Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

குட்டைப் பாவாடையும் - அபாயாவும்

யாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடை அணிந்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதை, "தாலிபானியத்" தனமாக வருணித்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தில் இருப்பது போல், எங்கள் சமூகத்தில் இல்லையென்று கூற முற்படுவதாகும். குட்டைப்பாவடைக்கு எதிரான  வன்முறையின் பின்னுள்ள இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கம் முன்வைக்கும் அடிப்படைவாத கலாச்சாரத்தை மூடிமறைத்து, பாதுகாத்து விட முனைகின்றனர்.

பெண்கள் குறித்தும், பெண்களின் ஆடை உடை குறித்துமான ஆணாதிக்க மத அடிப்படைவாதக் கருத்துகளும், வன்முறைகளும் "தலிபானுக்கு" மட்டும் உரியதல்ல. அதாவது முஸ்லிம் - இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குரிய சிந்தனை முறை மட்டுமல்ல. மாறாக இந்துத்துவ வெள்ளாளிய இனவாத ஆணாதிக்கச் சிந்தனைமுறையும் கூட.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் "கலாச்சார" உடையை அணியக் கோரிய வன்முறையில் "விரிவுரையாளர்களும்", மாணவர் சங்கமும் அடங்கும். 1980 களில் புலிகள் பினாமிப் பெயரில் ஒழிந்திருந்து கட்டைப்பாவாடைக்கு எதிராக முழுப்பாவாடையை அணியக் கோரி விடுத்த எச்சரிக்கையும், வடமராட்;சிப் பெண்கள் முழுப்பாவாடையுடன் தான் வடமராட்சியில் வாழ முடிந்தது. வடமராட்சிப் பெண்கள் அரைப் பாவாடையுடனேயே, யாழ் பல்கலைக்கழத்தில் மட்டும் தான் அணியமுடிந்தது. இப்படி எம்மிடமே ஆணாதிக்க கலாச்சார வன்முறை இருக்க, தலிபானை இங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது. 1980 களில் வடக்கில் பெண்கள் பல ஆணாதிக்க தடைகளை தாண்டியே சைக்கிள் ஓடமுடிந்தது.

உண்மையில் தமிழ் சமூகத்தின் சிந்தனைமுறையான இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதை திசைதிருப்பத்தான் தலிபானைக் கொண்டு வருவது நடந்தேறுகின்றது. அண்மையில் திருகோணமலையில் "அபாயா" அணிவதை எதிர்த்த நிகழ்வைக் கூட, இந்தியாவின் இந்துத்துவ - பார்ப்பனியத்தின் வருகையாகவும் - அதன் தூண்டுதலாகவும் சித்தரித்து விவாதிப்பது நடந்து வருகின்றது.

இதன் மூலம் தமிழ் சமூகத்தின் இயல்பான இந்துத்துவ வெள்ளாளியச் இனவாத ஆணாதிக்கச் சிந்தனை முறையிலான ஒடுக்குமுறைகளை, மறுக்க முனைவது நடந்தேறுகின்றது.

இதே போல் "அபாயா" அணிவது "முஸ்லிம்- இஸ்லாமிய" சமூகத்தின் சுதந்திரமென்றும், ஒடுக்கப்படும் தமிழ் சிறுபான்மையினரின் உரிமை என்று கூறுவதும் கூட அரங்கேறின. இது தமிழ் இனவாத சிந்தனை முறையின் வெளிப்பாடு. இதன் மூலம் இஸ்லாமிய மதவாத இனவாத ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்ற, வக்கிரத்தையே இதன் மூலம் காண முடியும்.

 

இது அடிப்படைவாத இஸ்லாமிய மதவாத முஸ்லிம் இனவாத ஆணாதிக்கவாதிகளின் கோட்பாடும் கூட. இஸ்லாமிய மதமும் - முஸ்லிம்  இனமும் ஒன்று என்று கூறுகின்றவர்களும், வேறு வேறு என்று கூறுகின்றவர்களும், தங்கள் சமூகம் சார்ந்த "அபாயா" மூலமான  ஆணாதிக்க வன்முறையைப் பற்றி பேசத் தயாராக இருப்பதில்லை. மாறாக தம் உடை மீதான, பிற கலாச்;சார வன்முறையாகவும் - திணிப்பாகவும் காட்டி, ஆணாதிக்க உடையை பெண்கள் மீது திணித்து விடுகின்றனர்.

திருகோணமலை பெண்கள் பாடசாலையில் திடீரென அங்கு கற்பித்த முஸ்லிம் ஆசிரியைகள் அனைவரும் ஒரே நேரத்தில் "அபாயா" அணிவது குறித்த கோரிக்கைகளுடன் வந்ததென்பது, வெளித் தூண்டுதல் இன்றியல்ல. முஸ்லிம் பெண்கள் "அபாயா" அணியவேண்டும் என்பது, இஸ்லாமிய ஆணாதிக்க வன்முறையாகவும், பெண்கள் மீதான அழுத்தமாகவும் மாறி  இருக்கின்றது. இது உலகெங்கும் இஸ்லாமிய பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறையாக இருக்கின்றது. இந்த அடிப்படைவாத ஆணாதிக்கப் பின்னணியில் தான், "அபாயா" பிரச்சனை எழுந்தது. இதை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பப்படவில்லை, மாறாக இந்துப் பெண்கள் மீதான ஆணாதிக்க உடையை முன்னிறுத்துவதே நடந்தேறியது. இந்துப் பெண் அரைப் பாவாடையோ, காற்சட்டையையோ அணிவதை எதிர்க்கின்ற, தமிழ் அடிப்படைவாத கலாச்சார ஆணாதிக்க காவலர்களே "அபாயா"வை எதிர்த்தனர்.

யாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடையை எப்படி ஆணாதிக்கம் அணுகுகின்றதோ, அப்படித் தான் "அபாயா" குறித்து முஸ்லிம் ஆணாதிக்கம் அணுகுகின்றது. பெண்கள் மீதான வன்முறையுடன் கூடிய, ஆணாதிக்க "ஒழுக்கக்" கோட்பாட்டையே முன்வைக்கின்றது. இதன் மூலம் பெண்ணின் சுதந்திரத்தையும், சுதந்திர உணர்வையும் பறித்து நடைப்பிணமாக்குகின்றது.

1980 பின்னான காலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சமூகத்தின் மேல்நிலைக்கு கொண்டு வந்தது, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களே. அதனுடன் வந்ததுதான், இன்றைய "அபாயா" உடை. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் அரபுலக இஸ்லாமிய பெண்கள் தொடங்கி உலகெங்குமான இஸ்லாமிய பெண்கள், குட்டைப்பாவாடை, காற்சட்டை போன்ற உடைகளை அணிந்ததே வரலாறாகும். அடிப்படைவாத குடும்பங்களில் தான் "அபாயா" எஞ்சிக் கிடந்தது. மூலதனம் பெண் உழைப்பைக் கோரிய நிலையில், காலனிகளின் விடுதலையுடன் கூடிய பெண்களின் சுதந்திர உணர்வும் இதை சாதித்தது.  வீட்டு வேலைக்கு பதில் ஆணைப்போல் உழைப்பில் ஈடுபட, தங்கள் உடைகளை பெண்கள் தேர்ந்தெடுக்க வைத்தது.

இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், தங்கள் உலக மேலாதிக்கத்தை அரபுலகில் தக்கவைக்கவும், நிலைநாட்டவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அதன் அழிவிலிருந்து மீட்டெடுத்த போது, "அபாயா" பெண்கள் மேல் திணிக்கப்பட்டது. இதன் மூலம் அவளின் சுதந்திரம் மறுக்கப்பட்டது. உலக பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் போது, ஆண்களுக்கு வேலை என்ற அடிப்படையில் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க "அபாயா" கலாச்சாரங்களை மேலும் அதி உச்சத்துக்கு கொண்டு வருகின்றனர். இன்றைய உலக பொருளாதார நெருக்கடியானது, பெண்களை உழைப்புச் சந்தையில் இருந்து அகற்றி வீட்டுக்குள் சிறைவைக்க மத அடிப்படைவாதம் உதவுகின்றது.

பழைய நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க எச்சசொச்சக் கூறுகளை, பழைய சமூக அடித்தளத்தில் இருந்து மீட்டெடுப்பதும், அதை நவதாராளவாதத்துக்கு ஏற்ற நவீன "கலாச்சாரமாக" திணிப்பதும் நடந்தேறுகின்றது. உதாரணமாக "அபாயா" உடையை விதவிதமாக்கி, ஆணாதிக்க உடையை ரசித்து அணியுமாறு செய்கின்றது. பெண்களின் உடைத் தேர்வை, அவளின் "தேர்வாகவும்,  சுதந்திரமாக" வும் காட்டுகின்றது.

இந்த பின்னணியில் "அபாயா"வை அணியுமாறு இஸ்லாமிய அடிப்படைவாதம் பெண்களை நிர்ப்பந்திப்பதும், அது இஸ்லாமிய சமூகத்தின் உரிமையாகவும், அதை மறுப்பதை வன்முறையாகவும் காட்டுகின்றனர். அதாவது ஒடுக்கப்படும் தங்கள் தரப்பின் மீதான நிர்ப்பந்தமாக கூறுமளவுக்கு, நவீன நவதாராளவாத ஆணாதிக்கம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதையே வெள்ளாளிய இந்துத்துவமானது "சாறியே" எங்கள் "ஒழுக்கத்தின்" அடையாளமாகக் கூறி, குட்டைப்பாவாடை – காற்சட்டை அணிவது பெண்ணின் "கலாச்சார சீரழிவு" என்று கூறுவது இதே அடிப்படையில் தான்.

கற்பிக்கின்றவர்கள் சுதந்திரமான உணர்வு கொண்டவராக இருந்தால் தான், கற்கும் பெண்கள் சுதந்திரமானவர்களாக வாழ வழிகாட்ட முடியும். சமூகத்தின் முன் பெண் தன் ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து மீள உதவும்;. "அபாயா" உடையணிந்த ஆசிரியர்களின் நடத்தையில் இருந்து, மாணவிகள் சுதந்திர உணர்வைப் பெற முடியாது. ஆணாதிக்க அடிமை உணர்வையே பெற முடியும். காற்சட்டை, அரைப்பாவாடை பெண்கள் அணிவது கலாச்சார சீரழிவு என்று கூறி சாறியை அணியும் பெண்ணிடம் இருந்து, ஆணாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரமான வாழ்வை கற்றுக்கொள்ள முடியாது.

இனம், மதம், கலாச்சாரத்தின் பெயரில் பெண்களின் உடை குறித்த கூச்சல்களும், கோசங்களும், பெண் அடங்கிப்போகும் அடிமைத்தனத்தை பாதுகாக்கும் ஆணாதிக்க வன்முறையே. இது ஒரு சமூகப் பிரிவிற்குரிய, சிறப்பான அடிப்படைவாதமல்ல. தனியுடமை அமைப்பு தோற்றுவித்த, தனியுடமையுடன் கூடிய ஆணாதிக்கமாகும்;. அதாவது தனியுடமையுடைய இன்றைய எல்லா சமூகமும்,  ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றது. தனியுடமை அமைப்பின் நெருக்கடிகளுக்கு ஏற்ப, தன்னை கூர்மைப்படுத்தக் கூடியதும், அடிப்படைவாதமாக தன்னை வெளிப்படுத்தும் வண்ணம், எல்லா ஆணாதிக்க சமூகத்திலும் இது புரையோடிக் கிடக்கின்றது.

குட்டைப் பாவாடை அணிந்த பெண் தாக்கப்பட்டது என்பது, வெள்ளாளியச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் ஆணாதிக்கச் சிந்தனை முறைதான்.