Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர்

சாதிய சமூகமல்லாத ஜனநாயக நாட்டில் (மேற்கில்) பிறந்த "தமிழ்" குழந்தைகள், பெற்றோரின் சாதிய வாழ்வியல் நடைமுறைக்குள் ஒத்துப்போவது ஏன். இது எப்படி, எதனால்  சாத்தியமாகின்றது?. இதற்கான சமூகப் பொருளாதாரக் காரணமென்ன? 

புலம்பெயர்ந்த தமிழன் யார்? "தமிழன்" என்பவன் சாதியில் பிறந்து, சாதி பார்த்து வாழ்பவன். இதைத்தான் "தமிழன்" பண்பாடு என்றும், வாழ்க்கை நெறி என்றும் கூறுபவன். தாங்கள் சாதி பார்த்து வாழ்வதுடன், குழந்தைகளுக்கு சாதி வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வைப்பதிலும் வெற்றி பெறுகின்றனர். இந்த அடிப்படையில் தான் சாதிச் சடங்குகள் தொடங்கி "கலாச்சாரம்" வரை பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக தமிழன் முன்வைக்கும் தமிழ் "கலாச்சாரம்" என்பது

1.பெண்ணை கண்காணிக்கவும், அவளை ஒடுக்கியாளுகின்றதுமான சமூக முறைமையே "தமிழ்க் கலாச்சாரமாக" இருக்கின்றது. அதாவது ஒரு ஆணை வாழ்க்கையில் தேர்ந்தெடுத்து, அவனுடன் மட்டும் படுக்கக் கோரும் பாலியல் கண்காணிப்பு தான், "தமிழ்; கலாச்சாரம்".

2.அதேநேரம் ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையை தன் பிறப்பால் நிர்ணயமான  சாதிக்குள் தேர்ந்தெடுக்க அல்லது சேர்த்து வைக்கும் வாழ்க்கை முறைமைகளை கலாச்சாரம் என்கின்றது. சாதிய வாழ்க்கை முறைமைகளை சமூகத்தில் நிலைநாட்டுவதும், சாதியச் சடங்குகளை பின்பற்றுவதையே "கலாச்சாரமாக" கருதுகின்றது.

எப்படி சுத்திசுத்திப் பார்த்தாலும் இதுதான் தமிழன் "கலாச்சாரம்;". இதைத்தான் உன்னதமான கலாச்சாரமாக பீற்றிக்கொள்கின்றான். இது புலம்பெயர்ந்த சமூகத்தில் தகர்ந்துவிடவில்லை. குழந்தைகள் இதற்குள் வழிநடத்தப்படுகின்றனர்.

குழந்தைகள் தாம் விரும்பிய கல்வி முதல் வாழ்க்கை முறைமைகளை, பெற்றோரின் விருப்புக்கு புறம்பாக தேர்ந்தெடுக்க முதலாளித்துவ ஐனநாயக உரிமைகளே நடைமுறையில் அவர்களுக்கு உதவுகின்றது. ஆனால் இதைக் கொண்டு தம் மீது திணிக்கும் சாதிய வாழ்க்கையிலான திருமணங்களை கேள்விக்குள்ளாக்குவதில்லை. சாதிய வழியில் தீர்மானித்த ஒரு திருமணத்தை, தன் வாழ்க்கைத் துணையாக்குகின்றனர். சாதிக்குள் துணையை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, சுதந்திரத்தை குறுக்கிக் கொள்கின்றனர். இதற்கு பின்னால் சமூக பொருளாதார காரணங்கள் காணப்படுகின்றது. எல்லாவற்றையும் பகுத்தறிவுபூர்வமாக ஆராய்கின்ற ஜனநாயக சமூகத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள், சாதிய வாழ்க்கை தொடங்கி ஏன் எதற்கு என்று புரியாத சடங்குகளுக்கு தலையாட்டும் மந்தைகளாக எது மாற்றுகின்றது? இந்த கேள்விக்கான விடையைக் காண, புலம்பெயர் தமிழ் சமூகம் குறித்து முதலில்; ஆராய வேண்டியிருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுகம்

முள்ளிவாய்க்காலுக்காக வீதியில் புலிகளால் "தமிழனின்" பெயரில் ஒன்று திரட்டப்பட்ட இந்த சமூகம், சாதிச் சமூகமே. போலியாக "தமிழ்" வேசம் போட்டு வாழும், சாதிச் சமூகம்.       சாதியத்துக்கு எதிராக தமிழனாக அணிதிரண்டு போராடிய, போராடுகின்ற சமூகமல்ல.

1960களில் சாதி ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இருந்த தீண்டாமையை மட்டும் எதிர்க்கும், சீர்திருத்தவாத போராட்டத்தை மட்டும் நடத்திய சாதியச் சமூகம். ஒட்டுமொத்த சாதிய ஒடுக்குமுறைகளையும் இனம்காட்டி, அதன் ஒரு பகுதியாக இருந்த தீண்டாமையை மட்டும் எதிர்த்து, மற்ற எவற்றுக்கும் எதிராக போராடாத சமூகம். சாதித் தீண்டாமையை மட்டும் சாதியாகக் காட்டி நடத்திய சீர்திருத்தவாதப் போராட்டமானது, ஒடுக்கப்பட்ட மக்களை சில ஒடுக்குமுறையில் இருந்து மட்டும் விடுவித்தது. அதேநேரம் சாதிய சிந்தனையையும் - அதன் வாழ்க்கை நெறியையும் இன்று வரை "சீர்திருத்தவாத" அரசியல் உள்ளடக்கம் மூலம், தொடர்ந்து பாதுகாக்கின்ற சமூகம்.

சாதிய சமூகம் பற்றிய புரிதலற்ற, சாதிய எதிர்ப்பைக் கூட சீர்திருத்தவாத எல்லைக்குள் சாதியச் சிந்தனையாக முடங்கிவிட்ட சமூகத்தில், வெள்ளாளியச் சிந்தனை முறைமையையும் - அதன் வாழ்க்கை நடைமுறைகளையும் கொண்ட சமூகம். மேற்கு நோக்கி புலம்பெயர்ந்த சமூகம், மேற்கில் நிலவிய ஜனநாயகத்தை கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு, ஜனநாயகத்தை மறுக்கும் வெள்ளாளிய சாதிச் சிந்தனையை தன்னுள் கொண்டு இருந்தது. இந்த சாதிய பின்னணியில் வீரியம் பெற்ற வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ் "இனவாத புலி இயக்கத்தின்" ஆதிக்கம், இதற்கு மேலும் வலுவூட்டியது. அதேநேரம் புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதாரரீதியான பலம், இதை மேலும் பலப்படுத்தி நிறுவனப்படுத்தியது.

அதேநேரம் தாங்கள் "சாதி பார்ப்பதில்லை" என்று கூறிக்கொண்டனர். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் நடைமுறையில் சாதி பார்ப்பவர்களாகவே வாழ்கின்றனர். சாதியை தங்கள் குழந்தைகளுக்கு திணிப்பது முதல் இலங்கை வரை கொண்டு சென்று மீள விதைக்கும் அளவுக்கு, தங்கள் பொருளாதார பலத்தை கொண்டு, சாதிச் சமூகமாக வீரியம் பெற்று இருக்;கின்றனர்.

பிறருடனான இரத்த உறவை சாதி மூலம் நிர்ணயம் செய்கின்றனர். பேசிச் செய்யப்படும் திருமணங்கள் அனைத்தும் சாதிக்குள் தான் நடக்கின்றது. காதல் திருமணங்கள் பெரும்பாலானவை, சாதி பார்த்துத் தான் காதலிக்கப்படுகின்றது. இதையும் மீறிய காதல்கள் சாதியைக் காரணமாக காட்டி தடுத்து நிறுத்தப்படுவது நடக்கின்றது. தமிழர் அல்லாத பிற இன மக்களுடனான திருமணங்களில் கூட, சாதியச் சடங்குகள் புகுத்தப்படுகின்றது.

இங்கு வெவ்வேறு சாதியைச் சார்ந்த மனிதர்களை நண்பர்களாகக் கொண்டு இருப்பவர்கள் கூட – தங்கள் குழந்தைகளின் திருமணத்தில் அதை அனுமதிப்பதில்லை. சாதியை அளவீடாக கொண்டு மனிதர்களை வகைப்படுத்தி தேர்ந்தெடுக்கும் மனிதவிரோத வக்கிரத்தை, சர்வசாதாரணமாக புலம்பெயர் நாட்டில் காணமுடியும்.

பேசிச் செய்யும் திருமணங்களில் முதலில் தெரிந்து கொள்வது, "நீ என்ன சாதி" என்பது தான். சாதியே திருமணத்துக்கான முதல் தகமையாக இருக்கின்றது. திருமண புரோக்கர்கள் சாதி என்ன என்பதை தெரிந்து கொண்டு தான், அந்தந்த சாதிக்குள் திருமணத்தை பொருத்துகின்றனர். இப்படி தான் சாதிக்குள் திருமணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.

இதை குழந்தைகள் மறுப்பதில்லை. தான் என்ன படிக்க வேண்டும் என்பது தொடங்கி பல விடையங்களை பெற்றோரிடம் முரண்பட்டு தேர்ந்தெடுக்கும் குழந்தைகள், தங்கள் துணையை சாதிக்குள் தேர்ந்தெடுக்கும் பெற்றொரின் மனிதவுரிமை மீறலை மறுப்பதில்லை. கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் நேராவது போல், குழந்தைகள் - பெற்றோர் உறவானது, எதிர்மறைகள் இரண்டு சுயநலங்களால் கட்டமைக்கப்பட்டு, நேராக கட்டப்படுகின்றது.

1.பெற்றோர் தங்கள் பொருளாதாரப் பணத்தைக் கொண்டு குழந்தைகளை அடிமைப்படுத்துவதும்

2.குழந்தைகள் பெற்றோரில் தங்கிவாழும் சுயநலத்தை வாழ்வாக தேர்ந்தெடுப்பதன் மூலம் அடிமையாவதும் நடக்கின்றது.

இது மேற்கு சமூகத்தின் வாழ்வியலுக்கு முரணான வாழ்வியல் முறையில் இருந்து தோன்றுகின்றது.

மேற்கில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வாழ்வியல் முறைமை குறித்து

மேற்கு நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் உழைப்பு மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டமானது, மேற்கு சமூகத்தின் வாழ்வியல் முறைமைக்கு முரணானது. மேற்கில் அதிகுறைந்த சம்பளம் பெறும் தொழிலாளி முதல் மத்தியதர வர்க்க மற்றும் மேல்தட்டு வர்க்கமானது, உழைப்பது நுகர்வதற்காகவே. இவர்களுக்கு இடையிலான வர்க்க வேறுபாட்டை இரண்டு அல்லது மூன்று மடங்கு சம்பளம் நிர்ணயம் செய்யும் அதேநேரம், இது நுகர்வின் அளவையே வேறுபடுத்துகின்றது. அதேநேரம் சொத்துடமையை கொண்டு வர்க்கமாக தன்னை முன்னிறுத்துவதுமில்லை, அதற்காக உழைப்பதில்லை. நுகர்வர்க்கம் என்ற எல்லைக்குள் தம்மை அடையாளப்படுத்துவதற்கு அப்பால், சொத்துடமை வர்க்கமாக இருப்பதில்லை. குழந்தைக்காக பெற்றோர்கள் பொருட்களை சேர்ப்பதுமில்லை, குழந்தைகள் பெற்றோரில் தங்கி வாழ்வதுமில்லை. நுகர்வாக்க சமூகத்தின் பொது சாரம் இது.

மேற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமோ இதற்கு முரணானது. உழைப்பது நுகர்வதற்காகவல்ல. மாறாக சொத்தைச் சேர்ப்பதற்காக உழைக்கின்றது. சொத்துடமை கண்ணோட்டத்தில் வாழ்கின்றது. குழந்தைக்கு பெற்றோர் சொத்தைச் சேர்ப்பதும், குழந்தைகள் அதைப் பெறுவதற்காக பெற்றோரில் தங்கி வாழ்வதும் நடக்கின்றது.  புலம்பெயர் தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் அதிகுறைந்த சம்பளத்தை பெறும் தொழிலாளியாக இருந்த போதும், புலம்பெயர் தமிழ் சமூகம் சொத்துடமை கொண்ட வர்க்கமாக அல்லது அந்தக் கண்ணோட்டம் கொண்டோராகவே வாழ்கின்றனர்.

மேற்கில் உழைக்கும் வர்க்கம் நுகர்வாக்கக் கண்ணோட்டத்தில் தனியுடமையை அணுக, புலம்பெயர் சமூகம் இதற்கு முரணாக சொத்துடமைக் கண்ணோட்டத்தில் தனியுடமையை உள்வாங்கி  வாழ்கின்றது.

இந்த அடிப்படை முரண் தான், சாதியை பரம்பரை கூறாக்குகின்றது. சொத்துடமையை மட்டும் குழந்தைக்கு கொடுப்பதில்லை, அதனுடன் சாதியையும் சேர்த்துக் கொடுக்கின்றது.

சாதி அடிப்படையில் சொத்துடமையை சாதிக்குள் பரிமாற்றுகின்ற, பரம்பரை அலகைக் கொண்டது. சொத்துடமையை பெறும் தனது சாதி வாரிசாக கருதி குழந்தைகளை வளர்க்கும் புலம்பெயர் சமூகம், குழந்தைகள் சொத்தைப் பெறும் தங்கள் சுயநலக் கண்ணோட்டத்தில் வளர்க்கப்படுகின்றனர். இந்தப் புள்ளியில் பெற்றோர் சாதியை குழந்தை மேல் இலகுவாக சுமத்திவிடுவதும் - குழந்தைகள் அதை கேள்வியின்றி மந்தைகள் போல் ஏற்றுக்கொள்வதும் நடக்கின்றது.

பெற்றோர்களால் பொத்திப் பொத்தி சேர்க்கும் பணத்தை குழந்தைகள் பெற வேண்டுமென்றால்,  சாதிக்குள்ளான சாதியத் திருமணங்களை குழந்தைகள் ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாத விதியாகின்றது. இதன் மூலம் சாதிய உறவே மனித உறவாகவும், பாலியல் உணர்வாகியும் விடுகின்றது.

மற்றவர்களுடன் போட்டி போட்டு தம்மை மேலானவராக முன்னிறுத்தும் சாதிய உணர்வு, நுகர்வாக்கச் சமூகத்தில் ஆடம்பரமான போட்டியாக மாறுகின்றது. ஆடம்பரத் திருமணங்களாக – போட்டிக் கொண்டாட்டமாகவும் சாதித் திருமணங்கள் இருப்பதால், ஆடம்பரத்தை விரும்பும் குழந்தைகள் தங்கள் கழுத்தை சாதிக்குள் நீட்டுவதற்கு பின்நிற்;பதில்லை.

இப்படி சாதி மற்றும் சாதிய - ஆணாதிக்க கலாச்சாரத்துக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது, சொத்துடமையும் - ஆடம்பர நுகர்வாக்கமும் தான். இந்தப் பின்னணியில் தான் சாதிய சடங்குகளுக்குள்ளேயே, குழந்தைகளின் திருமணங்கள் அரங்கேறுகின்றது. ஏன், எதற்கு என்ற கேள்விகளின்றி பலியாடுகள் போல் தலையைக் கொடுக்கும் குழந்தைகள், பகுத்;தறிவற்றவராக இருப்பதே புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குடும்பங்களாக இருக்கின்றது.

பிறரில் இருந்து தங்களை நாகரீகமானவராக தங்களை முன்னிறுத்தி திரிகின்றவர்கள் சாதியமாக புளுத்துக்கிடக்கின்றனர். ஒற்றுமையைக் காண்பதற்கு அறிவு வேண்டும், அறிவில்லாத சமூகம் வேற்றுமையில், சாதி பார்த்து வாழ முனைகின்றது.

புலம்பெயர் பெற்றோரின் குழந்தைகள் சொத்துடமைக்கு அடிமைகளாக வாழ்வது என்பது, அவர்களின் எதிர்காலத்தையே சாதிக் குட்டைக்குள் சூனியமாக்கி விடுகின்றனர் என்பதே உண்மை. சொத்தைக் கொண்டு சாதிக்குள் மகிழ்ச்சியைக் காண துடிக்கும் சமூகத்தின் பொது அவலம் இது.