Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அடித்தால் திருப்பி அடிப்பேன்..

நான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்

ஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே

அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட

சமூகத்திலிருந்து போராடிப் பெற்ற

அனுபவக் கல்வியின் ஆழத்திலிருந்து

கொதித்தெழுந்து வந்தவன்.

 

சாதியில் தாழ்ந்ததால்

வகுப்பறையிலிருந்து

வீதிக்கு விரட்டப்பட்டதால்

கிடைத்ததெனக்கு அன்றந்த வீம்பு.

போராட்டம் எனக்கு தொட்டிலிலேயே

ஊட்டப்பட்ட பால்.

பால் சுரக்கா என் தாயின் வரண்ட முலை கண்டு

தன் சேய்க்கு ஒரு முலையும்

பசித்தழுத என் வாய்க்கு மறுமுலையும்

பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்தூட்டிய தாய்

யாழ்ப்பாணத் திமிருக்கு அவள் பறைத்தாய்.

என் உடலில் ஓடுவது இரத்தமாயின்

அது அந்தத் தாயின் சிறப்பான சிகப்பு.

கடலும் அலையும்

என் கால்மாட்டில்.

காற்றில் அலையும்

குப்பி விளக்கே

எனக்கு உலகினை

விளக்கிய கலங்கரை விளக்கம்.

மின்சாரக் குமிழும்

அலங்காரத் தெருவும்

மதில்கள் சூழ்ந்த

மாடி மனைகளும்

சாதித்திமிரில் வாயில் கொழுப்பும்

கொண்டவர் சூழ கொதித்தது என் வாழ்க்கை.

சிங்களன் தோலை உரிப்பேன் என்பதும்

காக்கா தொப்பி பிரட்டி உருட்டுவான்

வயிற்றுவலியை நம்பு ஆனால்

வடக்கத்தையானை நம்பாதே

வார்த்தைகள் இவர்கள்

சிரித்த வாயினில்

உவப்புடன் உமிழும்

சேறும் புழுதியும்

அளைந்து விளையாடி

வாயும் வயிறும் ஒட்டி உலர்ந்து

தாகமெடுத்தால் கிணற்று

வாளி கூட சாதியில்

எம்மைத் தள்ளியே வைக்கும்.

கிணற்றுக் கட்டுக்குள்

காலடி படாமல்

கைமண்டி ஏந்தி

நீரை அருந்தினால் மட்டும்

தாகம் தணியும்..

ஆனால் கோபம் கொதிக்கும்.

வேற்றுமை உள்ளே

ஒற்றுமை வேண்டுமாய்

ஈழத்தின் வழியே.

உழைத்து வாழ்வதன்றி

பிறர் உழைப்பில் வாழ்வது

உங்களுக்குப் பொருந்தும்

எங்களுக்கல்ல.

இன்றெனக்கு கல்வி

கிடைத்ததாயின் அது

நீ போட்ட பிச்சையுமல்ல

நான் யாரிடமிருந்து

தட்டிப் பறித்ததுமல்ல.

உங்கள் அதிகாரத் திமிர்கள்

போட்ட அத்தனை தடைகளையும் மீறி

நான் போராடிப் பெற்றது.

எனக்கு தாழ்வு மனமும் இல்லை

தலைக்கனமும் இல்லை.

ஆனால் அடித்தால் நீ அடிப்பதைப் பிடுங்கி

திருப்பி அடிப்பேன்.