Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிசில் நடந்த "புதுசு" வெளியீடும் - முன்வைக்க தவறியவையும்

1980 களில் வெளியான புதுசு சஞ்சிகை - பாரிசில் மகாஜன பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. புதுசு சஞ்சிகை வெளியிட்ட நால்வரில் மூவர் – இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

1980 இல் சமூகத்தின் பொது நோக்கில் ஒன்றுபட்டு பயணித்தவர்கள் - இன்று எதிரெதிர் அரசியல் முனைகளில் பயணிக்கின்ற இன்றைய பொதுப் பின்னணியில் - அன்றைய பொது சமூக அக்கறையில் இருந்து விலகி நின்றபடி - மறு வெளியீட்டில் ஒன்றுபட்டு நிற்பது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பாகின்றது.

இந்த அடிப்படைக் கேள்விகளுடனேயே - அதற்கான பதில்களையும் எதிர்பார்த்தபடி, வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். 1980 களில் பொது சமூக நோக்குடன் வெளிவந்த புதுசு சஞ்சிகையுடன் எனக்கு இருந்த நெருங்கிய தொடர்பின் அடிப்படையில் - இந்தக் கூட்டம் அதற்கான பதிலை தரவில்லை என்பதே உண்மை.

அதேநேரம் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்,  இந்தச் சஞ்சிகை கொண்டிருந்த வீச்சு - அது கொண்டு இருந்த உள்ளடக்கம் - அது வெளிப்படுத்திய சமூகப் பார்வை எப்படி அந்தக் காலத்தில் சாத்தியமானது என்ற கேள்வியை பொதுவில் எழுப்பியும் இருந்தனர். அதற்கு பாடசாலை என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, பொது உலக நோக்கில் அதை முன்வைக்க முடியவில்லை.

பாடசாலையில் இதற்கான பொதுச்சூழல் இருந்தது குறித்து கூற முடிந்த அதேநேரம், பாடசாலையில் இதை ஊக்குவித்தவர்களின் உலகப் பார்வை குறித்து எதையும் கூற முடியவில்லை. சமூகம் குறித்த பொதுப் பார்வை இன்றி, பாடசாலை சூழல் தானாக கனிவதில்லை. ஆதைச் சொல்வது, இன்றைய மாற்றத்துக்கு அவசியமானது.

 

1980 புதுசு சஞ்சிகை வருகை குறித்து – கற்றுக்கொள்ள வேண்டியது

1.அன்று பாடக் கல்விக்கு வெளியில் கல்வி குறித்த ஆசிரியர் சமூகம் இருந்தது. இந்தப் பின்னணியில் பாடசாலைக் கல்விக்கு வெளியில் நூலகப் பயன்பாட்டையும்  - வாசிப்பையும் ஊக்குவித்ததுடன், கலை இலக்கிய எழுத்து முயற்சிகளை நடைமுறைப்படுத்துமளவுக்கு - சமூகப் பார்வை கொண்ட கல்விச் சமூகம் அன்று இருந்தது. அதுவும் மகாஜனாவில் அதை ஊக்குவிக்கும் முன்னுதாரணமிக்க செயற்பாடுகளே - புதுசு ஆகியது.

இந்த வகையில் கல்விச் சமூகம் இன்று இல்லை. பணம் சம்பாதிக்கும் சுயநல சமூகமாக கல்விச் சமூகம் இருக்கின்றது. புதுசுக்கு அன்று கிடைத்தது போன்று கல்விச் சூழலை உருவாக்க – புதுசு ஊடாக அன்றைய சூழலை கற்றுக் கொண்டு - கல்விக் கூடங்களை சமூக நோக்குள்ளதாக உந்தித்தள்ளும் வண்ணம் - பழைய மாணவ சங்கங்கள் மாறவேண்டும். அதற்கு புதுசு உதாரணமாக மாறவேணடும். அதை இந்தக் கூட்டம் முன்னிறுத்தவுமில்லை, வலியுறுத்தவுமில்லை.

2.புதுசு பாடசாலைக்கு வெளியில், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைத்த இடதுசாரிய தேசிய விடுதலை இயக்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு – புதுசுவில் ஆழமான இலக்கிய பிரதியாக மாறியது. அது தான், புதுசுவின் வளர்ச்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை வர்க்க கண்ணோட்டத்தில் அணுகும் கலை - இலக்கியப் பார்வையானது, அன்றைய பொது தேசிய ஒடுக்குமுறையிலான பொதுச் சூழல் உருவாக்கவில்லை. மாறாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி இடதுசாரிய தேசிய விடுதலையைக் கோரிய அரசியலே, புதுசு இதழை வளமூட்டியது.

இன்று புதுசிவில் பலரும் வியந்து போற்றும் இலக்கியத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையுடன் ஒன்றிணைந்த இலக்கியமே காரணம். கலை - இலக்கியம் எந்த அரசியலைக் கொண்டு  இருக்க வேண்டும் என்பதற்கு புதுசு முன்னூதாரணமாக இருக்கின்றது. இதை இந்த கூட்டம் அதை முன்னிறுத்தவுமில்லை, சொல்லவுமில்லை.

3.கடந்த காலத்தில் ஆச்சரியத்துக்குரிய ஒன்று –சமகாலத்தில் சமூகத்தை அடுத்த படிநிலைக்கு வளர்த்தெடுக்கும் அழைப்பாக இருக்கவேண்டும். அதை சஞ்சிகையில் சம்மந்தப்பட்டவர்கள் முன்வைக்க தவறியது என்பது, தனிநபர் நலன் சார்ந்ததாக குறுகிவிடுவது என்பது புதுசுவின் அன்றைய பண்பாட்டுக்கு முரணானது.  அன்று போல் சமூக அக்கறைகளுடன் பயணிக்க வேண்டியது ஏன் அவசியம் என்பதை - புதுசு மூலம் உணர்த்தி இருக்கவேண்டும்;. ஆனால் அது நடக்கவில்லை. 

4.1980 நிலைக்கு சமூகம் வந்திருக்கின்றது. அரசியல் - இலக்கியம் வெறுமையாகி, இனவொடுக்குமுறைகள் பற்றி பேசுவது கூட அருகி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட இலக்கியம் - அரசியல் பேசவேண்டிய மீள் அவசியத்தை – புதுசு கூட்டம் தன் அடிச்சுவட்டில் இருந்து இன்றைய சமூகத்துக்கு முன்வைக்கத் தவறியது.

புதுசுவில் இருந்து கற்க வேண்டியது, அன்றைய கூட்டு வேலைமுறையையும், சமூக அர்ப்பணிப்பையும், அது கொண்டிருந்த சமூகக் கண்ணோட்டத்தையுமே. இந்த வகையில் அன்று இதை அவதானித்தவன் என்ற வகையில் – சமாந்தரமாக இவர்களுடன் பல்வேறு தளத்தில் பயணித்தவன் என்ற வகையில், புதுசு மறுவெளியீடு ஊடாக கடந்தகால புரட்சிகர செயல்களை விமர்சனம் - சுயவிமர்சன அடிப்படையில் உள்வாங்கிக் கொள்வது அவசியமானது. இன்று சமூக அக்கறையுள்ளவர்கள் அதைக் கற்றுக்கொள்ள, புதுசுவை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியும்.