Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

(தூத்துக்குடியில்) அரசுக்கு எதிராக போராடுபவர்கள் யார்?

 போராடுபவர்களை ஜனநாயகவாதிகள் என்று அரசுகள் சொல்வதில்லை, "சமூக விரோதிகள்" என்றுதான் எப்போதும் எல்லா அரசுகளும் சொல்லுகின்றது. தனியுடமையிலான வர்க்க சமூக அமைப்பைப் பாதுகாக்கும் அரசு, தனக்கு எதிரான அனைத்தையும் "சமூக விரோதமாகக்" காட்டியே ஒடுக்கும். இது தான் உலகளவிலான அரசுகளின் சூத்திரமும் பாத்திரமும்.

முதலாளித்துவத்தில் எந்தவொரு அரசும் சுதந்திரமானதல்ல. எவையும் மக்கள் அரசுகளுமல்ல. வர்க்க ஒடுக்குமுறையைக் கையாளும் உறுப்புத்தான் அரசு. ஜனநாயகத்தை கொண்டு மக்கள் போராடும் போது, மக்களை ஒடுக்கவே தான் அரசு இருக்கின்றது. அரசு குறித்து வரலாற்று ரீதியாக பார்த்தால், சமுதாயம் இணக்கம் காணமுடியாத வர்க்க முரண்பாடு தோன்றிய போது அரசு தோன்றியது. மக்கள் போராடுவதற்கு ஜனநாயகத்தை கையில் எடுக்கும் போது, ஜனநாயகத்தை அரசு மறுதளிக்கின்றது. அரச பயங்கரவாதத்தை ஏவுகின்றது. இதுதான் தூத்துக்;குடியில் நடந்தது.

இதன் விளைவால் அரசு குறித்த நம்பிக்கைகளும், ஜனநாயகம் குறித்த பிரமைகளும் தகர்ந்;து இருக்கின்றது. போராடிய மக்களை மட்டுமல்ல, உலகம் தளுவிய அளவில் மக்களை, அரசுகளுக்கு எதிராக அணிதிரட்டி இருக்கின்றது. வர்க்க அமைப்பின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிப் போராடும் ஜனநாயகத்தை, சமூகத்தில் இருந்தும் ஒழித்துக்கட்ட முனைகின்றது. இதை நடைமுறைப்படுத்தவும், மக்களைப் பிளக்கவும் "சமூக விரோதிகள்" குறித்து அரசு பேசுகின்றது.

 

இதன் மூலம் அரசையும், அரசின் பயங்கரவாதத்தையும் சட்டரீதியானதாக்கி, சமூக ஒழுங்காக  புனிதப்படுத்த முனைகின்றனர். இந்த பின்னணியில்

  • அரசின் வன்முறையை "சமூக விரோதிகள்" மேலான வன்முறையாக காட்ட முனைகின்றது.
  • அரசின் மேலான "சமூக விரோதிகள்" வன்முறையின் எதிர்வினைதான், அரசின் வன்முறை என்று பொய்கள் மூலம் கட்டமைக்க முனைகின்றது.
  • அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்று கூறி, நடந்தது அரசின் தவறல்ல அதிகாரத்தைக் கையாண்டவர்களின் தவறாக காட்டுவது நடக்கின்றது. இந்த வகையில் "எப்படி துப்பாக்கியால் எங்கே சுட்டு இருக்க வேண்டும்" என்றும், சுடுவதற்கு "யாருடைய" அனுமதியை பெற வேண்டும் என்றும், இதை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும்.. என்றும் பலவாறாக கூறுகின்ற பின்னணியில், அரசுக்கு எதிரான அணியில் பிளவைக் கொண்டு வரமுனைகின்றனர்.
  • போராட்டத்தை வழிநடத்திய தலைவர்களை "சமூக விரோதிகளாகக் காட்டுவதன் மூலம்", மக்களில் இருந்து தனிமைப்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி, அரசைப் பாதுகாக்க முனைகின்றனர்.

இப்படி போராடும் மக்களை பிளக்கவும், போராடும் ஜனநாயக உரிமைகளை சமூகத்தில்  இல்லாதாக்கவும்.. ஆளும் வர்க்கத்தின் குரல்களை மக்களுக்கு எதிராக அணிதிரட்டவும் "சமூக விரோதி"களின் போராட்டமாக சித்தரிக்கின்றது.

இதற்கு அமைவாக ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தொடர்வதை தடுக்க, திட்டமிட்டு ஒரு வன்முறையை பொலிஸ் நடத்தியது. தானே முன்னின்று அரச சொத்துக்கு தீ வைத்தது. மக்களை ஆத்திரமூட்டி, தம் மீதான எதிர் வன்முறைத் தூண்டியது. இறுதியாக ஒட்டுமொத்த வன்முறையையும் மக்கள் மேல் சுமத்துகின்றது. இதன் மூலம் ஒடுக்கும் அரசாக இருக்கும் தனது வர்க்க குணத்தை, "புனிதமான" நடுநிலை உறுப்பாக காட்டவும் கட்டமைக்கவும் முனைகின்றது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த அரசின் உரிமையாகவும், கடமையாகவும்  அங்கீகரிக்க கோருகின்றது.

அரசு ஜனநாயகத்தை அங்கீகரிக்கின்றதா?

போராடும் மக்களை "சமூக விரோதிகளாக்கும்" அரசு, சட்டரீதியாக இயங்குகின்றதா!?  தேர்தல் ஜனநாயகம் மூலம் உருவாக்கிய சட்டரீதியான ஒழுங்கைக், கடைப்பிடிக்கின்றதா!? இல்லை. தூத்துக்குடியில் அதிகார வர்க்கமும் - பொலிசும் அரங்கேற்றிய வன்முறையைத் தொடர்ந்து, தன்னால் கொல்லப்பட்டவர்களின் உடலைக் கூட சட்டரீதியாக கையாள அனுமதிக்கவில்லை. மிரட்டல்கள் தொடங்கி உடலைக் கூட திருடி அழிக்க முனையும் அரசாகத்தான், அதனால் இருக்க முடிகின்றது. சட்டவிரோதமான கைதுகள், ஆள் கடத்தல்கள், வன்முறைகள் … இவைகள் அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக நடந்தேறுகின்றது. இதை புதிய சமூக ஒழுங்காக்க அரங்கேற்ற முனைகின்றனர். அரசு தானே உருவாக்கிய சட்டம், நீதி.. எதுவும் நடைமுறையில் இருப்பதில்லை, அதிகார வர்க்க -  பொலிஸ் ஆட்சிதான் நடைபெறுகின்றது.

ஜனநாயகத்தை பேச்சுக்கு கூட கடைப்பிடிக்க மறுக்கின்ற அரசாகவே இருக்கின்றது. சட்ட ரீதியான ஜனநாயகம் மூலம் மக்களை ஒடுக்கியாள முடியாத அளவுக்கு, அரசு மக்களில் இருந்து அன்னியமாகிவிட்டது. ஜனநாயகத்தையே ஒடுக்குவது அரசின் செயற்பாடாக மாறி இருக்கின்றது. இதுதான் தூத்துக்குடி வன்முறையின் சாரம்.

போராடுபவர்களை தலைமறைவாகுமாறு நிர்ப்பந்தித்து, போராடும் மக்கள் ஜனநாயகத்தை இல்லாதாக்க முனைகின்றது. தன் மீதான தனிநபர் பயங்கரவாதத்தைத் தூண்டி, மக்களில் இருந்து தனிமைப்படுத்த முனைகின்றது. ஜனநாயக ரீதியாக போராடும் மக்கள் மேல் வன்முறையை ஏவுவது இதனால் தான், இது தான் அரசாக இருக்கின்றது.

அரசு என்பது என்ன? 

தூத்துக்குடி மக்கள், ஆலையை மூடக் கோரும் போது, ஒரு முதலாளிக்காக அரசு ஒட்டுமொத்த மக்கள் மேலும் வன்முறையை ஏவுகின்றது. பெரும்பான்மை தான் ஜனநாயகம் என்றால், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று செயற்படுவது மட்டும் தான் ஜனநாயகம். ஆனால் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை "சமூக விரோதமானது" என்று கூறுவதை காண்கின்றோம். இவை அரசு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுமாறு எம்மைக் கோருகின்றது.

அரசு என்பது வர்க்க ஆதிக்கத்திற்கான உறுப்பு. ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான உறுப்பு தான் அரசு. அரசு என்பது வர்க்கங்களுக்கு இடையிலான நடுநிலையான உறுப்பல்ல. மாறாக ஒரு வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கும் சர்வாதிகார உறுப்பு. சொத்துடமையை பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க உறுப்பு. சொத்துடமையிலான சிறுபான்மையினரை பாதுகாக்க, வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி, வர்க்க ஒடுக்குமுறையை சட்ட முறையாக்கி, அதை நிரந்தரமான "ஒழுங்காக்குவதே" அரசின் பாத்திரமாக இருக்கின்றது.

வர்க்க மோதல் முற்றிவிடும் போது, அரசு சமரசம் செய்யும் தனது "ஜனநாயக" வேசத்தைக் தொடர முடியாது போகின்றது. ஒடுக்குவதன் மூலம் அரசாக தொடர்ந்து நீடிக்க முனைகின்றது. அதாவது சுரண்டும் வர்க்கம் சார்ந்து சுரண்டப்படும் வர்க்கம் மீதான அதிகாரமும் - வன்முறையுமே அரசிற்கான குணாம்சமாக இருப்பதை மறைப்பதில்லை.

பொலிஸ் காவல்களில் செய்யும் சித்திரவதைகள் - படுகொலைகளை, பொது வெளியில் செய்வதன் மூலம் போராடும் மக்களை அச்சுறுத்துகின்றது. ஊடகங்களில் வெட்கம் மானமின்றி நிர்வாணமாகவே, ஜனநாயக விரோத ஆட்சிமுறையைக் கோருகின்றனர். ரஜனி போன்ற பொறுக்கிகள், தங்கள் வேசத்தைக் கலைத்து உறுமுகின்றனர்.

இந்த வகையில் அரசு ஒன்று இருப்பதென்பது, வர்க்க பகைமை இணக்கம் காணமுடியாததாக மாறிவிட்டதை குறிக்கின்றது. அரசு பயங்கரவாதம் மூலம் மக்களை ஒடுக்குவதன் பொருள், வர்க்க ரீதியாக மக்களின் இருந்து அரசு அன்னியமாகி வருவதன் வெளிப்பாடாகும்.

இதற்கு மாறாக வர்க்களுக்கு இடையில் இணக்கம் ஏற்படுத்தும் உறுப்பே அரசு என்று காட்டுகின்ற, அதைச் செய்யத் தவறியதாக அரசு மீது குற்றம் சாட்டுகின்ற தரப்புகள், அரசின் வர்க்க குணாம்சத்தையும், அது கொண்டிருக்கும் வன்முறை கூறையும் வெளியில் தெரியாதபடி மூடிமறைக்க முனைகின்றனர். அதை மீறி மக்கள் முன் அம்பலமாகும் விடையங்களை ஆள்பவர்களின் தவறுகளாக சித்தரிப்பதன் மூலம், ஆளும் வர்க்கத் தன்மையை மூடிமறைக்க முனைகின்றனர்.

இதற்கு மாறாக எந்த முகமாற்ற அரசு வந்தாலும், அதிகார வர்க்கம் ஒன்றாகவே இருக்கின்றது. வன்முறை உறுப்பு எப்போதும் மாற்ற முடியாத அரச உறுப்பாக இருக்கின்றது. அரசில் இருக்கும் ஆளும் வர்க்கம் மாறலாம். அதிகார வர்க்கம் மாறுவதில்லை. மக்களை ஒடுக்கும் வர்க்க அமைப்பின் நிரந்தரமான உறுப்பாகவே இருக்கின்றது.  சுரண்டும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட இலஞ்சத்தாலும், ஊழலாலும், பதவிகளாலும் கறைபடிந்த, சட்டத்துக்கு அப்பாற்பட்ட உறுப்பாக இருக்கின்றது. அதை தான் தூத்துக்குடியில் காண்கின்றோம்.

ஜனநாயகம் குறித்த பிரமைகள்

தேர்தல் ஜனநாயகத்துக்கு நேர் முரணாது போராடும் ஜனநாயகம். இதனால் போராடும் ஜனநாயகத்தை அரசு அங்கீகரிப்பதில்லை. சட்டங்கள் மூலம் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கின்றது.  வன்முறை மூலம் ஜனநாயகத்தை ஒடுக்குகின்றது.

வாக்களித்து தேர்ந்தெடுக்கும் "ஜனநாயகம்" மூலம்தான் பிரச்சனைகளை அணுக வேண்டுமே ஒழிய, போராடுவதன் மூலம் அடைவதை ஆளும் வர்க்கம் விரும்புவதுமில்லை, அனுமதிப்பதுமில்லை. போராடும் ஜனநாயகத்துக்கும், ஜனநாயக போராட்டங்கள் மூலம் தங்கள் கோரிக்கையை அடைய நினைக்கும் மக்களுக்கும் எதிராக செயற்படுவது தான், அரசின் பாத்திரம். அதனாலேயே "சமூக விரோதிகளின்" போராட்டமென்கின்றது.

அரசு குறித்தும், அரசு என்ன செய்ய விரும்புகின்றது என்பதையும் கற்றுக் கொண்டு, போராடும் மக்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மக்களைச் சார்ந்து நிற்பதை காலம்  கோருகின்றது.