Sat09232023

Last updateSun, 19 Apr 2020 8am

"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்"

"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால்

தேர்ந்தெடுத்தவன் முட்டாள்" 

                                         -தந்தை பெரியார்.

“பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதையாகவே” நமது நாட்டில் இன்று  நடைபெறும் சம்பவங்கள் 1970ஆம் ஆண்டு அரசியல் சூழலை மறுபடி ஏற்படுத்தி உள்ளது. தற்போது . காலத்துக்குப் பொருந்தாத-நடைமுறைச் சாத்தியம் அற்ற-யதார்த்தம் புரியாத அரசியல் விளக்கங்களும், கோரிக்கைகளும், அறிக்கைகளும் 2009ல் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யுத்த வெற்றியை மூலதனமாக்கி நாட்டைக் கொள்ளையடித்தவர்களால் இன்று நாடு பகுதி பகுதியாக பிரித்து அளவை செய்யப்பட்டு விற்கப்படுகிறது. நாட்டின் வளங்கள் குத்தகைக்கு விடப்படுகிறது. பல நூறு தலைமுறையாக மக்களை வாழவைத்த சுய தொழில்கள் திட்டமிடப்பட்டு முடக்கப்படுகிறது. குடிமக்கள் அந்நிய நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்திற்கு உழைத்து உரிமைகளற்ற அடிமைகளாக உழைத்து உருக்குலைந்து மடியும் முறைமை கொண்ட புதிய உலக தாரளவாதப் பொருளாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சாதாரண குடிமக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக நடைமுறையில் இருந்து வந்த அரச சேவைகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. கல்வியும் சுகாதார சேவையும் இவற்றில் மிகவும் முக்கியமானவைகள்.

 

நாட்டில் நிலவும் சகல சீர்கேடுகளுக்கும் அடிப்படையாக உள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய யதார்த்த பூர்வமான நகர்வுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக அதை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான நடைமுறைகளே முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கு நீதித் துறைகள் 2015க்கு முன்பிருந்த சர்வாதிகார முறை மனப்பாங்குடன் தான் இன்னமும் காணப்படுகின்றன. ஆங்காங்கே இன்னமும் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்ற வண்ணமே உள்ளன.

நீதி நிர்வாகம் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்தே செயற்படுகிறது. வழக்குகள் - விசாரணைகள் - கைதுகள் - சிறை வைப்புகள் யாவற்றிலும் இன-மத-அரசியல் ரீதியான பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன.

அரசியல் கைதிகள், காணாமற் போனோர் விடயங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன. காணி அபகரிப்பு பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஊருக்குள்ளேயே வாழும் அகதிகள் கதை தொடர் கதையாகவே உள்ளது. யுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளனர்.

சமூகத்தில் வன்முறைத் தலைமுறை ஒன்று தோன்றியுள்ளது. போதை வஸ்து பாவனை பரவலாக்கப்பட்டுள்ளது. மதத் தீவிரவாதம் ஊக்கிவிடப்பட்டுள்ளது.

இன்றைய அரசியலும் அரசியல்வாதிகளும் அரசாங்க ஆட்சி முறைமையுமே மேற் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களுக்கும் மூல காரணமாக அடிப்படைகளாக அமைந்துள்ளன.

இந்த இலட்சணத்தில் 'அது கிடைக்கும்'-'இது கிடைக்கும்'-'எடுப்போம்'-'முடிப்போம்'-'கட்டுவோம்'-'வெட்டுவோம்' என்று நாளாந்தம் அறிக்கைகளும் பேட்டிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யுத்தத்தை வைத்துப் பிழைத்து ருசி கண்ட கூட்டமொன்று அடுத்த யுத்தத்திற்கு வழி தேடுகிறது.

ஆதிக்க சக்திகளும் ஆளும் வர்க்கத்தினரும் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் வரை குடிமக்கள் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. கொள்ளையடிப்பவர்களையும் கொடியவர்களையும் சமூக விரோதிகளையும் சமய தீவிரவாதிகளையும் மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் வரை நாட்டில் அடக்குமுறையும் அட்டூழியங்களும் அழிவுகளும் தொடரவே செய்யும். இதுவரை இலங்கைக் குடிமக்களின் வரலாறு இதுதான்.

நாம் முட்டாள்களாக-சுய சிந்தனைஅற்றவர்களாக-சுயநலவாதிகளாக இருந்தபடியால்தான் இருந்தவற்றை இழந்தோம். தொடர்ந்தும் அப்படியே இருப்பதனால்தான் எதனையும் அடையமுடியாமல் திண்டாடுகிறோம். இனிமேலும் இப்படியே இருந்தோமானால் அந்நியர்கள் இங்கு வந்து எமது நாட்டை கொள்ளையடிப்பதற்கு ஏற்ற கொத்தடிமைகளாக குத்தகைக்கு விடப்படுவது நிச்சயம்.