Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐரோப்பாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிழல் யுத்தமே ஈரான் விவகாரம்

பலநாடுகள் ஒன்று சேர்ந்து ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக, இஸ்ரேலின் ஆதரவுடன் கிழித்தெறிந்ததுடன் - புதிய தடைகளை விதித்து வருகின்றது. இந்தப் புதிய சூழலில், இஸ்ரேல் முன்பு சிரியாவில் அத்துமீறி ஈரானிய படைகள் மீது நடத்திய தாக்குதலுக்கு, எதிரான பதில் தாக்குதலை, சிரியாவில் இருந்த ஈரான் படை நடத்தி இருக்கின்றது. தாக்குதல் நடந்த பகுதி சிரியாவிடம் இ;ருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதியை தெரிவு செய்ததன் மூலம், இஸ்ரேலை அம்பலப்படுத்தவும் - அரபு மக்களை தன் பின் திரட்டவும் முனைந்திருக்கின்றது. அதேநேரம் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் பல நாடுகளின் நலன் சார்ந்த புதிய யுத்தங்களுக்கான சூழலை உருவாக்கி இருக்கின்றது. இதன் பின்னுள்ள அரசியல் - பொருளாதாரப் பின்னணியை ஆராய்வோம்.

ஈரான் அணு உற்பத்தி செய்வதோ, இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதோ, சிரியாவில் படையை நிறுத்தி இஸ்ரேலை அச்சுறுத்துவதோ.. இந்த புதிய நெருக்கடிக்கான காரணமல்ல. இப்படிக் கூறுவது அமெரிக்கா தனது நோக்கை மூடிமறைக்க முன்வைக்கும் காரணங்களே. டொனால்ட் டிராம் போன்ற அரசியல் "கோமாளியின்" தனிப்பட்ட ஒரு தலைப்பட்ச நடவடிக்கையாக இதைக் காட்டும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், தங்கள் நோக்கை மூடிமறைக்க முனைகின்றனர்.

இந்த நெருக்கடியின் பின்னுள்ள உண்மைக் காரணம், 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து, தங்கள் முதலாளிகளை பாதுகாக்கும் ஏகாதிபத்திய முரண்பாடுகளே ஆகும்.

தேசிய மூலதனம் ஏகாதிபத்திய வடிவம் பெற்ற பின்பாக, உலகை ஆண்ட மேற்கு ஏகாதிபத்திய மூலதனங்கள், ஒன்றையொன்று அழித்துக் கொழுக்கும் முரண்பாடு தமக்குள் கூர்மையடைந்ததன் வெளிப்பாடு தான், ஈரான் விவகாரம். அதாவது உலகமயமாதலுக்கு பின்பான காலத்தில், தனியுடைமையான ருசியா – சீனா மூலதனத்தை கூட்டாக எதிர்கொண்ட மேற்கு ஏகாதிபத்திய மூலதனங்கள் உலகை ஆள முடியாத வண்ணம், மேற்கு மூலதனத்துக்குள் ஏற்பட்டுள்ள விரிசலே ஈரான் நெருக்கடி.

 

கடந்த பத்தாண்டுகளாக தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, 2015 இல் ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தமானது, ஐரோப்பிய – சீன மூலதனங்களைக் கொழுக்க வைக்க உதவியதே ஒழிய, அமெரிக்க மூலதனத்துக்கு பெரியளவில் உதவவில்லை. இதனால் தான், அமெரிக்க மூலதனம் 2015 ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து இருக்கின்றது. ஐரோப்பா உள்ளிட்ட பிற மூலதனம் இதை கிழித்தெறியப் போவதில்லை என்று அறிவித்து இருக்கின்றது.

இதன் மூலம் மறைமுகமான புதிய போரை, அமெரிக்க – ஐரோப்பிய மூலதனங்கள் அறிவித்திருக்கின்றது. ஈரானுடன் பொருளாதாரத்தை தொடரவுள்ள  ஐரோப்பா, சீனா, ருசியா .. மூலதனங்களின் புதிய நடைமுறை, பல முனைகளில் அமெரிக்க மூலதனத்துக்கு எதிரான வேலைத்திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. இந்த முக்கியமாக இரண்டு விடையங்கள் மூலம், புதிய உலக ஒழுங்கை நடைமுறைக்கு கொண்டு வரமுனைகின்றது.

1.சர்வதேச பணபரிவர்த்தனையாக உள்ள டொலருக்கு பதில், ஈரோ உள்ளிட்ட புதிய பணப் பரிவர்த்தனைக்கு இது வித்திட்டுள்ளது. ஈரானுடன் அமெரிக்காவும் தனது பொருளாதார – நிதி உறவை முறிக்கின்ற பல தடைகளை அறிவித்து வரும் சூழலில், இயல்பாக இன்னுமொரு பணத்தின் மூலமே பிற நாடுகள் வர்த்தகத்தை நடத்த முடியும். இதன் மூலம் டொலருக்கு எதிரான புதிய பணபரிவர்த்தனையை, சர்வதேசரீதியாக தோற்றுவிக்கும் வண்ணம் அமெரிக்காவுக்கு எதிரான யுத்தத்துக்கு ஐரோப்பா தயாராகி வருகின்றது.

2.ஐரோப்பிய இராணுவக் கட்டமைப்பு இதுவரை காலமும் அமெரிக்கா சார்ந்ததாக இருந்து வந்துள்ளது. அமெரிக்காவுக்கு நிகராக ஐரோப்பா சுயாதீனமாக உலகைக் கட்டுப்படுத்தும் இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு இருக்கவில்லை. ஈரான் நெருக்கடியை அடுத்து  தனித்துவமான இராணுவத்தை உருவாக்கும் அவசியத்தை முன்வைக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஐரோப்பிய ஏகாதிபத்திய ஊடகங்கள் அதன் அவசியத்தை பற்றி மக்களுக்கு கூறத் தொடங்கி இருக்கின்றது.

வெளியில் தெரியும் ஈரான் நெருக்கடி என்பது, உண்மையில் அமெரிக்க – ஐரோப்பிய நெருக்கடியாகும். மூலதனங்கள் கொழுப்பதற்கும் - தக்கவைப்பதற்கும் புதிய சந்தைகளை கண்டடையும் வண்ணம், உலகை மறுபங்கீடு செய்ய முனைகின்றது. உலக பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள, மூன்றாம் உலக யுத்தம் வரை செல்ல தயாராகி வருகின்ற மூலதனங்களின் வெறியாட்டம் தான், ஈரான் குறித்து அமெரிக்கா நடத்தும் நாடகம். 

அமெரிக்காவின் இந்த செயற்பாடு புதிதல்ல. 1990 களில் ஈராக் சந்தையைக் கைப்பற்ற அமெரிக்கா ஈராக் அணுத்திட்டத்தை முன்னெடுப்பதாக பொய்களைக் கூறியது.  தன்னிச்சையான தாக்குதல் மூலம் ஈராக்கை ஆக்கிரமித்ததுடன், அங்கு பொம்மை ஆட்சியை உருவாக்கியுள்ளது. இதற்காக போலி ஆவணங்களை காட்டியது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஐ.நாவில் ஒரு சிறிய சோதனைக் குழாயைக் காட்டி, ஈராக்கில் இருந்து எடுத்த அணுவே இதில் உள்ளதாக கூறி உலகையை ஏமாற்றினார். இதன் மூலம் ஈராக்கை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை அமெரிக்கா நடத்தியதே வரலாறாகும்;. அன்று அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க முன்பும் - பின்பும், சர்வதேச அணுக் கண்காணிப்பு அமைப்பால், ஈராக்கின் அணு ஆயுதம் குறித்த எந்த ஆதாரத்தையும் தரமுடியவில்லை என்பதே இன்று வரையான உண்மை.  இன்று ஈரானிலும் அதே போல் ஆதாரத்தை, சர்வதேச அணுக் கண்காணிப்பு அமைப்பு வைக்க முடியவில்லை.

இப்படி உண்மைகள் இருக்க ஈரானில் அணு ஆயுதம் செய்யப்படுவதாக, தனது கைக்கூலியான இஸ்ரேல் மூலம் அமெரிக்கா முன்வைத்திருக்கின்றது. சவூதி அதற்கு தாளம் போட வைத்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் அரபுலகில் முஸ்லீம் மதப்பிரிவுகளின் முரண்பாட்டையும் - யுத்தங்களையும் அமெரிக்காவே வழிநடத்தி வருகின்றது. அமெரிக்கா  இராணுவ ஆக்கிரமிப்பை கூர்மையாக்கி வருகின்றது.

ஈரானின் அணு பற்றி பேசும் பொதுப் பின்னணியில், அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் சர்வதேச அணுக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதுடன், அதை தனது கையிருப்பில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா ஆதரவு பெற்ற சவுதி அரபியா உலகளவில் அதிகளவு இராணுவ செலவு செய்யும் மூன்றாவது நாடாக இருக்கின்றது. அதேநேரம் ஜெமன் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு, பாரியளவு மனிதப் படுகொலைகள் செய்வதுடன், மனிதவுரிமை மீறல்களைச் செய்து வருகின்றது.

இப்படி உண்மைகள் மூடிமறைக்கப்பட, உலகை பங்கிடும் ஏகாதிபத்திய யுத்தங்களும், அதை நியாயப்படுத்தும் வாதங்களையுமே மக்களுக்கு செய்தியாகவும் - கருத்தாகவும் ஊடகங்கள் கொண்டு செல்லுகின்றன. இதை முறியடித்து மக்களை சர்வதேசியவாதிகளாக அணிதிரட்டுவதும் - போராடுவதுமே, மனிதத் தன்மைக்குரிய இன்றைய மனித வரலாறாக இருக்க முடியும்.