Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆசிஃபாவைக் குதறியது நவபாசிச நவதாராளவாதமே

"ஒழுக்கமாகவும் - புனிதமாகவும்" பெண்கள் மேல் திணிக்கப்படும் ஆணாதிக்கமானது, மாறாத ஒற்றைப் பண்புவடிவம் கொண்ட ஆணாதிக்க வாழ்வியல் நெறியல்ல. ஆணாதிக்க பாலியல் வாழ்வியலானது மதத்தின் அல்லது மதங்களால் கட்டியமைக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமுதாய பண்பாட்டு எச்சமுமல்ல. மாறாக தனியுடமை சமூகப் பொருளாதார அடிப்படையில் தோன்றிய ஆணாதிக்கமானது, அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளுகின்றது. இந்த வகையில் நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் ஆட்சி முறையானது பாசிச வடிவத்தை எடுக்கும் போது, ஆணாதிக்கமானது வீரியமடைகின்றது.

நவீன நவதாராளவாத ஆணாதிக்கமே ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று போட்டு இருக்கின்றது. தைமாதம் நடந்த இந்தப் பாலியல் குற்றத்தையும், கொலையையும் மூடிமறைக்க, இந்தியாவை ஆளும் பார்ப்பனிய - இந்துத்துவ அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. குற்றத்தை சட்டரீதியாக முன்னெடுக்க பொலிசார் மறுத்தனர். குற்றத்தை பிறர் மீது சுமத்தி, திசைதிருப்ப முனைந்தனர். அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கி, சட்டத்தின் முன் கொண்டு வந்தனர். குற்றத்தை மூடிமறைக்கும் வண்ணம், சாட்சியங்களையே பொலிஸ் அழிக்கிறது. நடந்த குற்றத்துக்கு எதிராக நாடு தளுவிய மக்களின் போராட்டம், சட்டத்தை அமுல்படுத்தக் கோரிய சூழலில், குற்ற வழக்கு தாக்கல் செய்வதை இந்துத்துவ –பார்ப்பனிய வழக்கறிஞர் கும்பல் தடுக்க முனைகின்றது. இந்த குற்றவாளிக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞர் மிரட்டப்படுகின்றார்.

அதேநேரம் இந்தக் குற்றத்தை செய்த கும்பலைப் பாதுகாக்க, இந்துத்துவ தேசபக்தியும் - ஒடுக்கும் பார்ப்பனிய சாதி உணர்வும் ஆளும் தரப்பால் முடுக்கிவிட்ப்பட்டது. ஒடுக்கும் தங்கள் சாதிய உணர்வுடன், குற்றவாளிகளுக்காகக் குலைப்பது நாடு தளுவிய அளவில் பா.ஜ.க கட்சியின் அரசியல் உணர்வானது. பா.ஜ.க சட்டசபை உறுப்பினர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். பார்ப்பனிய ஊடகங்களின் துணையுடன், தங்கள் குற்றத்தை மூடிமறைக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் இறங்கினர். இந்திய தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள், இந்துத்துவ தேசபக்தி கோசங்களை எழுப்பினர்.

 

ஆசிஃபா உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய முடியாத வண்ணம், சாதி – மத  வன்முறைக்கு அரசு பக்கபலமாக நின்றது. ஆசிஃபா குடும்பம் தங்கள் ஊரில் வாழமுடியாத அளவுக்கு, வன்முறைகளுக்கு அஞ்சி வெளியேறியது.

இவை அனைத்தும் இந்தியாவை ஆளும் இந்துத்துவ – பார்ப்பனிய சாதி-மத அரசியல்  பின்னனியில் நடந்தேறுகின்றது. "ஆசிஃபாவா கொலையில் பாகிஸ்தான் சதி உள்ளது" என்று மத்திய பிரதேச பா.ஜ.க தலைவர் நந்தகுமார் அறிவிக்கின்றார். "இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என்று பா.ஜ.க அமைச்சர் சந்திர பிரசாத் கங்கா கூறி, இது பெரிய விடையமல்ல என்கின்றார். "இது போன்ற சம்பவங்களைப் பேசி பேசி அதை மேலும் பிரபலமாக்காதீர்கள்" என்று பா.ஜ.க எம்.பி மீனாட்சி கூறுகின்றார். "அந்த பெண் குழந்தை இறந்தால் என்ன? தினமும் இதுபோல் பல பெண் குழந்தைகள் இறக்கத்தான் செய்கின்றார்கள்" என்று பா.ஜ.க கபினட் அமைச்சர் வால் சிங் கூறுகின்றார். "சின்ன விடையத்தை பெரிதாக்கி, மில்லியன் கணக்காக சுற்றுலா வருமானத்தை இந்தியா இழக்கின்றது" என்று நிதி அமைச்சர் அருண் யெட்கி கூறுகின்றார்.

இதன் மூலம் இன, மத, சாதிய.. அடிப்படையாகக் கொண்ட அரசியல் பின்னணியில் நடந்த குற்றத்தை, குற்றமற்ற தங்கள் மனுதர்ம இந்துத்துவ வாழ்க்கை முறையாக அங்கீகரிக்க கோருகின்றது. இந்துத்துவ சாதி-மத குற்றங்களைச் செய்து அரசியல் அதிகாரத்தை தேர்தல் ஜனநாயகம் மூலம் பெற்றுவிட்டவர்களின் அரசியலானது, தாம் அல்லாத பிற மனிதர்கள் மேல் வன்முறைதான். பார்ப்பனிய சிந்தனையும் - அதன் வாழ்க்கை முறையும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியும் - அவர்களை சூறையாடியும் வாழ்வதுதான். ஆசிஃபாவை சூறையாடும் உரிமை இந்த சாதிய மனுதர்ம வாழ்க்கை முறையாக அங்கீகரிக்கின்றது.

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மதங்கள், இனங்கள்.. மீதான வன்முறையை அரசியலாகவும், அரசியல் அமைப்புச் சட்டமாகவும், வாழ்க்கை முறையாகவும் இருக்கின்றது. இதை தான் இந்துத்துவ வாழ்க்கை முறை என்றும் - இராமனின் மனுதர்ம ஆட்சியும் என்கின்றனர். இந்த அரசியல் வாழ்க்கை முறை என்பது, நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுப்பதை மக்கள் கண்டுகொள்ளாது இருப்பதற்கான போதை மருந்து. 

இந்த வலுப்படுத்த மாட்டிறைச்சி உண்ணத் தடை, காதலை ஒழுக்கக்கேடாக காட்டி கண்காணிப்பது, மதம் மாறும் உரிமையை மறுத்து அதைக் கண்காணிப்பது, சாதி-மதம் கடந்த வாழ்க்கையையும் - திருமணங்களையும் தடுத்து நிறுத்துவது.. என்று சமூகத்தை கண்காணிக்கும் அடிப்படையில், இந்துத்துவ – பார்ப்பனிய அரசியல் அணிகளை உருவாக்குகின்றது. இவர்கள் பெற்று இருக்கும் சாதி – மத அதிகாரங்களைக் கொண்டு நாட்டை அச்ச சூழலில் கொண்டு வந்ததன், ஆள்கின்றதன் மூலமே, நாட்டை மூலதனத்துக்கு தாரை வார்க்கின்றனர். இது தான் மோடியின் நவதாராளவாத இராமன் ஆட்சி. 

நாட்டின் ஜனநாயகக் கூறுகளை அழித்து, சட்ட அமைப்பு முறைமையை செயற்றதாக்கி விடுகின்றனர். ஆளுகின்ற பாசிசக் கட்டமைப்புகளின் குற்றங்களை குற்றமற்றதாக்குகின்றது. பொலிஸ், நீதிமன்றங்கள் தொடங்கி கல்வி வரை அனைத்தையும் பார்ப்பனிய சிந்தாந்த வழியில் மனுதர்மாக்குகின்றது. இந்த வகையில் அண்மையில் வன்கொடுமைச் சட்டத்தை நீதிமன்றம் ஒன்று நீக்கக் கோருகின்றது. பார்ப்பன - இந்துத்துவ குற்றங்கள் அனைத்தையும் குற்றமற்றதாக கூறி, பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றது. இராமனின் மனுதர்ம தீர்ப்பு முறையே, ஆட்சிமுறையாகி இருக்கின்றது.      

இந்தப் பின்னணியில் ஆளும் இந்துத்துவ-பார்ப்பனிய அடிப்படைவாதமானது, பாசிசமாகி இருக்கின்றது. இந்தப் பாசிசமானது உதிரி வர்க்கத்தினை தன் பின்னால் அணிதிரட்டுகின்றது. நுகர்வாக்கச் சமூகத்தில் எல்லாவற்றையும் நுகரத் துடிக்கும் உதிரி வர்க்க லும்பன்கள், பாசிச வடிவம் மூலம் நுகர்வதற்கான அரசியல் வன்முறையை அங்கீகரிப்பதன் மூலம் தன்னை நிறுவனமாக்குகின்றது. 

ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணையோ, முஸ்லீம் பெண்ணையோ இந்துத்துவ தேசபக்தி கோசத்தை எழுப்பிக் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பாலியல்ரீதியாக நுகர முடியும். இது போல் அவர்களின் சொத்தைப் பறித்தெடுக்க முடியும். அவர்களைக் கொல்ல முடியும். வன்முறை மூலம் பார்ப்பன - இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தை பெறுவதற்கு அரசு இயந்திரம் துணை நிற்கின்றது. அதாவது அரச இயந்திரம் பார்ப்பன - இந்துத்துவ அதிகாரமாக இருந்த சூழலுக்கு பதில், பா.ஜ.க கட்சி அணிகள் மக்களை கண்காணிக்கவும் - ஒடுக்குவதற்குமான அதிகாரத்தை பெற்று விடுகின்றது. இதுதான் இன்றைய பாசிசச் சூழல். அதிகாரத்தை பெற்று வரும் பாசிசக் கும்பல் உழையாது வாழ்வதற்கு ஏற்ப, காவி தரித்த, அரசு அதிகாரம் பெற்ற, ரவுடிக் கும்பலாக அணிதிரண்டு இயங்குகின்றது. சந்தையில் கப்பத்தையும், அரசு மற்றும் தனியார் திட்டங்களில் கமிசன்களையும், எல்லாத் துறையிலும் லஞ்சத்தையும் அறவிட்டு இயங்கும் அதிகாரபூர்வமான நிறுவனமாகி விடுகின்றது. 

நவதாராளவாத நாடுகளில் நவபாசிச மயமாக்கம் என்பது. வரைமுறையின்றி நுகரும் மற்றும் நுகர விரும்புகின்ற சக்திகளை சார்ந்து நிற்கின்றது. இந்த வகையில் இந்தியா சமூக அமைப்பில் பொருளாதார ரீதியாக மேல்நிலை அடைந்த வர்க்கமும், சாதி ரீதியாக மேல் நிலையில் உள்ள ஒடுக்கும் சாதியும், உதிரி வர்க்கமுமே, இந்துத்துவ – பார்ப்பனிய அடிப்படையிலான பாசிசத்தைக் கொண்டு, நாட்டை நவதாராளமயமாக்கி வருகின்றது. நவதாராளவாதம் என்பது நாட்டைச் சூறையாடும் வண்ணம், மக்களை இனம் - மதம் - சாதி வன்முறை மூலம் பிரித்து, இந்துத்துவ – பார்ப்பனிய அதிகாரம் கொண்ட பாசிசம் மூலம் மக்களை அடக்கியாளுகின்றது. 

இந்த நவபாசிசமானது மக்களைப் பிரிக்கும் அதேநேரம், மக்களைப் பிரிக்கக் கையாளும் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்ச சமூகக் கூறுகளையே முன்னிறுத்தி இயங்குகின்றது. நிலப்பிரபுத்துவம் கொண்டு இருக்கும் சமூக மேலாண்மை சார்ந்த வன்முறைக் கூறுகளை, இயல்பான ஒன்றாகவும் வாழக்கை முறையாகவும் மாற்றிவிடுகின்றது. முஸ்லீமையோ – ஒடுக்கப்பட்ட சாதி மக்களையோ கொல்லலாம், பாலியல் வன்முறை செய்யலாம்.  நவதாராளவாத சமூக அமைப்பிலான பாசிசம் இதைத்தான், தேர்தல் ஆட்சிமுறையாகவும் - சட்டமாகவும் மாற்றுகின்றது. 

ஆசிஃபா பின்னும் இது தான் நடந்தது. பா.ஜ.க தலைவர்கள் ஆசிஃபா விவகாரத்தை எப்படி அணுகியதோ, அணுகுகின்றதோ, அதுதான் மோடியில் ஆட்சிமுறை. இதுதான் பா.ஜ.க முன்வைத்த இராமனின் மனுதர்ம ஆட்சியும் கூட. இந்தியாவில் காமம் என்பது ஆன்மீகமாக மட்டும் இருப்பதில்லை, பாலியல் வன்முறை என்பது, சாதி – மத அதிகாரத்தின் அரசியல் குறியீடும் கூட. 

இது இல்லாமல் நவதாராளவாத பொருளாதாரத்தை இந்தியாவில் முன்னெடுக்க முடியாது. ஏகாதிபத்திய உலகமயமாதலான ஆசிஃபா போன்ற குழந்தைகளின் மேலான வன்முறைகளின்  மூலம் கட்டி அமைக்கப்படுவதும், போற்றுவதும் நடந்தேறுகின்றது. இது நவதாராளவாத கட்டமைப்பிலான நவபாசிசமாக, பார்ப்பானிய - இந்துத்துவா இயங்குவதை இனம் கண்டு போராடுவதன் மூலமே, இதை வேருடன் அழிக்க முடியும்;. இது இலங்கையில் (வடகிழக்கில்) வெள்ளாளிய - இந்துத்துவமாக பரிணாமமடைந்து வருவதை, இன்றைய இந்தியாவுடன் ஒப்பிட்டு போராட வேண்டியுள்ளது.