Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! (தொடர்: 7)

 

தமிழக மகா கவியாம்
சுப்பிரமணியபாரதி தானே சாமியாடி
தன் வீட்டுக் கூரையாலும்
பொத்துப் பொத்தென வீ ழுமென
கோரிக்கை மேல் கோரிக்கை வைத்த..!?

 

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

இப்படி..!
சொந்தக் காணியில் வீடும் – அதில்
தென்னங் கீற்றிடையால் தென்றல் வீசிவர
எமதூர்க் கிணறுகளில் குமரிகள் நீராட..,

சமதரையில் தென்னை – பனை
தோட்டம் – வயல் – கடலொடு
வனமும் – காடும் இயற்கையாய்
எங்களின் முன்றலிலே முற்றமாய்
குவிந்து கிடந்த வாழ்வுகளை..?

விமானத்தால் பொதியெறிந்து
அமைதியெனப் பேசிவந்த
இந்தியப் படையரின் கண்பட்டு..!??

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா, நின்றன்
காவலுற வேணும் – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

இப்படி..!!
அந்தக் கவிஞன்
ஒவ்வோர் பாரத மனிதருக்குமான
சுகவாழ்வு பற்றிய சேமவாழ்வினை
அந்தக் காலத்தில் பதிந்ததனை
இந்தக் காலத்து இந்திய அரசியலால்..??

எமது அரசியல் விருப்பை இகழ்ந்து..,
எமதூரின் எத்தனையோ பெண்களை
கடத்திக் காமுற்றுக் கொன்று..!?

எங்களின் மண்ணினை அகழ்ந்து
அதனுள்ளே பசளையாய்
அவர்களைப் பொதிந்து..,

தாம் வளர்த்த
எம் மண்ணின் கரங்களை
வேள்விக் கடாய்களாய் மோதவிட்டு – அதில்
தினந்தினமாய்க் கொன்றதில் வென்றாரை
தம் நிலைக்குள் வீழவைத்து – அவர்
கருக்கலையும் காயடிக்க
வேலிகளை.., மதிற் சுவர்களை..,
பூஞ்செடிகளை.., பெரு மரங்களை..,
தோட்டந் துரவு.., வயல் நிலங்களை..,
ஊடறுத்து உழுது சென்ற
ஆயுத ஊர்திகளின்
அதிகார அட்டகாசங்களால்..,

எம் தேசத்து மனிதரை
அறுத்துப் போட்டது
இந்திய அமைதிப் படை.

!?…அவை.., ஒவ்வோர் மனங்களிலும்
உடல்களிலும் ஆறாவடுக்களாகி
எம் தேசத் தென்றற் காற்று
எனைத் தீயாய்ச் சுட்டது.

அமைதியின் பெயரால்
அதிகாரத்தின் வக்கிரத்தால்
எம் தேச மக்களை
அடக்கி ஒடுக்கி
அழிச்சாட்டம் போட்டபின்பு
அதுகள் அடங்காத அனுமாராய்
அவ்விடம் விட்டு அகன்றாலும்..!?

அதற்கு அடுத்தடுத்த போர்கள்
தனித் தனியாய் முளைத்து
உயர வளர்ந்து தோப்பாய்த் தெரிந்த
தென்னைகளும் பனைகளும்
புதுக் குருத்தெடுக்கும் வட்டிழந்து
எரிந்த தீக்குச்சின் தத்துவமாய்
ஆங்காங்கே தவித்துக் கிடந்தன.

(தொடரும்)

-மாணிக்கம்

22/02/2012

 

தொடரின்முன்னையபதிவுகளைவாசிக்க:

 

1.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 01

 

2.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 02

 

3.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 03

 

4.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 04

 

5.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 05

6.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 06