Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

மனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..!

தெற்காசியப் பிராந்தியத்தில், உலகப் பெருமட்டான யுத்தமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆணிவேரை சிறிலங்காவின் அரசு அறுத்தழித்தது. அந்த அழிவுக்குள் எந்தவித நாதியும் அற்று நின்ற ஒரு தொகை தமிழ் மக்களின் உயிர்கள் தொலைக்கப்பட்டது. இதன் போது, புலிமீதான அழிப்பை மட்டும் வல்லாதிக்கர் தனித்து நடந்தியிருந்தால், அது புலியழிப்பு மட்டுந்தான். ஆனால் இவ்வழிவுக்குள் இலங்கையின் ஒரு தேசிய இனம் தொகை மதிப்பின்றி அழிக்கப்பட்டது. அதில், புலிகள் மக்களை யுத்தப் பகுதிக்குள் முடக்கி வைத்திருந்தார்கள் என்பதாகும். ஆனால், அந்தச் சூழலை அரச யுத்தத் தரப்புகளும் தமது யுத்த தந்திரத்தில் அதனையே விரும்பினர்.

இந்த மக்கள் மட்டுமல்ல, நேரடி யுத்தப் பிரதேசத்திற்குள் அகப்படாத வடக்கு கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை "நீங்கள் ஏன் வன்னிப் பிரதேசத்திற்குப் போகவில்லை" என, சிறிலங்கா இராணுவ அரச நெறியாள்கை வன்முறை செய்தது. இதேபோல புலிகளும் முன்பு ~அனைவரும் வாருங்கள் வன்னிக்கு வாழ்வு தருகிறோம்| என்றவர்கள், அங்கே போக மறுத்தோரையும் - முடியாதோரையும் வேறு வழிகளில் தண்டித்தனர். அதைவிட மாற்று அரசியலாளரையும், மற்றைய தேசிய இனத்தவரையும் அவர்களின் வாழ்விடங்களில் இருந்தே துரத்திக் கலைத்தார்கள். அதிகமானோர் மீது வன்முறை செய்தார்கள். தாம் கைப்பற்றி வைத்திருந்த இராணுவக் கவச வாகனத்தால் தலையில் ஏற்றி சிதறடித்தார்கள். எதிர்த்துக் குரல் எழுப்பியோரில் சிலரை சுட்டுக் கொன்றார்கள்.

புலிகளின் இறுதிக் கோரிக்கையை ஏற்று, சகோதர யுத்தச் சீரழிவு வேண்டாமெனத் தமது ஆயுதங்களை ஒப்படைத்த மாற்று இயக்கப் போராளிகளை, தமிழ்த் தேசிய வெறியின் உச்சத்தில் நின்று, சிரித்துச் சிரித்தே சுட்டுக் கொன்றார்கள். இவர்களால் சாகடிக்கப் பட்டோருக்கு, இவர்கள் தமது அரசியலால் வாழ்த்தி மதிப்புக் கொடுத்ததெல்லாம்..! துரோகி - உளவாழி - சீ.ஐ.டி. - சிங்களவனுக்கு வம்பிலை பிறந்தது - தமிழீழ விரோதி - கொலைக் கும்பல் - அங்கை கொலை செய்தவங்கள் - இங்கை கொள்ளை அடிச்சவங்கள் - அங்கை தாட்டுக்கிடந்த பெண்களை இவங்கள் தான்..? இப்படி புலிகளின் சித்திரவதையால் தப்பி மீண்டு வந்தவர்களுக்கும், அதைச் செய்த புலிகளுக்குந்தான் தாம் சாட்டிய குற்றச்சாட்டுகள் அபாண்டமான பொய்யெனத் தெரியும். புலிகளின் உண்மையான முகம் என்ன என்பது பற்றி, அவர்களை நம்பிய மக்களுக்கு தெரியாது என்பதும் ஒரு பக்க உண்மைதான்.

அதிகமான தமிழ் மக்கள் கடவுள் மீது தாம் வைத்துள்ள நம்பிக்கை போலவே, முன்பு புலிகள் மீது அதீதமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அதனால் புலிகள் செய்த மக்கள் மீதான, மற்ற இயக்கங்கள் மீதான அநியாயங்களை - அட்டூழியங்களை - கொடூரங்களை - கொலைகளை - அழிப்புகளை, தமிழீழ விடுதலைக்கான அரசியலாக அம் மக்கள் ஏற்றுப் போற்றினார்கள். அந்த அட்டூழியங்கள் தனக்குத் தனக்கு என, தம்மீது வந்தபோதுதான் அம் மக்கள் புலிகளின் உண்மையான பாசிச முகத்தைக் கண்டார்கள். ஆகவே தமிழின அழிவுக்கு தமிழ்த் தேசிய வெறியர்களும் முக்கிய பொறுப்பு ஏற்கவேண்டும்.

புலிகள் ஏனைய போராட்ட இயக்கங்களை மானசீகமாக இணைக்க மறுத்ததுடன், அவர்களின் அரசியல் அபிலாசைகளையும், நகர்வுகளையும் வேரோடு காயடித்தார்கள். அதன் மாற்றாக அமெரிக்க - தமிழ்ச் சதிவலையின் வழிகாட்டலில் புலிகள் வீழ்த்தப்பட்டு அல்லது சிக்குண்டு, உலகின் வல்லாதிக்க எதிரெதிர் அரசியல் முகங்களை இணைத்துப் பார்க்க வழிசமைத்தார்கள். இந்த வகையில் தனியுரல் குற்றிய அரிசி மக்களுக்குப் பசியாற்றாது என்ற அரசியலாகியது. இதற்குள்ளே குற்றுப்பட்ட அரிசி, மக்களின் அழிவுக்கான பருக்கையாகியது. இதுவே இனப் படுகொலையின் எண்ணிக்கையைத் தேடுகின்றது.

எந்தச் சூழலிலும், எந்த வகையான ஆயுத எதிரிகளை அழிக்கும் போது, நிராயுதபாணிகளும், மக்களும் அவர்களது வாழ்வாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு சாதாரண மனிதனின் அடிப்படை உரிமை. இதனை மதிக்காத எந்த அரசியலும் மனித விரோதமே ஆகும். இந்த இரு சாராரின் மனித அழிவுக்குள், வெற்றிவாகை தான் முக்கியம் என்பதையே கடந்த காலமும், தற்காலமும் முன்னிறுத்துகிறது.

2009 மே. வரையான புலிகளின் ஆயுப் போராட்டத்திற்கான காரணத்தை சிறிலங்கா அரசும், அதற்குத் துணைபோன உலக அரசியலும் இதுவரை ஆய்வு செய்வில்லை. அதற்கான தேவை இந்த வலதுசாரிய சுரண்டல் வாதிகளுக்குத் தேவையும் இல்லை. ஆனால் நாட்டின் தேசிய இனங்களை அழிக்கின்றோமே..! இது ஏன்..? இதற்கான மாற்று என்ன..?? என்பதற்கான அரசியலை இந்த வல்லாளர்கள் ஏன் சிந்திக்கவில்லை..!?

இதற்காகவே இவர்கள் மதத்தினை மக்களுக்கான மாற்று அரசியலாக முன்வைக்கிறார்கள். மதமே மக்களுக்காக பொருளுக்கான - வாழ்வுக்கான - அழிவுக்கான மீட்பையும், உற்பத்தியையும் தரும் என்கிறார்கள் போலும்.

இதற்காக தாங்கள் விரும்பும் மதத் தலங்களை ஆங்காகே கட்டுகிறார்கள். தங்களுக்கு விருப்பம் இல்லாத வேற்றுத் தலங்களை அடியாள் வைத்து உடைத்துத் தகர்க்கிறார்கள். இதுதான் வலதுகளின் பொருளாதாரச் சிந்தனை - கொள்கை எல்லாமே. இதனையே புலிகளும் முன்பு கடைப்பிடித்தனர். கோயிலை உடைத்தாலென்ன, கோயிலுக்குள் வணங்குவோரைச் சுட்டாலென்ன அனைத்துமே ஒன்றுதான்.

ஆக இப்படியான மக்களை மாக்களாக்கும் வலதுசாரிய அரசியல் எதுகுமே மக்களுக்கு ஆனதல்ல. இவ்வரசியல் இனங்களின் இணைவைப் பிரித்து, மக்களின் மகிழ்வைக் குலைத்து, மக்களின் அழிவில் இவர்கள் தங்களின் விருப்புகளை நிறைவேற்றிய ஆயுதப் போராட்மும் - யுத்தமுமே இன்று வெற்றிவாகை கொண்டாடும் நிலையாகும்.

இப்படி நடந்து முடிந்த சிறிலங்கா - தமிழீழ அரசியல் என்பதில், தனித்துப் புலிகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தால், அந்த வெற்றியை அரசு - இராணுவம் கொண்டாடுவது ஒருவகை. ஆனால் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொன்றுவிட்டு, அம் மக்களைக் கணக்கில் எடுக்காமல், அந்த இறப்புகளுக்கு மதிப்பளிக்காமல், யுத்த மீறல் சுவடுகளை - தடையங்களை தேடித் தேடி அழித்தவாறு, புலி அழிப்பின் மீதான கொண்டாட்டம் எனக் கூறி கொண்டாட்டம் நடாத்துதல் என்பது, சண்டியர்களுக்கு இடையே நடந்த வித்தைகளின் வெற்றி - தோல்வி என்பதாகும். ஆக, சிறிலங்கா அரசு என்பது இன்றைய நாளில் வெற்றி பெற்ற சூழ்ச்சிக்காரச் சண்டியன் அவ்வளவு தான்.

சண்டியர்களுக்கு மக்கள் மீதான அபிலாசைகள் எதுகும் பொதுவாக இருக்காது. அதனால் அனைத்து இன மக்களும், மக்களுக்கான இடது அரசியலை அறிந்து, அதனின் மனிதாபிமான நடைமுறையில் இணைந்து அனைத்துச் சண்டியரையும் அடித்துத் துலைக்க வேண்டும். இல்லையேல், இந்தச் சண்டியர்களின் சுத்துமாத்துகளை அரசில் என நம்புகின்ற அனைத்து மக்களுக்கும், வாழ்வுக்குப் பதிலாக அநியாயச் சாவுதான் மிஞ்சும். இந்தச் சண்டித்தன அரசின் வேறு சில ஆதாரங்களையும் இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இச் சண்டித்தன அரசு தனக்கு எதிராகப் புரட்சி செய்த ஜே.வி.பியினரை இம்மை மறுமையின்றி முன்பு அழித்ததுடன், அந்தப் புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பியோடி மறைந்து வாழ்ந்த ஜே.வி.பியினரை, மீண்டும் அரசு தனது ஆதரவாக்கி பின்பு ஆட்சியிலும் இணைத்துக் கொண்டது. அந்த அனுபவத்தினூடு தான், புலிகளையும் அடியோடு அழிப்பதற்கு சிங்களப் பெரும்பான்மை இனத்துக்குள் இவ்வழிப்புக்கான ஆதரவைப் பெற்றுக் கொண்டது. இந்த வகையில் ஜே.வி.பியின் அரச இணைவும் - புலிகள் மீதான அழிப்பும் - தமிழ் இனத்தின் மீதான துவம்சமும் சுலபமாக, ஏனைய இனங்களின் எதிர்ப்பின்றி நடந்தேறியது.

வன்னிப் பெரு நிலப் பரப்பில் புலிகள் தாமே தனிக்காட்டு ராசாவாகி, கடந்த கால தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் நின்று, தேவைக்கு ஏற்ப ஏனைய இனங்களை மட்டுமல்ல சொந்த இன மக்களையும் கறிவேப்பிலையாகப் பாவித்தனர். இவர்கள் தமது ஆயுத பலத்திற்குள், அதனை விரும்பாத மக்களை வெளியேற விடாது முடக்கி வைத்திருந்தனர். இவையே தமிழ்த் தேசிய இனத் துவம்சத்தை இந்த இனம் தனித்து மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துத் தேசிய இனங்களும் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

இவைதான் இலங்கையின் இன்று வரையான சாதாரண அரசியல் நிலவரம். இதற்கான அடிநாதமாக மொழி வெறிக்குள் நிற்கின்ற அமைப்புகளும், குழுக்களும், பிரமுகர்களும் அரசுடன் இணைத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள், மக்கள் நோக்கிய தங்களின் நிலைப்பாடுகள் பற்றி எந்தவித சுய விமர்சனமும் செய்வதில்லை. இன்றைய யதார்த்தங்களின் உண்மை நிலை என்ன ஏதென்று புரியாத மக்களுக்கு, இவர்கள் தங்களின் கொலைக்கள அரசியலைத்தான் முன்னகர்த்தி வருகின்றனர். இதனையே மக்களுக்கான அரசியல் என்கின்றனர். இவர்களும் சிறுகுழுச் சண்டியர்தானே.

இப்படிப் பல ஆண்டுகளாக மக்களை ஏய்க்கின்ற இந் நிலைப்பாடுகளையும், மக்களுக்கு உதவாத அரச இயந்திரத்தையும் தகர்த்து, இலங்கைத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் சேர்த்து ஒரு சிறிய சுதந்திரத் தனி நாடு, அதாவது தமிழீழம் எடுக்கவென பல்லாயிரக் கணக்கான கோடிகளை சொந்த மக்களிடம் வறிகியெடுத்து.., அன்னியருக்குக் கொட்டிக் கொடுத்து, பல்லாயிரம் போராளிகளை கொல்லக் கொடுத்து.., காட்டாற்று வெள்ளமாக போராட்டம் செய்தோரின் அரசியலில்...

ஆதரவற்ற மிகச் சாதாரண குடும்பங்களுக்கே உயிர் வாழ்வதற்கான உணவைக்கூட..? இவர்களால் (சார்ந்தோரால்) வழங்க முடியவில்லையே..?? அந்தக் குடும்பங்களுக்கு மனிதாபிமான மானத்துடன் வாழ்வதற்கான குறைந்த பட்ச வழியைக் கூடக் காட்டத் தெரியவில்லையே..!?

• இதற்கு உள்ளேதான் மீண்டும் தமிழீழம் என்கிறார்கள் சிலர்.

• நாடு கடந்த தமிழீழம் என்கிறார்கள் சிலர்.

• காணி பொலீஸ் அதிகாரம் என்கிறார்கள் சிலர்.

• அரசோடுதான் உறவாடுவோம் என்கிறார்கள் சிலர்.

• மதமாற்றமே அமைதிக்கான மனமாற்றம் என்கிறார்கள் சிலர்.

• அனைத்துமே அரசின் முடிவு என்கிறார்கள் சிலர்.

• உலக மொழிகளில் தமிழ் என்பது மட்டும் மொழியல்ல, அது கடவுள் என்கிறார்கள் சிலர்.

• இப்படியான சிலர்களின் கட்சிகள் - அமைப்புகள் - சாதி - மத - இனவாதக் கூறுகளை எந்தவித விமர்சனமும் இன்றி, மக்களுக்கான மனித அரசியலைத் தேட முடியாத சிலர், தாம் முன்பு விட்டகுறை தொட்ட குறைகளையே தொடர்வோம் என்கின்றனர்.

இப்படியாக உதயமும் வசந்தமும் தென்றலாகித் தாலாட்டுகின்ற சிறிலங்காவில், சிறுபான்மை இனத்தை சிறுகச் சிறுக என ஆரம்பித்து, பின்பு அத்தனை வல்லரசுகளின் சதிகளுடன் இணைந்து பெரிதாகவே யுத்த வதம் செய்து அழித்த சின்னஞ் சிறு நாட்டில், பௌத்த சிங்களப் பேரினவாதம் தாமே பெருமைப்பட்டு விழா எடுத்தே ஆகவேண்டும் என்றால்..? இதனை வைத்து தமிழ்த் தேசிய வெறியும் - பௌத்த சிங்களப் பேரினவாத வெறியும் இணைந்து அனைத்து இனங்களுக்கும் இடையில் நின்று தொடர்ந்து மார்தட்டுவதற்கே ஆகும். அடுத்து எங்கேயோ இனங்களுக்குள் ஏற்படுத்தப்போகும் மோதலுக்காகும்.

உண்மையில் இது அழிந்தோரை விட அழித்தோர்கள் படவேண்டிய அவமானம். இதிலேதான் போரில் வெறிவாகை சூடினோம் என பௌத்த சிங்களப் பேரினவாத வெறிநாள் குறித்துக் கொண்டாட்டம் நடக்கின்றது. இதனை தமிழ்த் தேசிய வெறித்தனம் தனக்கான அவமானம் என மக்களுக்கு கற்பிக்கின்றது. ஆனால் இது அனைத்து இனங்களுக்குமான தேசிய யுத்தவடு. இது தனிப்பட்ட ஒருவருக்கோ - தனித்தனி இனங்களுக்கோ ஏற்பட்ட அவமானம் அல்ல. இது அனைத்து இனங்களுக்குமான தேசிய அவமானம்.

- மாணிக்கம்