Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மே18 (முள்ளிவாய்க்காலை) முன்னிறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பின்னணி குறித்து?

ஒருவர் பலிகொடுக்க மற்றவர் பலியெடுக்க நடந்த இறுதி யுத்தமானது, மனித அழிவுகளையும் - அவலங்களையும் கொண்டது. பல ஆயிரம் மக்கள் கொல்லப்படவும், தங்கள் உடல் உறுப்புகளை இழக்கவும் காரணமாகியது. பலர் காணாமலாக்கப்பட்டனர். சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமல் போனது. பெண்கள் பலர் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளானார்கள். கட்டாயப்படுத்தியும், கடத்தியும் சென்று யுத்தமுனையில் கொல்லப்பட்டவர்களின் துயரங்களால் நிரம்பியது. பலவந்தமாக யுத்தமுனைக்கு கொண்டு செல்லப்பட்டு, காணாமல் போனவர்களின் துயரங்களாலானது. யுத்தமுனையில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது கொல்லப்பட்டவர்களின் துயரங்கள் நிறைந்து இருக்கின்றது. சித்திரவதைச் சிறைக்கைதிகளாக இருந்து காணாமல் போனவர்களின் துயரங்களால் நிறைந்தது. தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் அவலங்களாலானது. தங்கள் ஆண் துணையை இழந்த பெண்களின் வாழ்வியல் மற்றும் பாலியல் நெருக்கடிகளுக்கு காரணமானது. துணையை இழந்த பெண்களை ஆணாதிக்க வன்முறைகளுக்கு முகம் கொடுக்க வைத்துள்ளது.  சொத்தையும், வாழ்வையும் இழந்து நிற்கும் வாழ்வியல் துயரங்கள். யுத்தம் விட்டுச் சென்ற உளவியல் கொடுமைகளும் சித்திரவதைகளும் .. இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் அவலமென்பது நீண்டது, நெடியது. இதுதான் முள்ளிவாய்க்காலில் மக்களை அணிதிரட்டுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த துயரங்களை, மக்களை ஒடுக்கும் தரப்புகள் தலைமை தாங்குகின்ற கொடுமை தான், மே 18 இல் அரங்கேறுகின்றது.

இம்முறையும் அதுதான் நடந்தேறியது. வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உரை, மக்களை ஒடுக்கும் தங்கள் "இன" வக்கிரத்தை மூடிமறைக்கின்றது. மற்றவர்கள் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்பது தொடங்கி, மற்றவர்கள் எமக்கு எதிராக இதைச் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் மே 18 செய்தியாகின்றது. தங்கள் "இனம்" என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. சொந்த இன சமூக ஒடுக்குமுறைகளும் அதனாலான அவலங்களும், யுத்தத்தின் பின்னான சமூகத்தின் கழுத்தை நெரிப்பதை கண்டுகொள்ளாது இருக்க "இனவொற்றுமை" பற்றி பீற்றல்களையே, பிரகடனமாக செய்ய முடிகின்றது. மனித அவலங்களை ஏற்படுத்திய யுத்தத்தை நடத்திய பின்னணியில் இருந்த "சர்வதேச சமூகம்" எமக்கு நீதியை தரும் என்று வாய் கூசாது பொய்யையே பிரகடனம் செய்ய முடிகின்றது. இதை செய்ய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை எடுபிடியாக்கி இருக்கின்றது.

 

இதை முன்னின்று செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக உணர்வு கொண்டவர்களா? சமூகம் சார்ந்த பிற விடையங்களில் செயற்பாட்டாளர்களா,  இலங்கை மாணவர்கள் சந்திக்கும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்காக, பிற மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுபவர்களா எனின், இல்லை. முள்ளிவாய்க்காலில் முன்னின்றவர்கள் யார் என்ற கேள்வி எழுவது இயல்பாகின்றது! இதன் பின்னணி கேள்விக்குள்ளாகின்றது!

யாழ் பல்கலைக்கழகத்தை பயன்படுத்தி சில மாணவர்கள் மூலம் முள்ளிவாய்க்கால் நிகழ்வை கட்டுப்படுத்தியது யார்? மே 18 நிகழ்வு மீதான அதிகார வடிவமானது, புலிகளின் கடந்தகால ஜனநாயக மறுப்புக்கு நிகரானது.

இந்த பின்னணியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெயரில் நடந்த இந்த நிகழ்வானது, அதிகார வெறிபிடித்த ஜனநாயக விரோத உணர்வுடன் முன்னெடுக்கப்பட்டது. இதை முன்னின்று செய்தவர்கள், மனித அவலங்கள் - துயரங்களையும் சுமந்து வாழும் மக்களின் உணர்வுகளுடன் ஒன்று கலக்காதவர்கள். துயரங்கள் சுமந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் அன்றாடம் நடைமுறைகளில் வாழ்பவர்களல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டத்துடன் பங்கேற்காதவர்கள். ஒரு நேர கஞ்சிக்கே போராடும் பெண்களும்; - குழந்தைகளும் விழுந்து புரண்டு அழ, இலட்சக்கணக்கான பெறுமதி கொண்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் தலைமைதாங்கும் வக்கிரமே, மே 18 இல் அரங்கேறியது. தங்களின் துயரத்தை கறுப்பு உடை அணிவதன் மூலம் மட்டும் வெளிப்படுத்த தெரிந்த உணர்ச்சியற்ற மனிதர்கள், உணர்வுடன் உள்ள மக்களை கட்டுப்படுத்தும் வெட்கக்கேடே நடந்தேறியது.

புலம்பெயர் நாட்டிலும், இந்தியாவில் புலியையும், புலிக்கொடியையும் முன்னிறுத்தி மே 18 நாளை தங்கள் பிழைப்புக்காகவும் -  அரசியலுக்காவும் நினைவுகொள்வது போல் தான் இதுவும். இலங்கையில் புலிக்கொடியுடன் செய்ய முடியும் என்றால், அதை உள்ளடக்கியதாக இது குறுகிப்; போகும் அளவுக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து இது முன்னெடுக்கப்படுவதில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் பொது அவலத்தை ஒடுக்கும் தங்கள் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளும் கொடுமையில் இருந்து விடுவிக்க, ஓடுக்கப்பட்ட மக்களின் போராட்ட நாளாக இது மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஒடுக்கும் அரசை எதிர்த்து மடடுமல்ல, அரசு நடத்திய யுத்தத்தின் பின்னணியில் இருந்த "சர்வதேச சமூகத்தை" எதிர்த்தும், இதற்கு துணை நிற்கும் ஓடுக்கும் தமிழர் தரப்பையும் எதிர்த்து போராடுவதன் மூலமே, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் துயரங்கள் நீங்கும் - அவர்களின் விடுதலைக்குமான நாளாக, இந்த நாள் மாறும். மே 18 இல் துயரப்பட்டு நிற்கும் மக்களுக்கான எமது போராட்டமும் - எமது நடைமுறையும் இதுவாகவே இருக்க முடியும்.