Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இராசராச சோழன் : ஒடுக்கியோரின் "பொற்காலம்" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்

எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைப் பேசுவதில்லை, ஒடுக்குவோரின் வரலாற்றைப் பற்றியே பேசும். வரலாறாக இருக்கின்ற அனைத்துமே, ஒடுக்கியோரின் வரலாறாகும். எழுதப்பட்ட வரலாற்றை காட்டி இதுதான் அன்றைய மனித வரலாறு என்று கூறுவோர், ஒடுக்குகின்ற தரப்பைச் சேர்ந்தவர்களே. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு என்ன என்பதை கண்டறிந்து சொல்வதே, ஓடுக்கப்பட்டவர்கள் சர்hபாக நின்று சொல்வதாகும்.

இது இராசராச சோழனின் வரலாற்றுக்கு விதிவிலக்கல்ல. ஓடுக்கியோரின் வரலாற்றின் எதிர்மறையில் தான், ஒடுக்கப்பட்டடோரின் வரலாற்றை கண்டறிய வேண்டும். வர்ண – சாதிய சமூக அமைப்பில், இராசராச சோழனின்; சாதிய சிந்தனை குறித்தும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், தேவைப்பட்ட பாரிய மனித உழைப்பு எங்கிருத்து எப்படி பெறப்பட்டது என்பது குறித்தும், இராசராச சோழனின்; பின்னால் பதுங்கிக் கிடப்பவர்கள் பதிலளிக்க வேண்டும்.

சமகால புலிகள் மற்றும் பிரபாகரனின் மானிட விரோத பாசிச வரலாற்றையே திரித்துப் புரட்டி போடுகின்றவர்கள் தான் இவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து சிந்திக்கத் திறனற்ற, ஒடுக்குமுறையாளர்கள் தான், இராசராச சோழனை சாதிய இன வெறியுடன் முன்னிறுத்துகின்றனர்.

இன்று யாரெல்லாம் பார்ப்பனிய சிந்தனையிலான சாதியில் வாழ்கின்றனரோ, அவர்கள் தான் இராசராச சோழனுக்காக கொதித்தெழுகின்றனர். 1000 வருடத்துக்கு முந்தைய இராசராச சோழன், ஒடுக்கும் வர்க்கத்தின் ஒரு பிரதிநிதி. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் சமூகக் கூறுகளை பாதுகாத்ததுடன், புதிய ஓடுக்குமுறைகளை ஆழமாக்கியவன். இராசராச சோழனின் வாரிசாக தங்களை இன்று கூறிக் கொண்டு இருப்பவர்கள், இன்றைய சமூகத்தை ஓடுக்குகின்ற சாதிய மற்றும் வர்க்கப் பிரதிநிதிகளே. இந்த சாதிய மற்றும் வர்க்க அதிகாரத்தைக் அடையத் துடிக்கும் தரப்புகளுமே. இந்த வகையில் பார்ப்பனிய சிந்தனையிலான சாதிய சமூகத்தைப் பாதுகாக்க விரும்புகின்ற, சாதி அரசியலை தூக்கி நிறுத்தி நிற்கின்ற அனைவரும் அடங்கும். இதற்குள் தமிழ் இனவாதம் மூலம் தமிழ் பார்ப்பனியத்தை முன்னிறுத்துகின்ற இனவாத கூட்டமும் அடங்கும்.

இராசராச சோழனின்; காலத்தில் உருவான கட்டிடக்கலை மனித வரலாற்றிலும், தமிழர் பண்பாட்டிலும் தனித்துவமானது. இராசராச சோழனின் நீர்ப்பாசன திட்டமானது வரலாற்றிற்கு முந்தைய - பிந்தைய காலத்துடன் ஓப்பிடும் போது தனித்துவமானது.

இராசராச சோழன் இந்த வரலாற்றுக் கூறான திருவள்ளுவருக்கு முந்தைய காலம் முதல் தமிழர்கள் வரலாற்றில் இருந்து வந்த தனித்துவமான மொழி, இலக்கியம், கட்டிடக்கலை, உழவுத் தொழிலின் தனித்துவமான பாரம்பரியத்தையே மீளப் பறைசாற்றிய காலம்.

தமிழர் மரபுக்கு முரணானதாக இராசராச சோழன்; சாதியக் கிராமங்களை உருவாக்கினான். கோயில்களை பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையில் கட்டியதுடன், அதை பார்ப்பானிடம் தாரைவார்த்தான். இருந்த கோயில்களில் பார்ப்பனியம் புகுத்தப்பட்டது. நிலத்தைக் குவித்து அதை சில சாதிகளின் (உடைமையல்ல) உரிமையாக்கினான். அதற்கு உழைப்பதற்கு அமைவாகவே, அதைச் சுற்றி சாதிக் கிராமங்களை உருவாக்கினான். அடிமைப் பெண்களைக் கொண்ட, தனி (பாலியல்) கிராமங்களை உருவாக்கினான். இந்திய சாதி சமூக அமைப்பில் எப்படி சாதியக் கிராமங்கள் உருவாக்கப்பட்டனவோ, அதை இராசராச சோழன் செய்தான். இந்தியா எங்கும் ஓரே மாதிரியான சாதியக் கிராமங்கள் என்பது, அதை வழிநடத்திய பார்ப்பனர்களின் பார்ப்பனிய சிந்தனையே. பார்ப்பனர்களின் ஆலோசனையில் பார்ப்பனியமே, இராசராச சோழன்; உருவாக்கிய கிராமங்கள், கோயில்கள்.

தென்னாசிய சமூகத்தில் நிலம் பொதுவில் இருந்தது. நிலத்தில் தனியுடமை கிடையாது. நிலம் மன்னனின் உடைமை. உற்பத்தியில் பெரும் பகுதி வரியாக பெறப்பட்டது. நிலத்தில் யார் உழுவது என்பதை மன்னன் தீர்மானிக்கும் உரிமை இருந்தது. நிலத்தில் உடைமை கிடையாது, உழுவதற்கான பரம்பரை உரிமை இருந்தது, அதை மன்னன் இல்லாதாக்க முடியும். இதை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.

இந்த சமூக அமைப்பு முறையில் இராசராச சோழன் நடத்திய பாரிய படையெடுப்புகள், பாரிய கட்டிட அமைப்புகள், நீர்ப்பாசன திட்டங்கள், புதிய நகரங்கள், புதிய சாதி கிராமங்கள், அதிகரித்த விவசாய நிலத்தில் உழைக்க தேவைப்பட்ட மனித உழைப்பு,.., இவை எங்கிருந்து, எப்படி பெறப்பட்டது? இதுதான் சோழனின் "பொற்காலத்தை" புரட்டிப்போடும் நெம்புகோல். ஓடுக்கப்பட்ட மக்களின் இருண்ட காலத்திற்கு, வெளிச்சத்தை ஊட்டுகின்றது.

சாதியக் கிராமங்கள் சுற்றி, வர்ண - சாதி ரீதியாக (உழைப்பு ரீதியாக) குடி அமர்த்தப்பட்டவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் முன்பு எப்படிப்பட்ட நிலையில், என்ன உழைப்பில் ஈடுபட்டனர்.? அவர்கள் எங்கிருந்தோ அகற்றப்பட்டு, புதிய உழைப்புக்குள் கொண்டு வரப்பட்டனர். ஆக ஓடுக்கப்பட்டவர்களுக்கு இராசராச சோழனின்; ஆட்சிக்காலம் இருண்ட காலமாகும்.

இராசராச சோழன் கால நிலவுடமையானது நிலத்தைக் குவித்து, அதிக உபரியைக் கோரியது. மக்களின் உழைப்பிலிருந்து அதிக வரியைக் கோரியது. விவசாய உற்பத்திக்கும், கட்டிடத் துறைக்கும், நீர்ப்பாசனத்திற்கும், புதிய நகர நிர்மாணத்துக்கும், படையெடுப்புக்கும் அதிக மனித உழைப்பை இராசராச சோழனின்; ஆட்சிகாலம் கோரியது. அதிக மனித உழைப்புக்காக சுய உற்பத்தியில் ஈடுபட்ட சிறுவுடமை உற்பத்தியும், இதில் இருந்த மானிட சுயாதீனமும் அழிக்கப்பட்டது. அவர்களின் உழைப்பு தான், பெரும் உற்பத்தியில் புகுத்தப்பட்டது. புதிய அடிமைநிலையும், அடக்குமுறையும், இதற்கு ஏற்ற சாதிய அமைப்பும் புகுத்தப்பட்டது.

இப்படி உழைப்புக்கு கொண்டு வரப்பட்டவர்கள் வர்ணத்தின் அடிநிலையில் இருந்தவர்களும், சாதி படிநிலையில் அடியில் இருந்தவர்களும் தான். இதனால் தங்கள் உழுத நிலத்தை, வாழ்விடத்தை இழந்தனர். பாரிய உழைப்பு சக்தி, இப்படி தான் திரட்டப்பட்டது. இப்;படி புதிய உழைப்பையும், புதிய சாதிய சமூகத்தையும் ஒழுங்குபடுத்தி அடிமைப்படுத்தவே பார்ப்பனியம் புகுத்தப்பட்டது. புதிதாக உருவான சாதி கிராமங்கள் இதனடிப்படையிலானது.

பல மனைவிளைக் கொண்ட இராசராச சோழனின் அந்தப்புரங்களோ, பாலியல் தேவைக்காக பெண்களால் நிரம்பி வழிந்தது. யுத்தத்தில் பிடிபட்ட இளம் பெண்களை அடிமையாக கொண்டு வந்ததுடன், பாலியல் அடிப்படையில் தனிக் குடியிருப்புகள் அமைத்தான். அதேநேரம், பாலியல் நோக்கில் பெண்களை கோயில்களில் அமர்த்தியவன். ஓடுக்கும் அதிகார வர்க்கத்தின் பாலியலுக்காகவே, கோயில்கள் முதல் அரண்மனை வரை பெண்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இராசராச சோழனின் தனித்துவமான வரலாற்றின் பின்னால் உழைத்தவர்கள் ஓடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும், ஓடுக்கப்பட்ட சாதிகளுமே. சாதிக்கு முந்தைய வர்ண அமைப்பாகட்டும், அது சாதியாக மாறியதாகட்டும், இந்த இரு காலகட்டத்தைக் கொண்டதே இராசராச சோழன் காலமாகும். சுரண்டப்பட்ட, மற்றும் வர்ணத்தால் - சாதியால் அடிநிலையில் இருந்த மக்களின் உழைப்பே சூறையாடப்பட்டது. இந்த "பொற்காலம்" சுரண்டலின் உச்சத்தில் இருந்ததால் உபரி பெருகியது. அதுவே பார்ப்பனிய சாதி அமைப்பிலான, ஒடுக்கப்பட்ட மக்கள் வழிபட உரிமையற்ற சாதியக் கோயில்களானது.

சிலர் இராசராச சோழனின் விதிவிலக்கை காட்டி ஓடுக்கப்பட்ட மக்களின் மன்னனாக காட்டுகின்ற பித்தலாட்டத்தை செய்ய முனைகின்றனர். இது இன்று பாசிச பார்ப்பனிய காப்பரேட்டுக்கு சேவைசெய்யும் மோடியை, ஒடுக்கப்பட்ட தலித்தை ஜனாதிபதியாக்கியதற்கு நிகரானது. அரபு இஸ்லாமிய தலைவர்கள் முன் தலைதாழ்த்தி நிற்பதற்கு ஈடானது. இலங்கையில் புத்த பிக்குகளுக்கு முன் தலைவணங்கி நிற்பதற்கு சமமானது.

இராசராச சோழனின் சாதி என்ன என்பதை விட, பார்ப்பனியமே அவனின் சிந்தனை முறையாகும். இராசராச சோழன் பல நாடுகள், பிரதேசங்கள் கடந்து பெண் எடுத்ததும், கொடுத்ததன் மூலம், குறித்த சாதியினால் அடையாளப்படுத்த முடியாத பார்ப்பனிய சிந்தனையைக் கொண்ட ஒடுக்குமுறையாளன். ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரி. ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எதிரிக்கு சமமானவன்.