Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே

தங்கள் கூட்டு ராஜினாமா மூலம் தங்களது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பறைசாற்றினார்களே ஒழிய, மதம் மற்றும் இனம் கடந்த மனிதர்களாக தங்களை முன்னிறுத்தவில்லை. இன-மதம் சாராத ஜனநாயகவாதிகளாக தம்மை முன்னிறுத்தி, பிற இன-மதம் சார்ந்தவர்களுடன் கூட்டு ராஜினாமாவைச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று, குண்டு சட்டிக்குள் ராஜினாமா செய்துள்ளனர்.

பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கும் நீதிக்கும் தலைவணங்குவதாக கூறும் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இவர்களுக்காக ராஜினாமாச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் குறித்து புலம்பும் யாரும், தங்கள் பதவிகளை இதற்காக துறக்க தயாராகவில்லை.

தங்கள் கூட்டு ராஜினாமா மூலம் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ள முனையும் பிரிவினைவாதப் பின்னணியில், ஒடுக்கும் இன-மத வாதம் கொப்பளிக்கின்றதே ஒழிய, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குறித்ததான அக்கறையல்ல.

முஸ்லிம் மக்களின் இன்றைய இந்த அவல நிலைக்கு காரணம், பௌத்த பேரினவாதத்துடன் கூடி நடத்திய இஸ்லாமிய மயமாக்கம் தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்த்தெடுத்த நீங்களே, பௌத்த பேரினவாதத்திற்கு முஸ்லிம் மக்களை பலியிட்டவர்கள்;. பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை குறுகிய இஸ்லாமிய மயமாக்கியதன் மூலம், மக்களை உங்களுக்கு வாக்குப் போடும் மந்தையாக்கியவர்கள் நீங்கள். பிறருடன் சேர்ந்து வாழ்ந்த முஸ்லிம் கூட்டுப் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளை அழித்து, பிற மக்கள் கூட்டத்தில் இருந்து முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தி வாக்குகளைப் பெற்றதன் மூலம், நீங்களே இன்றைய சூழலுக்கு முழுப் பொறுப்பாளிகள். உங்கள் ராஜினாமா அதைச் சுயவிமர்சனம் செய்யவில்லை.

இலங்கையில் காப்பரேட் மயத்தை முன்னெடுத்த பௌத்த பேரினவாதத்துடன் கூட்டு அமைத்துக் கொண்ட நீங்கள், பிற இன-மத ஒடுக்குமுறைக்கு பக்கத் துணையாகவும், அதே நேரம் முன்னின்று ஒடுக்கியவர்களே நீங்கள். உழைத்து வாழும் தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்களை சுரண்டிக் கொழுத்த நவதாராளவாத காப்பரேட் அமைப்புக்கு முண்டு கொடுத்தவர்கள் நீங்கள்.

இப்படி உண்மை இருக்க, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரிதிநிதிகளாக ஒரு நாளும் இருந்ததில்லை. மக்களை ஓடுக்கும் தரப்பிற்கு தலைமை தாங்கிய மக்கள் விரோதிகளே நீங்கள்.

இன்று இந்த மக்கள் விரோதிகளின் பதவிகள் பறிபோக காரணமாக இருந்த பௌத்த பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடி, சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

பௌத்த பேரினவாதத்தால் பாராளுமன்ற ஜனநாயகமும், நீதியும் செத்துப் போனதாக கூச்சல் போடுகின்ற அருகதை இவர்களுக்கும், இவர்களை ஒட்டிய எந்தக் கழிசடைக்கும் கிடையாது. இந்தப் பாராளுமன்ற வடிவம் மக்களுக்கானதல்ல. காப்பரேட்மயத்தை முன்னெடுக்கும் பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்களை ஒடுக்குவதற்கான அமைப்பாகவே, அன்றும், இன்றும் இருக்கின்றது.

தேர்தலில் வாக்குப் போடும் ஜனநாயகம் தேர்ந்து எடுப்பது, முதலாளித்துவத்தை பாதுகாக்கும் சர்வாதிகார அமைப்பைத்தான்;. இது காப்பரேட்மயத்தை முன்னெடுக்க மக்களை ஒடுக்கும் வன்முறை இயந்;திரத்தைத் கொண்ட, சர்வாதிகார அமைப்பு.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் சர்வாதிகாரத்தை தேர்ந்தெடுக்கும் உறுப்பு தான், பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகம். இது மக்கள் அதிகாரம் கொண்டவையல்ல. இங்கு பௌத்த பேரினவாதம் என்பது முதலாளித்துவ சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், மக்களை பிரித்து ஒடுக்குவதற்குமான ஆயுதம்.

இதே போன்று காப்பரேட்மயத்தை ஆhரித்து முன்னெடுக்கும் பிற இன-மத வாதிகளும், தங்கள் மக்களை பிரித்து ஓடுக்கவே இன-மத வாதத்தை ஆணையில் வைத்திருக்கின்றனர்.

இந்த வகையில் இலங்கையில் பௌத்த பேரினவாதம் மட்டுமல்ல, வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ் இனவாதமும், இஸ்லாமிய முஸ்லிம் அடிப்படைவாதமும் இருக்;கின்றது. இவை எதுவும் ஒன்றுக்குகொன்று நிகராக காணப்படுகின்றது. சமூகத்தை கூறுபோட்டு ஒடுக்குகின்றது. ராஜினாமா கூட, சமூகத்தை கூறுபோட்ட ஒடுக்கும் அரசியல் தான்.

பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள செய்திருக்க வேண்டியது என்ன? பௌத்த பேரினவாதத்தை போல், நாங்களும் இஸ்லாமிய முஸ்லிம் மயமாக்கியதில் என்ன தவறு - குற்றம் என்று கேட்பதல்ல. மாறாக பிற சமூகத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தைப் பிரித்து தனிமைப்படுத்திய தங்கள் அரசியலை சுயவிமர்சனம் செய்து இருக்கவேணடும். அதை அவர்கள் செய்யப்போவதில்லை.

இதற்கு எதிராக மக்கள் தங்கள் சுய அனுபவத்தில் இருந்து தங்களை பொதுமைப்படுத்திய மனிதர்களாக முன்னிறுத்திக் கொள்வதன் மூலமே, பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் கூடிவாழும் வாழ்க்கையே, பௌத்த பேரினவாதத்தை நடைமுறையில் எதிர்கொள்வதற்கான ஒரேயொரு தீர்வாகும்.