Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..!

போராட்டம் என்பது அப்பாவி மக்களின் மேலான சகல ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுவது. அரசு தனதும், தன் சார்ந்த அரசியல்வாதிகள், பெருமுதலாளிகளின் நன்மை கருதியே மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளையும், அழுத்தத்தையும் பிரயோகித்து வருகின்றது. ஒரு தனிமனிதனுடைய இழப்பையோ, துன்பத்தையோ, சாவையோ பற்றி எந்த அதிகாரவர்க்கமோ, அரசியல்வாதிகளோ அக்கறை கொள்ளப் போவதில்லை. ஆனால் அக்கறை கொள்வது போல், கண்ணீர் விடுவது போல் நடிப்பார்கள். ஊடகங்களிலே அனுதாப செய்திகளையும், கண்டனங்களையும் வெளியிட்டு அனுதாபப்படுவது போல் நடிப்பார்கள். அடுத்த தேர்தலுக்கு அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பே இப்படிப்பட்ட நிகழ்வுகள். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது தனிபட்ட முறையில் எமது குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோரும்.

நாங்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஒவ்வொரு தனிமனிதனுடைய துன்பத்தை போக்குவதற்காகவே. அதிலே எங்கள் குடும்பமும் அடங்கும். எனது தவறான முடிவு எனது குடும்பத்தை, எனது பெற்றோரை, எனது பிள்ளைகளை கவலைப்படுத்தி அவர்களை நிலைகுலைய வைத்து, அவர்கள் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்குமானால் அது எந்தவிதத்திலும் பயனற்ற ஒன்றாகிவிடும். ஒரு தாயின் கண்ணீருக்கு எதை ஈடாக கொடுக்க முடியும். அந்தத் தாயின் கற்பனையும், எதிர்பார்ப்பும் அரை நொடியில் பொடிப்பொடி ஆகிவிடும். தற்கொலை என்ற இந்தத் தவறை இனி எவரும் செய்யாதீர்கள். யாருடைய தவறான வார்த்தைகளிற்கும், தவறான மூளைச் சலவைக்கும் ஆளாகிவிடாதீர்கள்.

போராடுவோம்.., நாங்கள் எல்லோரும் இணைந்து போராடுவோம். நாம் ஒன்றிணைந்தால் அதற்கு  நிகராக எந்த சக்தியும் எதிர் நிற்க முடியாது. நிதானமாக சிந்தியுங்கள், வாருங்கள் எல்லோரும் சேர்ந்தே போராடுவோம்.