Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த "அறமும் போராட்டமும்" என்றொரு நூல்

"அறமும் போராட்டமும்" என்ற நூல், போராட்டம் என்றால் வன்முறையானது என்கின்றது. இதன் பொருள் போராடுவதற்கான ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டி மறுப்பதுதான். மக்களின் ஜனநாயகம் வன்முறையானது என்று கூறி, அதை மறைமுகமாக மறுக்கவும் - ஓடுக்கவும் முனைகின்றது.  

இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு முதலாளித்துவ ஜனநாயகமே முரணாகி வருவதால், ஜனநாயகத்தை ஒடுக்குவது அவசியமாகிவிட்டது. இதனால் நவதாராளவாத மூலதனமானது ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டவும் - நிறுவவும் முனைகின்றது. ஜனநாயகத்தை முன்னிறுத்தி போராடுவதை வன்முறையாகத் திரித்து ஓடுக்கமுனையும் இன்றைய நவதாராளவாத கோட்பாட்டைத் தான், கவுரிகாந்தனின் "அறமும் போராட்டமும்" என்ற நூல், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றது.

இன்னுமொரு பக்கத்தில் தமிழ் இனவாத போலி இடதுசாரியமானது - இனவாத வலதுசாரியத்தை "இடதுசாரியமாக" காட்டவும் - நிறுவவும் இதன் மூலம் முனைகின்றது. அதாவது ஆயுதப் போராட்டமல்லாத எதுவும் போராட்டமல்ல என்று கூறுகின்ற தமிழ் இனவாதச் சிந்தனை முறையை மூடிமறைத்துச் சொல்லவும், வன்முறை இல்லாதவை போராட்டமல்ல அல்லது போராட்டம் என்பதே வன்முறையே என்று நிறுவவும் முனைகின்றது.

நவதாராளவாதத்துக்கு எதிராக வன்முறையின்றிய மக்கள்திரள் போராட்டங்கள் தோன்றிவிடுவதைத் தடுக்க, வன்முறையின்றிய போராட்டங்கள் எதுவும் போராட்டமல்ல, அவை எல்லாம் வெறும் "பாசாங்குத்" தனமானவை என்கின்றது. இதன் மூலம் போராடுபவன் எப்போதும், எங்கும் வன்முறையாளன் என்று காட்டி, அவனைச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி, அன்னியப்படுத்த முனைகின்றது.

இங்கு போராட்டம் என்பதே வன்முறை என்று கூறுவது, தனிநபர்வாத பயங்கரவாதக் கோட்பாடும் – அதன் சித்தாந்த முறையுமாகும். அது ஜனநாயகத்தை தனக்கு எதிரான ஓன்றாகவும், அதை வன்முறையாகவும் காட்டி ஓடுக்கவும் கோருகின்றது. அதற்கு இந்த நூல் உதவ முனைகின்றது.

 

தனிநபர்வாத பயங்கரவாதக் கோட்பாடும் - சிந்தனையும்

"அறமும் போராட்டமும்" என்ற நூல் "தெற்காசிய வர்க்கப் போராட்டங்களின் பண்பாட்டரங்கச் செயற்பாடுகள் - தத்துவமும் வரலாற்றையும்" கொண்ட, ஒரு முக்கிய நூலாக விளம்பரப்படுத்தப்பட்டு, லண்டன், பாரிசில்.. நூல் அறிமுகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நூல் வெளியீட்டாளர்கள் கூறுவது போல், இந்த நூல் முக்கியமானதா!? நூல் முன்வைக்கும் அரசியல் என்ன!? இந்த நூல் குறித்து, பாரிஸ் கூட்டத்தில் எனது விமர்சனம்.

ஓன்றுடன் ஒன்று தொடர்பற்றதும், எதையும் தெளிவாக முன்வைக்க முடியாத புலம்பல்களையும் - அலட்டல்களையும் தொகுத்து நூலாக்கப்பட்டு இருக்கின்றது. இப்படி அங்குமிங்கும் அலைக்கழிக்கும் வண்ணம் - வரலாற்று ரீதியான பல்வேறு கோட்பாடுகளை அங்குமிங்குமாகச் செருகி, விளங்கவே முடியாத அளவுக்கு – அதேநேரம் பிறரை மிரள வைக்கும் வண்ணம் போலி பிரமிப்பை உருவாக்கி, நூல் குறித்து பயத்துடன் கருத்துக் கூறுவதே நடந்தேறுகின்றது. சிலர் அதில் ஓரு இரு கூறுகளை எடுத்து, அதுதான் இது என்று நம்பவும் முனைகின்றனர்.

இந்த நூலுக்கு "அறமும் போராட்டமும்" என்று தலைப்பு கொடுக்கப்பட்டு, தலைப்புக்கு பலபக்க தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. நூல் மீதான விமர்சனத்தை நூலில் தலைப்புக்கு கொடுத்த தத்துவ முத்துகள் மீது வைப்பதன் மூலமே – நூலின் அரசியலை இனங்கண்டு கொள்ளமுடியும். "அறமும் போராட்டமும்"  என்பது "வன்முறையில்லா அல்லது வன்முறையைத் தவிர்த்த போராட்டம் ஏதாவது உண்டா? .. அனைத்துப் போராட்டங்களும் தம்மட்டில் தாமே ஒரு வன்முறைதான்." (பக்கம் 17) என்கின்றது. இதன் மூலம் சமூகம் தாமே தம்மளவில் வன்முறையானது என்று பிதற்ற முடிகின்றது.

அதாவது "வன்முறையில்லாத போராட்டமில்லை. ஒரு போராட்டத்தில் இருந்து அறத்தையோ வன்முறையையோ தனித்தனியாகப் பிரிக்க முடியாது. நீர் மூலக்கூறில் இருந்து ஜதரசனையும் ஓட்சிசனையும் தனித்தனியாக பிரித்தால், நீர்மூலக் கூறு இல்லாமல் போகும். ஆனால் ஜதரசன், ஓட்சிசன் அணுக்கள் அழிவதில்லை. ஆனால் போராட்டத்தில் இருந்து அறத்தைப் பிரித்தாலும் சரி, போராட்டத்தில் இருந்து வன்முறையைப் பிரித்தாலும் சரி அறமும் அழியும், வன்முறையும் அழியும், போராட்டமும் அழியும.;" (பக்கம்19). என்கின்றது. இதுதான் நூலின் தலையங்கமும், நூலின் உள்ளடக்கமுமாகும்.

நவதாராளவாத தனியுடமைவாத பயங்கரவாதச் சிந்தனைமுறையைக் கொண்டு, சமூகத்தை வரையறுத்துக் காட்ட முற்படுகின்றது. போராட்டம் என்பதே, வன்முறை என்று வலிந்து நிறுவ முனைகின்றது. அறம் சார்ந்த சமூகத் தன்மையையும் - சமூக மனிதனாக வாழ முனையும்  வாழ்க்;கை நெறியையும், வன்முறை கொண்டோரின் தெரிவும் - போராட்டமுமாக இந்த நூல் சித்தரிக்க முற்படுகின்றது. சமூக மனிதன் யார் என்றால் - வன்முறையாளன் என்று முத்திரை குத்த முனைகின்றது. இதை எளிமைப்படுத்தினால் போராடுபவன் யார் என்றால் - வன்முறையாளன் என்று, இந்த நூல் மூலம் நிறுவ முனைகின்றது.

போராட்டம் என்பது வன்முறையா!?

தனியுடமையைக் குவித்து வரும் வர்க்கமும், சொத்துடமையைப் பாதுகாக்கும் ஆளும் - அதிகார வர்க்கமும், போராட்டத்தை வன்முறையாகவே காட்டுகின்றது. அதாவது போராட்டம் என்பது சொத்துடமையைக் கொண்டிருக்கும் தங்கள் "ஜனநாயகத்துக்கு" எதிரான வன்முறையாகவும் - சொத்தைக் குவிக்கும் தங்கள் "சுதந்திரத்துக்கு" எதிரான வன்முறையாகவும் காட்டுகின்றது. போராட்டமானது தங்கள் வர்க்க அமைப்பை பாதுகாக்கும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான, வன்முறையாகவும் - பயங்கரவாதமாகவும் சித்தரிக்கின்றது.

தனியுடமை சமூக அமைப்பை பாதுகாக்க, போராட்டத்தை வன்முறையாக சித்தரிப்பதன் மூலம்,

1.இயற்கையிலேயே சமூக மனிதனாக இருக்கும் மனித வாழ்வியலையும் – அதைக் கோருவதையும் வன்முறையாக சித்தரிக்கின்றது. இதற்காக போராடுவதை மறுதளிக்கின்றது.

2.ஜனநாயகத்துக்கான போராட்டத்தை வன்முறையாக காட்டி ஓடுக்க முனைகின்றது. 

நவதாராளவாத சமூகப் பொருளாதாரமானது - ஜனநாயகத்தின் எல்லா சமூகக் கூறுகளையும் மறுதளிக்கின்ற இன்றைய பின்னணியில், போராட்டத்தை இந்த நூல் வன்முறையாக கட்டமைத்துக் காட்டுகின்றது. இன்றைய இந்தப் பின்னணியில் இருந்து, போராட்டம் என்பது வன்முறை தான் என்று கூற முற்படுகின்ற போலி இடதுசாரியப் பித்தலாட்டமே இந்த நூல். 

போராட்டம் என்றாலே அது வன்முறை தான் என்று "இடதுசாரியாக" முன்னின்று கூறுவதன் மூலம், மக்களை அச்சமூட்டி அடங்கிப் போகுமளவுக்கு சிந்தனை ரீதியாக காய் அடிப்பதே இந்த நூலின் மைய நோக்கம். இதை மூடிமறைக்க முனையும் போது - தத்துவப் புலம்பலாகி -  அலட்டலாகி விடுகின்றது.

தனியுடமைவாத சிந்தனை முறையானது - அனைத்தையும் தன்னில் இருந்தே அணுகுகின்றது. உதாரணமாக "பயங்கரவாதப் போராட்டக் குணாம்சங்களில் அடிப்படை தனிநபர் முதன்மைவாதச் சிந்தனை" (பக்கம்16) இருந்து தோன்றுவதாக இந்த நூல் கூறுகின்றது. மக்கள் திரளைச் சாராத, மக்களுக்கு எதிரான வன்முறையும் - போராட்டம் என்றால் வன்முறையாக கருதுகின்ற சிந்தனை முறையும் செயலும், மக்கள் விரோத "பயங்கரவாதமாக" இருக்கின்றதே ஒழிய, தனிநபரை முதன்மைப்படுத்துவது பயங்கரவாதமாக இருப்பதில்லை. தனிநபர் வழிபாடு – ஊக்குவிப்பு பயங்கரவாதம் என்பது, பயங்கரவாதம் குறித்த திரிபாகும்.

இங்கு போராட்டத்தை வன்முறையாகச் சித்தரித்துக் காட்டுவதற்கான அரசியல் பித்தலாட்டமே இது. வன்முறை, பயங்கரவாத .. அரசியல் உள்ளடக்கத்தை, சமூக இயக்கத்துக்கு வெளியில்  - தனிநபர்வாத கண்ணோட்டத்தில் பிரித்து, அதை முற்போக்கு – பிற்போக்காக வரையறுப்பதன் மூலம், ஜனநாயகத்தையும் - புரட்சிகர பயங்கரவாதத்தையும் மறுப்பதாகும்.

சமூக இயக்கம் என்பது வன்முறையைச் சார்ந்ததல்ல. சமூகம் என்பது இயற்கையானதும், தன்னளவில் தானே வன்முறையற்ற வாழ்வியலைக் கொண்டது. இதற்கு மாறாக தனிநபர் சிந்தனை முறை மனித குலத்துக்கு எதிரானதும் - இயற்கைக்கு முரணானதும் கூட. இது சமூக இயக்கத்தை வன்முறை கொண்டதாக நிறுவி, தன்னைத்தான் நிலைநிறுத்த முனைகின்றது.

இதற்கு மாறாக தனியுடமைக்கு எதிரான சமூக இயக்கம் என்பது, வன்முறையின் தோற்றுவாயல்ல. சமூகப் போராட்டமானது, குறித்த சூழலில் இயங்கும் எல்லா நிலைமைகளையும் கையாளுவதன் மூலம் இயங்குவதே. இது வன்முறையைச் சார்ந்ததல்ல. இங்கு வன்முறை என்பது சமூக இயக்கமாக பயணிக்கும் குறித்த வரலாற்றுச் சூழலில் ஏற்படும் சிறிய கூறாக இருக்க முடியமே ஒழிய, அது கட்டாயமானதல்ல. அதேநேரம் வன்முறை சமூக இயக்கம் வெற்றியை அடைவதற்கான கட்டாய நிபந்தனையுமல்ல.

உதாரணமாக சோவியத் புரட்சியை எடுத்தால் - அதன்  போராட்ட வரலாற்றில் வன்முறை என்பது சிறிய பகுதியே. அதாவது போராட்டத்தின் பண்பு மற்றும் அளவு மாற்றத்தின் போது ஏற்பட்ட புதிய சூழலில், வன்முறை, குறித்த சூழலின் வடிவமே ஒழிய – வன்முறையே போராட்டத்தின் வடிவமாக இருந்ததில்லை. இது சீனப் புரட்சிக்கும் பொருந்தும். வன்முறை என்பது போராட்டத்திற்கான அடிப்படை யுத்ததந்திரமல்ல. முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத வர்க்கப்போராட்டத்தின் வளர்ச்சியில் ஏற்படும், குறித்த சூழலில் யுத்த தந்திரமாக மட்டும் வன்முறை செயற்படுகின்றது.

வன்முறைப்; போராட்டங்கள் வெல்ல முடியாதாகி விட்ட சூழலில், சமூக இயக்கங்கள் ஜனநாயக ரீதியாக வளர்வதை கண்டு ஆளும் வர்க்கத்தின் அச்சமே – போராட்டத்தை வன்முறை இயக்கமாக்க காட்டவும் - போராட்டம் என்பதே வன்முறை என்று போராட்டத்தில்  வன்முறையைத் தூண்டிவிடும் பின்னணியில், கோட்பாடு மற்றம் தத்துவார்த்த ரீதியாக இயக்கங்களை வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்க, "அறமும் போராட்டமும்" போன்ற நூல்கள் ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாகி விடுகின்றது.

போராட்டமும், அறமும், வன்முறையும் தனித்தனியாக இயங்க முடியாதா!? 

வன்முறையை போராட்டமாக குறுக்குவது, போராட்டத்தை அறமாகக் குறுக்குவது. அறத்தை போராட்டமாக்குவது, அறத்தை வன்முறையாகக் கட்டமைக்கும் கோட்பாடு, சமூகச் சிந்தனையை மறுத்து தனிமனித சிந்தனைக்கும் - பயங்கரவாத வன்முறைக்கும்  தத்துவார்த்த மூலம் பூசுவது.

இந்த பின்னணியில் இயற்கையின் இயக்கத்தையும், அதன் இயங்கியலையும் மறுதளிக்கின்றது. இயக்கத்தை வன்முறையாக குறுக்கி, வன்முறை தான் மனிதனின் இயக்கமாகக் காட்டி, வன்முறையல்லாத இயக்கத்தையும் – போராட்டத்தையும் மறுதளிப்பதாகும்.

இயற்கையின் இயக்கம் மற்றும் இயங்கியல் இயற்கைக்கு மட்டுமானதல்ல, அந்த இயற்கையிலுள்ள மனிதனுக்கும் பொதுவானது. இங்கு

1.இயற்கையானது வன்முறைக்குள், குறுகிய இயக்கமல்ல. அதேநேரம் இயற்கையிலுள்ள வன்முறையானது, போராட்டமாகவோ, அறத்தையோ கொண்டதாக இருப்பதில்லை. இயற்கையின் வன்முறை என்பது, இயற்கையாகவே அதன் இயக்கத்துடன் தோன்றுகின்றது. இயற்கை போராட வேண்டிய அவசியம் இருப்பதில்லை.  தனக்கான அறத்தையோ கொண்டு இருப்பதில்லை. இந்த விதி இயற்கையில் வாழும் மனிதனுக்கும் பொருந்தும். இயற்கையில் செயற்படும் மனிதனின் செயற்கைச் செயற்பாட்டுக்கும் பொருந்தும்.

2.இயற்கையில் வாழும் பல் உயிர் தொகுதிகளில் நடக்கும் வாழ்வியல் போராட்டத்தை எடுத்தால், அறமென்பது இருப்பதில்லை. இங்கு அறம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது. இயற்கையில் சமூகத் தன்மையை மறுத்து வாழும் மனிதனின் வாழ்வியல் சார்ந்ததே அறம். அறம் தனித்து இயங்குகின்றது. அறம் இயற்கைக்கு வெளியிலானது. இதனாலேயே அறம் தனித்து இயங்கக் கூடியது. உதாரணமாக வீதியில் கிடக்கும் ஒரு தொகை பணத்தை உரியவரிடம் ஓப்படைக்கும் செயல் அறம் சார்ந்தது. இதற்கு போராட்டம் அவசியமில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் சமூகத்தில் போராட்டமே அறமென்றால், சமூக அறத்துடன் வாழாதே என்பதே இதன் பொருள்.

3.வர்க்க சமூக அமைப்புக்கு முந்தைய குரங்கில் இருந்து தோன்றிய மனிதன் முதல்   ஆதிப்பொதுவுடமை சமூகம் வரையான கூட்டு வாழ்வியலில், தமக்கு இடையிலான போராட்டத்தில் - முரண்பாட்டில் "போராட்டமே வன்முறையாக" இருந்து இருந்தால், மனிதனே தோன்றி இருக்கவே முடியாது. மந்தைக்குரிய சமூக வாழ்வில், போராட்டமென்பது வன்முறையானது என்பதே கற்பனை.

4.இயற்கையில் வாழும் பல் உயிர் தொகுதிகளில் நடக்கும் வாழ்வியல் போராட்டமானது, வன்முறை மூலம் உயிர் வாழ்வதில்லை. அதாவது வன்முறை தான் உயிர் வாழ்தலில் பொது விதியல்ல. எப்போதும், எங்கும், எந்நேரமும் வன்முறையில் உயிரியல் தொகுதிகள் வாழ்வதல்ல. வன்முறை என்பது வாழ்வில் தற்செயலானதும், உயிர் வாழ்வில் வன்முறை என்பது சிறிய பகுதியே. வன்முறையின்றி வாழ்தல் கூட, பரிணாம விதிக்குட்பட்டு வாழ்வை மாற்றியமைக்க கூடிய ஆற்றல் கொண்டவை தான் - உயிரியல் உள்ளடங்கிய இயற்கையின் விதி கூட.

5.வன்முறையும்  - போராட்டமும் தனித்தனியாக இயற்;கையில் ஓன்றுடன் ஓன்று தொடர்பற்று இயங்குவதுடன் - சேர்ந்து இயங்கக் கூடியது. மனித செயல்களான வன்முறை – போராட்டம் - அறம் என்பன, வரம்புக்குட்பட்டதல்ல. தனித்தனியாகவும், அதேநேரம் சேர்ந்து இயங்கக் கூடியதே. உதாரணமாக தேர்தல் முறையில் வாக்கு போட்டு ஆட்சியாளரை மாற்றும் போராட்டமானது, வன்முறையானது என்று ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு மட்டும் கூற முடியும்.

வன்முறை என்பதை போராட்டமாகவும், போராட்டம் என்பது அறமாகவும் சித்தரிக்கின்றதன் மூலமும், இந்த மூன்றும் தனித்தனியாக இயங்க முடியாது என்று கூறுவது, இயக்கத்தை குறுக்குவதாகும். சமூக இயக்கத்தை மறுப்பதாகும். இதன் மூலம் இயங்கியலின் பன்முகக் கூறை மறுப்பதாகும். எல்லாவற்றையும் வன்முறையாக்கி, அதை போராட்டமாக்கி அதை அறமாக சித்தரிப்பதன் மூலம், சமூக இயக்கத்தை மறுத்து அனைத்தையும் வன்முறையாக கொச்சைப்படுத்தி ஒடுக்கவே உதவுகின்றது.

உதாரணமாக அன்றாடம் மனிதர்கள் நடாத்தும் ஆயிரக்கணக்காக போராட்டங்களை எடுத்தால் - அதில் கலந்து கொள்ளும் மக்கள் வன்முறை உணர்வுடனோ, வன்முறை வழிகளிலோ போராடுவதில்லை. மாறாக ஜனநாயக வழிகளில், ஜனநாயக அடிப்படையில் நடக்கும் போராட்டங்கள் - வன்முறையின்றி நடப்பதுடன் - அதில் வெற்றிகளையும் சந்திக்கின்றனர். சமூக இயக்கமாக இருக்கலாம், தனிமனித முயற்சியாக இருக்கலாம்... வன்முறைகள் மூலம்  வாழ்க்கையை வாழ்வதில்லை.

மனித வாழ்க்கையை வன்முறை என்று கூறுவதும், வன்முறையாகக் காட்டவும் விரும்புகின்றவர்கள் யார் என்றால், மக்களை ஓடுக்கம் மக்கள் விரோதிகளே. இந்த நூல் மக்கள் விரோதிகளின் பக்கத்தில் நின்று, போராட்டம் என்பது வன்முறை என்று கூவிக் காட்ட முனைகின்றது.

வன்முறையா இயற்கையின் விதி!?

வளர்ச்சி நோக்கிய இயற்கையின் விதி என்பது வன்முறையல்ல. அதாவது அழிவு கோட்பாடல்ல. மாறாக இயற்கையும் - அதிலுள்ள உயிரியல் தொகுதியும் வளர்ச்சி விதிக்கு உட்பட்டது. மாற்றமும் - இயற்கையும், வன்முறை விதிக்கு உட்பட்டதல்ல. இயற்கையில் உயிரற்ற சடப்பொருளில் இருந்து உயிர்கள் தோன்றியது வன்முறை மூலமல்ல. உயிர்களில் வளர்ச்சி விதிகள் தொடங்கி, பாலூட்டிகளையும் அதில் உள்ள மனிதனையும் தோற்றுவித்;தது வன்முறையல்ல. இயற்கை தேர்ந்தெடுத்த பரிணாம நிகழ்வுகள், வன்முறையிலான போராட்டத்தில் இருந்தோ - அறத்தின் பால் தோன்றியதோ அல்ல. மாறாக பண்பு மாற்றங்கள், அளவு மாற்றங்களை கொண்ட சங்கிலித் தொடரில் நடந்தேறியது. இங்கு வன்முறை நிபந்தனையல்ல, தற்செயலானதே.

தற்செயலான இரசாயனச் சேர்க்கைகளுக்கும், சூழல்களுக்கும் அமைவாகவே உயிர்கள் தோன்றியது. இந்த விதியானது எல்லா சூழலிலும் - எல்லா கூறுகளுக்கும் பொருந்தும்.

மனித மொழியின் தோற்றம் என்பது வன்முறையிலான போராட்டத்தில் தோன்றியதல்ல. உழைப்பின் வளர்ச்சியுடன், அதை பரிமாறிக் கொள்ள மொழி உருவாகின்றது. குரங்கில் இருந்து மனிதனாக மாற்றியது, வன்முறையிலான போராட்டமும் - அறமுமல்ல. மாறாக உழைப்பே அதைத் தோற்றுவிக்கின்றது.

ஏன் இருக்கும் தனியுடமை அமைப்பை வன்முறையும் - போராட்டமும் - அறமும்  தோற்றுவிக்கவில்லை. மாறாக உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியே, அதைத் தோற்றுவித்;தது. மார்க்சிய பொதுவுடமைத் தத்துவமானது, வன்முறையுடன் கூடிய போராட்டமும் அறமும் சார்ந்ததுமல்ல, அதன் கண்டுபிடிப்புமல்ல. மாறாக உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுவரும் மாற்றம் தான், பொதுவுடமைத் தத்துவமானது.

"போராட்டம்" என்பது  "வன்முறையாகவே" இருக்க முடியும் என்பது தவறானது. வன்முறை என்பது போராட்டத்தின் கூறாக இயற்கையில் இருப்பதில்லை. கடல் அலைகள், புயல்கள், நெருப்பு.. என்று விரிந்த இயற்கையை எடுத்தால், போராட்டத்தை விதியாக கொண்டதல்ல. இது இயற்கைக்கு மட்டுமல்ல, இயற்கையில் ஓரு உயிராக இருக்கும் மனிதனுக்கும் பொருந்துமே ஓழிய, மனிதனுக்கு இது விதிவிலக்கல்ல.

வன்முறையின்றி மாற்றம் தனி மனிதனுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் நடக்கும் முரண்பாடு என்பது வன்முறையல்ல. இரண்டு மனிதர்களை எடுத்தால், இயற்கை விதிக்கமைய உயிரியல் அம்சம் தொடங்கி சிந்தனை வரை முரண்பாடாலானது. இது இயற்கையானது, வன்முறையாலானதல்ல. அவர்களுக்கும் இடையிலான பரஸ்பர செயற்பாடுகளை, வன்முறையுடன் கூடிய போராட்டமாகவும் - அறம் சார்ந்ததான சித்தரிப்பு அபத்தமானது. மந்தை கூட்டத்தில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஒன்றில் இருந்து ஓன்று வேறுபடவும் - ஓன்றாகவும் வாழுகின்றது. வேறு வேறாக இருக்கும் போது, ஓன்றாக வாழ்வது வன்முறையாகவும், அதே  நேரம் போராட்டமாகவும் - அதற்கான அறமாகவும் இருப்பதாலேயே அவை கூட்டாக வாழ்கின்றதா எனின், இல்லை.

தனியுடமைச் சிந்தனையும்- தனிநபர் பயங்கரவாதக் கோட்பாடும் தான், மனித வாழ்வியலை வன்முறையாகவும், அதுவே போராட்டமும் அறமும் கொண்டதாகவும் வருணிக்கவும் - காட்டவும் முடிகின்றது. மனிதர்கள் கூட்டாக வாழ்வதை கற்பனையில் கூட கனவு காணமுடியாத போது, மனித வாழ்வியலை வனமுறைக்குள்ளான தனியுடமை அமைப்புக்குள் முடக்கி காட்டுவதையே, இந்த நூல் மூலம் செய்ய முனைகின்றது.                                                  

முடிவாக 

இயற்கையின் இயக்கத்தையும் - அதன் இயங்கியலையும் மறுதளிக்கும் தனியுடமை  சிந்தனையைக் கொண்டும்  -  அதன் வாழ்வியல் நடைமுறையில் இருந்து, இயற்கையையும் - மனித சமூகத்தையும் பார்க்கின்ற பார்வையே, "அறமும் போராட்டமும்" என்ற நூலின் சாரம். தமிழ் இனவாத தனிநபர் பயங்கரவாதத்துக்கு ஏற்ப மார்க்சியத்தையும் - சமூகத்தையும் விளங்கிக் கொண்டு, அதற்கு ஏற்ப வியாக்கியானம் செய்யும் போது ஏற்படும் பிதற்றல்கள் இவை. இன்று சமூகத்துடன் சேர்ந்து எதையும் உருப்படியாக செய்யவும் - செயற்பட முடியாத தனிமனித சூனியவாதத்தில் இருந்து ஏற்படும் புலம்பல்களின் குவியலை, உள்ளடக்கியதே இந்த நூல்.

 

பின் குறிப்பு 

பாரிஸ் கூட்டத்தில் நூல் வெளியிட்டாளர்கள் - இந்த நூல் தென் ஆசிய சமூகத்தில் யாரும் அக்கறைப்படாத, குறிப்பாக பண்பாட்டு ரீதியான வரலாற்று ரீதியான சமூகக் கட்டமைப்பு பற்றி பேசுவதாக, நூலுக்கு பொழிப்புரையை வழங்கினர். இந்திய சமூக அமைப்பில் சாதிய – மத ஓடுக்குமுறைக்கு எதிரான வரலாற்று படிமங்களையே, இந்த நூல் முதன் முதலாக வரலாற்றுக்குள் கொண்டு வைத்திருப்பதாகவும் - இதனால் இந்த நூல் முக்கியமானது என்றனர். ஆனால் இந்த நூல் வாசிக்கும் போது, அதை கண்டுகொள்ள முடியவில்லை.

அதேநேரம் இந்த நூல் தென்னாசிய சமூக அமைப்பு பற்றி குறைந்தபட்ச புரிதலைக் கூட கொண்டு இருக்கவில்லை. தென்னாசிய நிலப்பிரபுத்துவமானது ஜரோப்பிய வடிவத்தில் இருந்து வேறுபட்டது என்பது, குறிப்பாக நிலம் மீதான தனியுடமை தென்னாசிய சமூகத்தில்  இருக்கவில்லை. நிலம் பொதுவானதாக அரசனுக்கும் - கோயிலுக்கும் சொந்தமாக இருந்தது. இங்கு உழைப்பு ரீதியான சாதியக் கட்டமைப்பும் – அனைவருக்குமான பொருளாதார பங்கீட்டைக் கொண்ட கிராமிய வாழ்க்கை முறையானது, நிலத்தை மையமாக கொண்டு இருந்தது. இது தான் இந்தியப் பண்பாட்டு அடித்தளம். சாதி மற்றும் மத எதிர்ப்பு முதல் புதிய மதங்கள் வரையான சமூக வரலாற்று கூறுகள், இந்த கிராமிய சாதி பொருளாதாரக் கட்டமைப்புக்கு முரணாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் தோன்றியது. இதை இந்த நூலில் காண முடியாது.

இந்திய வரலாற்றை, அதன் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் கண்டு கொண்டவர்களைக் கொண்டதே - இந்தியப் புரட்சிகர வரலாறு. தென்னாசிய சமூகத்தின் சாதி மற்றும் மத எதிர்ப்பு பண்பாட்டு வரலாற்றைக் கண்டுகொள்ளாத புரட்சியாளர்களைக் கொண்டதே இன்றைய வரலாறு என்று கூறி, அதற்கொரு நூல் தான் இது என்பது அபத்தமானதும், அறிவிலித்தனமாதும் கூட. அத்துடன் இந்த நூல், அதைக் கொண்டு இருக்கவில்லை என்பதே உண்மை.