Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல

வடக்கில் புரையோடி வரும் இலஞ்சத்தில் பாலியலும் அடங்கும். அதிகாரத்தின் அடையாளமாக பாலியல் மாறி இருக்கின்றது. பெண்கள் கல்வியில் வெற்றி பெற, பாலியலை அனுசரிக்கக் கோருகின்றனர். பெண்ணின் முன்னேற்றம் என்பது ஆணை அனுசரிக்கக் கோருகின்றது. வீட்டுக்கு வெளியில் பெண் வளர்ச்சி என்பது, ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்தால் சாத்தியம் என்பது அதிகாரத்தின் குரலாக இருக்கின்றது. இதுதான் இன்றைய யாழ்ப்பாணிய ஆணாதிக்க சமூகத்தின் பொது வெட்டு முகம். 

யாழ் மையவாத சமூகத்தை சுற்றி நடக்கும் மீ.ரூக்களை பேசியாக வேண்டும்;. இன்று பேசத் தவறினால், என்றுமே பேச முடியாது. யாழ் மீ.ரூக்கு பின்னணியில் உள்ள ஆணாதிக்கக் போக்கிலிகளைப் பாதுகாக்கவே, பொதுவான கள்ள மௌனம் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில், இலக்கியம், ஊடகவியல், அரசியல் .. என்று, அனைத்துத் துறையிலும், மீ.ரூ வுக்கு பஞ்சமில்லை.

இன்று தேசியம், ஊடகவியல், இலக்கியம், அரசியல் .. எங்கும் ஆணாதிக்கமே கொலுவேற்று இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்க, ஆண்கள் சமூகம் மறுக்கின்றது. கலை இலக்கிய எழுத்து உலகில், ஆணாதிக்க அதிகாரமும் - ஆணின் பாலியலுக்கு ஏற்ப பெண்ணை அணுகுவதுமே, கோலோச்சிக் கிடக்கின்றது. பெண்ணியம் பேசும் பெண்கள் இதற்கு அடங்கிக் கிடப்பதைத் தாண்டி, இதை விளங்கிக் கொள்ள முடியாது.

 

கடந்த காலத்தில் நடந்தவற்றை வெளிப்படையாக பேசுவதன் மூலம், மீ.ரூ சொல்லக் கூடிய பெண்களுக்கு ஆதரவான குரல்கள், சமூக இயக்கங்களில் இருந்தும் - ஆண்களிடம் இருந்தும் இன்னும் எழவில்லை.

இது எதைக் காட்டுகின்றது? பெண்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான  அதிகாரத்தையும், வன்முறையிலான ஆண்களின் மேலாதிக்கத்தையும், தொடர்ந்து  ஆதரிப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

யாழ் ஆணாதிக்க சமூகத்தில் நடப்பது என்ன?

சில உதாரணங்கள் மூலம் விளங்கிக் கொள்வோம்

1.யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான பேராசிரியர்களின் அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் குறித்து, அதற்கு நீதி கோரி மாணவ சங்க அறிக்கைகள் கூட வெளி வருகின்றது. அங்கு பெண்கள் கற்றுக் கொள்வதற்கு பாலியல் இலஞ்சம் கோரப்படுவது என்பது, நீண்ட காலமாக தொடர்ந்து நடக்கின்றது. இந்தப் பேராசிரியப் பாலியல் பன்னாடைகள் தான், பெண்களின் கலாச்சாரம் குறித்தும் - நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை பெண்கள் மேல் திணிக்கின்றனர்.

2.வங்கியில் வாங்கிய நுண்கடன்களைக் கட்டமுடியாத பெண்களிடம் - வங்கியைச்  சேர்ந்தவர்களால் பாலியல் இலஞ்சம் கோரப்படுவது என்பது, அண்மைக்காலமாக அம்பலமாகி  வருகின்றது.

3.யுத்தத்தினால் வாழ்வை இழந்து தனிமையில் சிக்கிவிட்ட பெண்களை, தங்கள் பாலியலுக்கு பயன்படுத்துவதும், பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்ய பாலியல் இலஞ்சம் தருமாறு நிர்ப்பந்திப்பதும் நடந்து வருகின்றது.

4.பாடசாலைகளில் குழந்தைகள் கல்வி பெற பாலியல் ரீதியான இலஞ்சத்தைக் கோருவதும் -  அறியாப் பருவத்தைப் பயன்படுத்தி பாலியல்ரீதியான வன்முறைக்கு உள்ளாக்குவதும், அன்றாட செய்தியாகி வருகின்றது. இது போல் ஆசிரியைகளுக்கு நடந்தேறுகின்றது.

5.அன்றாட போக்குவரத்தில் ஆணின் தேவைக்கு ஏற்ப பெண்ணை உரச வைப்பதன் மூலம், பஸ் முதலாளிகள் தொழில் நடத்துகின்றனர். பெண்ணை முன்னுக்கு அல்;லது பின்னுக்கா உரச விடுவது என்று – அதில் ஒழுக்கம் பேசும் அளவுக்கு, நடத்துனர்களின் நடத்தையும் - சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகிக் கிடக்கின்றது.

6.அரசியல்வாதிகளிடம் செல்லும் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதுபொதுவான செய்தியாகின்றது.

இப்படி அரசியலிலும், கல்வித்துறையிலும், தொழிற்துறைகளிலும், அரச அதிகார மட்டத்திலும் பெண்களை பாலியல் ரீதியான வன்முறைக்குள்ளாக்குவதும், இணங்க வைப்பதும் என்பதே, யாழ் மையவாத  ஆணாதிக்கமாகவும் அதுவே பொதுக் கலாச்சாரமாகியும் வருகின்றது. பெண்ணின் நடத்தை, ஓழுக்கம் குறித்த படுமோசமான நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை தூக்கி முன்னிறுத்தும் யாழ்ப்பாணத்தில் தான், இந்த வகையான பாலியல் அத்துமீறல்கள் இயல்பானதாகி வருகின்றது.

இதையெல்லாம் யாரும் பேச முனைவதில்லை! ஏன்?

ஆணை முதன்மையாக கொண்ட வாழ்வியல் முறை முதல் சமூகத்தை ஆதிக்கம் செய்யும் அதிகாரம் வரை, பெண்ணை உடலாகவே (பாலியல் பண்டமாகவே) அணுகுகின்றது. கருத்துச்  சொல்லக் கூடிய கலை இலக்கிய எழுத்து முதல் ஊடகம் வரை, ஆணை முதன்மையாகக் கொண்டு தான், அனைத்தையும் கட்டமைக்கின்றது. கலை இலக்கிய எழுத்துத்துறையானது, பெண்ணை பாலியல் ரீதியாக அணுகும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் சுய எல்லையைக் கடந்து பெண்ணை அணுகுவதில்லை. போற்றப்படும் பெரிய இலக்கியவாதிகள், கவிஞர்கள் எல்லாம் பெண்ணை அடையும் தங்கள் ஆணாதிக்க குறிக்கோளைக் கொண்டு பெண்ணை அணுகுபவர்களாக இருந்ததுடன், நடைமுறை வாழ்வில் அதற்கே தங்கள் படைப்புகளை சமர்ப்பணமாக்கி இருக்கின்றனர். யாழ் மையவாத கலை இலக்கியத்தில் பொதுவாக ஆண்கள் பேசும் பெண்ணியம் என்பது, பெண்ணை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்துவதற்கான சுய எல்லை தாண்டி முன்வைக்கவில்லை. இந்த யாழ்மையவாத ஆணாதிக்க பின்னணியில் இருந்து தான், இன்று மீ.ரூ வை மையப்படுத்தி குரல் கொடுக்க யாழ்மையவாத கலை இலக்கிய எழுத்து உலகம் தயாராகவில்லை.

பெண் தனது பாலியல் தேவையின்பால் ஆணை அணுகும் போது - ஆண் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் - தனது ஆணாதிக்க பாலியல் நோக்கில் இருந்து அணுகுவது கூட, பெண் மீதான வன்முறை தான். இது கலை இலக்கிய எழுத்து உலகத்தின் நடத்தையாக இருக்கின்றது. பெண்ணின் குறித்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண், தனது ஆணாதிக்க பாலியல் நடத்தையை, பெண்ணின் இணக்கமாக காட்டும் அளவுக்கு, யாழ் மையவாத கலை இலக்கிய எழுத்துலகமானது, ஆணாதிக்க வக்கிரத்தாலானது. பெண்ணை நுகர்வதையே குறிக்கோளாகக் கொண்ட ஆண் சமூகமாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் சமூகப் பிரச்சனைகளை பிரித்துப் பார்த்து சமூகத்தை அறிவூட்ட முடியாத கலை இலக்கிய எழுத்துலகமானது - தங்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்ணை தன் பாலியல் தேவைக்காக அணுகுவதே பொதுவானதாக இருக்கின்றது.

இந்த யாழ் மையவாத கலை இலக்கிய எழுத்து உலகமானது, தங்கள் ஆளுமைகளைக் கொண்டு பெண்ணை நுகர்வதைக் குற்றமாகக் கருதுவதில்லை. பெண்ணை இணங்க வைத்தல், குடும்ப முரண்பாடுகளில் புகுத்து பெண்ணை தன் பாலியல் தேவைக்கு ஏற்ப மயக்குதல் - வளைத்தல், காலாகாலமாக பெண்ணை ஒடுக்கியதால் பெண்ணின் பின்தங்கிய சமூக தன்மையை தனக்கு ஏற்ப சரிக்கட்டி பாலியல் ரீதியாக நுகர்தல்… என்று, ஆணாதிக்க வக்கிரம் சமூகம் எங்கும் புளுத்துக் கிடக்கின்றது. ஈழத்து கலை, இலக்கியம், எழுத்து என்பது மென்மையான பெண்ணிய மனம், அது பாலியல் கலந்த அன்பு மனம் என்று, இதற்கு ஆணாதிக்க விளக்கம் கொடுக்கும் அளவுக்கு ஆணாதிக்க ஒழுக்கக் கேட்டைக் கொண்ட வக்கிரத்தாலானது.

ஆணை முதன்மையாகக் கொண்ட சமூகமானது, தன் அனுகூலங்களை இழக்க எப்போதும் தயாராக இருப்பதில்லை. பெண்ணை நுகருகின்ற ஆணின் சுகம் என்பது, கலைஞனின் மென்மையான "கலை மனம்" குறித்து புலம்புவது முதல், குற்றமாக இருக்கும் ஆணின் பாலியல் நடத்தையைக் காப்பாற்ற அதை ஒருவிதமான "மனநோய்" என்று கூறி அதை அனுபவிக்கும் அளவுக்கு சுய வக்கிரத்தாலானது.

யாழ் மீ.ரூ என்பது கலை இலக்கிய எழுத்து உலகிற்கு எதிரானதாக இருப்பதால், கள்ள மௌனம் நீடிக்கின்றது. அதற்கான குரல்களின்றி இருக்கின்றது.