி இடதுசாரிய தர்க்கம் உண்மையானதா?

ஆணாதிக்கச் சமூகத்தில் - ஆணுக்கு நிகராக சமூக உழைப்பில் ஈடுபட முனையும் பெண்களின் உடலை ஆண், அதிகாரங்கள் மூலம் சுரண்டுகின்றதற்கு எதிரான இயக்கம் தான் மீ.ரூ.

உண்மையில் பெண் உடலைச் சுரண்டும் இந்த ஆணாதிக்க சமூகத்தில், வர்க்க ரீதியாக மேலே வந்த பெண்கள், தாங்கள் பாலியல் ரீதியாக சந்தித்த – சந்திக்கின்ற கொடுமைகளை மீ.ரூ மூலம் பேசுகின்றனர். வர்க்க ரீதியாக மேலே இருந்து வந்தாலும் - பெண்கள் என்ற ரீதியால் ஓடுக்கப்படும் பெண்களின் குரலாக அவை இருக்கின்றது.

சமூகத்தின் எல்லா உழைப்புப் படிநிலைகளிலும், பெண் உடல் மீதான பாலியல் வன்முறை நடக்கும் பொதுப் பின்னணியில், வர்க்க ரீதியாக மேல்தட்டுப் பெண்களின் குரலாக மீ.ரூ வெளிப்படுகின்றது. எல்லாப் பெண்களுக்கும் தற்காப்பை வழங்கக்கூடிய ஒன்றாக, எதிர்த்து நிற்கும் பலத்தையும் இந்தப் போராட்டம் கொடுக்கின்றது என்பதே உண்மை. ஆண் விரும்பியவாறு பெண் உடலை, பாலியல் பண்டமாக அணுகுவதை தடுக்கின்றது.

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பெண் தனிப்பட்ட ஆணின் அடிமையாக, வீட்டுக்குள்ளான  உழைப்பில் ஈடுபட்ட பெண்ணின் உழைப்பை, முதலாளித்துவமானது சுரண்டுவதற்கு ஏற்ப  அவளை வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்தது. ஆணைவிட மலிவான கூலிக்கு பெண்ணின்  உழைப்பைச் சுரண்ட முதலாளித்துவத்தால் முடிந்தது. இந்த உழைப்புச் சுரண்டலானது, பெண் தனிப்பட்ட ஆணின் தனிச்சொத்து என்ற நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து பெண்ணை விடுவித்தது.

இதன் மூலம் பெண் வீட்டுக்கு வெளியிலான சமூக உழைப்பில் ஈடுபடத் தொடங்கினாள். அதே நேரம் ஆணுக்கு நிகராக தன்னை முன்னிறுத்தி, ஆண் போன்ற சம அந்தஸ்தைக் கோரியதுடன், தனக்கான சம உரிமைகளைக்  கோருவது பெண்களின் போராட்டாமானது.

200 வருடங்கள் கொண்ட வரலாற்று ரீதியான நீண்ட பெண்களின் போராட்டமானது, ஆணாதிக்க அதிகார அமைப்பிற்குள் நடந்ததுடன் - தொடர்ந்தும் நடக்கின்றது. பெண்கள் தங்கள் திறமையைக் கொண்டு முன்னேற முடியாத அளவுக்கு, ஆண் அதிகாரத்தையும் - ஆணாதிக்க அடிப்படையைக் கொண்ட சமூகத்தையும் எதிர் கொண்டாள், எதிர்கொள்கின்றாள்.

பெண்ணின் முன்னேற்றத்துக்கு தடையாக ஆண் என்ற வேலியைத் தாண்ட வேண்டி இருக்கின்றது. ஆண் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆணாதிக்க வர்க்க அமைப்பானது பண லஞ்சத்தை கோருவது போல், பெண்ணிடம் பாலியல் லஞ்சத்தைக் கோரியது, கோருகின்றது.

காரியத்தை பெற, பெண் முன்னேற,.. பாலியல் லஞ்சத்தை கோருவதும் - அதை கொடுத்தாக வேண்டும். இந்த தடையை பெண் கடந்தாக வேண்டிய பொது நெருக்கடி என்பது, சமூகத்தில் புரையோடி கிடக்கின்றது. இதுதான் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை.

பண லஞ்சம் போல் பெண்களிடம் பாலியல் லஞ்சம் என்பது பொது விதியாகியது. பெண்களின் பாலியல் லஞ்சத்தை எதிர்க்கின்றவர்கள், அதை கேலி செய்கின்றவர்கள், அன்றே அதை எதிர்த்திருக்க வேண்டும் என்ற கூறுகின்றவர்கள், பண லஞ்சத்தை கொடுப்பவராக இருக்கின்றனர். அல்லது அதை கண்டும் காணாமல் இருப்பவராகவும் இருக்கின்றனர். பாலியல் லஞ்சத்தை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது என்பது, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படும் ஆணாதிக்கம்.

பொதுவாக ஒடுக்கப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட இன – மத – சாதி - நிறப் பெண்கள்;, ஒடுக்கப்பட்ட வர்க்கப் பெண்கள்.. ஆணுக்கு நிகராக முன்னேற வேண்டும் என்றால் - பாலியல் லஞ்சத்துக்கு உடன்பட்டாக வேண்டும். வர்க்க ஆணாதிக்க அமைப்பில், பெண்கள் மேலான விதி இது.

இங்கு போலி மார்க்சிய - இடதுசாரிய புரட்டுகள் கூறுவது போல், சுரண்டும் வர்க்க பெண்களிடமல்ல, வர்க்க ரீதியாக ஓடுக்கப்பட்ட பெண்களிடம் தான், பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது. சமூகத்தில் கீழ் இருக்க கூடிய ஒடுக்கப்பட்ட பெண்கள் - மேலே முன்னேறுகின்ற புள்ளியில், பாலியல் லஞ்சம் ஆண் அதிகாரங்கள் மூலம் பெறப்படுகின்றது.

இன்று மீ.ரூ மூலம் குற்றம் சாட்டும் 90 சதவீதமான பெண்கள் - அன்று வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட நிலையில், தாங்கள் சந்தித்த ஆணாதிக்கக் கொடுமைகளை கூறுகின்றனர். வர்க்க ரீதியாக முன்னேறி தங்கள் மேலான இன்றைய ஆணாதிக்கம் பற்றி பேசவில்லை. அவர்களின் அன்றைய தங்கள் நிலைக்கான இன்றைய போராட்டமானது – அன்று தங்களை ஒத்த இன்றைய பெண்கள் மேலே செல்ல முனைகின்ற போது அவர்கள் சந்திக்கின்ற உடல் ரீதியான பாலியல் வன்முறைக்கு எதிரான குரலாக இருக்கின்றது. பாலியல் லஞ்சத்துக்கு எதிரான போராட்டமாக - அதற்கு சட்டரீதியான பாதுகாப்பையும் - தண்டனையையும்   கோருவதாகவும் இருக்கின்றது.

இந்த வகையில் வர்க்க ரீதியாக சமூக அந்தஸ்த்தை அடைந்து விட்ட மேற்தட்டு பெண்களின் குரல்கள், வர்க்க ரீதியாக மேலேயுள்ள ஆணாதிக்க ஆண் அதிகாரங்களுக்கு எதிரான போராட்டமாக இருக்கின்றது.

இதன் மூலம் இன்றைய ஆணாதிக்க வர்க்க சமூக அமைப்பில் - ஆண் மேலாதிக்கத்தைக் கேள்வி கேட்கின்றது. ஆணாதிக்க அமைப்பால் போற்றப்பட்ட பலரின் தலைகள் உருளும் வண்ணம், இந்த இயக்கம் பரிணாமமடைந்திருக்கின்றது. ஆணாதிக்கமானது தன் இருப்பை தக்கவைக்கவும், தப்பிப் பிழைக்கவும் நடத்துகின்ற போராட்டமே, மீ.ரூ வுக்கு எதிரானதாக இருக்கின்றது.