Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரிட்டிஷ் தொழிலாளர்க​ளின் லண்டன் ஆர்ப்பாட்ட​ம்: தேசிய நடவடிக்கை நாள்

உலகாளும் நிதி மூலதனம்

நிதி மூலதனத்தின் ஆதிக்கம் உலக அரங்கில் பெருகியதன் காரணமாக பல மாற்றங்களை உலகம் கண்டு வருகிறது. வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு முதன்மையான் காரணமாக அமெரிக்க வீட்டுக் கடன் மோசடித் திட்டங்கள், யூக வாணிபத் திட்டங்களைக் காரணம் சொன்னாலும் இதர உள்நாட்டுக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன.  பல ஐரோப்பியத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இரும்பு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பணக்கார நாடுகள் என்று கருதப்படும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொழில் நிறுவனங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மிக உயர்ந்த வாழ்நிலைமையில் வசதியாக இருந்த அயர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் திவால் நிலைமையை எட்டி ஐரோப்பிய ஒன்றியத்தால் மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளன. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், பிரிட்டன்,

பிரான்ஸ் போன்ற நாடுகள் இக்கட்டான நிலையினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் பொருளாதாரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டு அரசாங்கத்திற்கும், தனியார் மூலதனத்திற்கும் வேறுபாடு இல்லாத ஒரு நிலை உருவாக்கி உள்ளது. இதனால் நிறுவனங்கள் திவால் ஆவது போலவே நாடுகளும் திவால் ஆகி வருகின்றன.

ஆம் நாடுகள் எப்படித் திவால் நிலைமையை அடையும் என்று பலரும் திகைப்படையக் கூடும். ஆனால், அதுதான் உண்மை. முதலாளித்துவத்தின் ஒரு பரிமாணமாக நாடுகளின் பொருளாதாரங்கள் நிதி மூலதனச் சந்தைகளுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட பின்னர் நிதி மூலதனத்திற்கு ஏற்படும் அதே கதி இறையாண்மையுள்ள நாடுகளின் அரசாங்களுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளன. தனியார் நிதி முதலாளிகள் செய்து வரும் மோசடிகள் அல்லது பங்கு மார்க்கெட் சூதாட்டம் போன்ற மோசடித் திட்டங்கள் இறையாண்மை உள்ள அரசாங்கங்களையும் கட்டுபடுத்தி அவர்களை சூதாட்டத்த்தின் ஜாமீன்தாரர்களாக மாற்றி உள்ளன. நாட்டின் எல்லா நிறுவனங்களையும் நிதி மூலதன முதலாளிகள் தங்களின் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இதனால், சுரண்டல் எல்லை மீறி பங்குச் சந்தைக்கு சிறிதும் தொடர்பில்லாத சாதாரண மக்களையும் கூட வதைக்கத் தொடங்கிவிட்டன. முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்கள் எதுவும் இந்த மாயையை விளக்கும் நிலையில் இல்லை. புரட்சிகர இயக்கங்கள், மார்க்சியத் தத்துவ ஆசிரியர்கள் முன்னறிவித்த இந்த அரசியல் நிகழ்வு பல காலம் சொகுசு வாழ்வு வாழ்ந்து வந்த சாதாரண அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கும் புரியும் நேரம் வந்து விட்டது. இந்த நாடுகளில் தொழில் துறை வளர்வதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை என்பதால் சாதாரண மக்களுக்கு இதுவரை கிடைத்துவந்த நல்வாழ்வுத் திட்டங்கள் சிறுகச் சிறுக நிறுத்தப்பட்டுவருகின்றன. பிரிட்டனில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் இங்கே விவாதிக்கலாம். இந்த அரசியல் பிரிட்டிஷ் பொருளாதார நிலவரம் அநேகமாக எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் பொருந்தும்.

தேய்ந்துவரும் ஐரோப்பா பிரிட்டிஷ் அரசாங்கம் 2007  தொடங்கி 2009 வரையிலான காலத்தில் பெரும் பணத்தைப் பங்குச் சந்தைகளிலும் அமெரிக்க வீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்து நஷ்டமடைந்த வங்கிகளுக்கு சுமார் 3 ட்ரில்லியன் பவுண்டு (அதாவது 30,000 கோடி பவுண்டுகள்) பணத்தைக் கொடுத்திருக்கிறது, அவர்கள் செலுத்தவேண்டிய வரிகளையும் தள்ளுபடி செய்துள்ளது. இப்படிக் கொடுக்கப்பட்டதில் பெருவாரியான பணம் தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் சேமித்து வைத்திருந்த பணம். இது தவிர அரசு ஆண்டு தோறும் மக்களின் நல்வாழ்வு, மருத்துவச் செலவு, கல்வி, சாலைகள் போன்ற மக்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம். நெருக்கடி தீர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும், பணத்தைப் பெற்றுக்கொண்ட வங்கிகளும் நிதித் துறையினரும் அதனைத் திரும்பித் தருவதாக இல்லை. இதன்கூடவே பிறர் பணத்தில் தப்பிப் பிழைத்த இந்த வங்கிகள் தங்கள் பித்தலாட்டங்களைக் குறைத்துக் கொண்டு நேர்மையான வழிகளில் செயல்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக இந்த வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவங்களும் முன்பை விட அதிகமாக பங்குச் சந்தைச் சூதாட்டங்களையும், அரசுப் பணத்தைக்  கொள்ளையிடுவதையும் தொடர்கின்றன. எனவே, புதிய வருமானம் ஏதும் இல்லாத நிலையில் பிரிட்டன் அரசாங்கம் தன்னுடைய ‘அரசாங்கச் செலவுகளைக் குறைப்பது தவிர வேறு எந்த வழியும் இல்லை’ என்று அறிவித்துள்ளது. அரசாங்கச் செலவு என்பது கொஞ்ச நஞ்சம் இருந்து வரும் தொழிலாளர் பாதுகாப்புகள், நல்வழ்வுத் திட்டங்களைக் குறிக்கும். இப்படி நிறுத்தி விடுவது மக்களின் அன்றாட வாழ்வில் மேலும் துயரங்களைக் கொண்டுவரும். மேலும், தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சென்றிருக்கிறது. 2010ம் ஆண்டு  நிலவரப்படி உழைக்கத் தயாராக உள்ள வயது வந்தவர்களில் நூற்றுக்கு 20  பேருக்கு வேலையில்லை. இப்படி வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம். அதாவது ஆறில் ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வேலை எதுவும் இன்றி அரசு தரும் கைச் செலவில் காலம் தள்ளி வருகிறது. இந்த நெருக்கடி கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பிரிட்டன் சந்தித்திராத ஒன்று என்று அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கூடவே, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களையோ அல்லது மக்களின் வாழ்வுக்கு அடிப்படியான மாற்றத்தைக் கொண்டு வரும் பொருளாதார வாய்ப்புகளையோ உருவாக்குவதற்குப் பதிலாக ஈராக் போன்ற நீண்ட போரில் ஈடுபட்டு மேலும் மேலும் நெருக்கடிகளையும் அரசாங்கம் உண்டாக்கி வருகிறது. நாட்டின் மிகப் பெரும் நிறுவனங்களான பிரிட்டிஷ் பெட்ரோலியம் (B.P) , பி.ஏ.இ (BAE) போன்ற ஆயுத நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ஒரு சில வணிக நிறுவனங்கள், வங்கிகள் கொழுத்து வந்தாலும் பெருவாரியாகத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் நிறுவனங்கள் எதுவும் எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மாறாக அந்த நிறுவனங்கள் மேலும் மேலும் மூடப்பட்டு ஆட்கள் குறைக்கப்பட்டு தொழில்கள் பிற ஆசிய நாடுகளை நோக்கிச் செல்கின்றன. எனவே, பிரிட்டிஷ் பொருளாதாரம் தேய்ந்து வருகிறது.

வறுமையில் வாடினால் வரி பணத்தில் கொழுத்தால் வரியில்லை


இது இப்படியிருக்க மக்கள் பணத்தை தம் இஷ்டம் போலச் செலவழித்தது மட்டுமில்லாமல், தாம் பங்குச் சந்தையில் நஷ்டம் அடைந்த காரணத்தைச் சொல்லி வரும் வங்கிகள் லாபம் வரும்போது கூட வரி கட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திவால் நிலையில் இருந்த வங்கிகளான – லாயிட்ஸ் (Lloyds TSB), பார்க்லேஸ் (Barclays), ஸ்டாண்டர்ட் சார்டேட் (Standard Chartered), எச்.எஸ்.பி.சி (HSBC) இந்த 2010 ம் ஆண்டு கண்ட லாபம் சுமார் 24 பில்லியன் பவுண்டுகள். ஆனால், அவை கட்டிய மொத்த வருமான வரி வெறுமனே ஒரு சதவீதத்திற்கும் குறைவு. சுருங்கச் சொன்னால் வங்கிகளின் தலைமை அதிகாரிகள் பெற்றுக் கொண்ட சம்பளம் அந்த வங்கிகள் கட்டிய வருமான வரியை பல மடங்கு அதிகம்.

மிகப்பெரும் வங்கியான பார்க்லேய்ஸ் வங்கி 2009 ம் ஆண்டில் சம்பாதித்த லாபம் 11.6 பில்லியன் பவுண்டுகள் அனால் கட்டிய வரி வெறுமனே, 113 மில்லியன் பவுண்டுகள். அதாவது சுருங்கச் சொன்னால் நூற்றுக்கு ஒரு  சதவீதம் வரியாகக் கட்டியது. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் தினக்கூலிப் பணியாளரான ஒரு லண்டன் நகரத் துப்பரவுத் தொழிலாளி கட்டும் வருமான வரி சுமார் 20 சதவீதம். அவர் பெறும் சம்பளம் மிகமிகக் குறைவு. இப்படி நிதி முதலாளிகள் பிரிட்டனில் ரயில், பஸ், சாலைகள், துப்பரவு, மின்சாரம், எரிபொருள், வீட்டு வசதி போன்ற பணிகள் அனைத்தும் தனியார் வசமே உள்ளன. குறிப்பாக ஆரம்பக் கல்வியும் மருத்துவமும் மட்டுமே அரசாங்கத்தின் கீழ் உள்ள முக்கியமான துறைகள். ஏறக்குறைய நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தமது கைகளுக்குள் கொண்டு வந்துள்ள தனியார் நிறுவனங்கள் கீழ்தட்டில் உள்ள சாதாரண அரசுப் பணியாளர்கள், இதர தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றி கவலைப் பட்டதாகக் தெயர்யவில்லை. தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைகளின் அளவு சுருங்கிக் கொண்டே வருகிறது இதனால் அவர்கள் வருமானம் குறைந்துபோய் கடனில் மூழ்கி வருகின்றனர். இதே வேளையில், அரசாங்கம் ‘சிக்கன நடவடிக்கைகளில்’ இறங்கியுள்ளது. சிக்கனம் என்றால் ஆடம்பரச் செலவுகளைக் குறிப்பதாகக் கொள்ளக் கூடாது. மாறாக, சிக்கனம் என்பது:     சுகாதாரத்திற்கு அரசாங்கம் செலவு செய்து வரும் தொகையைக் குறைத்து அரசு மருத்துவ மனைகளை மூடி தனியாருக்கு விற்று விடுவது வேலையில்லாதவர்களுக்கு அரசு தந்துவரும் கைச் செலவுப் பணத்தை குறைப்பது பள்ளிகள், நூலகங்கள், உடற்பயிற்சிக் கூடங்களை முடிந்தவரை தனியாருக்கு விற்பனை செய்து விடுவது அல்லது மூடி விடுவது கல்விக்கட்டணங்களை உயர்த்துவது – கல்லூரிக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களைக் குறைத்து வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டுவதுஅரசாங்கத்திற்குச் சொந்தமான தோப்புகளையும் காடுகளையும் தனியாருக்கு விற்று விடுவது பொதுவாக ஏழை மக்கள் குடியிருக்கும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் ரயில் பஸ் சேவைகளை குறைத்து விடுவது    ஊனமுற்றவர்கள் இயலாதவர்களுக்கு வழங்கும் நிதி உதவிகளைக் குறைப்பதுமேலே கண்டவற்றில் பல உரிமைகள் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் போராடிப் பெற்றவை. இந்தச் சலுகைகளும் உரிமைகளும் ஒவ்வொன்றாகப் பறிபோவதைச் சகிக்காமல் மாணவர்களும் தொழிலாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் அரசு ஊழியர்களும் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, பொதுவில் எந்தவொரு அரசியல் ஊக்கமும் இல்லாமல் இருந்து வரும் பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் எப்போதும் இல்லாத அளவில் ஒரு நாடு தழுவிய தொழிலாளர் எழுச்சியைக் கண்டு வருகின்றன எனச் சொல்லலாம். இந்தச் ‘சிக்கன நடவடிக்கைகள்’ மூலம் மூன்று லட்சம் பேர் அரசாங்கப் பணிகளில் இருந்து விரட்டப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதவிர அரசுடன்  நேரடியாக இணைந்த தனியார் பணிகள் இதை விட அதிகமாகப் பதிக்கப்படுவார்கள். அரசாங்கத் துறைகள் நிலைமை இப்படியென்றால் தனியார் நிறுவனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அரசாங்கப்பணியாளர்கள் – அதாவது ஆசிரியர்கள், மருத்துவ ஊழியர்கள், தாதிகள், நகராட்சி ஊழியர்களுக்கு இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படமாட்டாது. ஆனால், விலைவாசியோ ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்ந்து வருகிறது.

 

மார்ச் 26 போராட்டம்

 

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தனர். கல்லூரிக் கல்விக் கட்டணம் குறைந்தது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசாங்கத்தின் உதவி பெறும் பல்கலைக் கழகங்கள் வருமானமில்லாத பாடத் துறைகளை மூடச் சொல்லி உத்திரவிட்டுள்ளது. படிக்க வரும் மாணவர்கள் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். தற்போதைய நிலையில் மாணவர் ஒருவர் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தால் அவர் படிக்க வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தக் குறைந்தது சுமார் இருபது முதல் முப்பது வருடங்கள் பிடிக்கும். சுருங்கச் சொன்னால், பட்டப் படிப்பு படித்த ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் உழைத்து தான் பெற்ற கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த மாற்றத்தைக் ‘கல்வித் துறைச் சீர்திருத்தம்’ என்று சொல்லி வருகிறது. இத்தகைய மாற்றத்தினால் மிகுந்த பயன் பெறுவது கடன் வழங்கக் காத்திருக்கும் வங்கிகள் தான். கல்வி என்பது ஒரு விற்பனைப் பொருளாகி பெரும்பகுதி மக்களுக்கு எட்டாக் கனியாகி விட்ட நிலையில் அனைவரும் ஒரு வெறுப்பின் விளிம்பில் இருக்கின்றனர். ஏற்கனவே, வேலைகளை இழந்து வருமானம் குறைந்து படிக்க வரும் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தைகைய நடவடிக்கைகளை எதிர்த்து மாணவர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் போராட்டம் நடத்த அணிதிரட்டி வந்தன. ஆனாலும் பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. எகிப்து, துனிசியா, சவுதி அரேபியா, லிபியா, ஏமன் போன்ற அரபு நாடுகளில் தான் போராட்டங்களை பொதுப் பெயரிட்டு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களை தெருவுக்கு அழைக்க ‘இன்று வெஞ்சின நாள்’ (Day of Rage), ‘இன்று நடவடிக்கை நாள்’ (Day of Action),  ‘இன்று விரட்டியடிக்கும் நாள்’ (Day of departure) என்று நாள் குறித்து அரசியல் படுத்தினார்கள். அதே முறையை பிரிட்டிஷ் மாணவர்களும் பின்பற்றி மார்ச் மாதம் 26 ம் நாளை ‘தேசிய நடவடிக்கை நாள் (Day of Action)’ என அறிவித்து அனைவரையும் தெருவுக்கு வரக் கோரிக்கை விடுத்தனர்.

இதே போலவே, நாடு தழுவிய மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த பிரிட்டிஷ் தொழிற்சங்கக் காங்கிரஸ் (TUC) அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதிலும் இருந்து தொழிலாளர்கள் தலைநகரில் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததது. பல ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக இத்தகைய ஒரு போராட்டத்திற்கான அழைப்பு பெரும் வெற்றி பெரும் என்று நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. போராட்டம் பலமடைந்து வருவதை எண்ணி அதனைச் சிதைக்க பிரிட்டிஷ் அரசும் போலிசும் பல வழிகளில் முயன்றன. போராட்டத்திற்கு முந்திய இரண்டு தினங்களில் எல்லாப் பிரிட்டிஷ் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடிக்கும் என்று உளவுச் செய்திகள் கூறுவதாக அறிவித்து பெண்களும் குழந்தைகளும் போராட வரவேண்டாம் என்று வெளிப்படையாக கட்டுரைகலையும் செய்திகளையும் வெளியிட்டன. ஆனால் தொழிற்சங்கங்கள் குழந்தைகளோடும் குடும்பத்தோடும் அனைவரும் அமைதியாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவேண்டி அறிவிப்பு விடுத்தன. இதில் என்ன சிறப்பு என்றால் எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் இந்தப் போராட்டத்தில் பங்குபெறவில்லை என்பதே. ஆளும் கூட்டணியிலும் எதிர்க்கட்சியிலும் உள்ள ஒரு சில தலைவர்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் பங்கேற்றனர்.

ஐந்து லட்சம் பேருக்கு அதிகமான மக்கள் பங்கேற்று அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டம் கடந்த ஐம்பது வருடங்களில் நாடு கண்டிராத பெரியதொரு தொழிற்சங்கப் போராட்டம் என்று பலரும் கருதுகின்றனர். மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் கலந்துகொண்டு இந்த போரட்டத்தில் பங்கேற்றனர். வியப்பு என்னவென்றால் அண்மையில் எகிப்து, துனிசியா, போன்ற அரபு நாடுகளின் மக்கள் போராட்டத்தினால் ஊக்கம் பெற்ற்று போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பலர். அரசின் சொற்பமான நிதி உதவிகளில் காலம் தள்ளி வரும் முதியவர்கள், இயலாதவர்கள், ஊனமுற்றவர்கள், குருடர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அணித்துப் பிரிவினரும் நாடு முழுவதிலும் இருந்து லண்டன் வந்திருந்தனர்.

லண்டன் நகர நிர்வாகம் நகரத்தை ஒரு போர்க்களம் போல மாற்றியிருந்தது. ஆயிரக்கணக்கான போலிசார் கவச வாகனங்களுடன், தடிகள், கேடயங்கள் போன்ற எல்லா விதமான ஆயுதங்களுடனும் அணிவகுத்து நின்றிருக்க, பல ஹெலிகாப்டர்கள் நாள் முழுதும் வானில் பறந்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தன. லண்டன் நகரமே ஏதோ ஒரு போரில் ஈடுபட்டுள்ளது போல் ஒரு மாயக் காட்சியை ஏற்படுத்தியிருந்தனர். பிரிட்டிஷ் தொலைக் காட்சிகள் பத்து லட்சம் பேர் கலந்து கொண்ட போராட்டத்தைக் காட்டியதை விட நூற்றைம்பது ஆர்பாட்டக்காரர்கள் தனியாக வேறொரு மூலையில் நடத்திய கதவு சன்னல் உடைப்புகளை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டே இருந்தன. போலீசார் புடைசூழ இந்த ஆர்பாட்டக்காரர்கள்  தங்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சன்னல் உடைப்புகளை ஒரு வேளை போலிசின் சதியோ என்று கூட சிலர் சந்தேகிக்கின்றனர். அநேகமாக எல்லாத் தொலைக்காட்சிகளும் மீண்டும் மீண்டும் இதனையே தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தது அனைவருக்கும் வியப்பைத் தருவதாக இருந்தது. இந்த நடவடிக்கையை வன்முறைப் பூச்சாண்டியைக் காட்டி மக்களை வீதிக்கு வர விடாதபடி செய்வதில் லண்டன் போலிஸ் செய்துவரும் முயற்சி என்றே பல மாணவர்களும் தொழிலாளர்களும் கருதுகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஒரு பகுதியாக திரளான மாணவர்கள் வரி ஏய்ப்புச் செய்து வரும் பிரபல் விற்பனை நிறுவனங்கள், வங்கிகள், ஆயுதக் கம்பெனிகள், பன்னாட்டு வணிக நிறுவனங்களை ஆக்ரமித்து உள்ளிருந்துகொண்டு மறியல் செய்தனர்.

போராட்டம் இனிவரும் நாட்களில் மென்மேலும் தீவிரமாகி பொது வேலை நிறுத்தத்தை நோக்கிச் செல்லும் என்றே அனைவரும் கருதுகின்றனர். பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் எந்த ஒரு மாற்று அரசியல் சிந்தனையும் இன்றி இயங்குவதால் பெரியதொரு மாற்றம் எதுவும் வந்து விடும் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது. ஆனால், டோனி பிளேர் பிரதமர் ஆன பின்னால் தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் வழக்கமாக ஆதரவு அளிக்கும் தொழிற்கட்சியினர் (Labour Party) முற்றிலும் தனிமைப்பட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளனர். இந்த வெற்றிடத்தைப் புரட்சிகர சக்திகள் ஒரு அரசியல் பாதையை மேற்கொண்டு நிரப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பவானி

26/03/2011