Sat09232023

Last updateSun, 19 Apr 2020 8am

சிங்கள இனவாத ராணுவத் தளபதியின் பேட்டி குறித்த விசனம்

தமிழ்மிரர் பத்திரிகைக்கு இராணுவ அதிகாரி மேயர் ஜெனரல் ஹத்துருசிங்க வித்தியாசமான ஒரு பேட்டியினை வழங்கியுள்ளார். இந்த ஜெனரலுடைய கடந்த கால நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது. அவரது இந்த பேட்டி பற்றிய பார்வை தான் இது.

 

இராணுவ ஆட்சியில் கீழ் தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கின்ற இராணுவத்  தளபதி, சிவல் நிர்வாகத்தில் கூட தலையிடுகின்ற ஒருவர், சமூகத்தில் நிலவும் மற்றைய முரண்பாடுகள் பற்றி முற்போக்காக பேசுகின்றார்.

ஜெனரல் ஹத்துருசிங்கா மக்கள் கரிசனை மிகுந்தவராக தன்னையும் தனது இராணுவத்தையும் வெளி உலகிற்கு மிகையாகவே காட்டியுள்ளதை இந்த பேட்டியில் காணமுடிகிறது. திடீரென ஞான உதயம் பெற்ற உதயமாகிய ஜெனரல் அவர்கள் ‘தமிழ் சமூகத்தில் உள்ள குறைபாடுகள், தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், வெளிநாட்டு புலிப் பிரமுகர்களின் சுத்துமாத்துக்கள், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் ஈழத்து தமிழ் மக்களை பயன்படுத்தும் அரசியற்போக்கு, மற்றும் இன்றைய முக்கிய பிரச்சனையான மீனவர் பிரச்சனை” போன்ற பல விடயங்களை தனது போட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை இனவாத பௌத்த சிங்கள அரசின் சுத்துமாத்துகளை, அதன் அடக்குமுறைகளை, அதன் பின் இயங்கும் குழுக்களைப் பற்றி பேசாத முற்போக்கான பார்வை. புலம்பெயர் புலியெதிர்ப்பு அரசியல் அடிப்படையைக் கொண்டது.

யாழ் மண்ணில் இப்போதுள்ள பெரியதொரு பிரச்சனை கடந்த கால போராளிகள் பற்றியது. அவர்கள் தமிழ் சமூகத்தினால் ஒதுக்கப்படுவது என்பது தமிழ் இனமே வெட்கப்பட வேண்டிய விடயம். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் போராளிகளே. இந்த பிரச்சனைக்கு முக்கியமானதொரு காரணமாக அமைவது சாதி.

பேட்டியிலே ஜெனரல் அவர்கள் சாதிப்பிரச்சனையினை தமிழ் சமூகத்தின் ஒரு குறைபாடாக அர்த்தப்படுத்தியிருக்கிறார்.

‘”விடுதலைப் புலிகள் இயக்கமானது ஜாதிப் பிரச்சினைக்கு அப்பாற் சென்று செயற்பட்ட இயக்கமாகும். இயக்கத்தில் உள்ளவர்களுக்குள் இந்த ஜாதி, மத  செயற்பட்டார்கள். அதனால் இயக்கத்தில் இருக்கும் போதே கலப்புத் திருமணங்கள் பலவும் இடம்பெற்றன. இவ்வாறிருக்க யுத்தத்தின்போது பெருமளவிலான போராளிகள் உயிரிழந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாட்டில் சமாதானமும் நிலவியது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் மனைவிமாரை ஏற்க அவர்களின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். வேற்று ஜாதிக்காரரை…” என்று இராணுவ அதிகாரி குறிப்பிட்டது போல் புலிகள் இயக்கம் ஒன்றும் சாதிப் பிரச்சனைக்கு எதிராக செயற்படவில்லை. அவர்களிடம் அதற்கான எந்த அரசியற் திட்டமும் இருக்கவில்லை. இயக்கத்தினுள்ளே கலப்பு திருமணத்தின் தேவை இருந்தது. அங்கு பெற்றோர்களின் எதிர்ப்பு இல்லாததால் பிரச்சனையின்றி இணைந்து கொண்டார்கள். யுத்த சூழலின் போது வெளிச் சமூகத்திலும் சாதிப் பிரச்சனை கொஞ்சம் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. இன்று அந்த தேவையில்லாததால் மீண்டும் சாதிப் பிரச்சனை தலையெடுத்துள்ளது.

தமிழ் மக்களின் சாதிப் பிரச்சனை அரசியல் மாற்றத்தினூடாகவே தீர்த்து வைக்க முடியும். முதலில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களிற்கான அரசியற் தீர்வினை முன் வைக்க வேண்டும். ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கும் அவர்களுக்கென்று சுயமுண்டு. இதனை இந்த அரசு அங்கீகரிக்காது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு எந்ததொரு தீர்வினையும் முன் வைக்காத பட்சத்தில் ஜெனரல் அவர்கள் தமிழ் மக்களது சாதிப் பிரச்சனை பற்றி கதைக்க முடியாது. சமூக அக்கறையாளனாக காட்டிக் கொண்டு பேரினவாத அரசிற்கு குடை பிடிப்பது தான் இந்த நடவடிக்கையாகும். உண்மையில் சமூக அக்கறையுள்ளவராக இருந்தால் உங்கள் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான சரியானதொரு அரசியற் தீர்வினை வைக்கும் படி அரசிற்கு அழுத்தத்தினை கொடுங்கள். அதற்குப் பிறகு உங்கள் கருத்தினை முன்வையுங்கள்.

அடுத்து, அவரது பேட்டியில் ‘கடந்தகால போராளிகள் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவதாகவும் அவர்கள் எந்தவித குற்றசெயலிலும் ஈடுபடவில்லை என்றும், ஒருசிலர் அவர்களின் வாழ்வாதாரத்தையொட்டி சிற்சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்று கருத்து வெளியிட்டதோடு குற்ற செயல்களை தூண்டிவிடுவது தமிழ் அரசியல்வாதிகள்” என்ற கருத்தினை குறிப்பிட்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு இராணுவ அதிகாரியின் பார்வை எங்கள் யாழ் மாநகரசபை மேஜர்அம்மாவிற்கு இல்லாமல் போனது தான். இந்த தமிழ் மக்களின் பிரதிநிதி, கடந்த கால புலிப் போராளிகள் தான் வன்முறையிலும் குற்றசெயல்களிலும் ஈடுபடுவதாக கூறியிருந்தார். அவருடைய அரசியல் எசமானுக்கு காட்டும் விசுவாசம் இது என்று நினைக்கிறேன்.

ஜெனரல் அவர்கள் தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘தாங்கள் கடந்தகால போராளிகளை சிறிது காலத்திற்கு கண்காணித்து வருவதாக” கூறியிருந்தார். ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் யாழ்நகரை அண்டிய கிராமமொன்றில் ஒரு கடந்தகால போராளியை இராணுவம் தேடி சென்று, அங்கு நின்றவர்களை விசாரனை நடாத்தியுள்ளது. இது இரண்டாவது தடவையாக அந்த இடத்திற்கு இராணுவம் சென்றுள்ளது. இதனால் அங்கு வழமையாக சந்திப்பவர்கள் பீதியினால் மறுநாள் அந்த இடத்திற்கு செல்லவில்லை. உண்மையில் இவர்களால் தேடப்பட்ட நபர் அங்கு செல்வதில்லை. அவரும் இயக்கத்தில் கலப்பத் திருமணம் செய்தவர், மனைவியோடும் பிள்ளைகளோடும் அமைதியாகவும் சந்தோசமாகவும் ஆனால் பயத்தோடு வாழ்ந்து வருகின்றார். இப்படியொரு சம்பவம் நடந்தது ஜெனரலுக்கு எப்படி தெரியாது போயிற்று. இது தெரியாது போனால் இராணுவத்தின் தன்னிச்சையான ஒவ்வொரு செயற்பாடும் இவருக்கு தெரியாது என்பது தானே அர்த்தம். இதைவிடவும் சிலநாட்களாக தமிழ்ப் பகுதிகளை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தி வருகின்றது. இதன் அவசியம் என்ன? அரசியற் தீர்வொன்றின் மூலம் பிரச்சனையினை தீர்த்து வைக்காமல் துப்பாக்கி அதிகார அடக்கு முறையினால் மக்களை அடக்கி வைப்பது தானே இதன் நோக்கம்.

யாழ்நகரில் பெண்களோடு அங்கசேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்களை இராணுவம் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளது. நல்ல நடவடிக்கை. ஆனால் இதே இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் எத்தனை. சில இராணுவத்தினர் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அது பற்றி விசாரிக்கப்படுவதாக சொல்லி ஜெனரல் தப்பிவிடலாம். ஆனால் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

போராட்ட காலத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் எத்தனை சாதாரண  பெண்களும், பெண் போராளிகளும் இலங்கை இராணுவத்தினால் பலவகையான சித்திரவதைகளையும், வன்முறைகளையும் அனுபவித்து மடிந்து போனார்கள். பிரபாகரனின் மகள் துவாரகா உட்பட. சரணடைந்த போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். பலருக்கு என்ன நடந்ததென்பதே தெரியாது. இதனை செய்தது   பௌத்த மதத்தில் வந்த சிங்கள இராணுவமே. நன்மைகளை போதிக்கின்ற பௌத்த மதத்தில் வந்த இராணுவம் இப்படி செயற்படலாமா? இப்போது வந்த இறுதி தகவல், போராளி ராமேஸ் சிங்கள இராணுவத்தினால்  தலைவன், தலைவனது மனைவி மகள் பற்றிய விசாரனை நடாத்துவது துல்லியமாக காட்டுகிறது. ஜெனரல் அவர்களுக்கு இது தெரிந்திராவிட்டால் இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதில் கிராபிக் செய்யப்பட்ட படங்கள் எதுவும் இல்லை. எல்லாம் நிஜங்கள். இந்த குற்றசெயல்கள் யாராலும் மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

முதலில் யாழ்மண்ணில் இயங்கும் ஊடகங்களை சுதந்திரமாக கருத்து வெளியிட அனுமதியுங்கள். அவர்களின் தகவல்கள் தவறாக இருப்பின் இது போன்ற பேட்டிகள் மூலம் உங்கள் மறுப்பினை தெரிவியுங்கள். அதைவிடுத்து துப்பாக்கி முனையில் மிரட்டி ஊடகங்களினதும், மக்களதும் பேச்சு, கருத்து சுதந்திரத்தினை தடுத்து தவறான நடவடிக்கைகளை மறைத்து விடுவதே மகிந்தாவின் இன்றைய பிரதான அரசியற் கொள்கை. அதைத்தான் உங்கள் இராணுவம் இன்று செயற்படுத்தி வருகின்றது. ஒரு பக்கம் மிரட்டலும் இன்னொரு புறமாக சமுதாய கரிசனையும், மக்கள் என்ன இழிச்சவாயரா?  குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்குவது சாதாரண மக்களை தழுவி ஆதரவு காட்டுவதன் மூலம் நடந்த குற்றங்களை மறைக்க முயல்கிறார் பேரினவாத அரசின் கைக்கூலி ஜெனரல். தமிழ்நாட்டு திரைப்படப் பாணி  அரசியலை எங்கள் தமிழ்சமூகத்தில் நடாத்திப் பார்க்கிறார். இது எங்களுக்கு பழகிப் போன அரசியல் தான். நாங்கள் ஏற்கனவே நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம்.

 

இன்று யாழ்மண்ணில் சிவில் நிர்வாகம் சீர்கெட்ட நிலையில் உள்ளது. மொத்த தமிழ்பிரதேசமும் இராணுவ அதிகாரத்துக்குள் அமிழ்ந்து போயுள்ளது. புலிகளை வென்றுவிட்ட மமதை மகிந்த அரசிற்கும் இலங்கை இராணுவத்திற்கும். இந்த நினைப்பு மறைமுகமான சர்வாதிகார போக்கினை தமிழ் மக்கள் மேல் திணித்துள்ளது. இராணுவம் தாங்கள் தான் தமிழ் மக்களது ஏகப்பிரதிநிதிகள், தமிழ் மக்கள் இராணுவத்தியே நம்பியுள்ளார்கள் என்ற மாயையினை உருவாக்கி வருகின்றார்கள். போராட்டம் முடிந்து இரண்டு வருடங்களாகின்றது. ஆனால் கூட்டு மொத்த தமிழ் பிரதேசமும் இராணுவமயமாவே இருக்கிறது. தமிழ் பிரதேசங்களை மக்கள் குடியிருப்புக்களை விட்டு இராணுவத்தினை வெளியேற்றி சிவில் நிர்வாகத்தினை சீர் செய்யாமல் இப்படியான பேட்டிகள், கருத்துக்கள் மூலம் எல்லாவற்றையும் மூடிமறைக்க முயல்கிறது சிங்கள பேரினவாத அரசு.

தமிழ் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற தவறான சுயநலப் போக்கு இலங்கை அரசிற்கும் இராணுவத்திற்கும் சாதகமாக அமைந்துள்ளது. சில தமிழ் வால்பிடி ஊடகங்கள் பாசிச மகிந்த அரசிற்கு ஊதுகுழலா செயற்பட்டு வருகிறது.  அத்துடன் எங்கள் தமிழ் சமூகத்தின் சீர்கேடுகளும் அறியாமையும் இந்த ஜெனரல் போன்றவர்கள் தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாக உள்ளது. இந்த நிலமையினை மக்களாகிய நாங்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

தேவன்

10/04/201