Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

பொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து

குறிவைத்து புலம்பெயர்ந்த பழைய மாணவர்களிடம் பணம் வாங்குவது பாடசாலைகளின் குறுகிய நோக்கமாகிவிட்டது. பணத்தை திரட்டித்தரவே பழைய மாணவ சங்கங்கள் என்றளவுக்கு, சங்கங்கள் தரம் தாழ்ந்து வருகின்றது.

பணத்தைக் கொணடு எதையும் வாங்கலாம், கல்வியை ஊட்டலாம் என்ற அபத்தமே, கல்வியைச் சுற்றி அரங்கேறுகின்றது. பணம் கொடுத்து கல்வி பெறலாம் என்ற தனியார் கல்வியை முறைக்கு ஏற்ப, பணம் சார்ந்த செயற்பாடுகள் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில் பணமே, கல்வி நடவடிக்கையாகி வருகின்றது. பணத்தை கேள்விகளின்றி தரவேண்டும் - அதைக் கொடுக்க வேண்டும் என்பதே, சமூக நடத்தையாக குறுக்கப்பட்டு வருகின்றது.

இப்படி பெறப்படும் - கொடுக்கப்படும் பணத்துக்கு வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கு வெள்ளை அறிக்கை கோருவது – கல்விக்கு எதிரானது என்ற கூறுமளவுக்கு, பணம் அனைத்துமாகி, பாடசாலையை சுற்றி எடுபிடிகள் உருவாகி வருகின்றனர்.

யார் யார் எவ்வளவு  பணம் தந்தார்கள், அது எதற்கு - எப்படி செலவு செய்யப்பட்டது என்று ஒவ்வொரு சதத்துக்கும் வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கை வெளிப்படையாக பொது வெளியில் முன்வைக்க மறுக்கின்றார்கள் என்பதே உண்மை.

இதைவிட பண அறவீடுகள் கல்வி கற்கும் மாணவர்களிடமும் நடக்கின்றது. புதிதாக பாடசாலையில் சேரும் மாணவர்களிடம் பெரிய தொகையாக பணம் கறக்கப்படுகின்றது.

ஆக இப்படி கல்விக்கூடங்கள் பணத்தை கையாளும் ஊழல் நிறுவனங்களாகவும் – மோசடிகள் நிறைந்ததாகவும் மாறி வருகின்றது.

இன்று பாடசாலைகளைப் பொறுத்த வரை, வருடாந்தம் ஒரு சில லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை திரட்டப்படுகின்றது.

 

பழைய மாணவர்கள் தொடங்கி கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து திரட்டப்படும் இந்தப் பணத்துக்கு வெளிப்படையான கணக்கு கிடையாது. உண்மையாகவும் - நேர்மையாகவும் செயற்படுபவர்கள், வெளிப்படையாக ஓட்டுமொத்த கணக்கை பொது வெளியில் தாமாகவே முன்வந்து முன்வைப்பார்கள். இதைத் தாமாக செய்யாத போதும், கேட்டும் போது தர மறுக்கின்றதன் பின்னணி - பணம் தவறாகக் கையாளப்படுவது தான் காரணம். இதை மீறிக் கோரும் போது, கேட்டவர் கொடுத்த பணத்துக்கு ஒரு வரியில் மொட்டைக் கணக்கு கொடுப்பதே நடக்கின்றது. ஒவ்வொரு சதத்துக்கும் விரிவான கணக்கு கிடைப்பதில்லை.

இது எதை எடுத்துக் காட்டுகின்றது.

1.பொதுப் பணம் பாரியளவில் மோசடி செய்வது வெளிப்படையாகின்றது.

2.பணத்தை மோசடி செய்ய, வேலைத்திட்டங்களை உருவாக்குவதும் நடக்கின்றது. பணத்தைப் பெறுவதற்கு - அவசியமற்ற பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு பணம் வாங்கப்படுகின்றது.

தம்மளவில் தாம் நேர்மையானவர்களாக இருப்பவர்களும் - கல்விக்கு அவசியமான வேலைத்திட்டங்களை முன்வைத்து செயற்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மட்டும் தான் பொது வெளியில் தமது கணக்கை பயமின்றி முன்வைப்பார்கள். பொதுப் பணத்தின் ஓவ்வொரு சதத்துக்கும், பொதுவெளியில் கணக்கு வைத்தாக வேண்டும்.

அதை முன்வைக்க முடியவில்லை என்றால், அந்தப் பணம் பொதுவான சமூக நோக்கும் – மனித மனச்சாட்சிக்கும் புறம்பாக கையாளப்படுகின்றது என்பதே பொருள்.

வெளிப்படையான நேர்மையற்ற இவர்களால், ஒரு நாளும் மனித அறம் சார்ந்த மாணவர் சமூகத்தை உருவாக்கவே முடியாது. இதற்கான சுய தகுதியை அவர்கள் தாமாகவே இழந்து விடுகின்றனர்.

தனியார் கல்விக்கூடங்களில்; தங்கள் தனிப்பட்ட சொத்தைக் கையாள்வது போன்று, பொதுப் பணத்தைக் கையாள்வதன் மூலம், தனியார் கல்விமுறைக்கு கல்வியை கொண்டு செல்வதற்கு ஏற்ப – தங்கள் முறையற்ற நடத்தை மூலம் கல்விச் சமூகத்தையே சீரழித்து வருகின்றனர்.

கல்வியை கொடுப்பவர்கள் நேர்மையற்று இருக்கும் போது, அதைத் தாண்டி எதையும்  அவர்கள் மாணவ சமூகத்துக்கு கொடுக்க முடியாது. முன்னுதாரணமாக வாழவும் - இருக்கவும் முடியாது.

இன்று என்ன நடக்கின்றது என்பதற்கு ஒரு சில உதாரணங்களை எடுப்போம்

1. 700 முதல் 1000 மாணவர்கள் கொண்ட பெரிய பாடசாலைகள், 70 இலட்சம் முதல் ஒரு கோடி (100 இலட்சம்) வரை, வெளிப்படையான நிதி சேகரிப்பை முன்வைத்து கோருகின்றனர். இதைவிட வெளிப்படையற்ற பணம் அறவிடல் தனியாக உண்டு. 700 மாணவர்களுக்கு 70 இலட்சத்தை பெறும் போது, சராசரியாக ஒரு மாணவனுக்கு 10000 ரூபா வீதம் பெறப்படுகின்றது.

1.1.இந்தப் பணம் அந்த மாணவனுக்கு எந்த வகையில், எப்படி பயன்படுத்தப்படுகின்றது!?

1.2.இதில் மாணவனுக்கு செல்வது சிறிய பகுதிதான். அந்த சிறிய பகுதி கூட, சமச்சீராக செல்லுகின்றதா எனின் இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் பெரும்பகுதி பணம் செல்லுகின்றது.

1.3.பயன்படுத்தப்படும் பணத்தில் பெரும் பகுதி கல்வி சாராத விருந்துகள், மாலை மரியாதைகள், தங்களை முன்னிறுத்தும் விளம்பரப் பனர்கள், தங்கள் படத்தைப் போட்டு நடத்தும் விளம்பரங்கள், மலர் என்ற பெயர்pல் உதாவக்கரையான வெற்றுரைகள் கொண்ட  விளம்பர மலர்கள், நிறத்துக்கு ஏற்ற ஆடை அலங்காரப் பொருட்களை வாங்குதல், கமிசன் வாங்கக் (கொமிசன் தரக்) கூடிய ரெண்டர்கள், போலி "ஒழுக்கத்தை" ஒழுக்கமாக்குவதன் பெயரில் சூழலுக்கு பொருத்தமற்ற ஆடை அணிகலன்களைத் திணித்தல், மாணவர்களை கண்காணிக்க கமராக்களை நிறுவுதல்..  .. இப்படி எண்ணற்ற, கல்விக்கு சம்பந்தமில்லாத செலவுகள்.

இப்படி இதற்குள் நடக்கின்ற பற்பல விடையங்களை கேள்விகளின்றி, நாம் தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றோமா? இதற்கு பணத்தைக் கொடுக்கப் போகின்றோமா? எம்முன்னான கேள்வி

2.புதிதாக மாணவர்களைச் சேர்க்கும் பின்னணியில், பண மோசடிகள் என்பது தொழிலாகி வருகின்றது. இந்த பணத்தைப் பெறுவதற்காக சட்டவிரோதமாக வகுப்புகளின் எண்ணிக்கையை  அதிகரிப்பது, வகுப்புகளின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவது நடந்து வருகின்றது. இதன் மூலம் கல்வி கற்க வரும் மாணவனிடம் பெருந்தொகை பணத்தை அறவிடுவதுடன் - பழைய மாணவர்களிடம் இதைக் காட்டி பணம் அறவிடுவதும் நடக்கின்றது. இதற்கு கதிரை தொடங்கி மேலதிக ஆசியர்களை தேவை என்று கூறி, அதற்கான பணத்தை பழைய மாணவர்களிடம் அறவிடுவது நடக்கின்றது.

இந்தப் பணம் சார்ந்த இந்த மாணவர் சேர்க்கை முறையானது, அருகிலுள்ள பிற சிறிய பாடசாலைகளையும் - மாணவர்களின் கல்வியையும் தரமற்றதாக்குவதுடன், கிராமங்கள் தோறும் இருக்கும் இலவசப் பாடசாலைகளை மூடவும் - சமூகத்தின் பொதுவான கல்வித்தரத்;தை சீரழிக்கவும் -  இந்தப் பண  மோசடிகள் உதவுகின்றது. இதற்கு புலம்பெயர் சமூகம் உதவுகின்றது என்பதே உண்மை.

அதேநேரம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை சட்டத்துக்குப் புறம்பாக அதிகரித்தல் மூலம், ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கை விகிதத்தை தகர்த்து விடுகின்றனர். குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களை சிறப்பான கல்வி (உதாரணமாக உயர் கல்வியில் லுக்சம்;பேக் நாட்டில் 7 மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்கின்றார்) என்ற, கொள்கையை பணம் வாங்கச் சேர்க்கும் மாணவர் எண்ணிக்கையானது தகர்க்கின்றது. இதன் மூலம் கல்வி தரமற்றதாகின்றது.

3. ஒவ்வொரு பாடசாலைக்கும் உணவு வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் பெறப்படும் பணம் கூட, இன்று மோசடி செய்யப்படுகின்றது. மொத்த மாணவர்கள் தொகைக்கு ஏற்ப, முழு மாணவர்களும் உணவை உண்பதில்லை. மேலதிக பணம் அல்லது பொருட்கள் மோசடி  செய்யப்படுகின்றது. இதை விட புலம்பெயர் சமூகத்திடமும் மாணவர்களின் உணவுக்காக பணம் கோரப்பட்டு, இது தான் அது என்று கணக்கு முடிக்கப்படுவதும் நடக்கின்றது.

4. புலத்தில் இருந்து போகும் சிலர் பணத்தைக் கொண்டு, கல்விச் சமூகத்தை குலைக்கவும் - வாலாட்டவும் வைக்கின்றனர். மிருகங்களுக்கு "உணவைக்" கொடுத்து தாம் விரும்பியவாறு ஆடவைப்பது போன்று – தங்கள் பணத்தைக் கொண்டு பாடசாலைகளின் கல்வி சார்ந்த அறத்தை அழித்து விடும் ஊழலில் இறக்கி விடுகின்றனர். இதற்காக தடல்புடலான விருந்துகள், அன்பளிப்புகள் .. கொடுத்து, சீரழிவான மனித நடத்தையை, கல்விச் சமூகத்தில் ஏற்படுத்துகின்றனர். கல்விக்கூடங்களை தமக்கு ஏற்ற எடுபிடியாக மாற்றி, தமது பணத் திமிரான நடத்தைக்குள் அதிபர்களையும் - மாணவர்களையும் வழிகாட்டி, தம்மை நக்கிப் பிழைக்குமாறு தங்கள் பணத்தைக் கொண்டு செய்கின்றனர். கல்விச் சமூகமானது தன்னை தன்மானமுள்ள சமூக மனிதனாக முன்னிறுத்துவதற்கு பதில், பணத்திற்கு அடிமையானதாகி அதுவே எல்லாமாகி வருகின்றது. மாணவர் சமூகத்தில் பணத்துக்கு வாலாட்டும்  பொறுக்கிகளையும் - அடிமைப் புத்தியுள்ள லும்;பன் கூட்டத்தையும், இந்தப் பணம் உருவாக்கி வருகின்றது.

இப்படி தோண்டத் தோண்ட இன்னும் பல உதாரணங்களைக் கண்டடைய முடியும்.

வெளிப்படையாக ஒவ்வொரு சதத்துக்குமான கணக்கு மட்டும் தான், பாடசாலைகளின் குறைந்தபட்சமான நேர்மையை பறைசாற்றும். அவசியமற்ற பண நடவடிக்கைகளை நிறுத்தும். இதைக் கோருவதும், இதை செய்ய மறுக்கும் போது பணத்தை கொடுக்க மறுப்பதும், அம்பலப்படுத்துவதும் அவசியமான அவசரமானதாகி வருகின்றது. கல்விக்கூடங்களில் பணத்தைக் கொண்டு நடத்தும், விருந்துகளை தடுக்கக் குரல் கொடுக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் மேல் உண்மையான அக்கறையுள்ளவர்கள், இதை இன்று இனம் கண்டு செயற்பட வேண்டும். எதிர்கால தலைமுறையின் கல்விச் சீரழிவுக்கு எதிரான, குறைந்தபட்ச செயற்பாடாக இதுவே இருக்க முடியும்.