Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மொழியால் அழிந்த உயிர்கள், இனத்தால் அழிக்கப்பட்ட உடைமைகள்

“…………ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை எதிர்பார்ப்புக்களை தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கும்………………………………………………………………..

…………..எம்முடைய இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள் வெறுப்புக்கள் புரிந்துணராமை போன்றவை மற்றையவரின் மொழியை நாம் தெரிந்து கொள்வதால் அவை இல்லாதாக்கப்படுகின்றன அல்லது இல்லாதாக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன. ஆகவே சகோதர மொழியைக் கற்பதால் சகோதர மக்களிடையே நிலவும் எம்மைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்க அது உதவி புரிகின்றது.”

(கடந்த செப்டெம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து)

நாட்டில், 1956ல் “சிங்கள மொழி மட்டும்” சட்டம் கொண்டு வரப்பட்டபோது அன்றைய தமிழர் பிரதிநிதிகள் யாராவது ஒருவர் இந்த உரையை நிகழ்த்தியிருந்தால் நாமும் நமது நாடும் இன்று எப்படி இருந்திருப்போம்? ஒன்று மட்டும் உறுதியாகக் கூறமுடியும். ‘முள்ளிவாய்க்கால்’ என்ற ஊரை உலகம் அறிந்திருக்கவே அறிந்திருக்காது. வன்னிப் பேரழிவு இடம் பெற்றிருக்காது. எமது உறவுகள் உயிழந்திருக்காது. நமது குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டிருக்காது. எங்களது ஊர்கள் நிர்மூலமாக்கப்பட்டிருக்காது.

அப்படியானால் அன்று இப்படி உரையாற்றக்கூடிய ஆற்றல்-அரசியல் தீர்க்கசனம் உள்ள தலைவர்கள்-அறிஞர்கள் எவரும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இருக்கவில்லையா? அல்லது இருந்தும் தங்கள் சாதி-சமய-பால்-வர்க்க ஆதிக்க சிந்தனையின் சுய லாப அரசியல் காரணமாக மௌனம் காத்தார்களா?

வரலாறு அன்றைய தலைவர்கள் தமது சுயலாப அரசியலால் ‘மௌனம்’ காத்தது மட்டுமல்ல மக்களைப் பிளவுபடுத்தி வைத்துத் தாங்கள் பிழைக்க வழிவகுத்ததையே காட்டி நிற்கிறது.

இது பற்றிய தீர்க்கதரிசனம் நாடு சுதந்திரம் அடைய முன்னரே ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்’ தொண்டர்களுக்கு இருந்தது. அதனால்தான் ஆங்கிலேயர் எழுதிய ‘அரசியல் சாசனத்தை’ அன்றே அவர்கள் நிராகரித்தனர். அவேளை மலையக மக்கள் உட்பட “நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம்” என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் வரையப்படல் வேண்டும் எனவும் போராடினர்.

அவர்கள்தான் இலங்கையில் ஆங்கிலக் கல்வியால் ஏற்படும் அடிமைத்தனப் புத்தியை மறுதலித்து ‘தாய்மொழிக் கல்வியையும்’ இரு மொழி கற்றலின் அவசியத்தையும் எடுத்துரைத்தவர்கள். அன்று தமிழ்ப் பிரதேச பாடசாலைகளில் சிங்கள மொழி ஒரு பாடமாகவே கற்பிக்கப்பட்டது.

ஏகாதிபத்தியத்தின் ஆபத்தை அன்றே அவர்கள் நன்குணர்ந்திருந்தனர். ஆங்கிலேயரால் வரையப்படும் அரசியல் சாசனம் இலங்கைக் குடிமக்களை இன-மத-சாதி-பால்-வர்க்க ரீதியாகப் பிளவுபடுத்தி வைத்துக் கொண்டு ‘சுதந்திர நாடு’ என்ற போர்வையில் தமிழ்-சிங்கள கனவான்கள் ஊடாக தனது பொருளாதாரச் சுரண்டலை தொடர்ந்தும் அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்கள். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என இடித்துரைத்தார்கள்.

ஆனால் தாய்மொழி அறியாத தமிழ்-சிங்களத் தலைமைகள் தாய்மொழியைக் காட்டி குடிமக்களுக்குப் புரியாத அந்நிய-ஆங்கில மொழியிலேயே அரசியல் செய்தனர். குடிமக்கள் உண்மைகளை தாய்மொழியில் சொன்னவர்களை நிராகரித்தனர். பொய்களை ஆங்கிலத்தில் சொன்னதால் ஆதரித்தனர்.

இன்றும் ஆங்கிலத்தில்தான் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பின்னர் அவரவர் வசதிக்கேற்றவாறு தமிழில் வியாக்கியானம் செய்யப்படுகிறது.(உ-ம்) (கடந்த ஆண்டு வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ தீர்மானம்.) ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட முதலமைச்சர் உரையும் ஆங்கிலத்தில் ஆற்றப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதே. 60 ஆண்டுகளுக்குப் பின்னராவது மொழிவெறியின் பாதிப்புக்கள் உணரப்பட்டு தமிழ்த் தேசியத்தின் சிந்தனை மாற்றமடைந்திருப்பது பாராட்டப்படவேண்டியதே.

இனவாதம் ஒரு நஞ்சு’ என்பதையும் இனவாத அரசியல் தவிர்க்கப்படல் வேண்டும், இல்லையேல் அது நாட்டையும் மக்களையும் நாசமாக்கி விடும் என்பதையும் அன்றே சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்’ மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்தது. ஆனால் எமது அரசியல் தலைமைகள் தங்களது சுயநல சிந்தனையால் குடிமக்களுக்கு அந்த ‘நஞ்சையே’ ஊட்டி வளர்த்தனர். இன்றும் அதனை தொடர்ந்து செய்கின்றனர்.

இந்த ‘இனவாத நஞ்சு’ எத்தனை லட்சம் மக்களை காவு கொண்டு விட்டது? எவ்வளவு கோடி சொத்துக்களை அழித்து விட்டுள்ளது. பரம்பரையாக பாதுகாத்து வந்த பாரம்பரிய வீடுகள்-நிலங்கள்-பழம் தரும் மரங்கள்-பாவனைப் பொருட்கள்-ஞாபகார்த்த பொக்கிஷங்கள்-பாடசாலைகள்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள் யாவுமே அழிக்கப்பட்டு விட்டன. மனிதப் பண்புகள்-மானிடப் பெறுமானங்கள் அற்ற ஒரு சமூகத்தை இந்த நஞ்சு உருவாக்கியுள்ளது. ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்பது இன்று யதார்த்தமாகியுள்ளது.

நாட்டின் ‘நல்லிணக்க அரசாங்கம்’ இந்த ‘இனவாத நஞ்சை’ கவர்ச்சிகரமான உறை போட்டு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் பாராளுமன்றப் பிரதிநிதிகள் மூலம் குடிமக்களுக்கு விநியோகம் செய்கிறது. ஆனால் நாளாந்தம் நடைபெறும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் குடிமக்களை இனவாத சிந்தனையிலிருந்து விலகவிடாமல் வைத்திருப்பதனைக் குறியாக வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.

அதற்கு உதாரணம் அண்மையில் பாராளுமன்ற விவாதத்திற்கு விடாமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட "காணாமல் போனோர் காரியாலயம்" (Office on Missing Persons) என்ற சட்டமாகும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையையும் கொடுப்பது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் உண்மையில் இந்த சட்டம் குடிமக்களை இனவாத அலையில் நீந்தத் தூண்டும் அதேவேளை சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிவாரணம் வழங்க நாட்டில் ஏற்கனவே அமுலில் இருக்கும் சட்டங்கள் போதுமானதாக இருக்கையில் நடைமுறை விளைவுகள் எதுவும் ஏற்படுத்த தகுதியற்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளனர். இப்புதிய சட்டம் காணாமல் போகச் செய்தவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் மட்டுமே தவிர வேறொன்றுமல்ல.

நாட்டில் இனவாதத்தை இல்லாமல் ஒழித்து குடிமக்களின் இணைவாக்கம் வேண்டி உழைப்பவர்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கிறது. அவர்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறைகளைப் பாவிக்கிறது. இதற்கு தமிழ்-சிங்கள இனவாதத் தலைமைகள் துணை நிற்கின்றன. காரணம் ‘இணைவாக்கம்’ வந்துவிட்டால் இரு தரப்பினரும் தங்கள் இனவாதப் பிழைப்பை தொடரமுடியாது என்பதேயாகும்.

பரஸ்பரம் ஒவ்வொருவரும் மற்றவர் மொழியைக் கற்போம். அதனூடாக இணைவாக்கம் கொள்வோம். அதுவே இனவாதத்தை வேரறுக்கும். இதுவே இலங்கையின் இறைமையை பாதுகாத்து குடிமக்களுக்கு சுபீட்சகரமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான ஒரேயொரு வழியாகும்.