Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

இருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..!

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே..,

அவர் ஏதும் அறியாரடி ஞானதங்கமே…!

திருவருட் செல்வர் திரைப்படத்தில் வந்த அருமையான பாடல். அங்கு ஆன்மீகத்தினை தவிர்த்து அரசியலாக பார்த்தால், இன்று மனிதர்கள் யாவருமே இந்த நிலையிற் தான் சிந்திக்கின்றார்கள்.., வாழ்கின்றார்கள், அலைந்து திரிகின்றார்கள். (நாளாந்தம் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு நாளந்தம் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விடத்திற்கும் நாளந்தம் திண்டாடும் அப்பாவி பாமர மக்களை நான் இங்கு தவிர்த்துக் கொள்கிறேன்). குடும்பம், உறவு, அன்பு, பாசம், சமூகம் என்று அரசியல் வரை தன் கண்ணெதிரே பக்கத்தில் இருக்கும் நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இல்லாத அல்லது தவறான இடத்தில் அதை தேட முற்படுகின்றான் மனிதன்.

அவன் தன்னையும் குழப்பி, தன் குடும்பத்:தையும் குழப்பி இறுதியில் சமூகத்தையும் குழப்புகின்றான். முதலாளி முதலாளியாகவே வாழ்கிறான், மேலும் முதலாளி ஆகிக்கொண்டே போகிறான். ஒன்றும் இல்லாதவன் எதும் இல்லாமலே வாழ்கிறான், இருப்பதையும் இழந்து இன்னும் கீழேயே போய்க் கொண்டிருக்கின்றான். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வர்க்க மனிதர்கள் தான் மிகவும் ஆபத்தான மனித வர்க்கமாக வளர்ந்து கொண்டே போகிறது. உழைக்க முடிந்தவர்கள் கடுமையாக உழைத்தும், உருட்ட முடிந்தவர்கள் கடுமையாக உருட்டியும் ஓரளவு பொருளை சம்பாதித்து விட்ட மனிதன், தன்னை இந்த சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள, நிலைநிறுத்திக் கொள்ள தனக்கென ஒரு தனி நியாயத்தினை உருவாக்கி முழு சுயநலச் சிந்தனைப் போக்கோடு தன்னை தனது சமுதாயத்திற்கு வெளிப்படுத்திக் கொள்கின்றான். இங்கு அவனுக்கு வேண்டியதெல்லாம் புகழ், கழுத்துக்கொரு மாலை அல்லது வாக்கு. இன்று இது மட்டுமே மனிதனுடைய நோக்கமாக குறுகிவிட்டது. இன்னுமொரு சிலர் தன் ஒன்று தன் குடும்பம் ஒன்று என்ற சுயநலப்போக்கோடு ஒதுங்கிவிடுபவர்கள் அல்லது நாலு சுவருக்குள் அரட்டை அடித்து, தண்ணி அடித்து அலட்டல் நியாயம் பேசுபவர்கள். மொத்தத்தில் மனிதன், நேர்மையோடு சரியான வழியில் சிந்திக்கத் தெரியாத குறுகிய அறிவோடு வாழ்பவனாக அல்லது நேர்மையினை புறம் தள்ளி விட்ட வாழ்பவனாக அலைந்து திரிகின்றான்.

இப்படி தான் எங்கள் ஜனாதிபதி ஐயா மைத்திரி அவர்களும் நாடு பூராவும் அலைந்து திரிகின்றார். யாழ்ப்பாணம் சென்ற எங்கள் ஜனாதிபதி ஐயா இடம் பெயர்ந்தோர் முகாமுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் குடிசைக்கு சென்று அவர்களோடு உட்கார்ந்து பேசி அவர்களது கஸ்ர துன்பங்களை கேட்டறிந்துள்ளார். அவர் அரசியல்வாதி, அப்படித் தான் செய்வார் என்று தூக்கியெறிந்து பேச முடியாது. 36-37 வருடங்களுக்கு முன்னர் எங்கள் கூட்டணி அரசியல்வாதிகளும் றோட்டு கூட்டியவர்கள் தான். அதற்காக ஒரு நாட்டின் ஜனாதிபதி போருக்கு பின் உள்ள சமூகத்தை நேரிற் சென்று பார்ப்பது நல்ல விடயம் தானே. அப்போ எங்கள் ஜனாதிபதி நல்லவரா? கெட்டவரா..?

மைத்திரி என்ற தனி மனிதன் யார். அவருடைய கடந்தகாலம் என்ன? அவரது அரசியல் என்ன சிந்தனை என்ன? மைத்திரி இடதுசாரிய சிந்தனையோடு அரசியலில் வந்த மனிதன். ஆனால் அவர் மார்க்சியத்தையோ, கம்யூனியத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர். முதலாளித்துவத்தை முழுமையாக அங்கீகரிக்க முடியாதவர். முதலாளித்துவத்துக்கும், கம்யூனிசத்துக்கும் நடுவில் ஒரு பாதையினை தேடிய அரசியல்வாதிகளில் ஒருவர். அப்படியொரு பாதையினை யாரும் அமைக்க முடியாது. அரசியலில் வலதுசாரி அல்லது இடதுசாரி. ஒரு சில முற்போக்கு சிந்தனை மட்டும் ஒருவனை கம்யூனிஸ்ட் ஆக்கி விட முடியாது. இப்படிப்பட்டவர்கள் திரிபுவாதிகளாக மாறி நாட்டை சீரளிக்கத் தான் முடியும். கடந்தகால அரசியல் வரலாறுகள் இதற்கு உதாரணம். ஒரு உண்மையான, நேர்மையான, முழுமையான இடதுசாரிய அரசியற் செயற்பாட்டால் மட்டும் தான் மக்களின் சகல பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். மைத்திரி அவர்களுக்கு மனம் இருந்தாலும் அதை என்றுமே சாத்தியமாக்க முடியாது. ஆக மீறினால் அவரால் அரசியலை விட்டு ஒதுங்கத் தான் முடியும். சம உரிமை இயக்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசியற் கைதிகளின் விடுதலை செய்ய முடியாத ஜனாதிபதி, அந்த மக்களின் கண்ணீரை கண்டும் எதும் காணாதது போல் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரியால் மக்களின் பிரச்சனையினை எப்படி தீர்த்து வைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அன்று தொட்டு இனவாத்தையே முதன்மையாக கொண்டு வளர்ந்து வந்த அரசியற் கட்சி. அந்த பாதையில் வந்த பிரதமர் ரணிலோடு இன்னொரு பாதையில் வந்த ஜனாதிபதி மைத்திரி. மக்கள் பிரச்சனை எப்படித் தீரும். நல்லரசாங்கம் எப்படி சாத்தியமாகும்.

"பூர்ஷ்வாக்கள், சோசலிசத்தின் துரோகிகளோடு சேர்ந்து நடத்தும் அரசாங்கமே கூட்டரசாங்கம்.." - லெனின்.

இளம் வயதில் அரசியலுக்கு வந்த அரசியல்வாதி மகிந்தா. இவர் சில முற்போக்கு கருத்துக்களை மட்டும் உள்வாங்கி கொண்ட ஒரு அரசியல்வாதி. புலிகளை அழிப்பதற்கு இந்தியாவின் காலில் விழுந்து இறுதியில் ஒரு இன அழிப்பையே செய்து முடித்தார். பின்பு மேடையிலே தானும் ஒரு கம்யூஸ்டுத் தான் என்று கம்யூனிசத்தை களங்கப்படுத்தினார். அப்போது மகிந்தாவோடு இருந்த மைத்திரி அன்று வாய் திறக்காவிட்டாலும் அப்போது கடத்தப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்ட அரசியற் கைதிகள், போராளிகள் பற்றிய பல உண்மைகள தெரிந்திருந்தும் இன்று மௌனமாக இருப்பது மட்டுமல்லாது கடத்தப்பட்டவர்கள், கைதிகளின் பிரச்சனைக்கு ஒரு தீர்வும் முன் வைக்க முடியாத ஜனாதிபதி எந்த மக்களின் பிரச்சனை தீhத்து வைக்கப் போகிறார்.

மக்களின் போராட்டமே சகல பிரச்சனைக்கும் ஒரே தீர்வு. சகல மக்களும் ஒன்று பட்டுப் போராடினால் மட்டும் தான் அதுவும் சாத்தியம். சிந்தியுங்கள், இல்லாத இடம் தேடி அலையாமல் இருக்கும் இடத்திற்கு வாருங்கள். மாற்றுவோம் மக்கள் தலைவிதியை..!