Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்!- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்!

இன்று அன்றாடம் நடக்கும் தன்னிச்சையான மக்கள் போராட்டங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் தான், மக்களுக்கு சாராயக் கடை அவசியம் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். இனவாதத்தை முன்வைத்து வாக்குப்பெற்ற வெள்ளாளிய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான சிறிதரன், யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் இருப்பதை  எடுத்துக்காட்டினார். எமது பிரதேசமான கிளிநொச்சியில் ஒன்றுமில்லை என்று எடுத்துக்காட்டி, எமது பிரதேசத்திற்கு சாராயக் கடைகளை நாம் அமைக்க வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணம் போல் மக்களைக் குடிகாரராக்கி பணத்தைப் பெருக்க விரும்பும் சாராய முதலாளிக்காகவே, சுரண்டும் வர்க்க நாய்கள் எல்லாம் குலைத்திருக்கின்றது. மக்களை கடித்துக் குதறுவதை நியாயப்படுத்த, கசிப்பையும், கஞ்சாவையும் துணைக்கு அழைத்திருக்கின்றது. அதாவது கசிப்பையும், கஞ்சாவையும் ஒழிக்க சாராயக் கடையாம்! இது வேறு ஒன்றுமல்ல, இனவாத ஒடுக்குமுறைகளை ஒழிக்க இனவாதம் பேசுவது, இனவொடுக்குமுறைக்;கு தீர்வு காண அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்கின்ற வெள்ளாளியச் சிந்தனை முறைதான், குடியை ஒழிக்க குடியை அறிமுகப்படுத்தக் கோருகின்றது.

கசிப்பை, கஞ்சாவை குடிப்பதற்கான சமூகக் காரணங்களை கண்டறியவும், வரைமுறையின்றி குடிக்கின்ற நுகர்வாக்கப் பண்பாடுகளை கண்டறிந்து, சமூக உணர்வுள்ள கூட்டுச் சமூகத்தை நோக்கி வழிநடத்துவதன் மூலம் தீர்வுகாண வேண்டிய விடையம் இது. இப்படி இருக்க யாழ்ப்பாணம் போல் சாராயக் கடையில் குடிப்பதே, கிளிநொச்சிக்கு தீர்வு என்கின்றனர் வெள்ளாளியப் பன்னாடைகள்.

இவ்வாறு கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, தீர்மானமாக்கப்பட்டுள்ளது. இதே தீர்மானத்தை எடுக்க மேற்கு ஏகாதிபத்தியத்தால் இலங்கையை ஆள தெரிவுசெய்யப்பட்ட மைத்திரியின் தயவில் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், "சட்டரீதியாக மதுபானசாலை அமைப்பதற்கு உரியவர்கள் விண்ணப்பித்தால், அதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்க வேண்டும் இல்லையெனில் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்" என்று கூறி எனவே அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்கின்றார். இப்படி மூலதனத்திற்காக குலைக்கவும், கடிக்கவும் தயாராகவுள்ள நாய்கள் எல்லாம் கூடி, மக்களுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர்.  இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது குழந்தைகளும், பெண்களும் தான்.

 

மூலதனத்தைப் பெருக்க சாராயக் கடையை பரந்தனில் அமைப்பதற்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் நடந்த நிலையில், நவாதாராளவாத முதலாளித்துவக் கட்சிகள் சாராயக் கடை அமைக்கும் தீர்மானத்தை எடுத்து இருக்கின்றனர்.

இலங்கையில் அதிக சதவீதமான குடிகாரர்களைக் கொண்ட பிரதேசங்களில் யாழ்ப்பாணம் ஒன்று. 64 சாராயக் கடைகள் மூலமே, இது சாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தான் கிளிநொச்சியில் உருவாக்க விரும்புகின்றனர்.

யாழ்ப்பாணம் இலங்கையில் அதிக மதுபானத்தை பாவிக்கும் பிரதேசம் மட்டுமல்ல, நுண்கடனை கொடுத்து சுரண்டும் அதிக வங்கிகளைக் கொண்ட பிரதேசமுமாகும். சமூகத்தின் சுய இருப்பிற்கான சொத்துடமையை அழிக்கும் நுண்கடன் திட்டம், சுயத்தை இழந்த லும்பன் சமூகத்தை உருவாக்குகின்றது. யாழ்ப்பாணம் சாதிக்கு சாதி அதிக கோயில்களை உருவாக்கும் பிரதேசமும் கூட. கும்பிட ஆட்கள் இல்லாத பௌத்த கோயில்களை இனவாதிகள் கட்டுவது போல், வெள்ளாளிய கோயில்கள் சாதிக்கு சாதி கட்டப்படுவதன் மூலம் சாதிய-மத சமூகமாக்கப்படுகின்றது. சுய உழைப்பை அழித்து பிறரை நம்பி வாழும் பிரதேசமாகி வருகின்றது. இப்படி நவதாராளவாதத்தில் வீங்கி வெம்பிப் போகும் சமூகச் சீரழிவில், யாழ் சமூகம் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. இதை கிளிநொச்சியிலும் உருவாக்குவதை, யாழ் வெள்ளாளிய தலைமை விரும்புகின்றது.

சுத்தமான தண்ணீர் கிணற்றில் ஊறுவதற்கு ஊருக்கு ஊர் குளம் கிடையாது. ஆனால் வெள்ளாளிய சாதிய அமைப்பு முறைக்கு ஏற்ப சாதிக்குச் சாதி கோயில் உருவாக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவனின் வெள்ளாளிய சுயவக்கிரத்தில், சாதிக் கோயில்கள் மூலம் வெள்ளாளிய சிந்தனை யாழில் புளுக்கின்றது. நீர் அற்று வரண்டு வரும் யாழ்மண்ணில், மழைநீர் தேக்கப்படுவதில்லை. மழை பெய்யவும், நிலத்தை  சோலையாக்கவும் மரங்கள் நடப்படுவதில்லை. இதன் பின்னுள்ள அரசியல், தண்ணீர் விற்று முதலாளிகளாகும் நவதாராளவாத முதலாளித்துவக் கொள்கையே.

இதை முன்னின்று வழிநடத்தும் அரசியல்வாதிகளே, சாராயக்கடை அவசியம் பற்றி பேசுகின்றனர். மக்களின் தேவை சாராயக் கடை என்கின்றனர். வேலை செய்ய விருப்பமில்லாத லும்பன் சமூகத்தை வழிநடத்தி, அவர்களின் தாகத்தைத் தீர்க்க சாராயம்.

இந்த அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் புலம்பெயர்ந்த சமூகம் பணத்தை கொடுத்து புலி அழிந்தது போல், சமூகத்தின் சுயத்தை அழிக்கும் சுய ஆத்மத் திருப்திக்காகவும், சுய புகழுக்காகவும், தாங்கள் சமூகசேவை செய்வதாக பீற்றிக் கொள்ளும் "உதவித்" திட்டங்கள் மூலம் களமிறங்கி வருகின்றனர். 1980 களில் புலம்பெயர்ந்தவன் தன் இறுதிக்காலத்துக்குள் எஞ்சிக் கிடக்கும் சமூகத்தின் சுயத்தை அழித்துவிடுவது என்ற வெறி மேலோங்கி வருகின்றது.

குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களின் கல்விக்கான "உதவி" திட்டங்கள், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை போராட்டத்துடன் கற்றுக் கொள்ளும் சுய அறிவையும், சமூக உணர்வு பெற்று வாழும் தன்னம்பிக்கையுடன் கூடிய சுயவாழ்க்கை சார்ந்த மனித உணர்வுகளை எல்லாம் நலமடிக்க தொடங்கி இருக்கின்றன.

"கடவுளுக்கு" லஞ்சம் கொடுத்து பெறுவதையே தனது வழிபாட்டு முறையாக கொண்டவர்கள், தங்கள் சுய ஆத்ம திருப்திக்காக ஏழைக்கு பிச்சை போடுவதை புண்ணியமாக நம்புபவன், தன்னை தான் திருப்திப்படுத்திக் கொள்ள "ஏழைக்" குழந்தைகளுக்கு உதவி என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து சுயதிருப்தியடைகின்றான். இதன் மூலம் சமூகத்தைப் பிச்சைக்கார நிலைக்கு தரம் தாழ்த்தி, தங்களிடம் கையேந்த வைக்கின்றதன் மூலம், சமூகத்தின் சுய உழைப்பு சார்ந்த மனிதத்தன்மையை அழிக்கின்றான். இந்த சமூக அவலத்தை எதிர்கொள்ளும் சமூகம், சுயமாக சிந்திக்க விடாமல் தடுக்க சாராயம். இதைத்தான் அரசியல்வாதிகள் மக்களுக்கு கொடுக்க விரும்புகின்றனர்.