Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்

மூலதனத்தின் கட்டற்ற சுதந்திரத்தை முன்வைத்து, பொருளின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்று கூறி உருவானது உலகமயமாதல். இந்த அடிப்படையில் உருவான  புதிய உலக ஒழுங்கில், நாடுகளின் "சுதந்திர" இறைமையானது மூலதனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. உலக மூலதனத்தின் சுதந்திரத்துக்கு ஏற்ப, நாடுகளின் இறைமைகள் அழிக்கப்பட்டது. மூலதனத்தின் கட்டற்ற இந்தச் சுதந்திரமே, நவதாராளவாதமாகியது.

தேசங்களின் எல்லைக்குள் தப்பிப்பிழைத்த சிறு மூலதனங்களையும், அரச மூலதனங்களையும், பெரு மூலதனங்கள் விழுங்கி கொள்வதற்கு இருந்த தடைகளை உலகமயமாதல் அகற்றியது. இதன் மூலம் பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும் தமக்குள்ளான போட்டியை மட்டுப்படுத்திக் கொண்டு கொழுக்க முடிந்தது. பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும், ஏகாதிபத்திய யுத்தமாக மாறுவதை பின்போட்டது.

உலகெங்கும் சிறு மூலதனங்களை அழித்து பெரும் மூலதனங்கள் கொழுப்பதற்கான உலகமயமாக்கமானது,  பெரும் மூலதனத்துக்குள்ளான முரண்பாட்டை தணித்து விடுவதில்லை.

மாறாக சிறு மூலதனங்களை அழித்து கொழுக்கும் பெரும் மூலதனம், தமக்கு இடையில் ஒன்றையொன்று அழிப்பதற்கு தயார் செய்தது. இதிலிருந்து அமெரிக்க மூலதனங்கள் தப்பிப் பிழைக்க, ஏகாதிபத்தியம் என்ற தனது சொந்த தேசிய அரணுக்குள் சரணடைகின்றது. தனது நாட்டிற்குள் பிற மூலதனங்களுக்கு தடையை ஏற்படுத்தி, உலகைச் சூறையாடும் உலக ஒழுங்கை அமெரிக்க மூலதனங்கள் கோருகின்றது. அமெரிக்க மூலதனத்தின் இந்த தற்காப்பு நிலையானது, உலகத்தை புதிய யுத்த சூழலுக்கு வித்திட்டு இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் அமெரிக்க மூலதனம் தனது ஏகாதிபத்திய கட்டமைப்புக்குள் நின்று, பிற மூலதனங்கள் தன் நாட்டு எல்லைக்குள் வருவதை தடுக்கும் அதேநேரம், பிற நாட்டுச் சந்தைகளில் தனது பொருளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அனுமதிக்குமாறு அடாத்தாக மிரட்டி வருகின்றது. தனது பொருளுக்கு கட்டற்ற சுதந்திரத்தைக் கோருகின்றது. இதைப் பெறுவதற்கு இராணுவத்தை கூட மூலதனம் பயன்படுத்தும் என்பது தான், முதலாளித்துவ யுத்தங்களின் வரலாற்றுச் சாரம்.

இதற்கு அமைவாக அமெரிக்கச் சந்;தையில் பிற நாட்டுப் பொருட்களுக்கு வரிகளை அறவிடும் அதேநேரம், அமெரிக்க மூலதனத்துக்கு அதிக வரிச் சலுகைகளை வழங்கி இருக்கின்றது. இதன் மூலம் அமெரிக்க மூலதனச்; சந்தையைக் கட்டுப்படுத்தவும், பிற நாடுகளில் புதிய முதலீடுகளை அதிகளவில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

ஐரோப்பா, சீனா, கனடா, மெக்சிக்கோ… நாடுகளைச் சேர்ந்த மூலதனங்களுக்கு எதிரான வரிகள் மூலம், அந்தந்த மூலதனங்களை அழிக்க அமெரிக்கா முனைகின்றது. இதற்கு பதிலடியாக குறிவைக்கப்பட்டு அமெரிக்க மூலதனங்களை அழிக்கும் பதில் வரிகளை பிற நாடுகள் போடத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான ஐரோப்பிய வரிகள், அமெரிக்காவில் உள்ளூர் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில்   போட்டு உள்ளது. அதாவது அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் மூலதனத்தையும், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் மூலதனங்களையும் குறிவைத்து வரிகளை அறிவித்திருக்கின்றது.

மூலதனத்துக்கு இடையிலான பகிரங்கமான யுத்தம், நாடுகளுக்கு இடையிலானதாக மாறி இருக்கின்றது. மூலதனத்தின் கட்டற்ற சுதந்திரம், பொருளின் விலையை சந்தையே தீர்மானிக்கும்.. என்ற மூலதன முதலாளித்துவக் கோட்பாடுகளை, அவர்களே மறுக்கின்றவராக மாறி இருக்கின்றனர். தேச எல்லைகளை முன்வைத்த ஏகாதிபத்திய தேசியவாதத்தை கொண்டு, மூலதனத்தை கொழுக்க வைக்கும் விரிவாக்கமென்பது மூன்றாம் உலக யுத்தம் தான்.

"சுதந்திர சந்தையில்" ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியானது, சடுதியான பொருள் தேக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய தேக்கமானது, பாரிய வேலை இழப்புக்கு வழியேற்படுத்தி இருக்கின்றது. வர்க்கரீதியான முரண்பாடுகள் கூர்மையாகுவதை ஆழமாக்குவதை தடுக்க

1.மக்களிடையே பிரிவினைகளையும் - பிளவுகளையும் ஏற்படுத்துவது (உதாரணமாக அகதிகளை கட்டுப்படுத்துவதாக காட்டும் விம்பங்களுக்காக, புதிய ஒடுக்குமுறைகளை கையாள்வது, அணு ஆயுதம் குறித்து பேசுவது..)

2.பொருளை விற்க, புதிய சந்தைகளைக் கைப்பற்றுவதற்கான யுத்தங்களை முன்வைப்பது.

3.மூலதனத்தை பாதுகாக்க வரிச் சலுகையை வழங்குவது

மறுபக்கம் இந்தக் கொள்கையை அமுல்படுத்த மக்கள் மேல் புதிய வரிகளைப் போடுவதும் - அரசு சொத்துக்களை விற்பதும் அதிகரித்து வருகின்றது. (உதாரணமாக பிரான்ஸ் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் சட்டதிருத்தங்களுக்கு எதிரான - பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் சட்டமாக்கியுள்ளது)

இன்று மூலதனத்துக்கு கொடுக்கும் வரிச்சலுகைகைள் மூலம் மூலதனத்தை இடுவதற்கும், புதிய துறைகளை அபகரிக்கும் போட்டியும் கூர்மையாகி வருகின்றது. (உதாரணமாக அமெரிக்கா வால்மார்க்கற் இந்தியாவில் காலூன்ற, அமெரிக்காவின் வரிச்சலுகை மூலம் கிடைத்த பணமே உதவுகின்றது.)

இந்தப் பின்னணியில் இராணுவரீதியாக உலகைப் பங்கிடும் போட்டியும், முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. இராணுவத்துக்கான வரவு செலவு ஒதுக்கீடு என்றுமில்லாத அளவுக்கு, வேகமாக அதிகரித்து வருகின்றது.

மூலதனத்தை பாதுகாக்கும் பின்னணியில் மக்களுக்கு எதிரான முரண்பாடுகள் அதிகரிப்பதுடன், அவை ஒடுக்குமுறையாக கூர்மையாகி வருகின்றது. அரசுகள் மக்களில் இருந்து விலகி, மூலதனத்தின் பொம்மைகளாக மாறி, ஒடுக்கும் சர்வாதிகார உறுப்பாகி நிற்கின்றது.

அதாவது அரசுகள் முரண்பட்ட வர்க்கங்களுக்கு இடையில் தனது வர்க்க சர்வாதிகாரப் பாத்திரத்தை மூடிமறைக்க "நடுநிலையான  ஜனநாயக" உறுப்பாக முன்னிறுத்திய பாத்திரத்தை,  தொடர்ந்து பேண முடியாது, வெளிப்படையாக ஒடுக்கும் சர்வாதிகார வடித்தைப் பெற்று பாசிசமாகி வருகின்றது. உலகம் யுத்த சூழலுக்குள் பயணிக்கும் அதேநேரம், கூர்மையான வர்க்க முரண்பாட்டுக்குள் பயணிக்கின்றது. மூன்றாம் உலக யுத்தம் மூலம் மானிட அழிவா!? அல்லது வர்க்கப் போராட்டம் மூலம் மானிட விடுதலையா!? இதில் எது என்பதை நாமே  தீர்மானிக்கும், வரலாற்றுக் காலத்தில் நாம் வாழ்கின்றோம். நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்?