Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தொடரும் லலித் -குகனின் கனவான கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்!

(மார்கழி 5, 2011 இல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நடாத்தப்பட்ட போராட்டப் படம்)

எங்கள் தோழர்கள் குகனும்-லலித்தும் சிறைப்படுத்தப்பட்ட போராளிகளின் -கைதிகளின் விபரம் திரட்டியதாலேயே மஹிந்த அரசால்  கடத்தப்பட்டு காணமல் போகச் செய்யப்பட்டனர். ஒருவரிடமும் எந்த விபரமும் இல்லாத நிலையில் தென்னிலங்கைத் தோழர்கள் சிலரின் முயற்சியால், கைதிகள் பற்றிய பெருமளவு விபரம் திரட்டப்பட்டது.

அப்பணியில் சில சகோதர மொழி பேசும் சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சில முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகள் ஈடுபட்டனர். இதற்குத் தலைமை தாங்கியவரே தோழர்.லலித். வடக்கில் தொடர்புகளைக் கையாண்டு லலித்துக்கு உடனிருந்து செயற்பட்டவர் தோழர்.குகன். புலிகளில் முன்னாள் போராளியாக குகன் இருந்ததால் அவருக்கு பல தொடர்புகள் இருந்தது.

2009 இல் கைது செய்த புலிப்போராளிகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் சார்ந்து இயங்கியதனால் கைது செய்யப்பட்டோர் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் அரசியல் கைதிகள் எனவும் - அவர்கள் போராட்டத்தில் ஈடுபட - காலங்காலமாக இலங்கையை ஆண்ட  அரசுகளின்  இன ரீதியான - இனவாத அரசியல் தான் அடிப்படைக் காரணம் என்றும்  குரல் கொடுத்து போராட்டம் நடத்தியோர், அன்று ஜேவிபி இற்குள் முரண்ப்பட்டு வெளியேறிய, இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சித் தோழர்களே.

அரசியற் கைதிகளை  விடுதலை செய்யக் கோரிய போராட்டம், அதற்கான மகஜர்கள் பெருமளவான கைதிகளின் விபரத்துடன் 2010 இன் நடுப்பகுதியிலேயே தென்னிலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, சில பத்திரிகைகளில் செய்தியாக வெளிக்கொண்டு வரப்பட்டதுடன், அவர்களின் விடுதலைக்காக உழைக்கக் கூடியவர்களிடம் விபரங்கள் வழங்கப்பட்டது.

இக் காலத்தில் இலங்கையின் எந்த ஊடகமும் மூச்சு விடப்பயந்த காலம். இப்போ தமிழ் தேசியத்தலைவர்களாக வலம் வருவோர், பின்கதவால் மகிந்தவின் உறவிலிருந்தபடி, அரசியல் செய்த காலம். தற்போது அரசியல் ஆய்வு செய்தபடி, பிரபல "ஊடகவியலாளர்களாக" வலம் வருவோர் கொழும்பு NGOக்கள், இந்தியா மற்றும் மஹிந்த அரசு -EPDP யின் தயவில் வாழ்ந்தகாலம். புலம்பெயர் புரட்சியாளர்கள் தமது கடைகண்ணிகளை கவனித்துக் கொண்டு சந்தர்பவாதமாக மவுனம் காத்த காலம். இதில் தவறுகள் இல்லை. நிலை அப்படிதான் இருந்தது. இப்படியான சூழலிலேயே தை  மற்றும்  கார்த்திகை 2011 இல் மாபெரும் போராட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கைதிகள் விடுதலை மற்றும் அரசியல் செய்யும் ஜனநாயக உரிமை மற்றும் தமிழ் மக்கள் போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை நினவு கூரும் உரிமை போன்றவை கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது.

இப் போராட்டங்களின் தொடர்ச்சியாக 2011 மார்கழி மாதம் 10ஆம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் ஒரு போராட்டத்தையும், அதைத் தொடர்ந்து கொழும்பை நோக்கி ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கும் வேலையில் ஈடுபட்டனர் தோழர்கள் லலித் -குகன் தலைமையினான குழுவினர். கொழும்பிலும் ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் எமது தோழர்கள் லலித் -குகன் 2011, மார்கழி 9 அன்று யாழில் வைத்துக் கடத்தப்பட்டனர். இன்று வரை அவர்கள் வீடு வந்து சேரவில்லை.      

இவர்களின் கைதுக்குப் பின் கைதிகளுக்கான போராட்டத்தையும், விடுதலைக்கான தகவல் திரட்டல் வேலைகளிலும் ஈடுபட்ட குழு தனது வேலையை  முன்னெடுக்க முடியாமல் போனது. இதில் ஈடுபட்ட போராளிகள் வடக்கை விட்டு  வெளியேறினர்.   

ஆனாலும், லலித்- குகன் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வேலைகளால் பல போராளிகள் - குறிப்பாக பெண் போராளிகள் விடுதலையாகினர். இன்றுவரை பல தோழர்கள், மனித உரிமைவாதிகள் கைதிகளின் விடுதலைகாக  உழைகின்றனர். போராடுகின்றனர்.

அன்று தோழர்கள் லலித்-குகன் ஆரம்பித்த அரசியற் கைதிகளுக்கான போராட்டம் தான் இன்று சமவுரிமை இயக்கத்தினால் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மா-லெ கட்சி,  நவ சம சமாஜக் கட்சி போன்ற இடது கட்சிகளின் ஆதரவுடனும் மாணவர், பெண்கள், தொழிலாளர் முன்னணிகளின் ஆதரவுடனும்   முன்னெடுக்கப்படுகிறது.

தாங்கள் எந்த போராட்டதிலும் கலந்து கொள்ளாமல், தேர்தலைக் குறியாக வைத்து அறிக்கை விடும் அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். அல்லது கைதிகள் விடுதலை செய்யப்படும் நாளைத் தெரிந்து கொண்டு, அந்நாளில் சிறைச்சாலைக்கு முன்னால் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அரசியல் ஒட்டுண்ணிகளும் அல்ல நாம்! அல்லது அவதூறு அரசியல் செய்வதற்காகவே புலம்பெயர்த்த நாடுகளில் இணையம், முகப்புத்தகம்  இயக்குபவர்கள் அல்ல நாங்கள்!  நாம்  அரசியல்  நடைமுறையில் உள்ளவர்கள்.