Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

ஊழலை வலுப்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும் உரிமைகளை நிலைநிறுத்தும் போராட்டங்களும்

இலங்கையில் இன்று நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நாளுக்கு நாள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவற்றில் மக்களின் பங்களிப்பும் பாரிய அளவில் இடம் பெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இந்த நடவடிக்கைகள் தென்னிலங்கை மக்களுக்கும் வட இலங்கை மக்களுக்கும் மத்தியில் நிலவும் அரசியல் போக்குகளின் ஒத்த தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன.

புதிய உலக தாராளவாத பொருளாதாரத் திட்ட பொறியமைப்புக்குள் பொருத்தப்பட்ட ஒரு அலகாகவே கடந்த பல வருடங்களாக (குறிப்பாக 1977யூலை முதல்) இலங்கை அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த யுத்தம் உட்பட யாவுமே இந்த பொறியமைப்பின் திட்டமிடல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளன. 77ன் திறந்த பொருளாதாரக் கொள்கை தொடங்கி வன்முறை-யுத்தம்-சர்வாதிகாரம்-நல்லாட்சி அனைத்துமே ஏகாதிபத்தியங்களின் விருப்பு வெறுப்புக்கும் அவர்களின் உலக முதலாளித்துவ மூலதன விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கும் ஏற்றதாகவே நடைமுறைத்தப்பட்டு வருகின்றன.

 

இலங்கையில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளைக் கண்டிப்பவர்களும் சரி வரவேற்பவற்களும் சரி அதன் ஆளுமைக்கும் ஆதிக்கத்திற்கும் உட்பட்டே செயற்பட்டு வருகின்றனர். சர்வாதிகார அரசாங்கமும் சரி நல்லாட்சி அரசாங்கமும் சரி இந்த சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனேயே தங்கள் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்தபடி செயற்படுகின்றனர். 

இந்நிலையில் சனநாயகம் மீட்கப்பட்டுள்ளது என மார்தட்டும் அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுத்துச் செயற்படாமல் மக்களின் உரிமைகளை மறுக்கும் அடக்குமுறை ஆட்சியையே முன்னைய ஆட்சியாளர்களைப் போல் கடைப்பிடித்து வருகின்றனர். 

இலங்கையில் கல்வியை - சுகாதாரத்தை தனியார் மயமாக்கும் திட்டம் முன்னைய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியாளர்களாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவை இலங்கைக் குடிமக்கள் அனைவரையும் பாதிக்கும் பிரச்சனைகளாகும். இதனையொட்டி தென்னிலங்கையில் மாணவர்கள்-இளைஞர்கள்-மக்கள் இணைந்து போராடுகிறார்கள். அரச வன்முறைக்கு ஆளாகிறார்கள். கைதாகி சிறையிடப்படுகிறார்கள். ஆனால் வட இலங்கையில் எவர் மத்தியிலும் இவைகள் பற்றிய கவனயீர்ப்போ-கரிசனையோ அல்லது ஆகக் குறைந்ததொரு கண்ணோட்டமோ காணப்படவில்லை. 

வடக்கில் காணி பறிக்கப்பட்டோர்-கைதானோர்-சிறையிருப்போர்-காணாமலாக்கப்பட்டோர்-பட்டதாரிகள் ஆகியோரது போராட்டங்களுக்களுக்காக தென்னிலங்கை மக்களால் ஒருமைப்பாடு பிரச்சாரங்கள்-ஆதரவுப் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. ஊடகங்கள் - கல்விமான்கள் -புத்திஜீவிகள் எனப் பலரும் தங்கள் இப்போராட்டங்களில் உள்ள நியாயங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் வடக்கில் இப்போராட்டங்களை மாற்றுக் கண் கொண்டு பார்க்கின்ற நிலைமைதான் உள்ளது. அத்துடன் அவை பற்றிய தகவல்கள் அனைவராலும் இருட்டடிப்பும் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான காரணம் இலங்கையில் “பொங்கி வழியும்” தேசிய வேட்கையே. இந்த தேசியம் அடுத்தவர் மீதான வெறுப்பிலிருந்தே பிறப்பெடுக்கிறது. அது அதிகாரம் என்ற இலக்கைக் குறியாக வைத்தே செயற்படுகிறது. அதிகாரத்தை அடைவதற்காக அது தான் சார்ந்த மக்களையே கொலைக்களம் அனுப்பவும் தயாராக உள்ளது. எனவே பாதிப்புக்குள்ளான தனது ஒரு பகுதி மக்கள் அவர்களது “மீட்பர்களாலும்” - “இரட்சகர்களாலும்” கைவிடப்பட்ட நிலையில் தம்மிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத கட்டத்தில் போராட முனையும் போது இந்த தேசியவாதிகள் அதனை அரசியலாக்கி தங்களுக்கென அதிகாரம் என்ற ஆதாயம் தேட முனைவார்களே ஒழிய ஒருபோதும் ஆதரவுக் கரம் நீட்டமாட்டார்கள்;. மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதென்பது அவர்களுடைய அதிகாரத்தை இழக்கச் செய்யும் என்பதனால் இந்த உரிமைக்கான போராட்டங்களை ஊக்குவிக்க மாட்டார்கள். மாறாக மழுங்கடிக்கவே செய்வார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இன்று நாடு பூராவும் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களாகும்.

இன்று இலங்கையில் அராஜகவாதிகளும் ஊழல்வாதிகளும் சேர்ந்த ஒரு அரசாங்கமே செயற்படுகிறது. இதில் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்களும் அடங்குகின்றனர். நீதியை நிலைநாட்டுவோம். ஊழலை ஒழிப்போம். குற்றவாளிகளைத் தண்டிப்போம். சட்ட ஒழுங்குகளை கடைப்பிடிப்போம். மனித உரிமைகளை பாதுகாப்போம் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை மறந்து தங்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர். 

அதேவேளை நாட்டைக் கொலைக்களமாக்கிய தங்கள் ஆட்சியதிகாரத்தை இழந்து நிற்கும் முன்னாள் அராஜக-ஊழல் தேசியவாதிகள் “சாத்தான் வேதம்” ஓதுவது போல் மக்களை மீட்க அரசாங்கத்தை மாற்றிக் காட்டுகிறோம் என ஆர்ப்பாட்டங்களை தென்னிலங்கையில் மேற்கொள்ளுகின்றனர். மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமர்வதற்காக தாங்கள் செய்த அராஜகங்களை-கொலைகளை-கொள்ளைகளை-ஊழல்களை மறக்கடிக்கும் வகையில் இன-மதக் குரோதங்களை ஊக்குவிக்கும் தேசியவாதிகளாக செயற்படுகின்றனர். 

வட இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அவைகளும் தேசியத் திரைக்குப் பின்னால் அராஜகங்களையும் ஊழல்களையும் மறைக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கின்றன. மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரங்களைப் பெற்றவர்கள் மக்களின் பிரச்சனைகளை மனத்தளவில் கூட சிந்திக்காமல்  தங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டியில் ஆளுக்கு ஆள் பிடுங்குப்பட்டுக் கொண்டு வீதிக்கு வந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 

அமெரிக்க தேர்தலுக்காக - மக்களுக்கு சம்பந்தம் இல்லாத ஜல்லிக்கட்டுக்காக - சினிமா நடிகர்களுக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் தேசியவாதிகள் தங்கள் கண்முன்னே இடம்பெறும் மக்கள் போராட்டங்களை ஏறெடுத்தும் பாராமல் போவது இயல்பானதே. 

நமது நாட்டின் அரச கட்டுமானமும் அரசியல் பாரம்பரியமும் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்படட்டவையாகும். ஆக்கிரமிப்பாளர்கள் போனாலும் அவர்கள் எமக்குக் கற்பித்துக் கொடுத்த கல்வியும் ஆட்சிமுறைமையும் அவர்களின் பொருளாதார சுரண்டல்களை தொடரும் வகையிலேயே அமைந்திருந்தது. இன்றும் அதுவே தொடர்கிறது. 

இலங்கையில் இன்று செயற்படும் அரசியல் பிரமுகர்களும் அவர்களுடைய அரசியல் சிந்தனைகளும் எந்த வகைப்பட்டதாக அமைந்திருந்தாலும் அவைகள் யாவுமே தங்கள் பணவருவாயைக் குறிவைத்ததாகவே அமைந்துள்ளன. இந்த வகை அரசியலுக்கு ஊடாகவே புதிய தாராளவாதப் பொருளாதாரத் திட்டங்களை உலக நிதி மூலதன நிறுவனங்கள் எமது நாட்டில் சுலபமாக அமுல்படுத்தி வருகின்றன. 

இந்த நடைமுறைகள் ஊடாக படிப்படியாக எமது குடிமக்களின் சிந்தனை முறை மாற்றப்பட்டுள்ளது. கடந்தகால அரசியல் நிகழ்வுகள் நம்மை இன்று சுயசிந்தனை-சுயமுயற்சி-சுயநம்பிக்கை அற்ற ஒரு மனிதக் கூட்டமாக பணம் ஒன்றையே குறிவைத்து ஓடும் சமூகமாக ஆக்கிவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த யுத்தமும் அதனைத் தொடர்ந்து வந்த அரசியலும் எமது இன்றைய தலைமுறையினரை  புதிய தாராளவாதப் பொருளாதாரத்தை நம்பி அவற்றை பின் தொடரச் செய்துள்ளது. 

இன்று நாட்டில் அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப்படுவதெல்லாம் அந்நிய மூலதனக்காரர்களின் வருமானத்தை இலக்காகக் கொண்டதே. குடிமக்களுக்கு உரிய உரிமைகள் யாவும் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. கல்வி சுகாதாரம் காசுக்கு உரியதாகியுள்ளது. சுய தொழில் செய்து சுதந்திமாக வாழ்ந்த மக்கள் கம்பெனிகளுக்குரிய அடிமைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுகின்றனர். மக்களுக்குரிய வாழ்விடங்களும் வாழ்வாதரர நிலங்களும் பறித்தெடுக்கப்பட்டு தனியார் கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கப்படுகிறது. மனிதநேய உறவுகள் மறக்கடிப்பட்டு மக்கள் இயந்திரங்களாக ஆக்கப்படுகிறார்கள். குடிமக்களின் மனிதநேயக் கலாச்சாராங்கள் மழுங்கடிக்கப்பட்டு “நுகர்பொருள் கலாச்சாரம்” தோன்றியுள்ளது. ஊழல்-கொலை-கொள்ளை என்பவை சாதாரண ஒரு நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை பிரதிபலிக்கும் வகையிலேயே இன்றைய அரசியலும் அந்த அரசியலால் உருவாக்கப்பட்ட அரசாங்கமும் இயங்குகிறது.

காலனித்துவ காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட எமது நாட்டின் தன்னிறைவுப் பொருளாதார வளங்களை அழிக்கும் பணி (உதாரணம்: மலைநாட்டில் பலவந்தமாகப் புகுத்தப்பட்ட தேயிலை கோப்பி உற்பத்தி செய்கையும் அதனால் கொல்லப்பட்ட மலையக மக்களும்) இன்று உச்சக் கட்ட நிலைக்கு வந்துள்ளது. 

-  இன்று இலவசக் கல்வி நிறுத்தப்படுகிறது. 

-  ஓய்வூதியம் ஒழிக்கப்படுகிறது. 

-  பாரம்பரிய பயிர்களின்-கால்நடைகளின் உற்பத்தி மறுக்கப்படுகிறது.

-  ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு அவற்றில் எமது    குடிமக்கள் அடிமைத் தொழிலாளர்களாக அமர்த்தப்படுகிறார்கள்.

-  கட்டுப்பாடற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பதன் ஊடாக எமது சுற்றுப் புற சுற்றாடல் சூழல் மாசுபடுத்தப்படுகிறது.

-  பல உயிர்களைப் பலியிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்ட தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. 

-  மதவாதமும் இனவாதமும் அரசாங்கத்தின் நெம்புகோல்களாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளுக்கான போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வதும்,  ஊழல்களை ஊக்கிவிக்கும் அதிகாரத்தை தேடும் ஒரு சிலருடைய சுயநல அரசியலுக்கான ஆர்ப்பாட்டங்களில் நின்று கூப்பாடுகள் போடுவதும் எமது சமூகம் காலனித்துவ அடக்குமுறை ஆட்சிமுறையை நோக்கி நடப்பதற்கான முன் அடையாளங்களாகும்.

அதேவேளை படித்தவர்கள்-பகுத்தறிவுள்ளவர்கள்-நீதி வழுவாதவர்கள்-நியாயவாதிகள்-மனிதாபிமானிகள்-மக்கள் நலன் விரும்பிகள் அனைவரும் மானிட நேயத்துடன் மனமுவந்து முன்னணி அமைத்துப் போராட முன்வராத வரை ஊழலுக்கான ஆர்ப்பாட்டங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்து மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.