Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னைநாள் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் கூற்று..?

போராளிப் பெண்களை விடுதலைப்புலிகள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்..!

இந்திய ஜனநாயக நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நான்கு ஆண்களுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய செய்தி அனைவரும் அறிந்ததே. இதுபற்றி 13.9.2013 அன்று புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் நடந்த கருத்தாடலில் முன்னை நாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ஒடுக்கப்பட்ட இந்திய தலித் மக்களுக்கான சமூக சமத்துவப்படைத் தலைவியுமான சிவகாமியும் கலந்து கொண்டார்.

இவர் தனது விருப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதுடன், ஒடுக்கப்பட்ட மக்களை இவர் மூலமாக மென்மேலும் ஒடுக்குவதற்காகவே திட்டமிட்ட முறையில் இவரை விருப்பு அடிப்படையில் ஓய்வு பெறச் செய்தனரோ..? என எண்ணத் தோன்றும் வகையில் இவரது கருத்துகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது. இதேவேளை இவரை நம்பி இந்திய இந்துச் சாதிய வக்கிரத்தால் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை, இவருக்கு ஊடாகவும் நம்பவைத்து கழுத்தறுக்கும் சூழ்ச்சியை கையில் எடுத்திருக்கின்றார் இந்தச் சிவகாமி.

இவர், தமிழீழவிடுதலைப் புலிகள், பெண் புலிகளை பாலியல் இச்சைக்காகவே தமது படைகளில் பயன்படுத்தினார்கள் என நேரலையில் குற்றம் சுமத்தினார். அத்துடன் இவை பத்திரிகைச் செய்திகளில் வந்துள்ளது எனவும், பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தன்னிடம் இது பற்றிக் கூறிய ஒளிப்படப் பதிவும் உள்ளது எனவும் குறிப்பட்டார். ஆனால் இவர் எந்தப் பத்திரிக்கைகளில், எப்போது இச் செய்தி வெளி வந்ததென்ற எந்தவித விபரங்களையும் வெளியிடவில்லை.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் மட்டுமல்ல, பெரும்பாலும் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களிலும் பெண்கள் இணைந்து கொண்டார்கள். இவ்வாறு இணைக்கப்பட்ட பெண் போராளிகள் அரசியல் பணிகளில் மட்டுமல்ல பயிற்சி பெற்று, பல இராணுவத் தாக்குதலிலும் பங்கு பற்றினார்கள். இப் போராளிப் பெண்கள் சக போராளியாக இயக்கங்களிலும் சமூகத்திலும் மதிக்கப்பட்டார்கள். சமையல்காரியாகவும், துணி துவைப்போராகவும், ஆண்கள் கிண்டல் செய்கையில் தலை குனிந்தவளாகவும், பிள்ளை பெறும் இயந்திரமாகவும், கணவனுக்குச் சுகமளிக்கும் படுக்கையாகவும், மாலையானதும் வீட்டிற்கு வெளியே போகக் கூடாது என்றும், வீட்டிற்கு விலக்கு என பெண்ணின் மாதவிடாய்க் காலத்தில் விலக்கி வைத்திருந்த சமூகத்தில், பெண்களும் துப்பாக்கி ஏந்திக் களமாடும் வல்லமையை உருவாக்கியது ஈழ விடுதலைப் போராட்டமாகும். இதில் வறிய - வசதியான குடும்பங்களில் இருந்தும் பெண்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இப் பெண்கள் மிகவும் இறுக்கமான யாழ் சமூகக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டு போராட்டத்தில் பங்கு பற்றியதுடன் இவர்கள் ஆண்களுக்கு நிகராக பெரும் சாதனைகளையும் நிகழ்த்தினார்கள். இவ்வாறான பெண்கள் அனைத்து இயக்கங்களிலும் மிகவும் கட்டுப்பாட்டுடனும் மதிப்புடனும் பேணப்பட்டனர். இருந்தும், எந்த தவறுமே இயக்கங்களில் நடந்திருக்காது எனக் கூறமுடியாது. இது ஈழப் போராட்டத்தில் மட்டுமல்ல, உலகறிந்த அதிகமான பல போராட்ட வரலாறுகளிலும் சிறிதும் பெரிதுமான தவறுகள் நடந்திருக்கின்றன. இப்படியான உதாரணங்களை எடுத்து வைத்துக்கொண்டு பெண் போராளிகள் தவறாக்கப்பட்டார்கள் என்றோ, ஆண் போராளிகள் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, விடுதலைப் போராட்டத்தை விட்டு பாலியலுக்காக அலைந்தனர் என்றால், இந்தச் சிவகாமியைத் தவிர போராட்ட வாழ்வைப் புரிந்த எவராலும் இக் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது.

போலி ஜனநாயக இந்தியப் பஞ்சாயத்துப் போதனைகளுக்கு ஊடாக, தமிழீழ விடுதலைப் பெண் போராளிகளை இவர் பாலியலுக்கு ஊடாகவே பார்ப்பதுடன், ஈழத்தில் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இனி வரும் காலத்தில் எந்தவித புதிய போராட்டங்களும் எழக்கூடாது, அதில் எந்த வயதுப் பெண்களும் இணைந்துவிடக் கூடாது என்ற அனைத்து வீரியத்தையும் மிகச் சுலபமாக உடைத்துச் செல்லும் கருத்தியலில் இவர் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

மேலும் போர் முடிவடைந்த காலத்தில் சிறிலங்காப் படைகளின் பகுதிக்குள் தஞ்சமடைந்த பல புலிப் பெண் போராளிகளை சிறிலங்காப் படைகள் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதையும், சிலரை பாலியல் வன்புணர்வு - வக்கிரம் செய்து கொன்றொழித்த கொடுமைகளைச் செய்தனர் என்பதையும் இந்த அறிவாளி ஐ.ஏ.எஸ். சிவகாமி எதற்காக மறுதலிக்கின்றார்.

ஒரு அறிவுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்படிக் கருத்துக் கூறுவதன் மூலமாக தனது அறிவாற்றல் பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளார் அல்லது இவர் தனது ஓய்வுக் காலத்திற்கு முன்பாக தனக்குரிய அதிகாரிப் பொறுப்பிலிருந்து வெளியேறியமைக்கான காரணமாக இவர் இப்படியான சமூகச் சீரழிவிற்கு இட்டுச் செல்லும், மக்கள் போராட்டங்களை அடியோடு அழிப்பதற்கான சதிகளில் ஈடுபடுவதற்காகவே ஆகும் என இவரை நோக்க வைக்கின்றார்.

இந்த சமூக சமத்துவப் படைத் தலைவி சிவகாமி ஐ.ஏ.எஸ்., தலித் கவசத்தை தனக்கு முன்னால் வைத்திருப்பதன் மூலம், புலிகளின் நியாயமான பக்கங்களை தனது அபாண்டங்கள் மூலமாக மறுதலித்துவிட முடியாது என்பதே உண்மை. பாசிசங்களுக்கு இடையிலான மக்கள் விடுதலைப் போரில் தோற்கப்பட்ட புலிகளின் வேதனைக்குரிய புலிப் பெண்களின் வெம்புண்ணில் இந்தச் சிவகாமி அபாண்ட வேல்களைப் பாச்சிப் பார்ப்பதில் இருந்து, இந்தச் சிவகாமி, நொந்து போயிருக்கும் தோற்கடிக்கப்பட்ட புலிப் பெண்களை மென் மேலும் நோகடிப்பது மட்டுமல்ல, எதிர்காலப் போராட்டங்களையே அழித்து ஒழிப்பதில் முன்னிற்கும் இந்திய - சிறிலங்கா மற்றும் சர்வதேச உளவுப் படைகளின் தொடர்பாளராகவே நாம் இவரைக் காணவேண்டியுள்ளது.

இப்படி ஒடுக்கி அடக்குவோரின் அடிவருடியாக இவரே இருக்கும்போது, இவரை நம்பிய தலித்துகளின் விடுதலைப் போராட்ட நிலையும், அவர்களின் எந்தப் போராட்டமும் வெற்றி பெறப்போவதில்லை என்பதே திண்ணம். இவரை நம்பியிருக்கும் அனைவரும் இவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ் முன்னை நாள் அதிகாரியும், ஒடுக்கப்பட்ட இந்திய தலித் மக்கள் குழுமங்களுக்கான சமூக சமத்துவப்படைத் தலைவியுமான சிவகாமி, ஈழப் போராளிப் பெண்களை கேவலப்படுத்த முயன்ற இவர் தன்னைத்தானே கேவலப்படுத்தியுள்ளார் என்பதே உண்மை. எனவே இது போன்ற பிதற்றல்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒடுக்குமுறைக்கான போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்.

- மாணிக்கம்