Sat09232023

Last updateSun, 19 Apr 2020 8am

நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! - (தொடர்: 6)

ஊர் உறவை அறுத்து

பணம் பொருள் சம்பாதிக்க..,

அக்கம் பக்கத்தாரின்

காணி நிலத்தைச் சுறண்டி

அதற்கும் மேலாய்

அரையடி வேலிக்குள்

கொலை வெறியாடி

தன் சொந்தங்களை வெறுத்த

எனது மாமனும்..!

 

 

புரட்சியெனும் பூங்காற்றை

அது என்னவென்றே புரியாது

அதனைப் பிடுங்கி அறுத்தெறிந்து

வக்கற்ற அரசியல் அறிவிலியாய்

சொந்த மரத்தின் கோடரிக் காம்பாய்

மனித இனத்தின் அழிப்பாளனாய்ப் புறப்பட்ட

டக்கிளசின் டார்க்கிளாஸ் வக்கிரங்களும்..!?

 

தமிழ்க் கொங்கிரஸ் கட்சி முதல் – இன்று

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை…

 

கீ.பியின் வட்டுக்கோட்டைத் தீர்மானமுதல்

கே.பியின் குறுந்தேசியப் புலியழிப்பில் உருவான

உருத்திரகுமாரனின் நாடுகடந்த தமிழீழமும்..!?

 

தமக்கான உண்மை வாழ்வின்

அடிமுடியறியாது ஏம்பலிக்கும்

ஒவ்வொரு மக்களின் உயிரையும்..,

 

தங்களின் சுய நலனுக்காக

உயிறறுக்கும் ஆயுதம் விளைத்து

அதனைக் கள்ளச் சந்தையில் விற்று

அபரிமிதமாய்க் காசு பணமுழைத்தவாறு..!

 

அதன் சமதளத்தில்

அமைதியெனப் பேசி

உளவுத் துறைகள் மூலமாக

சொக்கட்டான் உருட்டி..!!

 

உலக இயங்கியலையே முடக்கி

பைபிளை முதன்மை காட்டி

அதில் மோசேயை தூக்கிப் பிடித்து

யூதரை இஸ்ரேலில் அமரவைத்து

ஆங்கே அணுவாயுத விளைச்சலிட்டு..!?

 

எரிபொருளுக்காய் மக்களை எரிக்கின்ற

அமெரிக்க ஐரோப்பிய அரசியலின்

பூடக வக்கிரங்கள் பெருக்கி..,

 

அதற்கெதிராய்

மக்களை கிளர்ந்து எழாதவண்ணம்

 

சில வெள்ளாந்தி மனிதர்களை

பைபிளின் புதிய ஏற்பாட்டால்

மூளை கழுவி முழுக்காட்டி

அவர்களைத் தங்களின் சதிச் சாட்சியாய் உருவாக்கி

அவர்களையே மறு வீடெங்கும் ஏற்றியிறக்கி

மதமாற்றுப் போதனை செய்யும்

அந்தக் காலக் கத்தோலிக்கர் முதல்

ஜெகோவாவின் சாட்சி என்பாரை..!?

யேசு ஜீவிக்கின்றார் என்பாரை..!?

இப்படி இன்னும்

எத்தனையோ குழுக்களைக் கட்டி

சிறிதுமுதல் பெரிதான நிறுவனமாக்கி..,

 

சொர்க்கமும் நரகமும்

ஆவியும் பேய்களுமாய்

அந்த மூடத்தனங்களை

கொண்டு அலைகின்ற

அந்த மாந்தர்க்கு

பணிகளும் படிகளும் அளக்கின்ற

ஆயுத விற்பனையாளர்போலவே..,

 

இப்படி மண்கொள்ளையிடும்

இவர்களின் வாகனங்களை

இடை மறித்துக் கேள்விகேட்க

எந்தன் மனம் முண்டியத்தது.

 

இப்படியான எந்தன் துக்க மனதை

ஆழ் மனதென்ற நல்லமனிதம்

அமைதி.., அமைதி.., என்றது.

 

ஆயினும் அதன்பின்பாக

அந்த மனம் எனக்கு

அறிவுரை வேறு சொன்னது..!?

 

இத்தனை கோள்களுடனும்

இந்தப் பூமியும்

சம தளத்தில் சுற்றி

எத்தனையோ மாற்றங்களுடன் வாழும்போதும்

எமது மக்களில் அதிகமானோர்

இன்றுவரை எந்த மாற்றமுமற்று

பிள்ளை குட்டி பெறுவதும்

காசு பணம் பிழைப்பதும்

அரை இஞ்சிக் காணிக்கு அடிபடுவதும்

அண்டை வீட்டுப் பிள்ளைகளை

அடிமையாகப் பிரயோகிக்கும்

அதே பழைய குண்டுச் சட்டிக்குள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்

..!? வாளொடு தோன்றிய தமிழராய்

 

மத வெறியராக

சாதியில் வக்கிரராக

இனத் துவேசராக

மொழிவெறிக் கும்பலாக

 

மனிதத் தோல் போர்த்தி

சொந்தங்களை அளிக்கும் நரமாமிசராக

புரட்சியெனும் பெயருக்குள்

சொந்த மக்களை இழுத்தெடுத்து

இந்திய ஆட்சியர்

ஈழப் போராளிகளைக் குழுக்கட்டிப் பிரித்து

எப்படியான பிரித்தாள்கையினைச் செயற்படுத்தினரோ

அவற்றின் அடிப்படையில்

 

நாயைக் கொன்று

அதை நாறிப் புழுக்கவைத்து

அந்தப் புழுக்களிடை பசிமூட்டி

அவை ஒன்றையொன்று கொன்று தின்று

எஞ்சி வளர்ந்து தினவெடுத்த

தனிக் காட்டுப் புழுவொன்றை

பதம் செய்து தின்கின்ற

பழங்குடிவாழ் கொரியரைப்போல்

 

ஆங்கே புலியினத்து வேட்கைளும்

பாரதத்தின் பாலியற் படிமங்களும்

சிங்கமுகப் படையினத்தின் கொடுங்கோலும்

பச்சைப் பசுமைமீது

நீல நிலவாகித் தெரிந்தது.

 

மாணிக்கம்

21/01/2012

(தொடரும்)

தொடரின்முன்னையபதிவுகளைவாசிக்க:

1.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 01

2.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 02

3.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 03

4.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 04

5.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! -தொடர் : 05