Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65

தென்னிலங்கையில் JVP இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றொழித்து நிலைமைகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் முழு இராணுவப் பலத்தையும் பிரயோகிக்கத் தொடங்கியிருந்தது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்து விட்டிருந்த போர், நாமறிந்த அனைத்துப் போர்களையும் போலவே நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காவு கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.

வடக்குக்-கிழக்கு மாகாணங்களில் - குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் "ஏகப்பிரதிநிதி"களான தமிழீழ விடுதலைப் புலிகளோ ஆயுதம் தரித்த இலங்கை அரச படையினருடன் போரிடுவதற்குப் பதில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை குறிவைத்து தமது நரபலி வேட்டையைத் தொடர்ந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி போன்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்தவிதக் காரணங்களைக் கொண்டும் நியாயப்படுத்தமுடியாத இத்தகைய அப்பாவி முஸ்லீம் மக்கள் படுகொலைகளை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், முஸ்லீம் மக்கள் அரசபடைகளுக்கு ஆதரவு அளித்தமையாலேயே படுகொலை  செய்யப்பட்டனர் என விளக்கம் கொடுத்திருந்தனர்.

வடக்குக்-கிழக்குப் பகுதிகளில் தமது அரசியலுடன் உடன்பாடு காணாத சக விடுதலைப் போராட்ட இயக்கங்களின் உறுப்பினர்களையும், அதன் தலைவர்களையும், முற்போக்கு-ஜனநாயக சக்திகளையும், அப்பாவி மக்களையும் கொன்றொழித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்முஸ்லீம் மக்களை தமது எதிரிகளாக இனம் கண்டு கொண்டதில் வியப்பேதுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் வலதுசாரிய அரசியலிருந்து தோற்றம் பெற்ற  பாசிசப் போக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை இத்தகையதோர் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது.

இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மூண்டதிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டு வெற்றியீட்டியிருந்த EROS இயக்கத்தைச் சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் போர் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய ஈழவர் ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே தாம் இராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இலங்கை அரச படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போரில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை உண்மையென்ற போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகளான அப்பாவி முஸ்லீம் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டமை குறித்து எதுவித கருத்தையோ அல்லது கண்டனத்தையோ தெரிவித்திருக்கவில்லை. இதன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளை ஈழவர் ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தவர்களாகக் காணப்பட்டனர்.

நிராயுதபாணிகளான முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை வெறித் தாக்குதல்கள் வடக்குக்-கிழக்கில் முன்னெப்பொழுதையும் விட தீவிரத்துடன் தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஆகஸ்ட் 03, 1990 காத்தான்குடியில் ஹுசைன்யா மற்றும் மீராஜும்மா பள்ளிவாசல்களுக்குள் புகுந்த ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 140 முஸ்லீம்களை சுட்டுக் கொலை செய்திருந்தனர். ஆகஸ்ட் 12, 1990 ஏறாவூர் பிச்சிநகர் கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகள் 118 முஸ்லீம்களை சுட்டும் வெட்டியும் கொலை செய்து கோரத்தாண்டவம் ஆடியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏறாவூர் பிச்சிநகர் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 51 ஆண்களும் 36 பெண்களும் 31 சிறுவர்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர். "இரண்டாவது ஈழப் போர்" என தமிழீழ விடுதலைப் புலிகளால் பெயரிடப்பட்ட போர் ஈழத்திற்கான போராக அல்லாமல் ஏனைய இனங்களின் மீதான போராக, ஏனைய இனங்களைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்றொழிக்கும் போராக மாற்றம் பெற்றிருந்தது.

தமிழ் மக்களின் பெயரால், ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் இத்தகைய படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அரங்கேற்றிக் கொண்டிருந்தவேளையில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன் மௌனித்துக் கொண்டிருந்த அதேவேளை மற்றுமொரு பகுதியினரோ முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் மீதான படுகொலைகள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாததொரு செயல் என வாதம் செய்து கொண்டிருந்தனர்.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும் அப்பாவி மக்கள் படுகொலைகளையும் சிறுவர்கள், குழந்தைகள் படுகொலைகளையும் கண்டிப்பதற்குப் பின்னிற்காத தமிழ் மக்கள் இத்தகைய படுகொலைகளைச்  செய்யும் அரசினை சிங்கள பேரினவாத அரசு என விளித்தனர். ஆனால் அப்பாவி முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்களை கொன்றொழிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலை குறுந்தேசிய இனவெறி என இனங்காண்பதற்குப் பதிலாக "தமிழ்த் தேசிய"மாக இனங் கண்டனர்.  

தமிழீழ விடுதலைப் புலிகள் மே 14, 1985 அனுராதபுரம் நகரில் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றொழித்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் இரத்தக்கறை படிந்த வரலாற்றை எழுதியிருந்தார்களோ அதே போன்று காத்தான்குடி ஹுசைன்யா மற்றும் மீரா ஜும்மா பள்ளிவாசல்களிலும் ஏறாவூர் பிச்சிநகர் கிராமத்திலும் அப்பாவி முஸ்லீம் மக்களை கொன்றொழித்ததன் மூலம் மீண்டும் ஒரு இரத்தக்கறை படிந்த வரலாற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதி முடித்திருந்தனர்.

அனுராதபுரம் நகரில் சிங்கள மக்களைப் படுகொலை செய்ததன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாக சிங்கள மக்களுக்கும் முழு உலகுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துக்காட்டியிருந்தனரோ அதேபோல காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை முஸ்லீம் மக்களுக்கும் முழு உலகுக்கும் ஒரு பயங்கரவாதப் போராட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துக் காட்டியிருந்தனர்.

"தீப்பொறி"க்குழு உறுப்பினர்களின் வீடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றதிலிருந்து பெரும்பாலான "தீப்பொறி"க்குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்தவாறு அங்கிருந்து கொழும்புக்கு இரகசியமாக தப்பி வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தனர். "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துவரும் முயற்சியில் "தீப்பொறி"க்குழு உறுப்பினர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தமக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் வரக்கூடிய உயிராபத்தையும் பொருட்படுத்தாது உதவி செய்ய முன்வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான யாழ்ப்பாணத்திலிருந்து ரகுமான்ஜான் எமது ஆதரவாளர்களின் உதவியுடன் கொழும்பை வந்தடைந்திருந்தார். கொழும்பை வந்தடைந்திருந்த ரகுமான் ஜானுடன் யாழ்ப்பாண நிலைமைகளையும், "தீப்பொறி"க்குழு  உறுப்பினர்களின் நிலைமைகளையும் அறிந்து கொண்டிருந்ததோடு பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும்  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் போர் குறித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளால் காத்தான்குடி மற்றும் ஏறாவூரில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் பேசினேன்.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட குருதியை உறைய வைக்கும் கோரத்தனமான படுகொலைகளை நாம் கண்டிக்க வேண்டும் என்றும் இது குறித்து ஒரு கணடனத்  துண்டுப் பிரசுரத்தை வெளியிடவேண்டும் எனவும் எனது கருத்தை முன்வைத்தேன். ஆனால் இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த ரகுமான் ஜான் முஸ்லீம் மக்கள் மீதான் படுகொலையைக் கண்டித்து அவசரமாகத் துண்டுப் பிரசுரம் வெளியிட வேண்டியதில்லை என தனது கருத்தை முன் வைத்திருந்தார்.

தீப்பொறி செயற்குழு உறுப்பினர்களில் ரகுமான் ஜானும் நானும் மட்டுமே இக்காலகட்டத்தில் கொழும்பில் இருந்தோம். ஏனைய செயற்குழு உறுப்பினர்களான டொமினிக், தேவன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகவும், தர்மலிங்கம், சண்முகநாதன் (சண்முகவடிவேல்) ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் விசாரணை என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்களில் தடுத்தும் வைக்கப்பட்டிருந்தனர்.

முஸ்லிம் மக்கள் மீதான  தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலைகளை கண்டித்துத் துண்டுப் பிரசுரம் வெளியிடுவதற்கு ரகுமான் ஜான் உடன்படாததால் துண்டுப் பிரசுரம் வெளியிடப்படவில்லை. ஆனால் எம்முன் உள்ள கேள்வி என்னவெனில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து எமது நிலைப்பாட்டை வெளியிடத் தவறியது சரியான செயற்பாடா என்பதேயாகும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை அராஜகவாதிகளிடமிருந்தும், பாசிசப் போக்குக் கொண்டவர்களிடமிருந்தும் விடுவித்து புரட்சிகரப் பாதையில் முன்னெடுக்கப் போவதாகக் கூறி முன்வந்த "தீப்பொறி"க் குழு உறுப்பினர்களாகிய நாம், எமது குறிக்கோளை அடைவதற்காக உயிரைப் பயணம் வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தோம். அராஜகவாதிகளுடன் வீதிக்கு வீதி போராடியது மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்குகளுக்கு எதிராக உயிரையும் பொருட்படுத்தாது செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.

இதனாலேயே எமது ஆதரவாளரான யோகன், செயற்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம், சண்முகநாதன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடுங் கரங்களில் சிக்கியிருந்தனர். ஆனால் இன்றோ புரட்சிகரமான பாதையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகக் கூறிக் கொண்ட நாம், ஈழ விடுதலைப்  போராட்டத்தின் பெயரால் முஸ்லீம் மக்கள் நூற்றுக் கணக்கில் கொன்றொழிக்கப்படும் போது, முஸ்லீம் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும்போது அதைக் கண்டிக்கத் தவறுவது ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமாக முன்னெடுக்க விழையும் ஒரு குழுவின் - "தீப்பொறி"க் குழுவின் - நிலைப்பாடாக இருக்க முடியாது.

ஆனால் அன்றைய நிலையில் இதுதான் எமது நிலையாக இருந்தது. இலங்கை அரச படைகளால் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படும் போது அவற்றைக் கண்டிக்கும் நாம், இலங்கை அரச படைகளால் "குமுதினி" படகில் பயணம் செய்தோர் படுகொலை செய்யப்பட போது அதைக் கண்டித்து அப்படுகொலைகளை வருடாவருடம் நினைவு கூரும் நாம், இதே போன்ற நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டபோது அதைப் பகிரங்கமாகக் கண்டிக்கத் தவறியிருந்தோம்.

இன ஒடுக்குமுறைக்கெதிராக சிங்கள இடதுசாரிகள் பல்வேறு வழிகளில்  போராடியிருந்திருந்த போதும் கூட,  இன ஒடுக்குமுறைக்கெதிராக சிங்கள இடதுசாரிகள் போராட முன்வரவில்லை என  சிங்கள இடதுசாரிகள் மீது சுட்டு விரலை நீட்டிக் கொண்டிருந்த தமிழ் பேசும் இடதுசாரிகளாகிய நாம் முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளை கண்டிக்கத் தவறியதானது சந்தர்ப்பவாதப் போக்கேயன்றி வேறல்ல.

ஒரு இனம் ஒடுக்கப்படும்போது அதற்கெதிராகக் குரல் கொடுக்க மறுப்பவன், ஒரு இனம் அழிக்கப்படும் போது அதற்கெதிராகக் குரல் கொடுக்க மறுப்பவன, சமூகத்தில் சமத்துவமின்மை நிலவும்போது அதற்கெதிராகப் போராட மறுப்பவன், சமூகத்தில் அநீதி கோலோச்சும்போது அதற்கெதிராகப் போராட மறுப்பவன், இடதுசாரியாகவோ அல்லது புரட்சிவாதியாகவோ ஒருபோதும் இருக்க முடியாது.

-தொடரும்