Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் வியாபாரம் ஒழியட்டும் - மக்கள் நல அரசியல் ஓங்கட்டும்

ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி பின்னர் வந்த சுதந்திர ஆட்சியிலும் சரி இலங்கை அரசியல் என்பது பணம்-பலம்-பொருள் கொண்ட மேற்தட்டு வர்க்க மேலாதிக்கவாத மேட்டுக்குடிகளின் போட்டியும் பங்குச் சண்டையுமாகும். அதன் ஆரம்பம் 1915ல் சிங்கள-முஸ்லீம் கலவரமாகத் தொடங்கி பின்னர் 1949ல் மலையத் தமிழர்களை கொத்தடிமைகளாக்கித் தொடர்ந்து 1956லிருந்து சிங்கள-தமிழ் இனக் கலவரமாக வளர்ச்சி பெற்று இறுதியில் 2009ல் ஒரு பேரழிவை நடாத்தி முடித்து விட்டு மறுபடி ஆரம்பத்திலிருந்து பழைய பாணியில் நடைபோடத் தொடங்கியுள்ளது.

மக்களுக்கானது என்ற கொள்கைப் பிரகடனங்களுடன் புறப்பட்ட கட்சிகளின் தலைமைகள் அவர்களைப் பின்னணியில் நின்று ஆட்டுவிக்கும் ஆதிக்க சக்திகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றபடி கோரிக்கைகளை முன் வைத்து அதற்காக மக்களை ஆவேசமூட்டி மோத வைத்தபடி தங்களது நலன்களை இன்றுவரை பாதுகாத்தபடியே வருகின்றனர்.

இன்றும் அதே கட்சிகள் உள்ளன. மக்களின் வாக்குகளை வென்றெடுக்கின்றன. பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். பாராளுமன்றம் அமைக்கிறார்கள். மக்கள் சிறைபிடிக்கப்பட்டாலென்ன? கொல்லப்பட்டாலென்ன? காணாமல் போனாலென்ன? பசி பட்டினி தாங்கமுடியாமல் தற்கொலை செய்தாலென்ன? வாழமுடியாமல் உயிரைப் பணயம் வைத்து நாட்டை விட்டு ஓடினாலென்ன? குடிக்க நீர் இன்றி தவித்தாலென்ன? தொழிலின்றி வறுமையில் வாடினாலென்ன? இருக்க இடமின்றி அலைந்தூலென்ன? கட்சித் தலைமைகளுக்குக் கவலையே இல்லை. ஏனெனில் இவைகள்தான் இந்த அரசியலின் மூலதனங்கள். இன்றுவரை இலங்கை மக்களுக்கு இந்த அரசியல் வழங்கியது அடிமைத்தன வாழ்வே.

மக்களைப் பிளவுபடுத்தி வைத்தபடியே அவர்களைச் சாட்டித் தங்களையும் தங்களைச் சார்ந்த கூட்டத்தினரையும் சுகபோக வாழ்வுடன் பாதுகாப்போடு இட்டுச் செல்கின்றனர். இவற்றை மக்களாகிய நாம் அறிந்தும் அறியாதது போல் தொடர்ந்து இவர்கள் பின்னால் செல்வதற்கான காரணம் யாது?

நாம் ஒரு முரண்பாட்டு மனப்போக்கை கொண்ட சமூகமாகும். கற்றது ஒன்று. சொல்வது இன்னொன்று. கடைப்பிடிப்து வேறொன்று. கல்வி-காசு-காணி-கல்வீடு என்பதுதான் எமது சிந்தனையாகும். இதற்காக அடுத்தவர் நலன்களை மறுத்து எமக்கு ஏற்றவாறு நீதி நியாயங்களை கற்பித்துக் கொள்கிறோம். இதன் அடிப்படையிலேயே நாம் இன்று வரை எமது அரசியல் தெரிவுகளை செய்து வருகிறோம்.

கடந்த காலங்களில் எமது அரசியல் தெரிவுகளால் எமது கிராமங்களிலோ அல்லது மாவட்டங்களிலோ அல்லது மாகாணங்களிலோ அல்லது நாட்டினிலோ ஏற்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்திகள் யாவை எனப் பார்த்தால் எதுவுமேயில்லை. இன்று மக்களுக்கான அடிப்படை அத்தியாவசிய சேவைகள் யாவும் ஊழல் நிறைந்தவையாக ஆக்கப்பட்டுள்ளன. இன மத சாதி பால் வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தி அதன் அடிப்படையில் வாக்குகளைப் பெற்று நாட்டின் அரசியல் அதிகாரங்களில் பங்குபற்றுவோர் நாளும் பொழுதும் மக்களை மனநோயாளிகளாக மாற்றி வருகின்றனர். சிந்திக்க இடம் கொடுக்காத வண்ணம் தொடர்ந்து மக்களை நெருக்கடிகளின் மத்தியில் வாழும் வகையில் செயற்படுகின்றனர்.

இன்று நாட்டு மக்களின் நிலைமை என்ன? கொலை-களவு-காடைத்தனம்-கஞ்சா கடத்தல்-பாலியல் பலாத்காரம்-போதை வஸ்து பாவனை-இயற்கை வள அழிப்பு-சுற்றாடல் மாசுபடுத்தல் என்பன நாளாந்த செய்திகளாகின்றன. இந்த செயற்பாடுகள் பற்றி மக்களாகிய நாமும் கவலைப்படவில்லை. மக்களது பிரதிநிதிகளும் கரிசனை கொள்ளவில்லை.

அன்று முதல் இன்று வரை நாட்டை இன்றைய நிலைமைக்கு ஆளாக்கிய சக்திகள்தான் இன்றும் நாட்டை ஆளும் அதிகாரக் கதிரைகளில் உட்கார்ந்துள்ளன. இவர்கள் இது வரை செய்ய மறுத்தவற்றை இனிமேலும் செய்யப் போவதுமில்லை.

தென்னிலங்கை அரசியல் வியாபாரம் சிங்கள இளைஞர்களை சமூக நீதி கேட்டு ஆயுதம் தூக்க வைத்துக் கொன்றழித்தது. வட-கிழக்கு அரசியல் வியாபாரம் தமிழ் வாலிபர்களை தன்னாட்சி வேண்டி ஆயுதம் ஏந்தச் செய்து அழிய வைத்தது. நாட்டில் வன்முறை தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தவர்கள்தான் இன்றும் ஆட்சி புரிகின்றனர். அவர்களின் அரசியல்தான் இன்றும் தொடர்கின்றது.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்தவர்ளைத் துரோகிகள் என்கிறோம். நாட்டு மக்களின் நலன்களைச் சுருட்டுபவர்களை தலைவர்கள் ஆக்குகிறோம். இந்நிலை மாறாத வரை நாம் தொடர்ந்தும் பிச்சை எடுத்தபடி - அடுத்தவர்களைக் கெஞ்சியபடி - அடுத்து என்ன நடக்குமோ என அஞ்சியபடி வாழ வேண்டியதுதான்.

இந்நிலையை மாற்ற வேண்டுமானால் நாம் சிந்திக்க வேண்டும். 68 வருட அரசியல் எங்களை எங்கே கொண்டு வந்து விட்டுள்ளது? உசுப்பி விட்டவர்கள் - உருவேற்றியவர்கள் சுகமாக வாழ உசுப்பப்பட்டவர்களும் - உருவேற்றப்பட்டவர்களும் அழிக்கப்பட்டது எப்படி? விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதா? அல்லது விற்கப்பட்டதா? நேற்றைய இனவாத அரசுக்கும் இன்றைய இணக்க அரசியலுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? யாருக்காக புதிய அரசியல் சாசனம்? மக்களுக்கானதா? அல்லது ஆளும் வர்க்க அரசியல் வாதிகளுக்கானதா? மக்களுக்கானது என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் எங்கே? குற்றமிழைத்தவர்களும் குற்றம் இடம்பெறக் காரணமாணவர்களும் ஒன்றிணைந்து கூட்டாக ஆட்சி நடாத்தும் அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியல் சாசனம் நிறைவேற நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டிய தேவை-அவசியம் உண்டா? இல்லையா?

இவைகளுக்கான பதில்களில்தான் எமது ஒளிமயமான எதிர்காலம் தங்கியுள்ளது. மக்களை நேசிப்போம். மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுவோம். மக்களே எமது வழிகாட்டிகள். அவர்கள் காட்டும் பாதையில் முன்னேறிச் செல்வதே மக்கள் நல அரசியல்.