Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிகளினதும் - கிட்லரினதும் ஆட்சியைக் கோருவது ஏன்?

புத்தபிக்குகள் கோத்தபாயவிடம் கிட்லர் ஆட்சியைக் கொண்டுவருமாறு கோரினர். யூ.என்.பியின் எம்பியும் - அமைச்சருமாக இருந்த விஜயகலா புலிகளின் ஆட்சியைக் கோரினார். உண்மையில் இவை தற்செயலான – கிறுக்குத்தனமான கோரிக்கையோ - கூற்றுக்களோ கிடையாது. மாறாக இனரீதியான முரண்பாட்டுக்குள், இனவாத சக்திகளின் ஆதரவு பெற்ற கருத்துக்களாகவும் - "ஜனநாயகம்" குறித்த அறியாமையின் பொது உள்ளடக்கமாகவும் இருக்கின்றது.

பேரினவாதக் கருத்தியலானது கிட்லரின் மீள்வருகை குறித்த கருத்தைக் கொண்டாடும் அதேநேரம், கிட்லரின் ஆட்சியையொத்த புலிகளின் ஆட்சி குறித்த கருத்தை எதிராக முன்னிறுத்துகின்றனர். தமிழினவாதக் கருத்தியலானது புலிகளின் ஆட்சியைக் கொண்டாடும் அதேநேரம், புலிக்கு நிகரான கிட்லராக கருதப்படும் கோத்தபாயவின் ஆட்சியை எதிர்க்கின்றனர். இப்படி ஒரே கருத்தை எதிரும் புதிருமாக சிந்திப்பதே, முரண்பட்ட சிங்கள  -  தமிழ் இனவாதச் சிந்தனைமுறையாக இருக்கின்றது.

இங்கு விஜயகலா கோரியது பேரினவாதம் கூறுவது போல் புலிகளின் மீள்வருகையை அல்ல, புலிகளின் ஆட்சிமுறையையே கோரினார். கோத்தபாயவிடம் புத்தபிக்குகள் கோரும் அதே ஆட்சிமுறையையே விஜயகலாவும் கோரினார். இந்த வகையில் தமிழ் - சிங்கள இனவாதிகள் எந்த வகையான ஆட்சிமுறை அவசியம் என்பதில் ஒன்றுபட்டு நிற்பதும், அவற்றின் பிரதிநிதித்துவத்தை கோருவதில் மட்டும் முரண்பாடு நிலவுகின்றது.

 

தமிழ் - சிங்கள இனவாதச் சிந்தனைக்கு ஏற்ப யார் ஆட்சி என்பதில் முரண்படுகின்றனரே ஒழிய, உள்ளடக்கத்தில் அல்ல. அதேநேரம் புலிகள் வடிவில் கிட்லரின் ஆட்சியைக் கோரியதை எதிர்த்து, அதிகாரத்திலுள்ள பேரினவாதச் சட்டம் விசாரணை செய்யும் அதேநேரம் - சிங்களக் கிட்லரை கோரியதை கொண்டாடுகின்றது. இப்படி இலங்கையில் சட்டங்கள் - தண்டனைகள் கூட, இனவாதத்துக்கு ஏற்ப பக்கச் சார்பாக செயற்படுவதைக் காண முடியும்.

இலங்கையில் "மீண்டும் புலிகளை உருவாக்கியாவது - கிட்லர் ஆட்சியை கொண்டு வந்தாவது", நாட்டை பழையபடி ஆள்வதே, இன்றைய பிரச்சனைக்குத் தீர்வு என்று இனவாதிகள் கருதுகின்றனர். இந்த வகையில் புலிகளினதும் - கோத்தபாயவினதும் கடந்தகால ஆட்சிமுறைமையானது, ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் கிட்லரின் ஆட்சிக்கு நிகராக இருந்தையும், அந்த ஆட்சிமுறையே மீண்டும் அவசியமானது என்று ஓடுக்கும் வர்க்கங்கள் கோருகின்றன.      

சமூகப் பிரச்சனைகளுக்கு "ஜனநாயகம்” காரணமா? சர்வாதிகாரம் தீர்வாகுமா!?

சர்வாதிகாரத்தைக் கோரும் சிந்தனைமுறையானது, நாட்டை தேர்தல் "ஜனநாயகத்தை" அடிப்படையாகக் கொண்ட சிவில் சட்ட நடைமுறைகள் மூலம் மக்களை ஆள முடியாது, மாறாக சர்வாதிகார ஆட்சி மூலம் மக்களை அடக்கியொடுக்க கோருகின்றது.

கோத்தபாயவின் கடந்தகால ஆட்சியானது, கிட்லரின் காலம் போன்று இருந்தால் அதை மீளக் கோருவதும், இதையொத்த பிரபாகரனதும் - புலிகளினதும் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியை விஜயகலா கோருகின்றார்.  

சர்வாதிகாரம் மூலமே "சீரழியும் கலாச்சாரத்தைப்" பாதுகாக்க முடியும் என்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், ஊழல் - லஞ்சத்தை ஒழிக்கவும், வாள்வெட்டுக் குழுக்களை அடக்கவும், மாபியா கும்பல்களை ஓழிக்கவும், போதைவஸ்துவைக் கட்டுப்படுத்தவும், மற்றும் இது போன்ற குற்றங்களை ஓழிக்கவும், சர்வாதிகார ஆட்சி மூலமே தீர்வு காண முடியும் என்று நம்புகின்றனர்.

இன்றைய சிவில் - சட்ட அமைப்புமுறைமையும் - தேர்தல் "ஜனநாயகமும்" இதற்கு தடையாக இருப்பதாக கருதுமளவுக்கு, இந்த அமைப்புமுறை மேல் மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதன் பொது வெளிப்பாடாக இது இருக்கின்றது.

இன்று நவதாராளவாத அதிகாரத்தைக் கொண்டோ, பணத்தைக் கொடுத்தோ எதையும் வாங்குமளவுக்கு "தேர்தல் ஜனநாயக ஆட்சி" முறைமை மாறிவிட்ட நிலையில், சட்டம்  செயலற்றுப் போகின்றது. குற்றங்கள் வீரியம் பெற்று வருகின்றது. எந்தக் குற்றத்தை யாரும் செய்யலாம், அதைக் கண்டுகொள்ளாது இருப்தே வாழ்க்கை முறையாகி வருகின்றது. குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது, தண்டனைக்குரிய குற்றமாகி வருகின்றது.

உதாரணமாக பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்;படும் போது அதைத் தட்டிக் கேட்டால், கேட்டவனை குற்றவாளியாகவும் - கேட்காமல் இருந்தால் சர்வசாதாரணமான நடைமுறை வாழ்க்கையாகி வருகின்றது. இதில் இருந்து தப்பிப் பிழைக்க முனையும் மத்தியதர வர்க்க நழுவல்வாத வாழ்க்கை முறையானது, சர்வாதிகாரம் மூலம் இதைத் தடுக்க முடியும் என்று நம்புகின்றது. அதேநேரம் இனரீதியாக பிரிந்து சிந்திக்கின்றது.

இன்று முதலாளித்துவ தேர்தல் ஜனநாயக அமைப்புமுறையிலான சிவில் சட்ட சமூக அமைப்பு முறைமை சிதைந்து, அதன் இடத்தில் நவதாராளவாத முதலாளித்துவத்துக்கு ஏற்ப உருவாகியுள்ள உதிரியான லும்பன்தனமான அராஜகத்தை, நிறுவனமயமான சர்வாதிகார வன்முறை மூலம் தடுக்க முடியும் என்று நம்பி அதைக் கோருகின்றது. இது தான் இன்றைய அரசியல் போக்காகும்.

சிவில் சட்ட சமூக அமைப்புமுறையின் சீரழிவு, எங்கிருத்து ஏன் தோன்றுகின்றது?  

நாட்டின் "குற்றங்களைக்" கட்டுப்படுத்த "கிட்லரும் – புலிகளும்" அவசியம் என்று கூறுமளவுக்கு, நாட்டில் சிவில் - சட்ட அடிப்படையிலான தேர்தல் ஜனநாயக சமூக கட்டமைப்பு சீரழிந்து விட்டது. பாராளுமன்ற சிவில் - சட்ட "ஜனநாயக" தேர்தல் ஆட்சிமுறைமைக்கு பதில், சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சி மூலமே குற்றங்களைத் தடுக்க முடியும் என்று கூறுமளவுக்கு, பொருளாதாரமும் - அரசியலும் சீரழிந்து விட்டது.

சர்வாதிகாரத்தைக் கோருவது பெரும்பான்மையினரது கருத்தும் கூட. தேர்தல் ஜனநாயகம் மூலம், சர்வாதிகார ஆட்சியை நிறுவக் கோருமளவுக்கு, "ஜனநாயகம்" குறித்த அறியாமை சமூக மயமாகி இருக்கின்றது.

இந்தக் கருத்தியலானது நாட்டின் சிவில் சமூக கட்டமைப்பு, இனி என்றும் பழைய நிலைக்கு மீள முடியாத வண்ணம் சிதைந்து வருகின்றதன் பொது வெளிப்பாடு. இதன் பொருள் தேர்தல் "ஜனநாயகம்" மூலம், முதலாளித்துவத்தின் இன்றைய நிலைமையை, இனி சீர்திருத்த முடியாதாகிவிட்டது. அதாவது முதலாளித்துவம் அழுகி வருகின்றது. இது இலங்கைக்கு  மட்டுமான ஒன்றல்ல, உலகளாவியதும் கூட.

சிவில் சட்ட அமைப்புமுறைமையே, முதலாளித்துவ சமூக அமைப்பின் அச்சாகும். சொத்துடமையானது தனிநபர்களிடம் குவிந்து வரும் போது, சிவில் சட்ட அமைப்புமுறைமை அதற்கு ஏற்ப தன்னை குறுக்கிக் கொள்வதே அதன் இயல்பு. சொத்துடமை குவிந்து சூழலில் – சொத்தை மேலும் மேலும் குவிக்க, சிவில் சட்ட அமைப்பை அதற்கு ஏற்ப வளைக்கும் போது, அவை அனைவருக்;குமாக செயற்படுவது செல்லுபடியற்றதாகின்றது. அதேநேரம் சொத்தைக் குவிக்கும் போட்டி, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடாகி, அது நாட்டின் ஜனநாயக வடிவங்களை இல்லாதாக்கிவிடுவதன் மூலமே, சொத்துக் குவிப்பை நடைமுறைப்படுத்த முடிகின்றது.

சிவில் - சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இனி இருக்க முடியாது. சொத்துடமையின் குவியும் போக்குக்கு ஏற்ப, சிவில் - சட்டம் பொதுவானதாக அமுல்படுத்த முடியாது. அனைவருக்குமான தனியுடமைச் சட்டமானது, பெரும் உடமைக்கு மட்டுமானதாக குறுகிவிடுவதால், பொது சிவில் சட்ட ஓழுங்காக சீரழிந்து விடுகின்றது.

முதலாளித்துவம் சமூக கட்டமைப்பை பாதுகாக்கும், சிவில் - சட்ட முறைமையானது உலகெங்கும் காலாவதியாகி வருகின்றதன் பொது வெளிப்பாடு தான் இவை. இன்றைய தேர்தல் "ஜனநாயகம்" மூலம், மீண்டும் பழைய "தேசிய" முதலாளித்துவ சிவில் - சட்ட அமைப்பு முறைமையை கொண்டு வர முடியாத அளவுக்கு, "தேசிய" முதலாளித்துவ உற்பத்தி முறைமை காலாவதியாகி வருகின்றது.

தேசிய முதலாளித்துவம் தன் நாட்டு எல்லையைக் கடந்து சுரண்டுவதற்காக – உலகச் சந்தையைப் பிடிக்கும் ஏகாதிபத்தியமாக பரிணமித்த போது, அது உலக யுத்தங்களாக மாறியது. இந்த யுத்தங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் காலனியில் இருந்து தேசிய  விடுதலையைக் கோhரியது.

இந்த பின்னணியில் தேச விடுதலைகளும் - அரைக்காலனிய நாடுகளும் தோன்றியது. இங்கு முதலாளித்துவ சிவில் சட்ட பாராளுமன்ற அமைப்புமுறை தோன்றியது. பொருளாதார ரீதியாக தேசிய முதலாளித்துவத்தையும்  - தரகு முதலாளித்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட, நிலப்பிரபுத்துவ எச்சங்களை கொண்ட சிவில் - சட்ட அமைப்புமுறைமையானது, "தேசம்" சார்ந்த மக்களை மையப்படுத்தி உருவானது.

1980 களில் பின் நவதாராளவாத பொருளாதாரம் இருந்த தேசிய முதலாளித்துவதை அழித்து, தரகு முதலாளித்துவத்தையும் - அன்னிய முதலாளித்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவந்த சூழலில், "தேசம்" சார்ந்த சிவில் - சட்டமுறைமையை பொருத்தமற்றதாகி வந்தது.

அன்னியனுக்கு சேவை செய்யும் நவதாராளவாதமானது சட்ட ரீதியானதாக மாறி வரும் சூழலில், மக்களை அடிப்படையாகக் கொண்ட சிவில் சட்டம் செயலற்றதாகி விடுகின்றது. நவதாராளவாத சக்திகளினதும் - அதன் நுகர்வாக்க சூறையாடலுக்கு மக்கள் பலியாவது இயல்பானதாகி விடுகின்றது. சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாததாகி விடுகின்றது.

இதை எதிர்த்து மக்கள் தங்களைத் தாங்கள் அணிதிரட்டுவதன் மூலமே, இதைத் தடுக்க முடியும். ஆனால் அதற்கு பதில் நவதாராளவாத உதிரிகளாக மாறியுள்ள மத்தியதர வர்க்கமானது, சர்வாதிகார பாசிசமே தீர்வைத் தரும் என்று நம்புகின்றது. கடந்த காலத்தில் இனவாதப் பெருமைகள் மூலம், பிற இனங்களையும் - தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளையும் செய்தபடி, செழித்து வளர்ந்த சர்வாதிகார ஆட்சியை நவதாராளவாத சீரழிவுக்கு தீர்வாகக் கருதுகின்றது. கடந்த சர்வாதிகார ஆட்சிமுறை என்பது  நவதாராளவாதத்தின் எடுபிடியாக இருந்ததையும் - அதுவே இன்றைய சீரழிவுக்கு காரணமாக இருப்பதை காண மறுக்குமளவுக்கு, இனவாதம் கண்ணை மறைக்கின்றது.

இனவாத பெருமை பேசும் நவதாராளவாதமானது, தனக்குள்ளான ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் அதேநேரம், பிற இன – மத மக்களை ஒடுக்கும் சர்வாதிகாரத்தை தேர்தல்முறை மூலம் கோருவது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இன்றைய அரசியல் நிகழ்ச்சிப் போக்கு மேலெழுந்து இருக்கின்றது. இது தன்னைத் தானே குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தான அரசியலாக இன்று மாறி இருக்கின்றது.