Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள கோத்தபாய, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க தன்னாலேயே முடியும் என்கின்றார். இதன் பொருள் இஸ்லாமிய பயங்கரவாதம் அடுத்த தேர்தல் வரை நீடிக்க வேண்டும். அதை வைத்து தேர்தலில் வெல்ல வேண்டும். இது அவரின் தோதல் கனவு.

ஜனாதிபதி மைத்திரியைப் பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதியாகும் கனவில், இஸ்லாமிய பயங்கரவாதத்தை தானே முன்னின்று ஒழித்துக்கட்ட முனைகின்றார். இதற்காக யூ.என்.பி அரசாங்கத்தை தனிமைப்படுத்தி, தானே எல்லாமாக காட்ட முனைகின்றார். யூ.என்.பி தன் பங்குக்கு தானே எல்லாம் என்று காட்ட, பயங்கரவாதம் தேர்தல் அரசியலாகிக் கொண்டு இருக்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஒழியாமை என்பது பேரினவாத தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விக்குட்பட்ட ஒரு விடையமாக மாறி வருகின்றது. இப்படி வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் களம், இஸ்லாமிய பயங்கரவாத ஒழிப்பில் தொடங்கி இருக்கின்றது.

குண்டுகள் வெடிக்கும் சத்தங்களுக்கும் - மனித பிணங்களுக்கு மேல் நின்றும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக கோத்தபாய அறிவித்துள்ளார். இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க, மக்கள் தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றார்.

இதன் மூலம் கோத்தபாய தனக்கான தகுதி ஓடுக்குவது தான் என்று கூறி, பேரினவாத சிந்தனையை உசுப்பி விட்டிருக்கின்றார். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கியதால் உருவான புலிப் பாசிச இயக்கத்தை ஒடுக்கியதன் மூலம், ஒடுக்குவதற்கான தகுதி தனக்கு மட்டுமே உண்டு என்கின்றார். நாட்டின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல் முறைக்கும் எதிரான போராட்டங்களையும் ஒடுக்கும் தகுதியே, நாட்டை ஆளும் தகுதியாக நம்புகின்றார்.

ஒடுக்குவதற்கு அதிகாரத்தைக் கேட்டு, வாக்கு கேட்கின்ற தேர்தல் அரசியல் தான், சமூக ஒடுக்குமுறைகளின் பிறப்பிடம். இலங்கையில் நிலவும் இன, மத, சாதிய சமூக ஒடுக்குமுறைகள், இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது. ஆக தீ அணைக்கப்படவில்லை. தீ கொழுந்து விட்டெரியும் சூழல் என்பது, ஆட்சியை கைப்பற்றும், தேர்தல் அரசியலாக மாறியிருக்கின்றது.

இலங்கையில் தேர்தல் கட்சிகளும், வாக்களிப்பு முறை இனம், மதம், சாதி, பால்… சார்ந்ததாகவே நீடிக்கின்றது. வர்க்க அடிப்படையில் அல்ல. ஒடுக்குமுறைகள், கூடி வாழ வேண்டிய மக்களைப் பிளந்து வைத்திருக்கின்றது. நவதாராளவாத சுரண்டல் அமைப்பு இதன் மூலம் தான், இலங்கையில் காலூன்றி வருகின்றது. பிற ஒடுக்குமுறைக்குள் சமூகம் மூழ்கி கிடக்க, நாட்டையே நவதாராளவாதம் சூறையாடி வருகின்றது.

இந்தச் சந்தடி சாக்கில் இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைந்திருக்கின்றது. அரச சலுகை பெற்ற இஸ்லாமிய தேர்தல் கட்சித் தலைமைகளின் பாதுகாப்பில், இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னை நாடு முழுக்க அமைப்பாக்கி இருக்கின்றது. தமிழர் விரோத அரசியலைக் கொண்ட இஸ்லாமிய தேர்தல் கட்சிகளின் ஓடுக்குமுறையின் பின்னணியில், மத அடிப்படைவாதம் புழுத்திருகின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதமும், தமிழ் இன விரோத உணர்வும் கொண்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள், ஒரு நாணயத்தின் இருபக்கமாக இயங்கி இருக்கின்றது. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமே இதுதான். இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழ் இன விரோத உணர்வு கொண்டவனாகவே உருக்கொண்டான். இஸ்லாமிய தேர்தல் கட்சிக் கொள்கையும் இதுதான்.

இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் மீதான கைதுகளின் போதெல்லாம், இஸ்லாமிய தேர்தல் கட்சிகள் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தது. ஊழல், லஞ்சம், அதிகாரம் மூலம், மூடிமறைத்த பயங்கரவாதம் செழித்து வளர்ந்தது.

அதிகாரத்துக்காக தமக்குள் போட்டியில் ஈடுபட்டுள்ள பேரினவாத தலைமைகளின் துணையுடன் தான், பயங்கரவாத சக்திகள் சுதந்திரமாக நடமாடினர். அங்குமிங்கும் தாவி இஸ்லாமிய தேர்தல் கட்சி அரசியல்வாதிகள் தயவில், பேரினவாத தலைமைகளின் துணையுடன் பயங்கரவாதம் நாடு முழுக்க செழித்து வளர்ந்தது. பேரினவாத அதிகாரப் போட்டிக்காக, சட்டத்தை செயலற்றதாக்கினர். இஸ்லாமிய தேர்தல் கட்சிகள் இதைப் பயன்படுத்தி தம்பங்குக்கு தமிழருக்கும் எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதச் சிந்தனையையும் சமூகத்தில் திணிக்க உதவினர்.

இப்படித் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்தியது. தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னை இஸ்லாமிய தேர்தல்; கட்சிகளின் துணையுடன், தப்பிப்பிழைப்பதற்கான அடித்தளத்தைக் கொண்டு இருக்கின்றது. இது தான் உண்மை.