Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்

சாதிய சமூகத்தில் வாழ்ந்தபடி சாதியத்தைப் பாதுகாக்கும் புலம்பல்களே, சாதியம் குறித்த அளவீடாக இருக்கின்றது. பிறப்பால் சாதியை நிர்ணயிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு புலம்புகின்றோம். இந்த சாதியச் சமூகத்தின் சிந்தனைமுறையெங்கும், சாதியமே இருக்கின்றது. இந்த சாதிய சமூகம் முன்வைக்கும் தேசியம் முதல் சாதியம் குறித்த புலம்பல்கள் வரை, சாதியச் சிந்தனையே புரையோடிக் கிடக்கின்றது. பிறப்பிலான சாதியைக் கொண்டு ஒடுக்குவதைக் கடந்து, சாதிய சிந்தனை என்பது வாழ்க்கை முறையாகவும், அதுவே சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் இயங்குகின்றது.

இந்த சாதிய வாழ்க்கையிலான சடங்குகளும், சம்பிரதாயங்களும்; பிறப்பிலான சாதியைக் கடந்தது. அதாவது ஒடுக்கும் சாதிய பண்பாட்டு மரபுகளை ஒடுக்கப்பட்ட சாதிகள் பின்பற்றி, அதையே தங்கள் சொந்த மரபாக்கி கொண்டு இணங்கிய வாழ்க்கை முறை தான், சாதிய சிந்தனைமுறையாகும். இதுதான் வெள்ளாளியச் சிந்தனைமுறையாகும்.
 
இப்படிப்பட்ட வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய வாழ்க்கையை வாழ்ந்தபடி, சாதியமும், இந்துத்துவமும் குறித்து பேசுவது என்பது, சாதியம் குறித்த திரிபாக புரட்டலாக இருக்கின்றது.

இலங்கையில் சிவசேனாவை உருவாக்கிய மறவன்புலவு சச்சிதானந்தனின் செயற்பாடுகளைக் காட்டி, அதையே இந்துத்துவமாகவும் சாதியாகவும் கட்டமைக்கின்றமை அரசியல் அடிப்படையில் பித்தலாட்டமானது. இதுபோல் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு மூடப்பட்டுள்ள கோயில்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் கோயில் நிகழ்வுகளில் பங்குகொள்வதைத் தடுக்க திருவிழாவை நிறுத்திய நிகழ்வுகளை காட்டி, இதுதான் சாதியமென்று புனைவது, சாதியம் குறித்த திரிபும் புரட்டுமாகும்.

இவையெல்லாம் சாதிய-மதவாத சமூகத்தின் அதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் கோருவதும், அதைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளேயாகும். இதை விடுத்து இதை சாதியம் என்பது, திரிபாகும்.

இது அமைதியான சாதிய வாழ்க்கையின் பொது அமைதியைக் குலைக்கின்ற சிறு சலசலப்புகளே. பொது இடத்தில் சாதிய – மத மீறல்கள் அவசியமில்லை என்று கூறுகின்றவர்களின், நவீன சாதிய சிந்தனைமுறை. இந்த சலசலப்பை சாதியாக காட்டுவதன் மூலம், உடைத்தெறிய வேண்டிய சாதிய வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்குவதில்லை. பொது இடத்தில் சாதிய மரபுகளை பின்பற்றுவதை கேள்விக்குள்ளாக்குவதில்லை.

சாதிய சமூகத்தில் பிறந்த பிராமணன் (ஐயர்), தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் சாதிய பூநூல் அணிந்து கொண்டு, அவன் நடத்தும் அனைத்துச் சடங்குகளும் சாதியம் தான். பூநூல் போட்ட சாதிய மனிதனை வீட்டுச் சடங்குங்களிலும், தங்கள் சாதிக் கோயில்களில் பூசாரியாக்கும் சாதிய மரபுகள் அனைத்தும் சாதிய சிந்தனையிலானது. கோயில் கருவறைக்கு வெளியில் பக்குவமாக தங்கள் சாதிய மரபை பின்பற்றுவது வரை, எல்லாம் சாதிய - மத வாழ்க்கைமுறை தான். இப்படி இதைக் கண்டுகொள்ளாது கூடி வாழ்ந்தபடி, சாதியம் குறித்து பேசுவது சாதிய திரிபுகளே. திருமணம், மரணங்கள் எங்கும் சாதியச் சடங்குகளை பின்பற்றிக் கொண்டு, தங்கள் குடும்பத்தில் சாதி பார்த்து திருமணம் செய்ய வைக்கின்றவர்களே, சாதியம் குறித்துப் பேசுகின்றனர். இவர்கள் முன்வைக்கும் சாதியம் குறித்த கருத்துகள், சாதியைப் பாதுகாத்தல் தான். போலி இடதுசாரியத்தில், இந்த சாதிய சிந்தனைமுறை புளுத்துக் கிடக்கின்றது.

சாதிய வாழ்க்கையே தங்கள் வாழ்க்கை முறையாக்கிக் கொண்டு, பொது இடங்களில் சில சாதிய பாகுபாடுகளை எதிர்க்கின்றவர்கள், தங்கள் வாழ்க்கையில் சாதிய வாழ்க்கையைப் பின்பற்றுகின்றவராக இருக்கின்றனர்.

இது ஒடுக்கும் சாதிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகள் எங்கும் இந்த வெள்ளாளிய சாதிய சிந்தனையில் வாழ்ந்தபடி, சாதிய சடங்குகளை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக் கொண்டு வாழ்பவர்களாக இருக்கின்றனர்.

சுhதியம் என்பது வெள்ளாளியச் சிந்தனையாக இருப்பதை ஏற்க மறுக்கின்றவராகவும், இதை முன்வைக்க மறுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அதேநேரம் பொது இடங்களில் சில சாதிய மீறல்களைக் கண்டிப்பவராக இருக்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் பிறப்பிலான சாதியைக் கொண்டு சாதியைக் காண்பவர்களாக. சாதியம் என்பது சாதிச் சமூகத்தின் சிந்தனை முறையாக இருப்பதை மறுப்பவர்களாக இருக்கின்றனர். சாதிப் படிமுறை அடுக்குகளில் மேலிருப்பவர்கள் மட்டும் தான் சாதியச் சிந்தனையோடு இருப்பதாக கூறி மற்ற எல்லா சாதி அடுக்குகளிலுமுள்ள சாதியச் சிந்தனைமுறையை மறுப்பவர்களாகவோ அது குறித்து பேசுவதை மறுப்பவர்களாக இருக்கின்றனர். இதன் மூலம் சாதியம் என்பது சாதிய வாழ்க்கை முறையாக இருக்கின்றது என்பதை ஏற்க மறுத்து, சாதியை பாதுகாக்கின்றனர். தங்களின் இந்த சாதிய வாழ்க்கை முறையில் உள்ள பொது அமைதியைக் குலைக்கும் சலசலப்பைக் கண்டு குலைப்பதே நடந்தேறுகின்றது. இதன் மூலம் சாதி குறித்த தங்கள் கருத்தை சாதிக்கு எதிரான கருத்தாகவும் - அரசியலாகவும் மாற்றி, சாதியை பாதுகாப்பது நடந்தேறுகின்றது. இன்று சாதிக்கு எதிராக சாதி குறித்த கருத்துகள் பெரும்பாலானவை, சாதியைப் பாதுகாக்கும் நவீன வடிவமாகும்.